சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, May 1, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 30




தியானத்தால் மேம்பாடு

ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்ல ஒரு எளிய பயிற்சியைப் பார்த்தோம். படிக்கும் போது மிக எளிதாகத் தோன்றினாலும் அதைச் செய்து பார்த்த பலருக்கு அது அவ்வளவு சுலபமானதாக இருந்திருக்காது. மனம் அரைமணி நேரத்திற்காவது அமைதியாக இருப்பது பெரும்பாடாக இருந்திருக்கலாம்.
எண்ணங்களுக்கும் மூச்சிற்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை நம் முன்னோர்கள் நன்றாக அறிந்திருந்தனர். மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைக்கையில் மூச்சு சீராக இருக்கும். மூச்சு சீராக இருக்கையில் தானாக மனம் அமைதியடையும் என்பதை அனுபவ பூர்வமாக அவர்கள் அறிந்திருந்தனர்.

ஆனால் பழக்கமில்லாதவர்களுக்கு மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைப்பதற்கு மனம் ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடிக்கும். பல கவலைக்குரிய விஷயங்களையும், கவனிக்க வேண்டிய விஷயங்களையும் சுட்டிக் காட்டி அதையெல்லாம் யோசித்துப் பார்க்கச் சொல்லும். இது பெரிய விஷயமில்லை என்று சொல்லும். அரைமணி நேரம் என்று ஆரம்பித்தாலும் ஐந்து பத்து நிமிடங்களில் இப்போதைக்கு இது போதும் என்று முடித்து வைக்கச் சொல்லும். அதையெல்லாம் கேட்டு தங்கள் முயற்சியை அரைகுறையாய் விட்டவர்கள் முதல் படியிலேயே சறுக்கி விட்டார்கள் என்று அர்த்தம். அப்படியில்லாமல் தொடர்ந்து முயற்சித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் முயற்சி செய்து இருந்தது ஆல்ஃபா அலைகளில் தானா என்ற சந்தேகம் கூட உங்களுக்கு இருக்கலாம். அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆரம்பத்தில் விடாமுயற்சியுடன் அமைதியாக அமர முயற்சி செய்ததே நல்ல ஆரம்பம் தான்.

நாம் என்ன சொன்னாலும் இந்த நபர் இந்த அரைமணி நேரம் இந்தப் பயிற்சி செய்த பிறகு தான் நாம் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்வார் என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் மேல்மனம் இடைமறிப்பது தானாகக் குறையும். மனம் தானாக அமைதியடையும். எனவே இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்யாதவர்கள் கண்டிப்பாக மீண்டும் அதை ஆரம்பிப்பது நல்லது. இந்த நேரத்தில் இதைத் தான் செய்வேன் என்று எஜமானாகக் கண்டிப்புடன் சொல்லி செயல்படுத்தினால் ஒழிய மனம் எந்த நல்ல மாற்றத்தையும் விரும்பி ஏற்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

மனம் உண்மையாகவே அமைதியடையவும், ஆழ்மன சக்திகள் சிறப்பான முறையில் கைகூடவும் மிகச் சிறந்த வழி தியானம் தான். தியானம் அல்லாத முன்பு சொன்னபடி சில பயிற்சி முறைகளாலும் ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்ல முடியும் என்றாலும் தியானப் பயிற்சிகளை முறையாகச் செய்தால் ஆல்ஃபா நிலையை சிறப்பாக நமக்கு வேண்டும்படி பயன்படுத்திக் கொள்ள முடியும். பின்னர் ஆல்ஃபாவிலிருந்து தீட்டா டெல்டா அலை வரிசைகளுக்குச் செல்வதும் எளிதாகும்.

தியானம் என்றாலே அது ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற கருத்து பலரிடம் நிலவுகிறது. உண்மை அதுவல்ல. பல மதத்தினரும் பலவித தியானமுறைகளிலும் ஈடுபடுகின்றனர் என்ற போதும் மதங்களைச் சாராதவர்களும், இறை நம்பிக்கை இல்லாதவர்களும் கூட தியானப் பயிற்சியால் விளையும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு தியானம் செய்யலாம். பலரும் செய்கிறார்கள்.

தியானப்பயிற்சியால் ஆழ்மன சக்திகள் மட்டுமல்லாமல் பல நன்மைகள் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்களும், அனுபவஸ்தர்களும் கூறுகிறார்கள். முறையாகத் தொடர்ந்து உண்மையாக தியானம் செய்பவர்கள் தீய குணங்கள் குறைந்து நல்ல குணங்களைப் பெறுவது உறுதி. அன்பு, பொறுமை, மனக்கட்டுப்பாடு, பெருந்தன்மை, அமைதியாக ஆராயும் குணம், பக்குவம், அறிவு வளர்ச்சி, மன அமைதி ஆகியவை அதிகமாகின்றன. கவலைகள், கோபம், பொறாமை, அற்ப புத்தி, குழப்பம், பேராசை போன்றவை குறைகின்றன. தியானம் செய்தும் அப்படி ஆகாமல் இருந்தால் உண்மையில் தியானப்பயிற்சி நடக்கவில்லை என்றும் தியானம் என்ற பெயரில் ஏதோ எந்திரத்தனமான சடங்கு நடந்திருக்கிறது என்று பொருள் என்றும் அடித்துக் கூறலாம்.

1996 ஆம் ஆண்டு இரத்த அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றைக் குறைப்பதில் தியானத்தின் பங்கு பற்றி சார்லஸ் அலெக்சாண்டர் (Charles N Alexander Ph.D) என்ற ஆராய்ச்சியாளரின் தலைமையில் ஒரு குழு அமெரிக்காவில் மூன்று மாத காலம் ஆராய்ச்சி செய்தது. தன் முடிவுகளை அமெரிக்க இருதய அசோஷியேசன் வெளியிடும் பத்திரிக்கை Hypertension ல் 1996 ஆகஸ்ட் இதழில் அலெக்சாண்டர் வெளியிட்டார். அதில் வயதான வேறு பல வியாதிகள் இருக்கும் நபர்களும் கூட தியானத்தின் மூலம் இரத்த அழுத்தத்தை மிகவும் குறைக்க முடிகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

1992 ல் USA Today பத்திரிக்கை வயதான தோற்றத்தைத் தடுக்க தியானம் உதவுகிறது என்பதை ஆய்வு செய்து வெளியிட்டது. தொடர்ந்து தியானம் செய்பவர்கள் இளமையான தோற்றமுடையவர்களாக இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்தது.

1989 ல் Newsweek பத்திரிக்கை முதியோர் இல்லங்களில் வாழும் முதியோர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. அந்த முதியோர்களை (சராசரி வயது 81 வயது) மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஒரு பிரிவு ஆட்களுக்குத் தியானப் பயிற்சியும், இன்னொரு பிரிவு ஆட்களுக்கு வெறும் ரிலேக்சேஷன் பயிற்சியும் அளித்தது. மூன்றாவது பிரிவினருக்கு தியானப் பயிற்சியோ, ரிலேக்சேஷன் பயிற்சியோ அளிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில் தியானப்பயிற்சி செய்த அனைத்து நபர்களுமே உயிரோடிருந்தனர். வெறும் ரிலேக்சேஷன் பயிற்சி செய்திருந்த முதியோரில் 12.5 சதவீதம் பேர் இறந்திருந்தனர். தியானமோ, ரிலேக்சேஷன் பயிற்சிகளோ செய்யாதவர்களில் 37.5 சதவீதம் பேர் இறந்திருந்தனர்.

மேற்கண்ட அனைத்து ஆராய்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்ட தியான முறை மகரிஷி மகேஷ் யோகியின் Transcendental Meditation ™ . அதையும் வேறு சில தியான முறைகளையும் விளக்கமாகப் பார்ப்போம். எல்லா தியானப் பயிற்சிகளிலும் எல்லோரும் தேர்ச்சி பெறுவது கஷ்டம். எனவே இனி விளக்கப்படும் தியானப் பயிற்சிகளில் உங்களுக்கு ஒத்து வருகிற ஒன்றில் தினமும் ஈடுபடுவது போதுமானது. ஆழ்மன சக்திகளுக்கு ஏற்ற அலைவரிசைகளில் நம்மை இருத்தச் செய்வதுடன் மற்றபல மன நலம் மற்றும் உடல் நலமும் தியானத்தால் மேம்படுவதால் முக்கியமான சில தியானங்கள் பற்றி அறிந்து கொள்வோமா?

அடுத்த வாரம் வரை சென்ற அத்தியாயத்தில் சொன்ன பயிற்சியை இது வரை செய்யாதவர்களும் தொடர்ந்து செய்யவும். அது தியானம் சுலபமாகக் கைகூட உதவியாய் இருக்கும்.

மேலும் பயணிப்போம்.....

(தொடரும்)

என்.கணேசன்

7 comments:

  1. //இனி விளக்கப்படும் தியானப் பயிற்சிகளில் உங்களுக்கு ஒத்து வருகிற ஒன்றில் தினமும் ஈடுபடுவது போதுமானது//

    காத்திருக்கிறேன். எல்லோராலும் படிக்கப்பட வேண்டிய அருமையான பதிவு. பாராட்டுகள்.

    ரேகா ராகவன்.
    (சிகாகோவிலிருந்து)

    ReplyDelete
  2. Recently I came to know about your blog through my mother. Nice blog. For past 3 days I almost read most of your post. Very impressive esp., your post on Powers of sub-conscious mind.

    Thank you for sharing.

    KMK

    ReplyDelete
  3. ///இந்த நேரத்தில் இதைத் தான் செய்வேன் என்று எஜமானாகக் கண்டிப்புடன் சொல்லி செயல்படுத்தினால் ஒழிய மனம் எந்த நல்ல மாற்றத்தையும் விரும்பி ஏற்காது என்பதை நினைவில் கொள்ளவும்./////

    I like that lines. How much truth is there in those lines.

    ReplyDelete
  4. தொடர்ந்து தியானம் செய்பவர்கள் இளமையான தோற்றமுடையவர்களாக இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்தது.

    நிஜ‌ம்.ப‌ல‌ரை க‌ண்டிருக்கேன்.முக‌த்தில் ஒரு தெளிவு பிற‌க்கும்.

    ReplyDelete
  5. மகரிஷி மகேஷ் யோகியின் Transcendental Meditation ™
    இங்கு தான் நானும் க‌ற்றுக்கொண்டேன்.

    ReplyDelete
  6. ஒரு சின்ன‌ வேண்டுகோள்
    "ஆழ் ம‌ன‌ ச‌க்திக‌ள்‍ 1,2,3,4 " என‌ப‌த‌ற்கு ப‌தில் குறி சொல் இருந்தால் தேட‌ நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு எளிதாக‌ இருக்கும்.(உ‍ம்) ஆல்பா தியான‌த்தை ப‌ற்றி தெரிந்துகொள்ள‌ எத்த‌னையாவ‌து எண் என்ப‌தை க‌ண்டுபிடிக்க‌ மிக‌வும் க‌ஷ்ட‌ப்ப‌ட‌வேண்டும்

    ReplyDelete