சில நூறு வருடங்களுக்கு முந்தைய நினைவுச்சின்னம் குறித்த விவரங்களை ப்ளாவட்ஸ்கீ அம்மையாரால் அந்தப் பழங்காலத்தில் வாழ்ந்த மனிதரின் ஆவியையே வரவழைத்துக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிகிறது என்ற செய்தி அந்தக் காலத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அபூர்வ சக்திகள் இருக்கையில் எந்த சந்தேகத்தையும் நிவர்த்தி செய்து கொள்ள உண்மையில் தடை ஏதுமில்லை என்று கர்னல் ஓல்காட்டும் நம்ப ஆரம்பித்தார்.
அவர் அமெரிக்காவில் இருக்கையில் ஒரு நாள் ஒரு துறை சம்பந்தமான சில கேள்விகளுக்கு அந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற நிபுணரிடம் பெற்றுத் தர வேண்டும் என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதத்தில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அற்புதங்களைச் செய்து காட்டக் கூடியவர் என்பதால் இந்த முறை எந்த முறையை உபயோகப்படுத்தப் போகிறார் என்று அறிய அவர் ஆவலாக இருந்தார்.
ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவரிடம் சொன்னார். “ஒரு தாளில் உங்கள் கேள்விகளை எல்லாம் எழுதி ஒரு உறையில் போட்டு அந்த உறையை ஒட்டி நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்படியான ஒரு இடத்திலேயே வையுங்கள்”
கர்னல் ஓல்காட்டும் அவர் சொன்னபடியே அவர் கேட்க வேண்டியிருந்த கேள்விகளை ஒரு தாளில் எழுதி அதை ஒரு உறையில் போட்டு அந்த உறையை ஒட்டி விட்டு அவர்கள் அமர்ந்திருந்த அறையில் கடிகாரத்திற்குப் பின்னால் நுனி மட்டும் வெளியே தெரிகிற மாதிரி வைத்தார்.
பின் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தியோசபிகல் சொசைட்டி சம்பந்தமாக அவரிடம் பேச ஆரம்பித்தார். கர்னல் ஓல்காட் அவருடனே பேசிக் கொண்டிருந்தாலும் அவர் பார்வை அவர் எழுதி வைத்திருந்த உறையின் நுனியின் மீதே இருந்தது. அந்த உறையில் எந்த அசைவும் இருக்கவில்லை.
ஒரு மணி நேரம் கழிந்த பிறகு ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கர்னல் ஓல்காட்டிடம் சொன்னார். “உங்கள் கேள்விகளுக்கான பதில் வந்து விட்டது”
கர்னல் ஓல்காட் ஆர்வத்துடன் எழுந்து சென்று கடிகாரத்திற்குப் பின்புறம் வைத்திருந்த அந்த உறையை எடுத்துப் பார்த்தார். உறை ஒட்டியபடியே இருந்தது. ஒட்டியிருக்கும் உறைகளில் மகாத்மாக்கள் சில செய்திகளை அனுப்பி இருந்ததைப் பார்த்தவர் என்றாலும் மகாத்மாக்கள் அல்லாத நிபுணர்களிடம் கேட்ட பதில்கள் எப்படி வந்திருக்க முடியும் என்றறிய ஆவலுடன் உறையைக் கிழித்துப் பார்த்தார். உள்ளே அவர் கேள்விகள் எழுதி வைத்திருந்த தாளுடன் இன்னொரு பச்சை நிறத் தாள் இருந்தது. அது போன்ற பச்சை நிறத் தாள்களை அவர்கள் இது வரை உபயோகித்திருக்கவில்லை. அந்தப் பச்சை நிறத் தாளில் பதில்கள் வரிசையாகத் தெளிவாக அவர் இது வரை பார்த்திராத கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது.
அவர்கள் அமெரிக்காவில் இருந்தார்கள். பதில் அனுப்பியிருந்த நிபுணரோ இந்தியாவில் இருந்தார். கர்னல் ஓல்காட் கேட்டிருந்த கேள்விகளோ ஒட்டிய உறையில் இருந்தன. அந்த உறையும் கர்னல் ஓல்காட்டின் பார்வையிலேயே இருந்தது. அதனுள் இருந்த கேள்விகளை எப்படி இந்தியாவில் இருந்த அந்த நிபுணர் படித்திருக்க முடியும். அப்படிப் படித்து அந்த பச்சை நிறத் தாளில் அந்த நிபுணர் எழுதியிருந்த பதில் எப்படி அந்த ஒட்டிய உறைக்குள் புகுந்திருக்க முடியும் என்ற கேள்விகளுக்குப் பதில்கள் கர்னல் ஓல்காட்டுக்குக் கிடைக்கவில்லை.
இப்படி ரகசிய வழிமுறைகளில் கேள்விகளுக்குப் பதில் பெறும் சம்பவத்தை நேரடியாகவே நம் இந்தியாவில் பால் ப்ரண்டன் என்ற ஆங்கிலேய தத்துவஞானியும் கண்டிருக்கிறார். அதுவும் இதே போன்ற நிகழ்வு என்பதால் ஒப்பிடும் வகையில் இங்கே பார்ப்போம்.
பால் ப்ரண்டன் இந்தியாவுக்கு வந்திருந்த போது மும்பையில் தங்கிய ஓட்டலில் முகமது பே என்ற எகிப்தியரும் தங்கியிருந்தார். அவரும் பால் ப்ரண்டனைப் போலவே இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தவர். அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஓட்டலில் உள்ளவர்கள் சற்றுப் பயத்துடன் பார்ப்பதும் குரலைத் தாழ்த்திப் பேசுவதுமாக இருக்கவே பால் ப்ரண்டன் அந்த மனிதர் யார் என்று விசாரித்தார். அதற்கு அங்குள்ளவர்கள் அவர் ஒரு பெரிய மேஜிக் நிபுணர் என்றும் அதிசய சக்திகள் படைத்த மனிதர் என்றும் தெரிவித்தார்கள்.
உடனே அவரைச் சந்தித்துப் பேச பால் ப்ரண்டன் ஆர்வம் கொண்டு தன் ஆர்வத்தைத் தன் விசிட்டிங் கார்டின் பின்புறம் எழுதி ஓட்டல் பணியாளர் ஒருவர் மூலம் அனுப்பி வைத்தார். முகமது பே அவரைச் சந்திக்க ஒப்புக் கொண்டு காலை உணவை அவருடன் பகிர்ந்து கொள்ள பால் ப்ரண்டனை அழைத்தார். காலை உணவு முடிந்தவுடன் பால் ப்ரண்டன் வெளிப்படையாகவே “உங்களிடம் அதிசய சக்திகள் இருப்பது உண்மையா?” என்று அவரிடம் கேட்டார்.
“எல்லாம் வல்ல அல்லாவின் கருணையால் எனக்கு அந்தச் சக்திகள் அளிக்கப்பட்டிருக்கின்றன” என்றார் முகமது பே.
அதை வெளிப்படுத்திக்
காட்ட பால் ப்ரண்டன் ஆசைப்படவே முகமது பே ஒத்துக் கொண்டு கேட்டார். “உங்களிடம் ஒரு காகிதமும் பென்சிலும் இருக்கிறதா?”
பால் ப்ரண்டன்
உடனடியாகத் தான் வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தில்
இருந்து ஒரு தாளைக் கிழித்துக் கொண்டு பென்சிலையும் எடுத்துக் கொண்டார்.
முகமது பே சில அடிகள்
தள்ளிச் சென்று ஓட்டலறையின் ஜன்னலோரம் நின்று கொண்டு சொன்னார். “உங்களைப் பற்றிய ஏதாவது கேள்வி ஒன்றை எழுதிக் கொள்ளுங்கள்”
சற்று யோசித்து
விட்டு பால் ப்ரண்டன் அந்தத் தாளில் ”நான்கு வருடங்களுக்கு முன்பு நான் எங்கே
வசித்தேன்?” என்ற கேள்வியை எழுதினார்.
முகமது பே பால் ப்ரண்டனிடம் அந்தத் தாளைப் பல மடிப்புகளாக மடித்து பென்சிலுடன் சேர்த்து
கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வலது உள்ளங்கையில் வைத்துக் கொள்ளச் சொல்ல, பால்
ப்ரண்டனும் அப்படியே செய்தார்.
முகமது பே கண்களை
மூடிக் கொண்டு சிறிது நேரம் உட்கார்ந்திருந்து விட்டு பிறகு கண்களைத் திறந்து கேட்டார். ”நீங்கள் எழுதிய கேள்வி, ‘நான்கு வருடங்களுக்கு முன்பு நான் எங்கே வசித்தேன்?’ என்பது தானே?”
பால் ப்ரண்டன் திகைப்புடனே ஒத்துக் கொண்டார். “ஆமாம்”
”இப்போது உங்கள் கையில் இருக்கும் காகிதத்தை பிரித்துப்
பாருங்கள்”
தன் கையில் இருந்த தாளைப் பிரித்துப் பார்த்த பால் ப்ரண்டன் பிரமித்துப் போனார். அவர் எழுதியிருந்த கேள்வியின் கீழ் சரியான பதில் எழுதப்பட்டிருந்தது. பல மடிப்புகள் மடித்து மிகவும் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருந்த அந்தத் தாளில் அவர் அறியாமல் யார், எப்படி எழுத முடியும்?, அந்தக் கேள்விக்குப் பதில் எப்படி அறியப்பட்டது என்ற கேள்விகள் அவர் மனதில் எழுந்தன. ஒருவேளை இதெல்லாம் கண்கட்டு வித்தையோ என்று சந்தேகம் கொண்ட பால் ப்ரண்டன் “இன்னொரு கேள்வி எழுதட்டுமா? என்று கேட்க முகமது பே அதற்கும் ஒத்துக் கொண்டார்.
சற்று யோசித்து விட்டு பால் ப்ரண்டன் “நான் இரண்டு வருடங்களுக்கு முன் எந்தப் பத்திரிக்கையில் பணி புரிந்து கொண்டிருந்தேன்?” என்ற கேள்வியை எழுதி அந்தத் தாளை நன்றாக மடித்து பென்சிலுடன் சேர்த்து மேலும் உறுதியாகப் பிடித்துக் கொண்டார்.
அதற்கும் கண்களை
மூடிக் கொண்டிருந்து விட்டு சில நிமிடங்கள் கழித்து முகமது பே சொன்னார். “நீங்கள்
எழுதிய கேள்வி ‘நான் இரண்டு வருடங்களுக்கு முன் எந்தப் பத்திரிக்கையில்
பணி புரிந்து கொண்டிருந்தேன்?’ என்பது தானே?”
”ஆம்” என்ற பால் ப்ரண்டன்
ஆச்சரியத்துடன் தாளைப் பிரித்துப் பார்த்தார். அந்த இரண்டாவது
கேள்விக்குக் கீழும் சரியான பதில் எழுதப்பட்டிருந்தது. மேலும்
சந்தேகம் தீராமல் அவர் மூன்றாவதாக ஒரு கேள்வியும் எழுதினார்.
பின் திறந்து பார்த்த போது அதற்கும் சரியாகப் பதில் அந்தத் தாளில் எழுதப்பட்டிருக்கவே பால் ப்ரண்டன் அடைந்த வியப்பிற்கு அளவேயில்லை.
கேள்விகள் மனோவசிய முறையில் அறியப்பட்டிருக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் ,அதற்கான பதில்கள் இந்த இரண்டு சம்பவங்களிலும் அந்தத் தாள்களில் எழுதப்பட்டு சேர்ந்த விதம் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன அல்லவா?
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 2.7.2019
இரண்டுமே நம்மை வியப்பில் ஆழ்த்தும் சம்பவங்கள்.... அருமை....
ReplyDeleteஅதிசயம் அற்புதம் நிறைந்த தகவல்கள்... இது சாத்தியம் தான் என்று எண்ண நினைக்க தூண்டுகிறது..
ReplyDeleteஇதே மாதிரி அற்புத சக்திகளுடன் நிகழ் காலத்தில் யாரும் வாழ்கிறார்களா???? இருந்தால் நான்றாக இருக்கும். கீழ் வரும் இந்த செய்தி நான் சமுக ஊடகம் வழியாக தெரிய பெற்றேன். ரஷ்யாவில் வாழ்ந்த ரஸ்புடின் என்கிற நபர் தான் தொட்டவுடன் எதிரில் தொடப்படும் நபரின் நோய்கள் குணம் ஆவதை பலரும் பதிவு செய்து இருக்கிறார்கள். அதே போல தமிழக சாமியார் ஒருவர் இந்த சக்தியை கொண்டு உள்ளார் என்றும். அவர் அதை கொண்டு நோய்களை சரி செய்கிறார் என்றும் சொல்கிறார்கள்
அற்புதமான தகவல்... உங்கள் பதிவுகள் புத்தகங்கள் படிக்க படிக்க சுவாரசியமாக இருக்கிறது.. நிகழ்காலத்தில் இப்படி நடந்து அங்கு நாம் இருக்க முடியாதா என்று நினைக்க தூண்டுகிறது.. ரஷ்யாவின் ரஸ்புடின் மாதிரி ஒரு சாமியார் தற்போது இருப்பாதாகவும் அவர் தொட்டவுடன் நோய் குணமாகிறது எனவும் சமூக ஊடகம் மூலம் கேட்டு இருக்கிறேன்.. ஆனால் அவர் அதை கொண்டு பணம் பெயர் புகழ் இப்போது பல அவமானம் என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.. இதை நம்புவதற்கே கொஞ்சம் கடினமாக இருக்கிறது.
ReplyDelete