Thursday, January 9, 2025

சாணக்கியன் 143

 

ரண்மனைக்குச் சென்று சேர்ந்தவுடன் தனநந்தன் வறண்ட குரலில் நீண்ட காலத்திற்கு முன்னால் கங்கைக் கரையில் பெரும் நிதியைப் புதைத்து வைத்த கதையையும், சில காலம் கழித்து முன்னெச்சரிக்கையுடன் யாகசாலையை அங்கு கட்டி மக்கள் தற்செயலாக எதையும் கண்டுபிடித்து விடமுடியாத ஏற்பாட்டைச் செய்ததையும், சுருக்கமாக ராக்ஷசரிடம் தெரிவித்தான்.

 

ராக்ஷசர் திகைப்படைந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. முன்கூட்டியே தெரிவித்திருந்தால் அங்கே காவலை அதிகப்படுத்தியிருக்கலாம் என்ற ஆதங்கம் மட்டும் அவர் மனதில் எழுந்தது. அவர் மெல்லக் கேட்டார். “இந்தப் புதையல் விஷயம் யார் யாருக்கெல்லாம் தெரியும் அரசே?”

 

உயிரோடிருப்பவர்களில் என்னைத் தவிர யாருக்கும் தெரியாது என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன்.”

 

அந்த ஒற்றை வாக்கியம் ஏராளமான தகவல்களை ராக்ஷசருக்குத் தெரிவித்தது. ஆனால் அவரைப் பொருத்த வரை தனநந்தன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவன். அவன் அரசன். அவன் என்ன செய்தாலும் அது சரியே.

 

ராக்ஷசர் கேட்டார். “தங்கள் குடும்பத்தினர் அல்லது வேறு யாரிடமாவது பேச்சுவாக்கில் எப்போதாவது இதைப் பற்றிச் சொல்லி வைத்திருந்தீர்களா? சிறிது ஞாபகப்படுத்திப் பாருங்கள் அரசே

 

இல்லைஎன்று உடனே தனநந்தன் உறுதியாகச் சொன்னான்.

 

ராக்ஷசர் குழப்பத்துடன் கேட்டார். “பின் எப்படி?”

 

தனநந்தன் விரக்தியும் ஆத்திரமும் சேர்ந்து உணர்ந்தபடி சொன்னான். “அது தான் எனக்கும் விளங்கவில்லை. வரருசி சொல்வது போல் சாணக்கின் மகன் மாந்திரீகம் மூலமாக இதை அறிந்திருப்பானோ?”

 

முதலில் ஆயுதக்கிடங்கு பற்றியெரிந்தது, இப்போது புதையல் திருட்டுப் போனது என்று அடுத்தடுத்து நடக்கின்றவற்றை எண்ணிப் பார்த்தால் அந்தக் கோணமும் அலட்சியப்படுத்த முடியாதது என்று தோன்றினாலும் கூட ராக்ஷசருக்கு அதை நம்பக் கஷ்டமாக இருந்தது. அவர் யோசனையுடன் கேட்டார். “நீங்கள் யாகசாலையை எப்போதும் பூட்டியே வைத்திருந்தீர்கள் அல்லவா? இன்று செல்லும் போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததா?”

 

இல்லை. யாகசாலை பூட்டியே இருந்தது. சாரதி என் கண் முன் தான் பூட்டைத் திறந்தான்

 

சாவி இங்கே எங்கே வைக்கப்பட்டிருந்தது அரசே?”

 

சாவி என்னிடமே இருந்தது. அதை யாரும் எடுத்திருக்க வழியில்லை.”   

 

பின் எப்படி இது நிகழ்ந்திருக்க முடியும் என்பது ராக்ஷசருக்குப் புரியவில்லை. மிகவும் கச்சிதமாக இத்திருட்டு அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்பது மட்டும் தெரிந்தது.

 

நீங்கள் இதற்கு முன் கடைசியாக யாகசாலைக்கு எப்போது சென்றீர்கள் அரசே? அந்தச் சமயத்தில் இந்தப் புதையல் திருட்டுப் போயிருக்கவில்லையே?”

 

தனநந்தன் தான் கடைசியாக எப்போது போய்ப் பார்த்தான் என்று சொன்னான். அந்தச் சமயத்தில் எல்லாம் சரியாகவே இருந்ததை உறுதிப்படுத்திக் கொண்டதைச் சொன்னான்.

 

ராக்ஷசர் சொன்னார். “அப்படியானால் அதற்குப் பின் தான் இதை அவர்கள் நூதன முறையில் திருடியிருக்க வேண்டும்

 

தனநந்தன் திடீரென்று நினைவு வந்து கோபத்தில் கொந்தளித்தபடி சொன்னான். “அப்படியானால் வேறெதோ புதையல் கிடைத்து அவர்கள் ஆயுதங்களும் குதிரைகளும் வாங்கவில்லை. இங்கிருந்து திருடிச் சென்றதை வைத்தே தங்கள் படை ஆயுத பலத்தைப் பெருக்கி இருக்கிறார்கள்.”

 

நினைக்க நினைக்க கோபம் அதிகமாகி தனநந்தன் ஜன்னி வந்தவன் போல் நடுங்கினான். திட்ட சரியான வார்த்தைகள் கிடைக்காமல் அவன் யாகசாலையில் ஆரம்பத்தில் ஓலமிட்டது போலவே மறுபடி ஓலமிட்டான். என்ன ஆயிற்றோ என்று பதறியபடி அவன் குடும்பத்தினரும், அரண்மனைக் காவலர்களும், பணியாளர்களும் ஓடி வந்தார்கள். அவர்கள் வேடிக்கை பார்ப்பதை ரசிக்க முடியாமல் மேலும் கொதித்த தனநந்தனை ஓரளவாவது அமைதிப்படுத்த அவன் குடும்பத்தினருக்கும், ராக்ஷசருக்கும் நீண்ட நேரம் தேவைப்பட்டது.

 

ராக்ஷசருக்கு தனநந்தனின் நிலைமையைப் பார்க்கையில் மனம் வேதனை அடைந்ததுஎத்தனை தான் கோபமடைந்தாலும் இப்படி புத்தி பேதலித்தவன் போல் நடந்து கொள்பவன் அல்ல அவன். அப்படிப்பட்டவன் தன் நிலையும், கௌரவமும் மறந்து மற்றவர்களால் பரிகசிக்கப்படும் நிலைக்கும், பரிதாபப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டதை அவரால் சகிக்க முடியவில்லை

 

வீடு திரும்பும் போது அவருக்கு தனநந்தனின் கொந்தளிப்புக்கு நேரெதிராயிருந்த விஷ்ணுகுப்தரின் அசைக்க முடியாத அமைதி நினைவுக்கு வந்ததுஅரசவையில் அவமானப்படுத்தப்பட்ட போதும், சபையிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போதும் அழுத்தமான அமைதியுடன் அந்த மனிதர் இருந்த காட்சி மறுபடி நேரில் பார்ப்பது போல் மனத்திரையில் வந்தது. ஒரு சாதாரண ஆசிரியர் என்று நினைக்கப்பட்ட மனிதர் இன்று விஸ்வரூபம் எடுத்து மிரட்டுகிறார்...

 

ராக்ஷசர் இனி வேகமாய் செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். ஒற்றர்களை அழைத்து விசாரித்த போது அவர்கள் சில காலத்திற்கு முன்பு கங்கைக் கரையில் யாகசாலைக்கு அருகில் முகாமிட்டுத் தங்கிய வணிகர்களை நினைவு கூர்ந்தார்கள். அவர்கள் தங்கிய காலமும் இடமும் அவர்களையே திருடர்களாய் சுட்டிக் காட்டியது. அந்த வணிகர்களில் ஒருவன் அவரிடமே விற்பனை செய்ய முயன்றதையும் ஒரு ஒற்றன் கட்டுப்படுத்திய புன்னகையுடன் நினைவுபடுத்தினான். தனநந்தனைப் போலவே அவரும் கோபத்தை உணர்ந்தாலும் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, திரும்பவும் அந்த வணிகர்கள் வந்தால் அவர்களை உடனடியாகச் சிறைப்படுத்த வேண்டும் என்று கட்டளை இட்டார்.

 

பின் அவர் அவர்களிடம் கேட்டார். “அந்த வணிகர்களுக்கும், இப்போது ஆயுதக்கிடங்கைத் தீப்பிடிக்க வைத்தவர்களுக்கும் கண்டிப்பாக உள்ளூர் ஆட்கள் சிலரின் உதவி கிடைத்திருக்க வேண்டும். அல்லது உள்ளூர் ஆட்கள் சிலராவது அவர்கள் நடவடிக்கைகள் பற்றி அறிந்திருந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட உள்ளூர் ஆட்கள் யாராக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று நினைக்கிறீர்கள்?”

 

ஒற்றர்கள் யோசித்தார்கள். ராக்ஷசர் சொன்னார். “உள்ளூர் ஆட்களில் யாரிடம் திடீரென பணப்புழக்கம் அதிகமாகியிருக்கிறது என்று தெரிந்தாலும் கூட அது நமக்கு உபயோகமான தகவலாய் இருக்கும்

 

ஒற்றர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ராக்ஷசர் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் தொனியில் சொன்னார். “உங்கள் மனதில் உள்ளதைச் சொல்லலாம். என்னிடம் எதையும் மறைக்க வேண்டியதில்லை.”

 

ஒரு ஒற்றன் சொன்னான். “பணப்புழக்கம் அதிகம் என்று சொல்ல முடியா விட்டாலும் நம் சேனாதிபதி பத்ரசால் ஒரு காலத்தில் பணத்திற்காகச் சிரமப்பட்டது போல் இப்போதெல்லாம் சிரமப்படுவதில்லை என்பதைப் பார்க்கிறோம்.”

 

ராக்ஷசர் அதிர்ந்து போனார். நாளை போர் மூளுமானால் யாரை நம்பி மகத சாம்ராஜ்ஜியமே இருக்கிறதோ அந்த அஸ்திவாரமே தகர்வதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. எந்த ஒரு மனிதனும் தாங்க முடிந்த அதிர்ச்சிகள் ஓரளவு தான். அதற்கு மேல் ஏற்படும் அதிர்ச்சிகள் அவனை உடைத்து  சிதைத்து விடும். அவர் மெல்லக் கேட்டார். “அந்த வணிகர்களோ, வேறு ஏதாவது சந்தேகத்திற்குரியவர்களோ சேனாதிபதியுடன் நெருங்கிப் பழகி இருக்க வாய்ப்புகள் உண்டா?”

 

அப்படி எதுவும் நடக்கவில்லை பிரபு. ஆனால் முன்பெல்லாம் சூதாட்ட அரங்கில் அடிக்கடி கடன் சொல்லும் அவர் இப்போதெல்லாம் அந்தப் பிரச்சினையில் சிக்குவதில்லை என்பதைப் பார்க்கிறோம்.”

 

வேறு யாராவது ஆட்கள் அப்படி நாம் சந்தேகப்படும்படியாக இருக்கிறார்களா?”

 

அவர்களுக்கு அப்படி யாரையும் உடனடியாக நினைவுபடுத்த முடியவில்லை. அவர் சொன்னார். ”கூடுதல் கவனத்துடனும் சந்தேகத்துடனும் அனைவரையும் கண்காணியுங்கள். வேறு யாராவது நினைவுக்கு வந்தாலோ, புதிதாய் சந்தேகத்தைத் தூண்டுவது போல நடந்து கொண்டாலோ உடனே என்னிடம் தெரிவியுங்கள்

 

அவர்களை அனுப்பிய பின் அவர் சேனாதிபதியின் சமீபத்திய நடவடிக்கைகளை எல்லாம் நினைவுகூர்ந்தார். அவர் முன்னிலையில் அவன் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்டதாய் தகவல் எதுவும் நினைவுக்கு வரவில்லை. பத்ரசால் அரிச்சந்திரன் அல்ல. தேன் எடுக்கையில் புறங்கையை நக்கக்கூடியவன் தான். ஆனால் தேன் கூட்டையே அபகரித்துச் செல்லக்கூடியவன் அல்ல.... எதற்கும் அவனைச் சந்தித்துப் பேசுவது உசிதமென்று அவருக்குத் தோன்றியது.

 

அவர் பத்ரசாலைச் சந்திக்கக் கிளம்பிய வேளையில் ஜீவசித்தி தயக்கத்துடன் அவர் எதிரே வந்து நின்றான். இதற்கு முந்தைய இரண்டு அதிர்ச்சிகளையும் தெரியப்படுத்தியவன் அவன் தான். இப்போது என்ன தகவல் கொண்டு வந்திருக்கிறானோ? அவருக்கு இன்னொரு அதிர்ச்சியைத் தாங்க முடியாதென்று தோன்றியது.

   

(தொடரும்)

என்.கணேசன்




Wednesday, January 8, 2025

முந்தைய சிந்தனைகள் 117

 என் எழுத்துக்களிலிருந்து சில சிந்தனைத் துளிகள்!












Monday, January 6, 2025

யோகி 84



ஷ்ரவன் தொடர்ந்து சொன்னான். “கண் விழிச்சு பார்க்கறப்ப அப்படியே படுக்கைல, உட்கார்ந்த நிலையிலயே குப்புறக் கவிழ்ந்திருந்தேன். எழுந்து அந்த மிருகமோ, அதை அனுப்பின பையனோ தெரியறாங்களான்னு சுற்றிலும் பார்த்தேன். இல்லை. மனசுல என்னையே திட்டிகிட்டேன். “முட்டாளே. யோகிஜி இருக்கற இடத்துல சைத்தான் எப்படிடா  இருக்க முடியும், நீ போன வாரம் பார்த்த சினிமா காட்சி ஆழ்மனசுல பதிஞ்சது தாண்டா உனக்கு தெரிஞ்சுருக்கு. அவருக்குக் கிடைச்ச தெய்வீக அனுபவங்கள்ல ஒன்னாவது உனக்கும் வேணும்னு கேட்டியே. அதைத் தான் அவர் உனக்கு அனுப்பிச்சிருக்கார்டா. இந்த ஒன்னையே உன்னால தாங்க முடியலையே, மயக்கம் போட்டு விழுந்திட்டியே, அவர் அளவுக்கு அனுபவம் கிடைச்சா நீ என்னடா ஆகியிருப்பே?”. உண்மை தானே ஜீ? சில அனுபவங்களை வேண்டறதுக்கு முன்னாடி அதை தாங்கற சக்தியிருக்கான்னு நீ சோதிச்சுப் பார்த்துக்கோன்னு ஒரு யூட்யூப்ல யோகிஜி சொல்லியிருந்தார். அதை நானும் கேட்டிருக்கேன். ஆனாலும் தப்பாய் ஆசைப்பட்டுட்டேனே. அதுக்கு யோகிஜி அவர் இருக்கற இடத்திலேயே அந்த சக்தியையும் அனுப்பி, எனக்கு ஒரு நல்ல பாடத்தையும் கொடுத்திருக்கார். எல்லாம் அவர் வசிக்கிற இடத்துலயே கிடைச்சுது என் பாக்கியம். அப்புறம் கடிகாரத்தைப் பார்த்தால் மணி ஏழரைக்குப் பக்கத்துல ஆகியிருந்துச்சு....”


அந்தத் துறவி அவனை இடைமறித்தார். “உண்மையாகவே நீங்கள் அவர் அருளைப் பெற்ற பாக்கியசாலி தான். இப்போது உங்களுக்கு உடல் எப்படி இருக்கிறது.”

 

ரொம்பக் களைப்பாய் இருக்குது ஜீ. என்னோட சக்தி எல்லாத்தையும் அந்த அனுபவம் உறிஞ்சி எடுத்த மாதிரி இருக்கு. ஆனாலும் சமாளிக்கும் சக்தியை யோகிஜீ கொடுத்திருக்கிறார். அது என் பாக்கியம்சொல்லி விட்டு ஷ்ரவன் உடலைச் சிலிர்த்துக் கொண்டான்.

 

யோகாலயத்துல டாக்டர் இருக்கார். உடல் பிரச்சினை எதாவது இருந்தால். நீங்கள் தயங்காமல் அவர் ஆலோசனையைப் பெறலாம். தேவைப்பட்டால் சிகிச்சையும் பெற்றுக் கொள்ளலாம்.” என்று சொல்லி விட்டு அந்தத் துறவி எழுந்து நின்றார்.

 

ரொம்ப நன்றி ஜீ. இந்த அறையைக் கடக்கும் போது நான் அரற்றும் சத்தம் கேட்டு இவ்வளவு அக்கறையாய் நலம் விசாரிக்க வந்திருக்கீங்க. உங்க அன்பு என்னை மெய்சிலிர்க்க வைக்குது.”

 

எல்லாம் இறைவனின் கருணை. யோகிஜியின் சித்தம்என்று கைகூப்பிய அந்தத் துறவி விடைபெற்றார். 

 

அவர் சென்ற பின்னும் சிறிது நேரம் கைகூப்பியபடி ஷ்ரவன் நின்றான். பின் களைப்பைக் காட்டி தளர்ச்சியுடன் படுக்கையில் சாய்ந்து கொண்டான்.

.

பாண்டியன் ஷ்ரவன் சொன்னதை எல்லாம் மிகவும் கூர்ந்து கவனித்தார். அவன் நடந்ததாய் சொன்னது எதுவும் காமிராப் பதிவுக்கு எதிர்மறையாக இருக்கவில்லை. அவன் பிரம்மானந்தாவின் யூட்யூப்களை தினமும் கேட்டுக் கொண்டிருந்தது உண்மை. அவன் அன்று தியானம் செய்ய உட்கார்ந்தது உண்மை.  ஹாய் சொன்னதும் உண்மை. திடீரென்று துடிக்க ஆரம்பித்ததும் உண்மை. குப்புறக் கவிழ்ந்ததும் உண்மை. சுயநினைவு பெற்று எழுந்ததாய் சொன்ன நேரம் கூட உண்மை.

 

ஷ்ரவனின் பார்வைக்கு ஒரு இளைஞனும், ஓநாயும் தெரிந்தது தான் அவரை மிகவும் யோசிக்க வைத்தது. எதிரி ஒரு இளைஞன் என்று தேவானந்தகிரி சொல்லியிருக்கிறார். எதிரியின் ஆட்கள் வெளியே கண்காணித்துக் கொண்டு இருப்பதும் உண்மை தான். அவர்களோடு எதிரியும் கூட இருக்கலாம். ஓநாய் தெரிந்தது பாண்டியனின் சொந்த அனுபவம். மட்டுமல்ல, ஓநாய் அவர் மேல் பாய்ந்து செய்த வேலைக்கு அவருடைய ஆறாத வயிற்றுப் புண்ணும் உதாரணம்.   தேவானந்தகிரி அந்த ஓநாய்உங்கள் பார்வைக்கு அகப்படாது. இனி உங்களைத் தொந்தரவு செய்யாதுஎன்று சொன்னாரேயொழிய அந்த ஏவல் சக்தியை யோகாலயத்திலிருந்தே விரட்டி விட்டேன் என்று சொல்லவில்லை. அதன் அர்த்தம், விளைவுகளில் இருந்து நீங்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள், ஆனால் காரணமான ஏவல் சக்தி இங்கேயே தான் இருந்து கொண்டிருக்கும் என்பது தான். அந்த ஏவல் சக்தி திடீரென்று புதியதொரு ஆளைத் தாக்கியிருக்கிறது. அது ஒன்றும் பிரச்சினை இல்லை. அந்தப் பைத்தியக்காரன் இரண்டு நாட்களில் இங்கிருந்து போய் விடுவான். அடுத்ததாய் இன்னொருவனைத் தாக்கினால் என்ன செய்வது? இது சங்கிலித் தொடர் போல் தொடர்ந்தால் இதற்கு முடிவு தான் என்ன? எத்தனை பேருக்குத் தாயத்து கட்ட முடியும்? வெளியாட்களானால் அவர்களுடைய விதி என்று விட்டு விடலாம். யோகாலயத்து ஆட்களையே தாக்க ஆரம்பித்தால் என்ன செய்வது?

 

அந்தப் பைத்தியக்கார இளைஞனுக்கு அவன் கண்ட காட்சி உண்மை தான் என்பது இன்னும் புலப்படாதது அவருக்கு வேடிக்கையாக இருந்தது. ஓமன் என்ற படத்தை சமீபத்தில் பார்த்தது தான் அந்தக் காட்சியாக வந்திருக்கிறது என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கிறான். அவன் பிரம்மானந்தரின் மீது வைத்திருக்கும் மிதமிஞ்சிய பக்தி, எது நடந்தாலும் அது அவருடைய அற்புதம் என்று எடுத்துக் கொள்ள வைத்திருக்கிறது.

 

அந்த  ஏவல் சக்தி அவன் கண்களுக்குத் தெரியக் காரணம் என்ன என்று தெரியவில்லை. தாக்கக் காரணம் அவன் அதற்கு ஹாய் சொன்னதாக இருக்கலாம். பைத்தியக்காரன் ஆனாலும் அவனும் அவரைப் போல் தைரியசாலி தான். அதனால் தான் அவன் அந்த ஓநாய்க்கு ஹாய் சொல்லியிருக்கிறான். அது அவன் மீது பாய்ந்திருக்கிறது. அந்த நிகழ்வைக் கற்பனை செய்து பார்த்த போது அவருக்குச் சிரிப்பு வந்தது.

 

தன் கையிலிருந்த தாயத்தை பாண்டியன் பார்த்தார். அவர் சிரிப்பு தானாய் நின்றது. இந்தத் தாயத்து இல்லா விட்டால் அவர் நிலைமையும் பரிதாபம் தான்.  ஷ்ரவனின் உடம்பு துடித்த விதத்தை நினைத்துப் பார்த்தார். சில சமயங்களில் முட்டாளாய் இருப்பதும் நல்லது தான் என்று தெரிகிறது. தனக்குப் பிரச்சினை இருக்கிறது, ஆபத்து இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாத முட்டாள், நாளைக்கு நாசமாய் போனாலும் சரி, இன்று நிம்மதியாக அல்லவா இருக்கிறான்…?

 

பைத்தியக்கார ஷ்ரவனின் இந்த திகில் அனுபவத்தை பிரம்மானந்தாவுக்குத் தெரிவித்து, தேவானந்தகிரியிடம் உடனே இதுபற்றிப் பேசுவது உசிதம் என்று பாண்டியனுக்குத் தோன்றியது. அவர் பிரம்மானந்தாவைச் சந்திக்க எழுந்தார்.

 

பிரம்மானந்தாவும் ஷ்ரவனின் விசித்திர அனுபவத்தின் காமிராப் பதிவைத் திகைப்புடன் பார்த்தார்அவன் கண்ணனிடம் சொன்ன விளக்கத்தின் பதிவையும் முழுமையாகப் பார்த்தார்.

 

பாண்டியன் கேட்டார். “நடந்ததையும், அவன் சொன்னதையும் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க யோகிஜி

 

பாண்டியனைத் தவிர வேறு யார் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தாலும், பிரம்மானந்தா ஷ்ரவன் அவருக்குத் தந்திருந்த பெருமையை மறைமுகமாக அங்கீகரித்திருப்பார். “எல்லாம் அந்த சுந்தர மகாலிங்கத்தின் திருவிளையாடல். நான் வெறும் அவனுடைய கருவி மாத்திரம்என்று பணிவாகச் சொல்வதன் மூலம் நான் அந்த சுந்தர மகாலிங்கத்தின் கருவி என்ற பெருமையை கேட்பவர் மனதில் நிலைநிறுத்தியிருப்பார். ஆனால் பாண்டியனிடம் அப்படிச் சொல்ல முடியாது.

 

அவர் அப்படிச் சொன்னாலும் பாண்டியனிடம் எந்த உணர்ச்சியும் இருக்காது. கற்பனையும், கதையளப்பும் வரம்பு மீறிப் போகும் போது சில சமயங்களில் பாண்டியன் முகத்தில் சலிப்பு தெரியும். ’ஏன் யோகிஜி என்னையும் இம்சிக்கிறீர்கள்?’ என்று சொல்வது போல் தெரியும். அதனால் அதை எல்லாம் அவரிடம் பிரம்மானந்தா எப்போதோ நிறுத்தி விட்டார்.

 

பாண்டியனிடம் அவர் சொல்லாமல் மறைத்த தகவல்கள் ஏதாவது இருக்க முடியுமானால், அது அவர்  பாண்டியனைச் சந்திக்கும் முன் நடந்திருக்கும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் தகவல்களாகத் தான் இருக்கும். அதைக் கூட அவர் பாண்டியனிடம் ஏன் சொன்னதில்லை என்றால், அவை அவரே நினைவுகூரக் கூசுபவை என்பது தான் காரணம். ப்ரேமானந்தாக அவர் அடிமட்ட நிலையில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிய உண்மைகளை அவர் யாரிடமும் பேசியதில்லை.  அதிகப்பிரசங்கித்தனமாக யாராவது அது குறித்துக் கேட்டாலும், தன் அபாரக் கற்பனைகளைச் சொல்லி அவர் அந்த உண்மைகளை மூடி மறைத்துச் சமாளித்திருக்கிறார்.

 

பாண்டியன் அவர் வாழ்க்கையில் நுழைந்த பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே எந்த ரகசியமும் இருந்ததில்லை. இந்த உலகில் அவர் முழுமையாக நம்பும் ஒரே மனிதர் பாண்டியன் மட்டும் தான். அவர் நடிக்காத, நடிக்கத் தேவையிருக்காத ஒரே மனிதரும் பாண்டியன் மட்டுமே. ஒருவேளை அவர் நடித்தாலும், வழக்கம் போல் கற்பனையாய் கதையளந்தாலும், பாண்டியன் சம்பிரதாயத்திற்காகக் கூட அதைச் சிலாகிக்கவோ, பாராட்டவோ செய்யாமலிருப்பதில் பிரம்மானந்தாவுக்கு பாண்டியன் மீது சிறு ஆதங்கம் உண்டு. ஆனால் மறைமுகமாய் அவர் மேல் மதிப்பும் எழுந்ததுண்டு.

 

அதனால் ஷ்ரவனின் அனுபவத்தைப் பார்த்ததையும், அவன் சொன்னதையும்  பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு பிரம்மானந்தா உண்மையையே சொன்னார். “என்ன நினைக்கறதுன்னு கூடத் தெரியலை பாண்டியன். சம்பந்தமே இல்லாமல் அவனுக்கும் ஓநாய் ஏன் தெரியுது? குழப்பமாய் தான் இருக்கு.” 

 

பாண்டியன் சொன்னார். ”உங்களையே அவன் நினைச்சுகிட்டிருந்தது ஒருவேளை அவனையும் இதுல சம்பந்தப்படுத்தியிருக்குமோன்னும் தோணுது. அதான்…”

 

பிரம்மானந்தா முகத்தில் கிலி ஒரு கணம் தோன்றி மறைந்தது.

(தொடரும்)

என்.கணேசன்






 

Thursday, January 2, 2025

சாணக்கியன் 142

 

யாகசாலையின் பூட்டு உடைக்கப்படவில்லை என்பதைக் கண்டபின் நிம்மதி அடைந்த தனநந்தன் முந்தைய அவசரத்தைக் கைவிட்டு நிதானமாக ரதத்திலிருந்து இறங்கினான். தன் இடுப்பில் சொருகியிருந்த சாவியை எடுத்து சாரதியிடம் தர, சாரதி வேகமாகச் சென்று பூட்டைத் திறந்து யாகசாலைக் கதவுகளைத் திறந்து விட்டான்.

 

தனநந்தன் பதற்றம் நீங்கி இப்போது கம்பீர தோரணைக்கு மாறியிருந்தான். அவனுடைய காவலன் அவனது குளியல் உடைகளை எடுத்துக் கொண்டு முன்னால் போக அவன் கங்கையை ரசித்தபடி சிறிது நேரம் நின்று விட்டு பிறகு மெள்ள யாகசாலைக்குள் நுழைந்தான்.

 

ஜீவசித்தி மனதில் எழுந்த பரபரப்பை மறைத்துக் கொண்டு மெல்ல யாகசாலை வாயிலுக்கு நகர்ந்தான். அவன் தன் வாழ்நாளில் நேரில் கண்டு ரசிக்க வேண்டிய முக்கிய தருணமாக இதையே நினைத்திருந்தான். இந்தக் கணத்தில் வாழ்ந்து விட்டு அடுத்த கணமே இறந்து போனாலும் அது பெரிய விஷயமல்ல என்று அவனுக்குத் தோன்றியது.

 

உள்ளே நுழைந்த போது தனநந்தனுக்கு முதலில் யாக குண்டத்தில் எந்தப் பெரிய மாற்றமும் தெரியவில்லை. ஆனால் சற்று முன்னால் சென்று பார்த்த போது யாக குண்டம் உடைந்திருப்பது புலப்பட்டது. அவனுக்கு முதலில் தன் கண்களை நம்ப முடியவில்லை. பழைய பயம் எதோ காட்சிப் பிழையை ஏற்படுத்திக் காட்டுவதாகத் தோன்றியது. அவன் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். யாக குண்டம் உடைந்திருப்பது காட்சிப்பிழை அல்ல என்பது உறுதியான போது அவன் இதயத்தை மிகப்பெரிய பாரம் ஒன்று அழுத்த ஆரம்பித்தது.

 

குளியல் உடைகளைக் கையில் ஏந்திக் கொண்டு அவன் கட்டளைக்காகக் காத்திருந்த காவலனை ஒரு கணம் வெறித்துப் பார்த்த தனநந்தன் உடைகளை ஓரமாக வைத்து விட்டு வெளியேறும்படி சைகையால் கட்டளையிட்டான். காவலன் வெளியேறியவுடன் அவன் விரைந்து யாக குண்டத்தின் அருகே சென்றான். யாக குண்டம் உடைக்கப்பட்டிருந்தாலும் கவனமாக துளை பெரிதாகத் தெரியாதபடி உடைந்த பகுதிகளைக் கொண்டு திரும்ப மூடப்பட்டிருந்தது. தனநந்தன் காலால் அவற்றை அப்புறப்படுத்த இப்போது ஒரு ஆளே நுழைய முடிந்த அளவுக்குத் துளை பெரிதாகவே தெரிந்தது.  இதயத்தை இமயம் அழுத்துவது போல் உணர்ந்த தனநந்தனுக்கு இது கனவாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இங்கே புதையல் இருப்பது யாருக்குமே தெரிய வழியில்லை என்று மனம் கூவியது.

 

இங்கே உடைந்திருந்தாலும் சுரங்கப்பாதையின் உள்ளே யாரும் சென்றிருக்க வழியில்லை என்று பிறகு தனநந்தன் நினைத்தான். உள்ளே இருந்த இருட்டில் புதையல் இருப்பதை அறிந்திருக்க வழியில்லை என்று அவனுக்குத் தோன்றியது.  இப்போது அவனே உள்ளே சென்று பார்க்க வேண்டுமானால் தீப்பந்தம் ஒன்றிருந்தால் தான் பார்க்க முடியும் என்ற நிலை இருக்கையில் புதையல் இருப்பதை அறியாதவர்கள் அதற்காக மெனக்கெட்டிருக்க மாட்டார்கள் என்று அறிவு சொன்னது. ஆனால் யாக குண்டம் உடைந்தது எப்படி, உடைத்தது யார் என்ற கேள்விகள் அவன் மனதில் விஸ்வரூபம் எடுத்தன. அதுவும் வெளியே பூட்டை யாரும் உடைக்காமல் அது பூட்டப்பட்ட நிலையிலேயே தொங்கிக் கொண்டிருந்ததை நினைக்கையில் குழப்பம் மிகுந்து அவனுக்குத் தலை வெடித்து விடுவது போல் இருந்தது.

 

அவன் திரும்பி வாயிலைப் பார்த்தான். அவனுடைய நம்பிக்கைக்குரிய தனிக்காவலனும், காவலர்களின் தலைவனான ஜீவசித்தியும் தெரிந்தார்கள். தனநந்தனுக்கு நாக்கு அசைய மறுத்ததால் சைகை செய்து தன் காவலனை வரவழைத்தான்உள்ளே நுழைந்த காவலனை, சைகையால் தூரத்திலேயே நிறுத்தி கஷ்டப்பட்டுதீப்பந்தம் ஒன்று கொண்டு வாஎன்று சொன்னான். அவன் குரல் மிகப் பலவீனமாக இருந்ததை அவனே உணர்ந்தான். அவனுக்கே அது அன்னியமாகத் தெரிந்தது. அந்தக் காவலன் வெளியே வந்து ஜீவசித்தியிடம் மன்னனின் கட்டளையைச் சொன்னான்.

 

ஜீவசித்தி மனதின் உள்ளே ஆனந்த ஊற்று பெருக்கெடுக்க உடனே அதற்கு ஏற்பாடு செய்து அந்தக் காவலனிடம் தீப்பந்தத்தைத் தந்தான். காவலன் தீப்பந்தத்துடன் உள்ளே விரைய தனநந்தன் அதைக் கையில் வாங்கிக் கொண்டுவெளியிலேயே நில்என்று மெல்லிய குரலில் சொன்னான். அந்தக் காவலனுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. உடைந்த யாக குண்டத்தையும் மன்னனையும் குழப்பத்தோடு பார்த்து விட்டு மறுபடி வெளியே சென்று நின்று கொண்டான்.

 

தனநந்தன் தீப்பந்தத்துடன் மெல்ல அந்த சுரங்கப்படிகளில் இறங்க ஆரம்பித்தான்.  ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவன் இதயம் சம்மட்டியால் அடிப்பது போல் சத்தமாகத் துடித்தது. கடைசிப்படியையும் கடந்த பின் அவன் இட்ட ஓலம் அந்தப் பிராந்தியத்தையே அதிர வைப்பதாய் இருந்தது.

 

ராக்ஷசர் மூச்சிறைக்க வந்து நின்ற ஜீவசித்தியைக் குழப்பத்தோடு பார்த்தார். ஜீவசித்தி நடந்ததைச் சுருக்கமாகத் தெரிவித்து விட்டுத் தொடர்ந்து சொன்னான். “மன்னர் பித்துப் பிடித்தது போல் இருக்கிறார். கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து எறிகிறார். யாரும் அவர் அருகே செல்வது அவருக்கு விருப்பமில்லை போலவும் தெரிவதால் நாங்கள் யாரும் சுரங்கப் பாதையில் இறங்க முற்படவில்லை. என்ன செய்வது என்று தெரியாததால் காவலர்கள் யாரையும் அனுப்பாமல் நானே தங்களிடம் நிலைமையை எடுத்துச் சொல்வதற்காக விரைந்து வந்தேன்.”

 

ராக்ஷசர் குழப்பம் அதிகமாக உடனே அவனுடன் கங்கைக் கரையை நோக்கி விரைந்தார். ஜீவசித்தி உள்ளுக்குள் குதூகலித்தாலும் வெளியே கவலை உள்ளவனாகத் தன்னைக் காட்டிக் கொண்டான். தனநந்தன் அலறி, பைத்தியம் பிடித்தவன் போல் நடந்து கொண்ட காட்சி அழியாத ஓவியமாய் அவன் மனதில் பதிந்திருந்தது. இறந்த ஆத்மாக்கள் அனைத்தையும் காண முடிந்த நிலையில் இருந்தால் கண்டிப்பாக அவன் தந்தையின் ஆத்மாவும், அவருடன் இறந்த மற்றவர்களின் ஆத்மாக்களும் சாந்தி அடைந்திருக்கும் என்று அவன் நம்பினான். எந்த செல்வத்தின் ரகசியம் வெளியே தெரியக்கூடாது என்று தனநந்தன் அவர்களைக் கொன்றானோ, அந்தச் செல்வத்தை தனநந்தனுக்கே தெரியாமல் ஆச்சாரியர் ரகசியமாக அப்புறப்படுத்தியது சரியான நீதியாக அவனுக்குத் தோன்றியது.

 

ராக்ஷசர் யாகசாலையை அடைந்த போதும் தனநந்தன் பாதாள அறையிலிருந்து வெளியே வந்திருக்கவில்லை. காவலர்கள் பதற்றத்துடன் யாகசாலையில் நின்றிருந்தார்கள். ராக்ஷசர் அனைவரையும் வெளியே நிற்க உத்தரவு பிறப்பித்து விட்டு ஒரு தீப்பந்தத்தைக் கையில் பிடித்துக் கொண்டு யாக குண்டத்தின் கீழே இருந்த சுரங்கப்பாதையில் கீழிறங்கினார். இரண்டு கைகளையும் தலையில் வைத்தபடி அமர்ந்திருந்த தனநந்தன் அவர் வருவதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அலறி, கொந்தளித்து, கையில் கிடைத்ததை எல்லாம் வீசி, ஓய்ந்து முடிவில் விரக்தியுடன் சாய்ந்து அமர்ந்திருந்த அவனை வணங்கி நின்ற ராக்ஷசர் மெல்லக் கேட்டார். “என்ன ஆயிற்று அரசே?”


தனநந்தன் ஒன்றும் பேசாமல் இரு கைகளையும் விரித்தான். ராக்ஷசருக்குக் குழப்பமாக இருந்தது.  பன்னிரண்டு காலி மரப்பெட்டிகள் அங்கிருந்ததைக் கவனித்த போது தனநந்தன் அவற்றில் செல்வத்தை முன்பு ஒளித்து வைத்திருந்திருக்கலாம் என்பது மெல்ல அவர் அறிவுக்குப் புலனாகியது. அது புரிந்த பின் அந்தக் காலிப்பெட்டிகளையும், தலையில் இடி விழுந்தது போல் உட்கார்ந்திருந்த தனநந்தனையும் பார்க்கையில் செல்வம் களவு போயிருப்பதும் உடனே அவருக்குப் புரிந்தது. கூடுதல் தகவல்கள் எதையும் கேட்டு அவனைத் துன்புறுத்த விரும்பாமல் அவர் அமைதியாகச் சொன்னார். “எதுவாக இருந்தாலும் நாம் அரண்மனைக்குப் போய்ப் பேசிக் கொள்ளலாம் மன்னா. கிளம்புங்கள்”.

 

அவருடைய வருகையும், அவருடைய அமைதியும் ஓரளவு அவனைத் தெளிவடைய வைத்தது. ஒன்றும் பேசாமல் விரக்தியுடன் எழுந்த அவனை அழைத்துக் கொண்டு ராக்ஷசர் மேலே வந்தார். ஜீவசித்தியும், மற்ற காவலர்களும் யாகசாலை வாயிலில் பதற்றத்தோடு நின்றிருப்பதைப் பார்த்து அவர் அமைதியான கண்டிப்புடன் அவர்களிடம் சொன்னார். “இங்கு நடந்தது எதுவும் வேறு யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. விஷயம் வெளியே கசிந்தது தெரிந்தால் கசிய விட்டவர்கள் தண்டிக்கப்படுவது உறுதி

 

அனைவரும் தலையசைத்தார்கள். அவர் அனாவசியமாக வார்த்தைகளை வீசுபவர் அல்ல. அவர்கள் வெளியே வந்தவுடன் சாரதி அவசர அவசரமாக கதவை இழுத்துப் பூட்டி சாவியை அவன் வழக்கம் போல் தனநந்தனிடம் நீட்டினான். தனநந்தன் அவனை எரித்து விடுவது போல் ஏன் பார்த்தான் என்பது அவனுக்கு விளங்கவில்லை. ராக்ஷசர் அந்தச் சாவியை அமைதியாக அவனிடமிருந்து வாங்கிக் கொண்டார்.

 

கைத்தாங்கலாக தனநந்தனைப் பிடித்து ரதத்தில் ஏற்றி அமர வைத்த அவர், ரதம் கிளம்பியதும் தானும் குதிரையில் பின் தொடர ஆரம்பித்தார்.  

 

(தொடரும்)

என்.கணேசன்