அர்ஜுன் கீதாவுக்காகக் காத்திருக்கையில் என்றுமில்லாத
படபடப்பை தனக்குள் உணர்ந்தான். கீதாவிடம் இன்று காலை அலைபேசியில் தொடர்பு கொண்டு வரச் சொன்ன
போது அவள் உடனடியாகக் கேட்டாள். “என்ன விஷயம் அர்ஜுன்?”
ஏனென்றால் இதுவரை அவன் அவளை காரணமில்லாமல்
சும்மா பேச வரச் சொன்னதில்லை. அப்படிப் பேசுவதும் பெரும்பாலும் அவர்களுடைய தொழில் சம்பந்தமாகத்
தான் இருக்கும். முதல் முறையாக அவன் அவளிடம் தங்கள் காதலைப்
பற்றிப் பேச அழைத்திருப்பதை அலைபேசியில் எப்படிச் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. “நீ வா நேரில் சொல்கிறேன்”
என்று மொட்டையாகச் சொல்லி இருக்கிறான்.
வழக்கமாக அவர்கள் அமர்ந்து கதைக்கும் அந்த ஓட்டலில் அன்று அதிகக்
கூட்டமில்லை. அவள் வருவதாகச் சொன்ன நேரம் கடந்து ஐந்து நிமிடங்கள் தான் கழிந்திருக்கின்றன
என்றாலும் ஒரு யுகமே காத்திருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. முன்பும்
சில நாட்களில் அவள் வரத் தாமதமாகி இருக்கிறது. அப்போதெல்லாம்
அலைபேசியில் ஏதாவது பார்க்க ஆரம்பித்தான் என்றால் அவள் வந்து சேர்ந்து அவனை அழைக்கும்
வரை காலத்தின் பிரக்ஞையே அவனுக்கு இருக்காது. ஆனால் இன்றோ
அது முடியவில்லை. அவளிடம் எப்படிச் சொல்ல ஆரம்பிப்பது என்று ஐந்தாறு விதங்களில்
மனதில் சொல்லி ஒத்திகை பார்த்து விட்டான். எதுவும்
அவனுக்குத் திருப்தியளிக்கவில்லை.
பெரிய பெரிய ஆட்களிடம் பேட்டி எடுக்கும்
போதும், பேசும் போதும் அலட்டிக் கொள்ளாமல் அவன் அமைதியாய் இருந்திருக்கிறான். கீதாவிடமே
அவன் எத்தனையோ முறை எதை எதையோ பேசியிருக்கிறான். அப்போதெல்லாம், இப்படிப்
பேச வேண்டும், அப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் அதிகமாய் அவன் எப்போதுமே
யோசித்து வைத்துப் பேசியதில்லை. தானாய் வார்த்தைகள் வரும். ஆனால் இன்று
காதலை முதல் முறையாகத் தெரிவித்துப் பேச வேண்டுமென்கிற போது அது சரியாக இருக்க வேண்டும்
என்று மனம் கவலைப்படுகிறது...
கீதா உள்ளே நுழைந்தாள். அவளைப்
பார்த்தவுடன் அவன் மனதின் படபடப்பு அதிகரித்தது. நிஜமாகவே
காதல் சக்தி வாய்ந்தது தான். அது எப்படிப்பட்டவர் மனநிலையையும் சமநிலையில் இருந்து தள்ளி
விடுகிறது. சில சமயங்களில் சம்பந்தப்பட்டவரை அரைக்கிறுக்காக்கி விடுகிறது. முன்பிருந்தே
அவளிடம் காதல் இருந்திருந்தாலும், அவனே அதை அங்கீகரிக்க மறுத்து ஆழ்மனதில் புதைத்து வைத்திருந்த
போது அவளுடன் பேசுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்றோ முழு
உணர்வுடன் பேச முற்படுகையில் பதின்ம வயதுப் பையன் போல மனம் படபடப்பை உணர்வது அவன் அறிவுக்கு
வேடிக்கையாக இருந்தது. ஆனால் அறிவுக்கு இங்கே வேலை இல்லை என்பதால் இதயத்தின் பிரச்சினைகள்
அறிவுக்குப் புரியாது...
“சாரி அர்ஜுன், லேட்டாயிடுச்சு. வழியில
ட்ராஃபிக் ஜாம்.” என்று சொல்லியபடி அவன் எதிரில் அமர்ந்தவள் உடனடியாகக் கேட்டாள். “என்ன ரொம்ப
கவனமா ட்ரஸ் பண்ணிகிட்டு வந்திருக்கே. யாரையாவது காதலிக்க
ஆரம்பிச்சிட்டியா என்ன?”
அர்ஜுன் திகைத்தான். இந்த பெண்களின்
பார்வை தான் எத்தனை கூர்மையானது! நித்யாவும் சரி, இவளும்
சரி எப்படி இவ்வளவு வேகமாக சூட்சும விஷயங்களையும் கவனித்து விடுகிறார்கள்? ஒரு விதத்தில்
அவளாக அப்படிக் கேட்டது நல்லதாயிற்று. அவன் இதயம் படபடக்க
சொன்னான். “ஆமா. உன்னை தான்.”
ஒரு கணம் அவள் மனம் பூரித்தாலும் அவன்
விளையாட்டாய் பேசுகிறான் என்று கீதா நினைத்தாள். “என்னை தான்
மூனு வருஷமாய் பார்க்கறியே. ஆனா இப்படியெல்லாம் ட்ரஸ் பண்ணிட்டு வந்ததில்லையே. விளையாடாம
சொல்லு. யாரந்த பொண்ணு?”
அவள் கண்களைக் கூர்ந்து பார்த்து அழுத்தந்திருத்தமாக
அர்ஜுன் சொன்னான். “அதான் சொன்னேனே நீ தான்”
இது வரை அவன் அவளை அப்படிப் பார்த்ததில்லை. அவளுக்கு
இது கனவா இல்லை நிஜம் தானா என்று ஒரு கணம் சந்தேகம் வந்தது. கண்களை
ஒரு முறை நன்றாக மூடித் திறந்தாள். அவன் இன்னும் எதிரில்
தான் அமர்ந்து இருக்கிறான். அவளையே இன்னும் அப்படியே தான் பார்த்துக் கொண்டும் இருக்கிறான்.
சர்வர் அவர்களுடைய மேஜைக்கு வந்து நின்றான். அர்ஜுன் “ரெண்டு
காஃபி” என்று சொன்னான்.
நடப்பது எதுவும் கனவல்ல. காலையில்
அவன் அலைபேசியில் அழைத்த போது இதையெல்லாம் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. சொல்லப்
போனால் இப்படி ஒரு நிகழ்வு தன் வாழ்வில் எப்போதாவது நடக்கும் என்ற நம்பிக்கையைக் கூட
அவள் என்றைக்கோ தொலைத்து விட்டிருந்தாள்.
ஏனென்றால் இப்படியெல்லாம் நடக்கக்கூடிய சாத்தியக்கூறு அவளுக்குத் தென்பட்டிருக்கவில்லை.
இத்தனை காலம் ஆகாதது இனிமேலா
ஆகப்போகிறது என்று விரக்திக்கே அவள் வந்திருந்தாள். ஆனாலும் இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.
சந்தோஷத்தில் அழ வேண்டும் போல் இருந்தது.
அத்தனையையும் உள்ளே புதைத்துக் கொண்டு அவள் மெல்லக் கேட்டாள். “இது எப்போதிருந்து?”
“ரெண்டு, ரெண்டரை வருஷமாவே தான்.”
“ஆனா இதுவரைக்கும் என் கிட்ட நீ சொல்லவேயில்லையே?”
“நீயும் என் கிட்ட சொல்லலையே”
“சரி இப்ப மட்டும் ஏன் சொல்லறே?”
“நீ என்னைக் காதலிக்கறேன்னு தெரிஞ்சுது”
“நான் அப்படிச்
சொல்லவேயில்லையே.”. அவளுக்கு அவனைச் சீண்டிப் பார்க்கத் தோன்றியது.
“நீ சொல்லி
தான் தெரியணுமா கீதா? அது என் ஆழ்மனசுக்கு ஆரம்பத்துல இருந்தே தெரியும். அதை எப்படி
எதிர்கொள்றதுன்னு தெரியாத ஒருவித ஆழ்மனச் சிக்கல்ல நான் இருந்தேன்....
நேத்து நித்யா நீ என்னைக் காதலிக்கறதைக் கண்டுபிடிச்சு சொன்னா. அப்ப கூட
நான் அதை நம்பற மனநிலைல இருக்கல. ஆனா அவ உறுதியா சொன்னா. நான் ஆழமாய்
யோசிச்சுப் பாத்தேன். அப்போ தான் ஆழ்மனசுல நான் அதை எப்பவோ உணர்ந்திருக்கேன்னு
புரிஞ்சுது. நான் சொன்ன மாதிரி, வெளிப்படையா
அதை புரிஞ்சுக்கவோ, அதைப் பத்தி பேசவோ முடியாத மனச்சிக்கல் என்கிட்ட இருந்துச்சு.”
“இப்பவும்
அந்தச் சிக்கல் முழுசா போயிடல போல.”
“ஏன் அப்படிச்
சொல்றே?”
”இப்பவும், நீ தான், உன்னைத்
தான்னு சொல்றியே ஒழிய “நான் உன்னைக் காதலிக்கிறேன்”னு ஒத்தை
வாக்கியத்தை மொத்தமா சேர்ந்து சொல்ல மாட்டேன்கிறே”
அர்ஜுன் அப்போது தான் அந்தத் தவறை உணர்ந்தான். மேஜை மேல்
வைத்திருந்த அவள் கையை இறுக்கப்பிடித்துக் கொண்டு சொன்னான். “நான் உன்னைக்
காதலிக்கிறேன் கீதா”
அவளுக்கு சந்தோஷ மிகுதியில் அழ வேண்டும்
போல் தோன்றியது. அவள் கட்டுப்பாட்டையும் மீறி கண்கள் ஈரமாயின.
சர்வர் காபியுடன் வர அர்ஜுன் அவள் கையை அவசரமாக விடுவித்தான். சர்வர் போன பிறகு கீதா அவனிடம் குரலடைக்கச்
சொன்னாள். “இந்த
ஒரு நாள் வரும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை, தெரியுமா?”
அவள் கண்கலங்கியதிலும், அப்படிச் சொன்னதிலும் அவனும் மனமுருகினான்.
“எனக்குத் தான் சில மனச்சிக்கல் இருந்துச்சு. நீயாவது
சொல்லி இருக்கலாமே கீதா?”
அவள் சொன்னாள்.
“நீ எந்த அறிகுறியுமே காட்டலை. அதனால நான் காதலைச்
சொல்லி, நமக்கிடையே இருக்கிற நட்பையும் இழந்துட விரும்பல அர்ஜுன்.”
நித்யா அதையும் துல்லியமாய் கணித்திருந்ததை நினைத்து அர்ஜுன்
ஆச்சரியப்பட்டான். ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணால் புரிந்து கொள்ள முடிகிறது என்று இதை எடுத்துக்
கொள்வதா, இல்லை நித்யாவின் கூர்நோக்குத் திறன் என்று எடுத்துக்
கொள்வதா என்று அவனுக்குத் தெரியவில்லை.
கீதா கேட்டாள்.
“உனக்கு சில மனச்சிக்கல்னு சொன்னாயே. என்ன மனச்சிக்கல்
அர்ஜுன்?”
அர்ஜுன் தன் தாயையும்,
தாயிற்கும் அவனுக்கும் இருக்கும் இடைவெளியையும் பற்றிச் சொல்லாமல் கீதாவிடம்
அவனுடைய மனச்சிக்கலை விளக்க முடியாது. ஆனால் அவளிடம் இப்போது
அதை வெளிப்படையாகச் சொல்ல முடிந்த மனநிலையில் அவன் இருக்கவில்லை. அந்தச் சிக்கலை அவன் நேற்று தான் உணரவும், அலசவும் ஆரம்பித்து
இருக்கிறான். அதை அவன் ஜீரணித்து அதிலிருந்து விடுபட ஒரு வழி
கண்டுபிடித்துத் தெளிவடையாமல் அரைகுறையாக அவளிடம் அதுபற்றிப் பேச அவன் விரும்பவில்லை.
“நமக்குள்ளே இனி எந்த ஒளிவு மறைவுக்கும் அவசியமில்லை தான். ஆனால் இப்பவும் அந்தச் சிக்கல் பற்றி முழுத்தெளிவு எனக்கில்லை கீதா.
ஒரு தெளிவு வந்தவுடன கண்டிப்பா ஒரு நாள் உன் கிட்டே சொல்றேன்.”
அவன் சொல்லச் சொல்ல அவனுக்கு அவன் ஆபிசிலிருந்து
குறுந்தகவல் குறுந்தகவல் வந்தது. ”நியூஸ் சேனல் பார்க்கவும்”
அவள் கேட்டாள். “என்ன?”
அவன் சொன்னான். “ஏதோ ப்ரேக்கிங்
ந்யூஸ் வந்துகிட்டிருக்கு.”
(தொடரும்)
என்.கணேசன்


Many Thanks
ReplyDelete