தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Friday, February 5, 2010
வாலியிடம் பேச்சிழந்த இராமன்
கம்ப இராமாயணத்தில் இராமன் பேச்சிழந்து நின்ற இடம் ஒன்று தான். அது வாலியை வீழ்த்திய பின் அவனுடைய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்ற இடம். விற்போரில் வீழ்ந்த வாலி சொற்போர் தொடுத்த போது இராமன் நிராயுதபாணியாக மௌனமாகவே நின்றான்.
வாலி இராமன் மீது பெரும் நம்பிக்கை வைத்தவன். சுக்ரீவன் இராமன் துணையுடன் போருக்கு அழைத்த போது தாரை வாலிக்கு எச்சரிக்கை விடுக்கிறாள். இராமன் துணையுடன் அவன் வந்திருக்கக்கூடும் என்கிறாள். ஆனால் வாலி அவளைக் கடிந்து கொள்கிறான்.
தம்பியர் அல்லது தமக்கு வேறு உயிர்
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரிடை
அம்பிடைத் தொடுக்குமோ அருளின் ஆழியான்
(“தம்பிகளை விட தனக்கு உயிர் வேறு இல்லை என்கிற அளவு பாசம் வைத்துள்ள அருட்பெருங்கடலான இராமன் நானும் என் தம்பியும் நடத்தும் சண்டையில் அம்பை எய்துவானா?” என்று கேட்கிறான்).
அந்த அளவு வைத்த நம்பிக்கை பொய்த்த போது, இராமன் மறைந்திருந்து அம்பைத் தொடுத்த போது, அவனுக்கு இராமன் மீது வந்த கோபம் இயல்பானது தானே. தம்பி மனைவியை அபகரித்தது குற்றம் என்ற வாதம் அவனிடம் எடுபடவில்லை. மனித தர்மத்தை விலங்குகள் எங்களிடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்றவன் விட்ட சொற்கணைகள் மிகவும் கூர்மையானவை.
வீரம் அன்று; விதி அன்று; மெய்ம்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக்கு என்னுடல்
பாரம் அன்று; பகையன்று: பண்பு ஒழிந்து
ஈரம் இன்றி இது என் செய்தவாறு அரோ.
(இது வீரம் அல்ல; விதி அல்ல; தர்மம் அல்ல; உன் மண்ணுக்கு நான் பாரம் அல்ல; உனக்கு நான் பகைவனும் அல்ல; அப்படியிருக்கையில் பண்பில்லாமல், இரக்கமில்லாமல் ஏன் இப்படிச் செய்தாய்?)
வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே! நீ பரதன் முன் தோன்றினாயே!
தீமை தான் பிறரைக் காத்துத் தான் செய்தால் தீங்கு அன்றாமோ?
தாய்மையும் அன்றி நட்பும் தர்மமும் தழுவி நின்றாய்.
(கொடுத்த வாக்கையும் மரபையும் காத்து உயிர் விட்ட தூயவன் தசரதனின் மைந்தனே! நீ போய் பரதனுக்கு முன்னால் பிறந்தாயே. தீமையை அடுத்தவர் செய்யாமல் காத்து பின் அதை நீயே செய்தால் அது தீங்கில்லாமல் போய் விடுமா?)
இப்படியெல்லாம் கேட்ட வாலிக்குப் பதில் சொல்ல முடியாமல் கம்பனின் இராமன் ஊமையாக நின்றான். வால்மீகியின் இராமன் வாலிக்குப் பதில் சொல்கிறான். “ஆம் நான் அப்படித் தான் சேய்தேன். அதில் என்ன தவறு? நீ ஒரு வானரம் தானே. நீ வேட்டையாடுவதற்கு ஏற்ற பிராணி. என்னைப் போன்ற அரசர்கள் உன்னை வேட்டையாடுவதற்கு உரிமையுள்ளவர்கள். அவர்கள் மறைந்து நின்றோ, வேறு தந்திரங்களைக் கொண்டோ வேட்டையாடுவதில் தவறில்லை. உன்னை எனக்குத் தகுந்த எதிரியாக நினைத்து நான் ஏன் உன்னிடம் நேரிட்டு சண்டையிட வேண்டும்?”
ஆனால் கம்பனின் இராமன் உயர் பண்பின் சிகரம். வாலியின் குற்றச்சாட்டில் இருக்கும் நியாயத்தையும் உணர்ந்தவன் போல அவன் அப்படி எல்லாம் பேசவில்லை. எதிரில் நின்று போரிடுபவர்களின் பலத்தில் பாதியைப் பெற்று விடும் வரத்தை வாலி பெற்றிருந்ததால் தான் மறைந்து நின்று அம்பெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இராமனுக்கு இருந்தது. அதையும் சொல்லி வாதம் செய்யவில்லை கம்பனின் வீரம் மிகுந்த இராமன். கம்பனில் இலக்குவன் தான் வாலிக்கு எல்லா பதிலையும் சொல்கிறான். இராமனுடைய தர்மசங்கடமான மௌனம் இறந்து கொண்டிருந்த வாலிக்கு இரக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். வாலியே சமாதானம் சொல்லிக் கொள்கிறான்.
ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னர் திகைத்தனை போலும் செய்கை?
(உன் உயிரை, ஜனகன் பெற்ற அன்னத்தை, பாற்கடலைக் கடைந்த போது அமிர்தத்தோடு வந்த தேவியை இழந்த பின் என்ன செய்வது என்று தெரியாமல் திகைப்பினால் தான் இப்படிச் செய்தாய் போலும்)
வசை பாடிய வாலி இராமன் இறைவன் என்பதை மரணத்தருவாயில் உணர்ந்து எல்லாமே நீ தான் என்று துதிக்கவும் செய்கிறான்.
மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ!
தன்னைத் தொழுது இறந்த வாலி இராமன் மனதில் உறுத்தலை ஏற்படுத்தி இருக்க வேண்டும். வாலியின் மகன் அங்கதனிடம் பொன்னால் செய்த உடை வாளைத் தந்ததைக் கம்பன் இப்படிக் கூறுகிறான்.
தன் அடி தாழ்தலோடும், தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி “நீ இது பொறுத்தி’ என்றான்.
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின; இறந்து வாலி
அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்
”நீ இது பொறுத்தி” என்று இராமன் சொல்வது பல பட்டிமன்றங்களில் காரசாரமான விவாதத்திற்குக் காரணமாக அமைந்தது. “நீ இதைப் பெற்றுக் கொள்” என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று சிலரும், வாலியிடம் கேட்காத மன்னிப்பை அங்கதனிடம் கேட்கும் விதமாக “நீ இதைப் பொறுத்துக் கொள்” என்று இரட்டை அர்த்தத்தில் கூறுவதாகச் சிலரும் கூறுகிறார்கள்.
இரண்டாவது விதமாகவே இராமன் கூறியிருக்க வேண்டும் என்று கூறுபவர்கள் மேலே சொன்ன பாடலில் மூன்றாவது அடியைக் காரணம் காட்டுகிறார்கள். அப்படிச் சொன்னவுடன் ஏழு உலகங்களும் வாழ்த்தின என்றால் அது வெறும் வாளைத் தந்த செய்கைக்காக இருக்காது, இராமன் தன் செய்கைக்காக வருந்தி அந்த சொற்களைச் சொல்லியதாலேயே அவன் பெருந்தன்மைக்கு மெச்சியே ஏழு உலகங்களும் வாழ்த்தி இருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.
(கிருஷ்ணாவதாரத்தில் ஒரு வேடன் தவறாக அம்பை எய்ததால் கிருஷ்ணர் உயிரை விட நேர்ந்தது. அவ்வேடன் துக்கத்துடன் கிருஷ்ணரிடம் மன்னிப்பைக் கோரிய போது கிருஷ்ணர் “இது உன் பிழை அல்ல. இது நான் சென்ற அவதாரத்தில் சம்பாதித்தது” என்று கூறியதாகச் சொல்வார்கள்.)
வால்மீகியும் கம்பனும் ஒருசில இடங்களில் வேறுபடுகிறார்கள். கம்பன் அப்படி வேறுபடுவதன் மூலம் அந்தக் கதாபாத்திரங்களை மேலும் மெருகுபடுத்துகிறான் என்பதற்கு வாலி வதம் ஒரு நல்ல உதாரணம்.
-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
Subscribe to:
Post Comments (Atom)
தோழர் என். கணேசன் அவர்களே1
ReplyDeleteநான் ரொம்ப நாளாக
படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு
தேடிக்கொண்டிருந்த பகுதியை
பதிவிட்டமைக்கு நன்றி
arumai. eliya nadai anaivaraiyum kavarum. vaalka valamudan. valarka thamiludan.
ReplyDeleteஆகா...
ReplyDeleteமிக அழகாக உரைத்திருக்கின்றீர்கள்! கம்பன் கம்பன்தான்! நம் இலக்கியங்களை மனதூன்றி படித்து, அதில் திளைத்து, தான் சுவைத்ததை பிறருக்கும் தருபவரை காணும்பொழுதெல்லாம் நான் பேருவகை அடைகிறேன்! மிக்க நன்றி அய்யா!
அன்புடன்,
விஜய்
வணக்கம்,
ReplyDeleteவாலி வத களங்கத்தால் தான் சூரிய குல ராமனுக்கு ராமச்சந்திரன் என சந்திரப் பட்டம் கிடைத்ததாக என் பள்ளி தமிழாசிரியர் கூறியிருக்கிறார்.
நன்றி
ராஜ்குமார்
சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்
ReplyDeleteநன்றி
ReplyDeleteஇதற்கெல்லாம் நான் பதில் சொல்லத் தேவையில்லை. என் தம்பியே போதும் என்று இராமன் முடிவு செய்துவிட்டான். தப்பு செய்து விட்டு அதை ஒத்துக்கொள்ள மனமில்லாமல் வீண் வாதம் செய்பவனுடன் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது. மட்டுமில்லாமல் நியாயத்தைச் சொல்பவவனிடமே குறையைக் கண்டுபிடிக்கிறவனோடு என்ன பேச முடியும். கொள்ளைக்காரனுக்கு இதுதான் தண்டனை.
ReplyDeleteஅருமையான பதிவு....கம்ப இராமாயணம் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் பதிவு.....நன்றி G
ReplyDeleteமிகவும் அருமை
ReplyDelete