அன்று மாலை ஷ்ரவன் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த போது, மொத்தமாக
அனைவரது வேலையையும் மேற்பார்வை செய்து கொண்டே வந்த கல்பனானந்தா ஷ்ரவனை நெருங்கியவுடன்
புன்னகையுடன் கேட்டாள். “இங்கே வந்து சேர்ந்த பின் எப்படி உணர்கிறீர்கள்?”
ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான். “இங்கே வந்த
பின் அமைதியை உணர்கிறேன் சுவாமினி”
“இப்போதும்
அது மாதிரியான காட்சிகள் தெரிகிறதா?”
“நல்ல வேளையாக, இதுவரையில்
இல்லை சுவாமினி” என்று சொல்லி ஷ்ரவன் சிரித்தான்.
கல்பனானந்தா சொன்னாள். “எதையும்
வேண்டும் என்றும் நினைக்காதீர்கள். வேண்டாம் என்றும்
நினைக்காதீர்கள். இறைவன் தருவதை ஏற்றுக் கொள்ளுங்கள். இறைவன்
எதையும் காரணமில்லாமல் யாருக்கும் தருவதில்லை. அதைப் புரிந்து
கொள்ளும் போது, நாம் நம் அபிப்பிராயங்களால் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்வதில்லை.”
அவள் சொன்னதை ஷ்ரவன் ரசித்தான். உண்மை தான். வாழ்க்கை
எளிமையாகத் தான் இருக்கின்றது. வாழ்க்கையை நம் அபிப்பிராயங்களால் நாம் தான் சிக்கலாக்கிக்
கொள்கின்றோம். “அழகாகச் சொன்னீர்கள் சுவாமினி” என்று ஷ்ரவன்
மனதாரச் சொன்னான்.
அவள் புன்னகைத்து விட்டு நகர்ந்தாள்.
அன்று மாலை சித்தானந்தாவின் காய்ச்சல்
தீவிரமடைந்தது. முக்தானந்தா சித்தானந்தாவிடம் கண்டிப்பான குரலில் சொன்னார். “இனியும்
தானாகச் சரியாகும் என்று நினைக்காதே. பேசாமல் ஆஸ்பத்திரிக்குப்
போய் டாக்டரைப் பார்.”
சித்தானந்தா தலையசைத்து விட்டு மெல்லக்
கிளம்பினார். அவரைத்
தனியாக அனுப்ப மனமில்லாமல் ஷ்ரவனும் அவருடன் சென்றான். அவனுக்கு
யோகாலயத்தின் பின்புறப் பகுதிகளைப் பார்க்க இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. தோட்ட வேலையும்
கூட அவனுக்கு முன்பக்கத்திலேயே இருந்தது. பின்புறத் தோட்டங்களைப்
பராமரிக்கும் வேலை அதிகம் பெண் துறவிகளுக்குத் தான் கிடைத்தது. எனவே அவரை
அழைத்துப் போகும் போது அவன் பின்புறக் கட்டிடங்களையும், சூழலையும்
முடிந்த வரை மனதில் பதித்துக் கொண்டான்.
பெண் துறவிகள் வசிக்கும் பகுதியைத்
தாண்டும் போது கண்ணுக்கு அறை எண் 206 தென்படுகின்றதா என்று பார்த்தான். வெளியே
இருந்து பார்க்கையில் அறை எண்கள் தெரியவில்லை. ஆண் துறவிகள் தங்கும் கட்டிடத்தைப் போலவே தான்
இந்தக் கட்டிடமும் இருந்தது. நுழைவாயில் ஆஸ்பத்திரி உள்ள பகுதியில்
இருந்தது. ஆனால் மேலும்
கூர்மையாக நின்று பார்க்க முடியவில்லை. தூரத்தில் ஒரு கண்காணிப்பாளன்
நின்று பார்த்துக் கொண்டிருப்பது தெரிய ஷ்ரவன் சித்தானந்தாவைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்
கொண்டு நடந்தான்.
ஆஸ்பத்திரியில் டாக்டர் அறை, சிகிச்சை அறை தவிர ஐந்து தனியறைகள்,
இருபது படுக்கைகள் கொண்ட ஒரு பொது ஹால் இருந்தன. சித்தானந்தாவைப் பரிசோதித்த டாக்டர் அவருக்கு டைப்பாய்டு காய்ச்சலாக இருக்கலாம்
என்று சந்தேகப்பட்டார். அதனால் அங்கேயே அன்று தங்குவது நல்லது
என்று சொன்னார். அதனால் அவரை அங்கேயே விட்டு விட்டு ஷ்ரவன் தங்கள்
அறைக்குத் திரும்பினான்.
வரும் போது ஆண் துறவிகள் தங்கும் கட்டிடமும், பெண் துறவிகள் தங்கும் கட்டிடமும்
ஒரே போல் இருப்பதைக் கவனித்தான். இரண்டுமே இரண்டு மாடிக் கட்டிடங்கள்.
இரண்டிலும் கீழே இரு பக்கமும் சேர்த்து முப்பது அறைகளும், மேலே
இரு பக்கமும் சேர்த்து முப்பது அறைகளும் இருந்தன. அந்த அமைப்பில் இரண்டிலுமே மாற்றமில்லை.
அப்படியென்றால் அறைகளுக்கு எண் ஒதுக்கியிருப்பதும்
ஒரே மாதிரியாகத் தானிருக்க வேண்டும். ஆண்களுடைய அறை எண் 106 இருக்கும் பகுதியில்
தான் பெண் துறவிகளின் கட்டிடத்தில் 206வது அறை இருக்கும் வாய்ப்பு
அதிகம்…
இப்போது அவர்கள் இருக்கும் அறைகள் கீழ் தளத்தில் இடப்பக்கம்
உள்ளவை. வலப்பக்கத்தின்
மூலையிலிருந்து 101, 102 என்று ஆரம்பித்து இடப்பக்க மூலையில்
130 உடன் முடிகின்றன. ஷ்ரவன் தங்கியிருக்கும் அறை
128. அவர்களுக்கு எதிர் வரிசையில்
உள்ள பெண் துறவிகளின் கட்டிடத்திலும் அதே வரிசை எண் கடைப்பிடிக்கப்பட்டு இருந்தால்
அவர்களது 130 வது எண்ணுக்கு எதிரில் உள்ள பெண் துறவிகளின் அறை
எண் 201ஆக இருக்க வேண்டும். 129 க்கு எதிரில்
202, 128 க்கு எதிரில் 203, 127 க்கு எதிரில்
204, 126க்கு எதிரில் 205, 125 க்கு எதிரில்
206 ஆக இருக்க வேண்டும்.
ஆழ்ந்த யோசனையுடன் அவன் அறைக்கு வந்து சேர்ந்த போது முக்தானந்தா
கேட்டார். “சித்தானந்தா
எங்கே? டாக்டர் என்ன சொன்னார்?”
”அவருக்கு டைப்பாய்டு காய்ச்சலாக இருக்கக்கூடும் என்று டாக்டர் சந்தேகப்படுகிறார்.
அதனால் இன்றைக்கு இரவு அவரை அங்கேயே தங்கச் சொன்னார்.”
சத்சங்கத்திற்கான மணி அடித்தது. முக்தானந்தாவும், ஷ்ரவனும்
கிளம்பினார்கள். அன்று சத்சங்கத்தில் கல்பனானந்தா பேசினாள். ’மனம் ஏன்
எளிதாக ஒருமைப்படுவதில்லை’ என்ற தலைப்பில் அவள் பேச்சு மிகச் சிறப்பாக இருந்தது. அவளும்
பேச்சினூடே மூன்று இடங்களில் பிரம்மானந்தாவை மேற்கோள் காட்டினாள் என்றாலும், மற்றவர்களைப் போல் மிகைப்படுத்தாமல்
அது ஓரளவு பொருத்தமாகவே இருந்தது.
ஷ்ரவன் முன் வரிசையில் அமர்ந்திருந்த
முக்தானந்தாவை அவ்வப்போது பார்த்தான். ஆனால் அவர் அன்று
அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. சத்சங்கம் முடிந்து திரும்பி வருகையிலும் அவர் அவனிடம் எதுவும்
பேசவில்லை.
அடுத்ததாக தியானத்திற்கான மணி அடித்த
போது ஷ்ரவன் தன் வழக்கமான மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான். அவன்
1008 முறை ஜபித்து முடித்து கண்களைத் திறந்த போது முக்தானந்தா அவனையே பார்த்துக்
கொண்டு இருந்தார்.
ஷ்ரவன் அவரிடம் சிரித்துக் கொண்டே கேட்டான். “நீங்கள்
மணி அடிக்கையில் தியானம் செய்வது கிடையாதா?”
அவர் சொன்னார். “மணி அடிக்கையில்
தியானம் செய்யும் மனம் இருந்தால் தியானம் செய்வேன். மனமில்லா
விட்டால் தியானம் செய்வதில்லை. சும்மா கண்ணை மூடி உட்கார்ந்து, அதற்கு
தியானம் என்று பெயர் வைத்து, நான் என்னையே ஏமாற்றிக் கொள்வதில்லை.”
ஷ்ரவன் புன்னகையுடன் கேட்டான். “மனம் அனுமதித்தால்
தான் தியானம் செய்வது என்பது மனதிற்கு நாம் அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பது போல ஆகி
விடுமல்லவா. உங்களைப் போன்ற மூத்த துறவி அப்படிச் செய்யலாமா?”
முக்தானந்தாவும் அபூர்வமாகப் புன்னகைத்தார். “நானும்
மனதோடு எத்தனையோ போராடிப் பார்த்து விட்டேன். ஜெயிக்க
முடியவில்லை. அதனால் இப்போது போராடுவதை நிறுத்தி விட்டேன். வயதாகி
விட்டது. மரணத்தின் விளிம்பில் இருக்கும் இந்தக் கடைசி காலத்தில் மனம்
உட்பட யாருடனும் சண்டை போடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.”
ஷ்ரவன் சிரித்தான். “அது சரி! ஏன் என்னையே
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
”தியானம்
செய்வதை விட உன்னைப் பார்ப்பது சுவாரசியமாய் இருக்கிறது. நீ எதோ
வித்தியாசமான தியானம் செய்கிறாய். அப்படித் தியானம் செய்து நீ ஏதோ ஒரு மேலான சக்தியுடன் தொடர்பு
கொள்வதை என்னால் உணர முடிகிறது.”
ஷ்ரவன் திகைத்தான். மனமிருந்தால்
மட்டுமே தியானம் என்று அவர் வேடிக்கையாகச் சொன்னாலும், மனம் போனபடியெல்லாம்
போகும் வெற்று மனிதர் அல்ல அவர் என்பது அவனுக்குப் புரிந்தது. இல்லா விட்டால்
அவன் மேலான சக்தியுடன் தொடர்பு கொள்வதை அவரால் உணர்ந்திருக்க முடியாது.
இவ்வளவு யதார்த்தமாகவும், இவ்வளவு நீளமாகவும் அவர் இதுவரையில் அவனிடம் பேசியதில்லை. இப்போது சித்தானந்தா இல்லாததால் தான் அவர் தயக்கம் இல்லாமல் பேசுகிறாரோ? இப்போது இவர் இப்படி பேசுகிறார் என்று நாளைக்கும் இப்படியே இவர் பேசுவார் என்று எதிர்பார்க்க முடியாது. இவருடைய பேச்சின்படியே
பார்த்தால் மனமிருந்தால் பேசி,
மனமில்லா விட்டால் மௌனமாக இருக்கும் நபர் இவர். சித்தானந்தா இல்லாத இந்த சந்தர்ப்பத்தை, இவருக்கு மனமிருக்கும்
போதே, சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஷ்ரவனுக்குத்
தோன்றியது.
உணவுக்கான மணி அடித்தது. சென்று
இருவரும் சாப்பிட்டு வந்த பின் ஷ்ரவன் அவரிடம் கேட்டான். “இரவு நேரங்களில்
நீங்கள் தீடீரென்று பேசுவது, தூக்கத்திலிருந்தாலும் என் காதில் விழுகிறது. அதைக் கேட்கும்
போது நீங்கள் உங்களுக்குள்ளேயே தத்துவம் பேசுகிறீர்களா, இல்லை என்னிடம்
ஏதாவது பேசுகிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை.”
முக்தானந்தா அசராமல் சொன்னார். “பெரும்பாலும்
நான் அப்படி மனதில் தோன்றிய தத்துவங்களை வாய்விட்டுச் சொல்பவன் தான். அது என்னுடன்
அறையில் தங்குபவர்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உன்
காதில் விழுந்தவை நான் உன்னிடம் பேசியவை தான்.”
ஷ்ரவன் திகைத்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
கடவுளின் அவதாரமாக திகழும் பிரம்மானந்தாவுக்கு ஷர்வனை பற்றி ஒன்றும் தெரியவில்லை...அவன் கூறும் பொய்யைக் கூட கண்டறிய முடியவில்லை....
ReplyDeleteஆனால்,அவரின் சீடர் முக்தானந்தாவுக்கு ஷர்வனின் அஸ்திவாரத்தையே ஆட்டும் அளவு உண்மை தெரிந்திருக்கிறது.