சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 27, 2024

யோகி 51

சுகுமாரனுக்கு பாண்டியனின் எகத்தாளத்தை ரசிக்க முடியவில்லை. அவர் வெடித்தார். “நோய் எப்படி வந்துச்சுன்னு நீங்க கேட்டா என்னால தெளிவாய் சொல்ல முடியும். ஆவி எப்படி வந்துச்சு, ஏன் லேட்டா வந்துச்சுன்னு கேட்டா எனக்கென்ன தெரியும்? அதெல்லாம் உங்க மாதிரி ஆளுகளோட சமாச்சாரம்...” சொல்லச் சொல்ல, பாண்டியன் சுடுகாட்டுக்குப் போயும் ஆவியைப் பார்க்க முடியவில்லை என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அதனால் தொடர்ந்து சொன்னார். ”யோகிஜியைக் கேட்டுப் பாருங்க. ஆனா நான் பாத்ததும், என் அனுபவமும் நிஜம்...”

 

பாண்டியன் லேசான புன்னகையுடன் சொன்னார். “சரி நான் எங்க கிராமத்துல பார்க்க முடியாத ஆவியை உங்க வீட்டுலயாவது பார்க்க முடியுதான்னு பார்ப்போம். நான் உங்க வீட்டுக்கு இப்பவே வரேன். சரியா?”

 

பாண்டியன் உடனடியாக வீட்டுக்கு வரச் சம்மதித்தவுடன் சுகுமாரன் சற்று நிம்மதியை உணர்ந்தார். ”வாங்க. என் கார்லயே போவோம்என்று சொன்னபடி எழுந்தார்.

 

பாண்டியன் சொன்னார். “பரவாயில்ல டாக்டர். நான் என் கார்லயே வர்றேன். எப்படியும் திரும்பி வரணுமே. உங்க கார்ல வந்தா திரும்பவும் இங்கே என்னைக் கொண்டுவந்து விட நீங்க வரணும். இல்லைன்னா நான் டாக்ஸி புக் செய்யணும்...”

 

சுகுமாரனுக்கு அவர் சொல்வதும் சரியென்றே பட்டது. இருவரும் சேர்ந்து வெளியே வந்த போது லேசாக விடிய ஆரம்பித்திருந்தது. சுகுமாரன் மனதில் ஒரு சந்தேகம் மெல்ல எழுந்தது. “நாம எங்க வீட்டுக்குப் போய் சேர்றதுக்குள்ளே விடிஞ்சுடும். அந்த நேரத்துல ஆவி இருக்குமோ, இருக்காதோ.”

 

பாண்டியன் அதிகம் சிரிக்கும் நபர் அல்ல. அதுவும் யோகாலயத்தில் வந்து செட்டிலான பிறகு சிரிக்கும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைந்து விட்டன. சிரிப்பது மட்டுமல்லாமல் அவர் புன்னகைப்பதும் கூட அத்தி பூத்தாற் போல சில சமயங்களில் தான். ஆனால் இந்த டாக்டர் பேசுவதைக் கேட்கும் போது சிரிக்காமலிருப்பதற்கு கடும் முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. சிரித்தால் மனிதர் டென்ஷனாகி விடுகிறார்...

 

பாண்டியன் புன்னகையின் சுவடும் கூட இல்லாமல் கேட்டார். “ஏன் பகல்ல ஆவி எங்கேயாவது போயிடுமா என்ன?” 

 

பாண்டியனின் கேள்வியில் தொனித்த ஏளனத்தை சுகுமாரன் மறுபடியும் உணராமல் இல்லை. ‘கண்டவனெல்லாம் என்னைக் கேலி செய்யும் நிலைமை வந்து விட்டதேஎன்று அவர் மனம் நொந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள வழியில்லை. கோபத்தை அடக்கிக் கொண்டு அவர் சொன்னார். “அதான் சொன்னேனே, நானும் ஆவி எக்ஸ்பர்ட் அல்ல. இந்த அனுபவம் நேத்து ராத்திரி வராம இருந்திருந்தால்  நானும் கேலியாய் தான் பேசியிருப்பேன். எல்லாரும் ராத்திரில தான் ஆவி நடமாட்டம் அதிகமாய் இருக்கிறதாய் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்.  பகல்ல என்ன நிலைமைன்னு போய்ப் பார்த்தால் தான் தெரியும்

 

பாண்டியன் சிரிக்காமல் சொன்னார். “சரி டாக்டர் போய்ப் பார்ப்போம். ஒருவேளை பகல்ல அதைச் சந்திக்க முடியாட்டி, ராத்திரில ஆவியை சந்திக்கறதுக்காகவே திரும்பவும் இன்னொரு தடவை உங்க வீட்டுக்கு வர்றேன், சரியா?’

 

தேங்க்ஸ்என்று சுகுமாரன் சொன்னார். ’அந்த ஆவி பகலிலும் இவன் கண்ணிலும் தென்பட வேண்டும்என்று அவர் ஆசைப்பட்டார். ’இப்போது அங்கு போனவுடன் அவள் ஆவி இவன் கண்களில் தென்படாவிட்டால் இவன் ராத்திரி வரைக்கும் சந்தேகப்பட்டுக் கொண்டே தான் இருப்பான்.’ என்று அவர் எண்ணினார். ராத்திரி வரை நிம்மதியாக அவராலும் இருக்க முடியாது. அவர் மனைவியும், மகளும் நாளை சாயங்காலம் வருகிறார்கள். அதற்குள் இந்த ஆவி சமாச்சாரத்தை முடித்து வைக்கா விட்டால் பெரிய பிரச்சினையாகி விடும். மனைவியையும், சைத்ராவின் ஆவியையும் ஒரே சமயத்தில் சமாளிப்பது முடிகிற காரியமல்ல

 

ஷ்ரவனுக்கு யோகாலயத்திலிருந்து பாண்டியனும், சுகுமாரனும் தனித்தனி கார்களில் கிளம்பிப் போகும் தகவல் கிடைத்தது. அவர்கள் போகும் தெருக்களை வைத்துப் பார்க்கையில் சுகுமாரனின் வீட்டுக்குத் தான் போகிறார்கள் என்பது புரிந்தது.  சுகுமாரன் வீட்டில் இரவில் சுமார் பத்து மணியளவில் இருந்து சுகுமாரன் வீட்டு நாய் விடாமல் குரைத்துக் கொண்டிருந்ததும், சுகுமாரன் போன பின்பும் அது தொடர்ந்ததும் ரகசியக் கண்காணிப்பாளர்கள் மூலம் அவனுக்குத் தெரிய வந்தது.  தீப்பற்ற வைத்த காவித்துணி வெளியே இருந்து வீசப்பட்டதும், சிறிது நேரத்தில் சுகுமாரனும், நாயும், வெளியேறி விட்டதும். அதன் பின் நடந்ததும் கூட அவனுக்குத் தெரிவிக்கப்பட்டன.

 

பரசுராமன் தனது மந்திரவாத சக்தியால் இந்த பெருங்காரியத்தை எப்படி செய்திருக்கிறார் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி 5.47.

 

ஷ்ரவன் பரசுராமனுக்குப் போன் செய்தான்.  குட்மார்னிங் சுவாமிஜி.  நான் உங்களைத் தொந்தரவு செய்யலையே

 

பரசுராமன் அன்பாகச் சொன்னார். “இல்லை ஷ்ரவன் சொல்லு.”

 

உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. சைத்ரா கேஸ்ல இதுவரைக்கும் எல்லாமே கிணத்துல போட்ட கல்லு மாதிரி அசையாம இருக்குதேன்னு யோசிச்சுகிட்டு இருந்தோம். உங்க முயற்சியால இப்ப கல்லுகளும் நகர ஆரம்பிச்சிருக்கு. டாக்டர் சுகுமாரன் இன்னைக்கு காலைல 4.05 க்கு யோகாலயம் போய்ச் சேர்ந்திருக்கார். 5.30 மணிக்கு அங்கேயிருந்து அவரும், யோகாலயம் மேனேஜர் பாண்டியனும் கிளம்பி சுகுமாரன் வீட்டுக்குப் போய்கிட்டு இருக்காங்க. இன்னும் அரை மணி நேரத்துல அவங்க சுகுமாரன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துடுவாங்கன்னு நினைக்கிறேன்... இந்தக் கொலைகள்ல பாண்டியனுக்கும் பங்கிருக்குங்கறது நமக்குத் தெரிஞ்சிடுச்சு.”

 

நல்லது ஷ்ரவன்

 

சுவாமிஜி. அடுத்ததா நாங்க செய்ய வேண்டியது எதாவது இருந்தா சொல்லுங்க.”

 

பரசுராமன் யோசித்து விட்டுச் சொன்னார். “முடிஞ்சா அந்த மேனேஜர் பாண்டியன் உபயோகப்படுத்திகிட்டிருக்கற எதாவது பொருளை எனக்கு அனுப்பி வெச்சா நல்லது. அவனோட வியர்வை அல்லது எச்சில் இருக்கற மாதிரி பொருள்களோ, அல்லது, அடிக்கடி பயன்படுத்திகிட்டு இருக்கற பொருளாகவோ இருந்தால் ரொம்ப நல்லது.”

 

சரி சுவாமிஜி. சின்ன வாய்ப்பு கிடைச்சாலும் இன்னைக்கே எங்க ஆளுக செய்துடுவாங்க. ஆனா அந்த மேனேஜர் எத்தனை நேரம் அங்கே இருப்பார்னு தெரியல. இப்ப சுகுமாரன் வீட்டு கிட்ட முடியாட்டி வேற இடங்கள்ல முயற்சி செய்யச் சொல்றேன்.”

 

பரசுராமன் சொன்னார். “நான் ரெண்டு நாள்ல துபாய் போறேன் ஷ்ரவன். அங்கிருந்து மற்ற நாடுகளுக்கெல்லாம் போய் நான் திரும்பி வர்றதுக்கு மூனு மாசமாயிடும். அதனால நாளைக்குள்ளே முடிஞ்சா நல்லது.”

 

ஷ்ரவன் உறுதியாய் சொன்னான். “இப்ப முடியாட்டியும் நாளைக்குள்ளே வேலை முடிஞ்சுடும் சுவாமிஜி

 

ஒரு முக்கியமான விஷயம். அது நான் முதல்ல சுகுமாரன் விஷயத்துல சொன்னதே தான். பாண்டியனோட பொருளை எடுக்கறவங்க முடிஞ்ச வரைக்கும் அதை அதிகம் தொடாமல் இருக்கறது நல்லது. அதாவது பாண்டியனோட அலைவரிசைகள் தான் அந்தப் பொருள்ல அதிகம் இருக்கணும். எடுக்கறவங்க அலைவரிசை அதுல எவ்வளவு குறைவாய் இருக்கோ அவ்வளவு நல்லது.”

 

புரிஞ்சுது சுவாமிஜி.”

 

அதை எடுத்தவுடனே எனக்குச் சொல்லு ஷ்ரவன். நான் சொல்ற நேரத்துல இங்கே அது வந்து சேர்ந்தா நல்லது.”

 

ஷ்ரவன் சரியென்றான்.

 

சுகுமாரனும், பாண்டியனும் சுகுமாரன் வீட்டைச் சென்றடைந்த போது மணி 6.20. அப்போது நன்றாக விடிந்திருந்தது. கூர்க்கா வெளி கேட்டைத்  திறந்தாலும் கூட சுகுமாரன் காரை உள்ளே நிறுத்தாமல் வெளியிலேயே நிறுத்தினார். உள்ளே ஆவி நிலவரம் என்ன என்பது தெரியாமல் அவர் உள்ளே காரை நிறுத்த விரும்பவில்லை. அவசரமாகக் கிளம்ப வேண்டுமென்றால் அது இம்சையாகி விடலாம்.

 

பாண்டியனும் தன் காரை சுகுமாரனின் காருக்குப் பின்புறமாக நிறுத்தினார்.  தனதருகே இருந்த டவலில் முகத்தைத் துடைத்தபடி, டாக்டர் என்ன செய்கிறார் என்று பார்த்தார்.

 

சுகுமாரன் கேட் அருகே நின்றபடி தோட்டத்தை எட்டிப் பார்த்தார். நேற்று முதல் முதலில் காட்சி அளித்த இடத்தில் சைத்ராவின் ஆவி இப்போது தெரியவில்லை.  விடிந்தவுடன் போய் விட்டதா, இல்லை, இன்னமும் வீட்டுக்குள் தான் இருக்கின்றதா, இல்லை, தோட்டத்தில் வேறெங்காவது உலாவிக் கொண்டு இருக்கிறதா என்பது தெரியவில்லை.   அது போய் விடாமல் வீட்டுக்குள்ளேயோ, தோட்டத்திலேயோ இருந்தால் நல்லது என்று அவர் எண்ணினார். இருப்பது மட்டுமல்லாமல் பாண்டியன் கண்ணுக்கும் தெரிய வேண்டும். அப்படி பாண்டியனுக்குத் தெரியாமல் அவருக்கு மட்டும் தெரிந்தால் அவர் பார்த்து பயந்து கொண்டேயிருக்க, இந்தப் பைத்தியக்காரப் பாண்டியன்எங்கே, எங்கே?” என்று எகத்தாளமாகக் கேட்டுக் கொண்டே இருக்கும் வாய்ப்பும் இருக்கிறது. ’சே, இந்த ஆவியைக் காட்டுவதில் கூட எத்தனை சிக்கல்! நாசமாய் போன ஆவியே, எனக்குக் கொடுத்த தரிசனத்தை இந்த ஆளுக்கும் தாயேன்.’


(தொடரும்)

என்.கணேசன்





7 comments:

  1. "மனைவியையும், சைத்ரா ஆவியையும் ஒரே சமயத்தில் சமாளிப்பது முடிகிற காரியமல்ல" semmmma sir..

    ReplyDelete
  2. சாணக்கியன் இன்னும் எத்தனை episodes இருக்கு sir..

    First part முடிஞ்சதா?

    2 part nu சென்னீங்க, எது வரை first part னு தெரில, so only..

    ReplyDelete
    Replies
    1. Total 195 chapters. First part is up to 97the chapter.

      Delete
  3. Sir, யோகி நாவலில் total எத்தனை chapters இருக்கு?

    ReplyDelete
  4. சைத்ரா ஆவி பாண்டியன் கண்களுக்கு மட்டும் தெரியாமல் இருக்கனும்...அப்படி... நடந்தால் இருவருக்கும் இப்போதுள்ள வாய் சண்டை ... கைகலப்பாக மாறிவிடும்.....

    ReplyDelete