பதின்ம (டீனேஜ்)
வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களே நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க
வேண்டும்.
நேற்று பேருந்தில்
நான் காண நேர்ந்த ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பேருந்தில்
நல்ல கூட்டம். பேருந்தில் ஏறிய பள்ளிச் சீருடை அணிந்த ஒரு சிறுமி சுமார் பத்தாம் வகுப்பில்
படிக்கும் தோற்றத்தில் தெரிந்தாள். அவள் அடிக்கடி சற்று தள்ளி நின்றிருந்த சுமார்
18 வயதிருக்கும் ஒரு பையனைப் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டிருந்தாள். அது நட்பின்
புன்னகை அல்ல. ஏனென்றால் நட்பின் புன்னகை ஓரிரு முறைக்கும் மேல் காரணமில்லாமல் வர வாய்ப்பில்லை.
அவள் கூட்டத்தில் சிறிது சிறிதாக நகர்ந்து வந்து அந்தப் பையன் அருகில் நின்று கொண்டாள்.
அவளருகே இருந்த இருக்கைகள் காலியான போதும் அவள் உட்காரவில்லை. அந்தப் பையனும் அப்படியே.
ஒரு கட்டத்தில் கூட்டம் குறைந்து இருவரும் சேர்ந்து அமர இருக்கை கிடைத்த போது தான்
இருவரும் அங்கு போய் உட்கார்ந்து கொண்டார்கள். இருவரும் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக்
கொண்டார்கள். அப்போதும் அந்தப் பையன் மட்டுமே யாராவது பார்க்கிறார்களா என்று ஓரிரு
முறையாவது மற்ற பயணிகளையும் பார்த்தான். அந்தச் சிறுமி அவனைத் தவிர வேறு யாரையும் பார்க்கும்
நிலைமையில் இல்லை. அந்தப் பையன் இறங்கும் நிறுத்தம் வந்தவுடன் இறங்கிக் கொண்டான். அதன்
பின் தான் அந்தச் சிறுமி எழுந்து மற்ற பெண்கள் இருக்கும் பகுதிக்கு வந்தாள்.
ஒன்றாகச் சேர்ந்து
அமர்வதும், பேசுவதும் தவறல்ல. ஆனால் அந்தச் சிறுமியின் பார்வையும், சிரிப்பும், நட்பு
எல்லையையும், அவள் வயதையும் மீறியதாக இருந்ததைப் பார்த்த போது இரண்டு பெண்குழந்தைகளின்
தந்தையான எனக்கு மனம் பதறியது. இக்காலத்தில் பொது இடங்களில் எத்தனையோ அவலங்களையும்
அலங்கோலங்களையும் பார்த்த அனுபவம் இருக்கிறது. ஆனால் பள்ளிச் சீருடையில் இருந்த அந்தச்
சிறுமியின் அறியாத வயது தான் என்னை மனம் பதற வைத்தது. அவள் வலியப் போய் அந்தப் பையனிடம்
நடந்து கொண்ட விதம் அந்த வயதிற்கேற்றதாய் இருக்கவில்லை. எல்லாம் பார்க்கையில் அவர்களுக்கு
இது இரண்டாவது அல்லது மூன்றாவது சந்திப்பாக இருக்கலாம் என்று தோன்றியது. இனி சில சந்திப்புகள்
தொடர்ந்தால், தவறான வாய்ப்புகள் கிடைத்தால், எந்தவொரு விபரீதமும் அவர்களுக்குள் நடக்கலாம்
என்பது தெளிவாகவே தெரிந்தது. இதெதுவும் அறியாமல் எங்கோ இருக்கும் அந்தச் சிறுமியின்
பெற்றோர் மீது பச்சாதாபம் தோன்றியது. அந்தச் சிறுமியின் முகத்தில் தெரிந்த அந்தச் சிரிப்பு
எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. அந்தச் சிறுமிக்காகவும், அவளுடைய பெற்றோருக்காகவும்
நான் உணர்ந்த வலி எனக்குள்ளே நேற்றைய தினம் முழுவதும் மெலிதாக இருந்து கொண்டேயிருந்தது.
சினிமாக்களும் சீரியல்களும்
வளர்த்து விட்ட கலாச்சாரச் சீரழிவு இது. இதில் எத்தனையோ வாழ்க்கைகள் பிஞ்சிலேயே கருகி
விடுகின்றன. அதையும் பரபரப்பான செய்திகளாகப் போட்டு ஊடகங்கள் காசு பார்க்கின்றன. இந்தச்
சம்பவங்களின் முடிவில் சம்பந்தப்பட்ட தனிநபர்களும், குடும்பங்களும் படுகின்ற வேதனைகள்
சொல்லி மாளாது. எத்தனையோ துக்கங்கள்... எத்தனையோ
தற்கொலைகள்.... எத்தனையோ சீரழிவுகள்...
பெற்றோர்களே! உங்களில்
பெரும்பாலோருக்குப் பிள்ளைகளே உங்கள் கனவுகளின் எதிர்காலம். உங்களால்
முடியாததை எல்லாம் உங்கள் பிள்ளைகள் சாதிக்க வேண்டும், உங்களை
விட சந்தோஷமாகவும், சுபிட்சமாகவும் அவர்கள் நிறைவாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே
அதிகம். எத்தனையோ வீடுகளில் எத்தனை வளர்ந்தாலும், குழந்தை
என்றும் பாப்பா என்றுமே பிள்ளைகளை அழைத்துப் பேசும் வழக்கம் இன்னும் இருக்கிறது. அப்படிப்பட்ட உங்கள் உயிருக்குயிரான குழந்தைகளின் போக்கைத்
தயவுசெய்து அவ்வப்போது கூர்ந்து கவனியுங்கள். பள்ளிக்குச் செல்லும்
அவர்கள் கல்வியோடு வேறு எதைக் கற்றுக் கொள்கிறார்கள், எதில் ஆர்வம் காட்டுகிறார்கள்
என்பதைக் கவனியுங்கள். உங்கள் மற்ற பிரச்னைகளிலேயே மூழ்கிப் போயிருக்காமல் அவர்களின்
நட்புகள் குறித்து அறிந்து வைத்திருங்கள். அவர்கள்
பேச்சின் மூலம் அவர்கள் மனப்போக்கைத் தெரிந்து வைத்திருங்கள். தவறான பாதை
மாற்றங்களை ஆரம்பத்திலேயே தடுத்து அவர்களையும் உங்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
இக்காலத்தில் சினிமாக்கள்,
சீரியல்கள், இணைய தளங்கள், கைபேசிகள் என ஏராளமான கவர்ச்சி வலைகள் அவர்களைக் கவர்ந்திழுக்கின்றன.
அதற்கு எதிர்மாறான நல்ல விஷயங்களை அன்பாலும் நல்ல முன்னுதாரணங்களாலும் நீங்களே அவர்களை
நல்வழிப்படுத்த வேண்டும். வாழ்க்கையில் அவர்களுக்கு நல்ல குறிக்கோள்களையும், இலக்குகளையும்
ஏற்படுத்த வேண்டும். இந்தக் கவர்ச்சி வலைகளில் சிக்கி, மனம் தவறி வாழ்க்கையை ஆரம்பத்திலேயே
முடித்துக் கொண்ட சோகக் கதைகள் அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும். வாழ்க்கையின்
யதார்த்தம் சினிமாக்கள் சொல்லும் கதைகளுக்கு நேர் முரணானது என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
நல்ல புத்தகங்கள், விளையாட்டுகள், நல்ல பொழுது போக்குகளில் ஆர்வம் அவர்களுக்கு இருக்கும்படி
பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் ஊக்குவிக்கவும் வேண்டும். அவ்வப்போது அவர்களிடம்
பேச்சுக் கொடுத்து அவர்கள் மனப்போக்கை அறிந்து கொள்ள வேண்டும். மனப்போக்கில் தவறு தெரிந்தால்
அன்பாகவும், அறிவுபூர்வமாகவும் திருத்த முயல வேண்டும். இந்த வழிகளிலேயே அந்தச் சீரழிவுப்
போக்குக்கு எதிர்விசையை நீங்கள் உருவாக்க முடியும்.
இதையெல்லாம் செய்வதற்கு
இன்று உங்களுக்கு நேரமில்லாமல் போனால் எதிர்காலத்தில் நீங்கள் பணமும் சொத்தும் சேர்த்தியிருக்கலாம்.
ஆனால் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையைத் தொலைத்திருப்பீர்கள்! அது வேண்டாமே!
(இந்த எச்சரிக்கைச்
செய்தியை நீங்கள் அறிந்த பதின்ம வயதுக் குழந்தைகளின் பெற்றோர்களுடன் தயவு செய்து பகிர்ந்து
கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்துங்களேன்!)
என்.கணேசன்
ReplyDeleteஅருமையான பதிவு ஐயா! சிந்திக்க வேண்டிய விஷயங்கள் இவை. படித்து முடித்தவுடன் நான் எனக்கு நெருங்கிய உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இக்கட்டுரையை அனுப்பி வைத்திருக்கிறேன். மிகவும் நன்றி.
அருமையான பதிவு இன்றைய பெற்றோர்கள் நிச்சயமாக இதை படித்து வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ளவேண்டிய ஒரு பதிவு நல்ல பதிவு நன்றி இந்தப் பதிவை நானும் என்னுடைய நண்பர்களுக்கும் என்னுடைய உறவினர்களுக்கும் அனுப்பிவைக்கிறேன் நன்றி வணக்கம் கணேசன் அவர்களே
ReplyDeleteGood advice. Thank you sir.
ReplyDeleteஅருமையான பகிர்வு.
ReplyDeleteஇன்றைய நிலை இப்படித்தான் இருக்கிறது. பெண் குழந்தைகளைப் பேணுவது மிகச் சிரமமாக மாறி வருகிறது.
அருமையான பதிவு, எனது உறவுகளுக்கும் அனுப்பி விட்டேன்.
ReplyDeleteநன்றி.
it is very difficult now. horses already crossed the gates. 1. mobile phone with internet is equal to land mine, most of them unknowingly removed the pin so it is going burst any time. (mobile/tv /digital media's always playing with our emotions easily ,so it needs to reach saturation only.
ReplyDeleteசில பெற்றோர் குழந்தை பிறந்த உடனே கையில் செல்போன் கொடுத்து விளையாட வைத்துவிடுகிறார்கள்....
ReplyDeleteசிறிது காலம் கழித்து அது நவீன கருவிகளை இயக்குவதை பார்த்து பெருமை அடைகிறார்கள்....
அது தவறில்லை...
ஆனால், அவர்கள் எந்த மாதிரியான இணையதளம் பயன்படுத்துகிறார்கள்...?
என்ன செய்கிறார்கள்?? என்பதையும் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.... தவறான பாதைகளில் செல்லும் போது அதன் அபாயத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
உண்மைதான் ஐயா.. நேற்று கூட இப்படி ஒரு காட்சியை பள்ளி வாசலில் வைத்து பார்த்தேன். மனம் பதறிப்போனது அந்த பெண் பிள்ளையின் பெற்றோரை நினைத்து...
ReplyDeleteVery good one!
ReplyDelete