சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 9, 2021

யாரோ ஒருவன்? 44


தேவ்நாத்பூர் கிராமத்தில் புழுதியை வாரியிறைத்துக் கொண்டே அந்தக் கார் நுழைந்தது. சுவாமி முக்தானந்தாவின் ஆசிரமத்தைத் தவிர அந்தக் கிராமம் வேறு எதற்கும் பிரபலமானதல்ல என்பதால் அங்கே வெளியாட்கள் யார் வந்தாலும் அந்த ஆசிரமத்திற்கு வந்தவர்களாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் காரோட்டி வந்த மூக்குக் கண்ணாடியணிந்திருந்த ஆசாமி ஜன்னல் வழியாகத் தலையை வெளியே நீட்டியதும் அவன் எந்தக் கேள்வியும் கேட்கலாமலேயே ஒரு கிராமத்தான்  “இன்னும் ஒரு கிலோமீட்டர் போய் வலது பக்கம் திரும்பினால் ஆசிரமம்என்று சொன்னான்.

காரோட்டி வந்த ஆசாமி பைஜாமா ஜிப்பா உடையில் இருந்தான். அழுத்தி வாரிய தலைமுடியும், கூர்மையான பார்வையும் கொண்ட அவன் ஒரு கணம் இந்தக் கிராமத்தானிடமே ஆசிரமம் பற்றிய கேள்விகளைக் கேட்டு விட்டுப் பின் ஆசிரமத்திற்குப் போகலாமா என்று நினைத்துப் பின் அந்த நினைப்பை மாற்றிக் கொண்டான். ஆசிரமத்தில் கேள்விப்பட்டவைகளில் ஏதாவது சந்தேகம் எழுந்தால் நிவர்த்தி செய்து கொள்ளவும், அங்கே கேள்விப்பட்ட விஷயங்களைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்து கொள்ளவும் பிற்பாடு கிராமத்தினரை விசாரிப்பது தான் சரி என்ற முடிவுக்கு வந்ததால், வழி சொன்ன கிராமத்தானிடம்நன்றிமட்டும் தெரிவித்துக் கொண்டு முன்னேறினான்.

சுவாமி முக்தானந்தாவின் ஆசிரமம் ஏழு ஏக்கர் நிலப்பரப்பின் மத்தியில் பெரிதாகக் கட்டப்பட்டிருந்தது. ஆசிரமத்தின் முன்னால் ஒரு விலையுயர்ந்த காரும் ஒரு ஜீப்பும் நிறுத்தப்பட்டிருந்தன. ஜீப்பில் ஆசிரமத்தின் பெயர் எழுதப்பட்டு இருந்தது. அதனால் அது ஆசிரமத்தினுடையதாகவே இருக்க வேண்டும் என்று நினைத்த பைஜாமா ஜிப்பா ஆசாமி அந்த விலையுயர்ந்த காரை ஆராய்ந்தான். காரின் எண்ணைப் பார்க்கையில் அது டெல்லி ரிஜிஸ்டிரேஷன் காராக இருந்தது.    

காரிலிருந்து இறங்கி ஆசிரமத்தின் உள்ளே போன போது முன்னால் ரிசப்ஷனில் இருந்த இளைஞன்யார் நீங்கள்? என்ன வேண்டும்?” என்று ஹிந்தியில் கேட்டான்.

நான் ஜெய்ராம். ஒரு எழுத்தாளர். ஆசிரமத் தலைவரைப் பார்க்க வேண்டும்என்று சொன்னபடி பைஜாமா ஜிப்பா ஆசாமி தன் விசிட்டிங் கார்டை அவனிடம் நீட்டினான். அதை வாங்கி அந்த இளைஞன் பார்த்தான். பின் சொன்னான். “உட்காருங்கள். இப்போது தலைவர் வேறிரண்டு பேரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்.”

தலையசைத்து விட்டு ஜெய்ராம் உட்கார்ந்தான். அவன் கண்கள் அந்த வரவேற்பறையில் இருந்த படங்களை கவனிக்க ஆரம்பித்தன. முன்னால் சுவாமி முக்தானந்தாவின் பெரிய படம் ஒன்றிருந்தது. பின் அங்கு பல காலக் கட்டங்களில் வந்திருந்த தலைவர்கள், நடிகர் நடிகைகள், படங்கள் இருந்தன. ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டே வந்த ஜெய்ராமின் பார்வை ஒரு படத்தில் நிலைத்தது. அதில் முக்தானந்தாவும், நாகராஜும் இருந்தார்கள். சுவாமி முக்தானந்தா நாகராஜின் தோளில் சினேகத்துடன் கையை வைத்தபடி புன்னகைத்துக் கொண்டிருந்தார்.  நாகராஜ் எந்த விதமான உணர்ச்சியுமே காட்டாமல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். காமிராவுக்காகச் சிரிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவனுக்கில்லை போலிருந்தது….

ஜெய்ராம் (உண்மையான பெயர் வேறு. அவன் அந்த ஆசிரமத்திற்காகத் தேர்ந்தெடுத்திருந்த தற்காலிகப் பெயர் அது) பொறுமையாகக் காத்திருந்தான்.  அவன் கையில் இரண்டு ஆன்மிகப் புத்தகங்கள் இருந்தன. அந்த இரண்டு புத்தகங்களையும் எழுதியதாக அவன் பெயர் போடப்பட்டிருந்ததுபின்னட்டையில் அவன் புகைப்படம் இருந்ததுஆனால் இரண்டையும் எழுதிய எழுத்தாளர்கள் வேறு வேறு ஆட்கள். நவீனத் தொழில்நுட்ப உதவியுடன்  அந்தப் புத்தகங்களின் நிஜ அட்டைகளை எடுத்து விட்டு அவன் போலிப் பெயர், புகைப்படம் இருக்கும்படியாக அட்டைகள் போட்டு உள்ளேயும் எழுத்தாளர் பெயரை மட்டும் ஒவ்வொரு பக்கத்திலும் மாற்றித் தன் புத்தகமாக உருவாக்கிக் கொண்டு வந்திருந்தான் அவன்

ஆசிரமத்தலைவர் அறையிலிருந்து ஒரு அமெரிக்கரும், ஒரு சீக்கியரும் வெளியே வந்தார்கள். இவர்கள் தான் அந்த டெல்லி ரிஜிஸ்டிரேஷன் காரில் வந்தவர்களாக இருக்க வேண்டும்...

ரிசப்ஷன் இளைஞன் ஜெய்ராமிடம் சொன்னான். “நீங்கள் போய்த் தலைவரைச் சந்திக்கலாம்...”

ஜெய்ராம் உள்ளே போனான். ஒரு நீண்ட மேசையின் பின் பருமனான துறவி அமர்ந்திருந்தார். அவருக்கு வயது முப்பது இருக்கலாம்... அவன் கைகூப்ப அவரும் கைகூப்பினார். பயபக்தியுடன் அவன் தன்னை ஒரு எழுத்தாளனாக அறிமுகப்படுத்திக் கொண்டான்.  தான் எழுதியதாகக் கொண்டு வந்திருந்த  புத்தகங்களைப் பணிவுடன் அவரிடம் நீட்ட அவர் ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டார், ஜெய்ராமை அமரச் சொல்லி விட்டு அந்த நூல்களைப் பிரித்து மேலோட்டமாகப் பார்த்தார். பின் அவற்றை மேசை மீது வைத்து விட்டு மிகுந்த மரியாதையுடன் கேட்டார். “சந்தோஷம். நீங்கள் என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்?”

ஜெய்ராம் தான் தயாரித்து வந்திருந்த பொய்யைச் சொன்னான். “சுவாமிஜி. நான் என் அடுத்த நூலாக சுவாமி முக்தானந்தாவைப் பற்றி எழுதலாம் என்று ஆசைப்படுகிறேன்…. அதற்காக அவர் குறித்து விவரங்களைக் கேட்க வந்திருக்கிறேன்…”

அவன் எதிர்பார்த்தது போல உடனடியாக எதையும் சொல்ல ஆரம்பிக்காமல் அவர் அவனைக் கூர்ந்து பார்த்தபடிச் சொன்னார். “உங்களை நான் இதற்கு முன்பு இந்த ஆசிரமத்தில் பார்த்ததாக நினைவில்லையே. இது உங்கள் முதல் வரவா?”

ஜெய்ராம் பணிவுடன் சொன்னான். “ஆம் சுவாமிஜி. சுவாமி முக்தானந்தா இருக்கும் போது இங்கே வரும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைக்கவில்லை. உண்மையில் அவரைப் பற்றி நான் அறிய ஆரம்பித்ததே மூன்று மாதங்களுக்கு முன் அவருடைய தீவிர பக்தர் ஒருவர் மூலமாகத் தான்.  ஆனால் நான் கேள்விப்பட்டதெல்லாம் என் அந்தராத்மாவைத் தொட்டு அவர் சரிதையை எழுதத் தூண்டி விட்டது. அதனால் தான் இங்கே வந்திருக்கிறேன்.”

அவர் மகிழ்ச்சியோடு சொன்னார். “சந்தோஷம். நானே பல சமயங்களில் சுவாமி பற்றிய ஒரு நல்ல நூல் வெளிவர வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்எத்தனையோ அரைகுறைகள் பற்றியெல்லாம் நூல்கள் வந்திருக்கின்றன. சுவாமியைப் பற்றி ஊடகங்களில் செய்திகளாகவும், கட்டுரைகளாகவும் வந்திருக்கின்றன. ஆனால் தனிநூலாக எதுவும் வெளியே வரவில்லை என்ற ஆதங்கம் எனக்கு நிறைய உண்டு…. அதைப் பல முறை மகராஜிடம் சொல்லியிருக்கிறேன். ”

ஜெய்ராம் மகராஜ் என்ற சொல்லைக் கேட்டவுடன் குழப்பத்துடன் பார்த்துச் சொன்னான். “மகராஜ்?”

எல்லோரையும் விட சுவாமியுடன் அதிக காலம் இருந்தவர் மகராஜ் தான்இந்த ஆசிரமம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே மகராஜ் நாகராஜ், சுவாமியுடன் இருந்திருக்கிறார்.”

அப்போதும் முகம் தெளிந்தவனாக ஜெய்ராம் காட்டாமல் போகவே அவர் அவனிடம் சொன்னார். “சுவாமியின் பக்தர்கள் எவரும் மகராஜைத் தெரியாதவர்கள் இல்லையே. சுவாமியைப் பற்றி அவர் உங்களிடம் சொல்லி இருந்தால் அவர் மகராஜைப் பற்றியும் உங்களிடம் சொல்லியிருக்க வேண்டுமே.?”

இனியும் தெரியாதது போல் காட்டிக் கொண்டால் சாயம் வெளுத்து விடலாம் என்று பயந்த ஜெய்ராம்மகராஜ் என்றால் நாகசக்தி கொண்ட....” என்று சொல்லி நிறுத்த அவர்அவரே தான்என்றார்.

ஜெய்ராம் முகம் தெளிந்தவனாகச் சொன்னான். “அவரைப் பற்றியும் என் நண்பர் சொல்லியிருக்கிறார்மகராஜுக்கு நாகசக்தி கிடைக்கவே சுவாமி முக்தானந்தா தான் காரணம் என்றும் சொல்லி இருக்கிறார்.  அதெல்லாம் சேர்ந்து தான் என் ஆவலைத் தூண்டி விட்டது என்று சொல்லலாம். உண்மையைச் சொல்லப் போனால் நீங்கள் தான் மகராஜ் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்...”

அவர் புன்னகைத்தார். “நான் அவரல்ல. மகராஜ் தென்னிந்தியா போயிருக்கிறார்....”

ஜெய்ராம் சிறிது மவுனமாக இருந்து அவர் நாகராஜின் தென்னிந்தியப் பயணம் ஏன் என்று எதாவது சொல்வாரா என்று எதிர்பார்த்தான். ஆனால் அவரும் மவுனம் சாதித்தார்.

ஜெய்ராம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சொன்னான். “சுவாமிஜியுடன் அதிக காலம் இருந்தவர் மகராஜ் என்கிறீர்கள். அப்படியானால் மகராஜ் தான் அவருடைய முதல் சீடரா?”

அவர் லேசாகச் சிரித்து விட்டுச் சொன்னார். “நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். மகராஜ் இன்னும் சன்னியாசம் வாங்கிக் கொள்ளவில்லை. ஒரு வகையில் நீங்கள் சொன்னது போல் அவர் தான் ஆரம்பச் சீடர் என்று எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் சன்னியாசம் வாங்காததால் நீங்கள் நினைக்கிற மாதிரி துறவறம் பூண்ட சீடர் அல்ல அவர்

தலைசுற்றுவது போல் தோன்றியதை ஜெய்ராம் நடிக்க வேண்டியிருக்கவில்லை. நிஜமாகவே குழப்பத்தில் அவனுக்குத் தலைசுற்றியது.



(தொடரும்)
என்.கணேசன்  

2 comments:

  1. Who is this Jayaram? Who sent him? In each episode new questions arise. Unassumable and interesting novel.

    ReplyDelete
  2. இதன் மூலமாகவாவது.... நாகராஜ் பற்றிய விவரம் வெளிவராதா...? என்ற ஏக்கம் அதிகரிக்கிறது....

    ReplyDelete