சந்திரகுப்தன் போர் வியூகத்தை வகுக்கும் போதே மலயகேதுவின்
பாதுகாப்புக்கு மிக முக்கியத்துவம் தந்தான். மலயகேது யூடெமஸை தானே கொல்ல வேண்டும் என்று
ஆசைப்பட்டதால் மாவீரனான யூடெமஸை அவன் தனியாக எதிர்கொள்வது ஆபத்து என்று நினைத்தான்.
மலயகேதுவுக்கு உதவ இந்திரதத்தையும், தன் படைத்தலைவன் ஒருவனையும் சந்திரகுப்தன் ஒதுக்கி,
மலயகேதுவின் பாதுகாப்பைத் தவிர வேறெதையும் அவர்கள் கவனிக்க வேண்டியதில்லை என்று சொன்ன
போது, மலயகேது கோபப்பட்டான். அவனை சந்திரகுப்தன் குறைத்து மதிப்பிடுவது போல் அவனுக்குத்
தோன்றியது.
“நண்பனே, நான் உன்
அளவுக்கு மகத்தான வீரனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னைப் பாதுகாத்துக் கொள்ளவும்
முடியாதவன் என்கிற அளவுக்கு நான் குறைந்தவன் அல்ல. அதனால் நீ என் பாதுகாப்புக்கு என்றே
சிலரை ஒதுக்குவது என்னை அவமானப்படுத்துவது போலிருக்கிறது” என்று மலயகேது முகம் சிவக்கச்
சொன்னான்.
சந்திரகுப்தன் மலயகேதுவின்
தோளில் கைவைத்து அவன் கண்களை நேராகப் பார்த்தபடி அன்புடன் சொன்னான். “மலயகேது, வீரம்
என்பது யதார்த்தத்தைப் பார்க்க மறுப்பதல்ல. நீ மாவீரன் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும்
இல்லை. நீ பயிற்சிகள் மூலமாக நிறையக் கற்றுத் தேர்ந்து இருக்கிறாய். ஆனால் ஒரு போரில்
நேரடியாக ஈடுபட்டு கற்றதைப் பரிசோதித்துத் தெளியும் வாய்ப்பு உனக்கு இது வரை கிடைக்கவில்லை.
அலெக்ஸாண்டருடன் உன் தந்தை போரிட்ட போது நீ சிறுவன். அதன் பின் கேகயம் யாருடனும் போரிடும்
வாய்ப்பிருக்கவில்லை. ஒரு போரிலாவது உன் தந்தையுடன் சேர்ந்து நீ போயிருந்தால் நான்
உன் பாதுகாப்பு குறித்து இவ்வளவு எச்சரிக்கையாக இருக்க மாட்டேன். நிஜப்போரில் பயிற்சிக்
காலத்தில் இருப்பது போல் தெளிவான சூழ்நிலைகள் இருக்காது. அந்த நேரத்தில் முதல் அனுபவ
வீரர்கள் எவ்வளவு பயிற்சி பெற்றிருந்தாலும் தடுமாறுவது இயற்கை. நீ என் இளைய சகோதரனைப்
போன்றவன். இன்னும் பல போர்களில் நீ எனக்கு வேண்டும். உன் உதவிகள் வேண்டும். அந்தப்
போர்களில் எல்லாம் உனக்கு இந்தப் பாதுகாப்பு தர அவசியம் இருக்காது. புரிகிறதா?”
மலயகேது அந்த வார்த்தைகளில்
உண்மையையும், ஒரு மூத்த சகோதரனின் அன்பையும் பார்த்து கண்கள் ஈரமானான். அலெக்ஸாண்டருடான
போரில் இறந்த அவன் சகோதரர்களில் ஒருவனாவது சாகாமல் இருந்திருந்தால் அவன் இந்த அளவு
பாசத்தையும், அக்கறையையும் காட்டியிருப்பான் என்று தோன்றியது. இந்திரதத்தும் அந்தக்
கணத்தில் மனம் நெகிழ்ந்தார்.
மலயகேது பேசினால்
உணர்ச்சிவசப்பட்டு உடைந்து விடுவோம் என்று தோன்றியதால் நன்றியுணர்வுடன் புரிந்தது என்று
தலையை மட்டும் அசைத்தான். சந்திரகுப்தன் அவனைப் பார்த்து அன்புடன் புன்னகைத்து விட்டுத்
தொடர்ந்து அனைவரைப் பார்த்தும் சொன்னான். “இந்தப் போர் யூடெமஸின் மரணம் வரை மட்டுமே
நீடிக்கும். அவனை மலயகேது கொன்று விட்டால் அவர்கள் படை போரை நீட்டிக்காமல் சரணடைந்து
விடும். தலைமை இல்லாத படை, அடுத்த நிலை தலைமை இல்லாத படை அதற்கு மேல் போரிட வாய்ப்புகள்
இல்லை. அதனால் மலயகேது தன் முதல் போரிலேயே அனைத்தையும் தீர்மானிக்கும் முக்கியத் தலைவனாக
இருக்கிறான்.”
மலயகேதுவுக்கு அவனை
உற்சாகப்படுத்துவதற்காகத் தான் சந்திரகுப்தன் இதை எல்லாம் சொல்கிறான் என்று புரிந்தது.
யவனர்களுக்கு அடிமையாக இருப்பதை விட இவனுக்குத் தம்பியாக அடிபணிவது ஆயிரம் மடங்கு கௌரவம்
என்று அவன் நினைத்துக் கொண்டான்.
இரண்டு படைகளும் எதிரெதிரே சந்தித்துக் கொண்ட முதல் வேளையில்
சந்திரகுப்தனின் படைவீரர்களும், கேகய வீரர்களும் யவன மொழியில் உச்சஸ்தாயியில் ஆக்ரோஷமாகக்
கத்தினார்கள். “சதிகார யூடெமஸே ஒழிக”
யூடெமஸும் அவன்
படையினரும் திகைத்தார்கள். அவர்கள் இது வரை எந்தப் போரும் இப்படி தீவிர வெறுப்பு கோஷத்துடன்
ஆரம்பித்துப் பார்த்ததில்லை. யூடெமஸ் தன் பக்கத்து வீரர்கள் பதிலுக்கு ஏதாவது கத்த
வேண்டும் என்று எதிர்பார்த்தான். ஆனால் இப்படி கோஷங்களில் பழக்கம் இருக்காத யவன வீரர்கள்
மௌனமாக இருந்தார்கள். பதிலுக்கு “நீங்களே சதிகாரர்கள்” என்றோ “மாவீரன் யூடெமஸ் வாழ்க”
என்றோ திரும்ப ஆக்ரோஷமாகக் கத்தாமல் திகைத்து நிற்கும் தன் வீரர்கள் மீது அவனுக்குக்
கோபம் வந்தது. இந்த முட்டாள்களுக்கு ரோஷமோ, உணர்ச்சிகளோ இல்லவே இல்லையா?
இரு பக்கத்தினரும்
வீரமாகப் போரிட ஆரம்பித்தனர். முழு யானைப் படையையும் முன்னணியில் நிறுத்தி வைத்திருந்தால்
எதிரிகளைத் துரத்தியடித்திருக்கலாம் என்று யூடெமஸுக்குத் தோன்றியது. ஆனால் அவன் படைத்தலைவன்
அதற்கு சம்மதித்திருக்கவில்லை. கேகயத்தில் அலெக்ஸாண்டர் செய்தது போல் யானைகளைக் காயப்படுத்தி
மதங்கொள்ள வைத்துப் பின்னுக்குத் துரத்தினால் தங்களுக்கே அது பாதகமாக முடியலாம் என்று
நினைவுபடுத்தி சிறிய எண்ணிக்கையில் இருக்கும் யானைப்படையே இந்தப் போருக்கு நல்லது என்று
படைத்தலைவன் சொன்னதை அவனால் மறுக்க முடியவில்லை. யானைப்படை பலமும் ஆகலாம், பாதகமும்
ஆகலாம் என்பதால் வேறு வழியில்லாமல் சிறிய எண்ணிக்கை யானைப்படைக்கு ஒத்துக் கொண்டான்.
அந்தச் சிறிய யானைப்படை
யூடெமஸ் தலைமையிலேயே இருந்தது. அவன் நடுநாயகமாய் ஒரு யானை மேல் கம்பீரமாக அமர்ந்திருந்தான்.
கேகயத்தில் இருந்து ஓட்டி வந்த யானைப்படையோடு யூடெமஸ் வந்தது மலயகேதுவின் கோபத்தை மேலும்
அதிகப்படுத்தியது. மிகவும் ஆக்ரோஷத்துடன் அவன் குதிரைப்படை யூடெமஸ் இருக்குமிடம் நோக்கி
வேகமெடுத்தது.
சந்திரகுப்தன் சொன்னது
போல் போர் அனுபவம் இல்லாததால் வரும் பலவீனங்களை மலயகேது மிக நன்றாகவே போரின் போது உணர்ந்தான். இந்திரதத்தும், சந்திரகுப்தனின் இன்னொரு
படைத்தலைவனும் வேகமாக அவ்வப்போது எதிரிகளின் தாக்குதலின் போது உதவிக்கு வராமல் இருந்திருந்தால்
அவன் படுகாயமுற்றிருக்கும் வாய்ப்புகள் அதிகம் இருந்தது. சந்திரகுப்தன் சொன்னது நிஜப்போரின்
எதிர்பாராத சூழ்நிலைகள் பயிற்சிகளின் போது பழக்கமாவதில்லை. ஆனால் முதல் போரனுபவத்தின்
பலவீனங்களை அவன் ஆக்ரோஷம் சமன் செய்தது. சதி செய்து அவன் தந்தையைக் கொன்றவனைப் பழி
வாங்குவதைத் தவிர வேறெந்த எண்ணமும் இல்லாதவனாக ஒரேமனதுடன் தீவிரமாய் அவன் ”சதிகாரனே”
என்று கத்தியபடி யூடெமஸை நெருங்கினான்.
யூடெமஸ்
மலயகேதுவின் ஆக்ரோஷத்தைக் கண்டு திகைத்தான். மலயகேதுவின் கோபம் அவனுக்கு முட்டாள்தனமாகவே
தோன்றியது. ’அட முட்டாளே. உன்னை அரசனாக்கியதற்கு நீ எனக்கு நன்றியல்லவா சொல்ல வேண்டும்.
நான் புருஷோத்தமனைக் கொன்றதால் அல்லவா நீ அரியணை ஏற முடிந்தது. வயதான போதிலும் உன்
தந்தை திடகாத்திரமாக இருந்தான். அவனாகச் சாவது என்பது கண்டிப்பாக இனி பத்து வருடங்களுக்கு
நடந்திருக்காது. அவன் இருபது வருடம் வாழ்ந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அப்படியிருக்கையில்
நன்றிபாராட்டுவதை விட்டு இப்படி படுகோபமாகப் பாய்ந்து வருகிறாயே’ என்று அவன் மனதில்
சொல்லிக்
ஆரம்பத்தில்
எதிர்ப்படையினர் எழுப்பிய வெறுப்பு கோஷமும், இப்போது ”சதிகாரனே” என்று கத்திக் கொண்டு
ஆக்ரோஷமாய் எதையும் பொருட்படுத்தாமல் மலயகேது பாய்ந்து சென்ற விதமும் பார்க்கையில்
யவன வீரர்களுக்கு உண்மை மெள்ளப் புலப்பட்டது. அவனே அவன் தந்தையைக் கொன்றிருந்தால்
இப்படி அவன் ஆக்ரோஷத்தோடு போரிட வந்திருக்க மாட்டான். மக்களைத் திருப்திப்படுத்த அவன்
போருக்கு வருகிறான் என்றால் மக்கள் இல்லாத போர்க்களத்தில் வந்து இப்படி ஆத்திரப்படும்
அவசியம் அவனுக்கு இல்லை. அவர்கள் முன்பு கேள்விப்பட்ட தகவலே உண்மை என்பது மெல்லப் புரிந்தது....
சந்திரகுப்தனும் அவன் படையினரும் யூடெமஸ் இருக்கும் பகுதியை எளிதாகத் தனிமைப்படுத்தினார்கள். யவன வீரர்களும் சிறப்பாகப் போரிட்டார்கள் என்றாலும் சந்திரகுப்தன் போரிடுவதைப் பார்க்கையில் யவனர்களுக்கு அலெக்ஸாண்டர் போரிடுவதைப் பார்ப்பது போலவே இருந்தது. அலட்டிக் கொள்ளாமல், அதே நேரத்தில் முழுக்கவனத்துடன் அவன் அனாயாசமாகப் போரிட்டான். மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று பல இடங்கள் மாறினான். யூடெமஸின் படைத்தலைவனும் அவனது மற்ற சிறுபடைத்தலைவர்களும் சந்திரகுப்தனைச் சமாளிக்க முடியாமல் தடுமாறினார்கள்.
யூடெமஸ் தானும்
தன் படையினரும் தனிமைப்படுத்தப்பட்டதை உணர்ந்தான். அவன் யானைப் படையில் பாதி மறுபக்கம்
போயிருந்தது. மறு பக்கத்தில் சந்திரகுப்தனின் கையோங்கியிருப்பது கவனிக்கையில் தெரிய
வந்தது. அதை அனுமதித்திருக்கும் அவன் படைத்தலைவன் மீதும், அவன் படை மீதும் அவனுக்குக்
கோபம் வந்தது. தந்தையை இழந்து கோபப்படும் மலயகேதுவையும் அவன் தந்தையிடமே அனுப்பி வைத்து
விட்டு சந்திரகுப்தனை வீழ்த்தப் போக முடிவெடுத்தான்.
எதிரிப்படை வீரர்கள்
பலரை அவன் வீழ்த்திய போதும் மலயகேதுவை நெருங்காதபடி இந்திரதத்தும், இன்னொரு படைத்தலைவனும்
மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள். பாதுகாக்க ஆட்களை வைத்துக் கொண்டு போராடும்
இந்தக் கோழையைச் சீக்கிரம் வீழ்த்த வேண்டும் என்று யூடெமஸ் அவசரப்பட்டான். அந்த நேரத்தில்
அவன் படைத்தலைவன் பெருங்குரலுடன் குதிரையிலிருந்து வீழும் சத்தம் கேட்டு அவன் கவனம்
அந்தப் பக்கம் சென்றது. என்ன ஆயிற்று என்று பார்க்க அவன் திரும்பிய அந்தக் கணத்தில்
மலயகேது குறிபார்த்து ஈட்டியை அவன் மீது எறிந்தான். அவன் மறுபடி திரும்புவதற்குள் ஈட்டி
அவன் கழுத்தை ஊடுருவியது. ஒரு கணம் முன்பு அவன் கவனித்திருந்தால் சற்று எம்பியிருக்கலாம்.
அவனுடைய கவசம் ஈட்டியை எதிர்கொண்டு அவனைக் காப்பாற்றியிருக்கும்.
மீளாத அதிர்ச்சியுடன்
அமானுஷ்ய ஒலியெழுப்பியபடி யானையிலிருந்து யூடெமஸ் வீழ்ந்தான். மலயகேது வீரகர்ஜனை செய்ய
அவனுடன் அங்கிருக்கும் அவன் பக்க வீரர்களும் சேர்ந்து ஆனந்த ஆரவாரம் செய்ய யூடெமஸின்
யானை கலவரமடைந்து பின்வாங்கியது. பின்வாங்கிய போது அது அவனை மிதிக்க அந்தக் கணமே யூடெமஸ்
உயிரை விட்டான்.
(தொடரும்)
என்.கணேசன்
Sooper end for Yumedas👏🏻👏🏻
ReplyDeleteஇரு படையினருக்கும் போர் நடக்கும் சம்பவத்தையும்... அப்போது அவர்களின் மனநிலையையும் எழுத்தில் கொண்டு வந்த விதம் அருமை ஐயா...
ReplyDeleteமலயகேது, யூடெமஸை வீழ்த்தும் போது அதனை எங்கள் வெற்றியாக உணர்ந்தோம்.
சந்திரகுப்தனின் வெற்றிகளை விஸ்ணுகுப்தரின் வெற்றியாகவே பார்க்க முடிகிறது..... ஆச்சாரியாரின் வார்த்தைகளை செவி கொடுத்துக் கூட கேட்காத அரசர்கள்...தற்போது தன் பிழையை எண்ணி வெதும்புவார்கள்....
ReplyDelete