தெய்வீகக் குணங்களை
விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர் அசுர குணங்களை விளக்க ஆரம்பிக்கிறார். அந்த வர்ணனைகள் எல்லாம்
நிகழ்காலச் சமுதாயச் சீர்குலைவை மிகத் தெளிவாக விளக்குவது போல் தான் இருக்கிறது. ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்னாலேயே வியாசரின் தொலை நோக்கு எப்படி இருந்திருக்கிறது என்பதை அந்த
வர்ணனைகளைப் படிக்கும் போது நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. ஸ்ரீகிருஷ்ணர்
சொல்வதைப் பார்ப்போம்.
அசுரத்தன்மை கொண்டவர்கள், செய்ய வேண்டியது எது, விலக்க வேண்டியது எது என்பதை அறிய மாட்டார்கள். தூய்மையோ, ஒழுக்கமோ, சத்தியமோ அவர்களிடம் கிடையாது.
அவர்கள் இந்த உலகம் ஆதாரமற்றது, பொய்யானது, கடவுளற்றது, ஆண்-பெண் உறவினாலேயே உண்டானது, எனவே காமத்தையே அடிப்படையாகக் கொண்டது, இது தவிர வேறெதுவும் இல்லை என்று அசுரகுணம் படைத்தவர்கள் கூறுகிறார்கள்.
இத்தகைய பார்வையுடன் கூடியவர்களாய், ஆத்மஞானம் அற்றவர்களாய், விவேகம் அற்றவர்களாய், எல்லோருக்கும் துன்பத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து உலகத்தின் அழிவுக்கும் காரணமாவார்கள்.
வாழ்க்கையின் அர்த்தமென்ன,
இறுதியில் நாம் பெறப்போவதென்ன, செய்ய வேண்டியது என்ன, விலக்க வேண்டியது என்ன என்றெல்லாம்
அசுரத்தன்மை அடைந்தவர்கள் அறிய மாட்டார்கள். சிந்தித்து வாழ்ந்தால் ஒழிய உயர் குணங்கள்
ஒருவரை அண்டாது என்பதால் தெய்வீக உயர்குணங்களான தூய்மை, ஒழுக்கம், சத்தியம் எல்லாம்
இவர்களிடம் இருப்பதில்லை.
வாழ்க்கைக்குப்
பெரிய அர்த்தங்கள் இருப்பதாய் அசுரத்தன்மை மேலிடும் நபர்கள் நினைப்பதில்லை. கண்ணுக்கும்
கருத்துக்கும் எது எப்படித் தெரிகிறதோ அப்படியே அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். கடவுள்
கண்ணுக்குத் தெரிவதில்லை என்பதால் அவர்கள் கடவுள் இல்லை என்றே நினைப்பார்கள். அதே போல காமத்தினால் விருத்தியாகும் உலகத்தையே அவர்கள்
பார்ப்பதால் அதைத் தவிர வேறு மேலான நிலை பற்றி அவர்கள் யோசிப்பதும் இல்லை.
வாழ்க்கையை அனுபவிக்கிறோம்
என்கிற பெயரில் சிற்றின்பங்களிலும், கேளிக்கைகளிலும் தங்கி விடும் இந்த மனிதர்கள் வாழ்க்கையின்
அர்த்தமும், குறிக்கோளும் அதுவே என்று கடைசி வரை இருந்து விடுகிறார்கள்.
எங்கே ஞானம் இல்லையோ,
அங்கே தெளிவு இருக்க வழியில்லை. அதனால் இவர்களுக்கு விவேகமும் இருக்க வழியில்லை. அதனால்
விளைவுகள் பற்றிய அறிவும் இவர்களிடம் இருக்காது. இதனால் இவர்களுக்கு ஏற்படுவதெல்லாம்
துன்பம் தான். அடுத்தவர்களுக்கு இவர்கள் ஏற்படுத்துவதும் துன்பங்களே. தாங்களும் துன்பப்பட்டு,
அதை அடுத்தவர்களுக்கும் வினியோகித்து முடிவில் தாங்களும் அழிந்து, உலகையும் அழித்து
விடும் போக்கே இவர்களிடம் மேலோங்கி இருக்கும்.
நிரப்ப முடியாத ஆசையுடன் கூடியவர்களாய், டம்பமும், கர்வமும், மதமும் கொண்டு மதிமயக்கத்தினால் அநியாய வழியில் செல்வத்தைத் திரட்டிக் கொண்டு அசுத்தமான காரியங்களில் ஈடுபடுவார்கள்.
அளவில்லாததும், மரண காலம் வரையில் உழைத்துச் சம்பாதிக்க வேண்டியதுமான
கவலையை மேற்கொண்டவர்களாய் சிற்றின்பங்களை அனுபவிப்பதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக்
கொண்டு, நூற்றுக் கணக்கான ஆசைக்கயிறுகளால் கட்டுண்டு, காமக் குரோதங்களையே குறிக்கோளாகக்
கொண்டு சிற்றின்ப போகங்களை அனுபவிப்பதற்காக நீதிக்குப் புறம்பான முறைகளில் செல்வம்
திரட்ட முயல்வார்கள்.
இது என் சாமர்த்தியத்தினால் கிடைத்தது. இந்த ஆசையைப் பூர்த்தி
செய்து கொள்வேன். எனக்கு இத்தனை செல்வம் இருக்கிறது. மேலும் இத்தனை செல்வம் என்னைச்
சேரப் போகிறது (என்னும் சிந்தனையே மேலோங்கி இருக்கும்”
நிரப்ப முடியாத
ஆசைகள் துன்பத்தின் ஊற்றுக்கண். ஒரு ஆசை நிறைவேறி முடிவதற்குள் நூறு ஆசைகள் மனதில்
உதயமாகின்றன. அதன் பின்னே ஓடும் ஓட்டத்தில் டம்பமும், கர்வமும், மதமும் சேர்ந்து கொள்கின்றன.
என்னைப் போல் யார் என்று தோன்றுகிறது, நானே பெரியவன், நானே சிறந்தவன் என்று அனைவருக்கும்
பறைசாற்றவும், நிரூபிக்கவும் தோன்றுகிறது. சொந்த ஆசைகளே அனைத்தும் நிறைவேற முடியாமல்
திண்டாடும் போதும் அடுத்தவர் பார்வையில் உயர வேண்டும், அடுத்தவரை விஞ்ச வேண்டும் என்ற
பேராசையும் சேர்ந்து கொள்கிறது. எல்லாம் சேர்ந்து கொள்ளும் போது சரியான சிந்தனா சக்தி
இருப்பதில்லை. மதிமயக்கத்தில் ஆழ்ந்து அத்தனையும் சாதிக்க ஒரே வழி செல்வம் தான் என்று
நம்ப ஆரம்பித்து விடும் மனிதன் பின்னால் எதையும் யோசிப்பதில்லை. நியாயம், அநியாயம்,
தர்மம், அதர்மம் எல்லாம் முட்டாள்கள் யோசிக்கும் விஷயங்களாகத் தோன்றுகின்றன. நியாயமில்லாத
வழிகளிலும் பணம் சேர்க்கும் போக்கு ஒருவனிடம் ஏற்பட்டு விடுகிறது.
அப்படிப் பணம் சேர்க்கும்
எண்ணம் மனதில் வலுப்பட்ட பிறகு மரண காலம் வரையில் அதைத் தவிர அவன் வேறெதையும் யோசிப்பதில்லை.
யோசிக்க இருப்பதாகவும் அவன் நினைப்பதில்லை. அவன் ஆசைகள் நிரம்பாதது போலவே அவன் பணமும்
அவன் போதும் என்று எண்ணும் அளவுக்கு நிரம்புவதில்லை. எத்தனை வந்தாலும் அதைப் போட்டுச்
சேர்த்து வைக்கும் பாத்திரம் அதை விடப் பல மடங்காய் பெரிதாகி விடுகிறது.
இடையிடையே சிற்றின்பங்களை
அனுபவித்து அதையே பெரும் சாதனையாக நினைக்க ஆரம்பிக்கின்றான். சிற்றின்பம் என்றுமே சிறிய
அளவில் நிற்பதில்லை. பெருமளவில் அவனுக்குத் தேவைப்படுகிறது. நூற்றுக் கணக்கான ஆசைக்கயிறுகளால்
பிணைக்கப்பட்டு அவன் அலைக்கழிக்கப் படுகிறான். ஒரு கயிற்றினால் பிணைக்கப்பட்டு இருப்பவனே
சிறைப்பட்டு இருப்பது போல் உணர்வான், துன்பம் கொள்வான். ஆனால் பரிதாபம் என்னவென்றால்
நூற்றுக்கணக்கான ஆசைக்கயிறுகளால் பிணைக்கப்பட்டு அலைக்கழிக்கப்படும் போதும் சிறைப்பட்டு
துன்பப்படும் உணர்வு கூட ஏற்பட்டு அவர்களை யோசிக்க வைப்பதில்லை. அந்தப் பிணைப்புகளின்
இழுவைக்கு நடுவே சில சிற்றின்பங்கள் பின்னே போய் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வாழ்க்கையை
முழுவதுமாக அனுபவிப்பதாகவே அவன் நினைப்பான்.
சிற்றின்ப, அற்ப விஷயங்களிலேயே இருந்து திளைத்து வாழும் மனிதன் அந்த வகையிலேயே ஒன்றுமில்லாமல் ஆகி மடிவது தான் இயல்பாக நிகழக்கூடியது. அப்படி அழிந்து கொண்டிருக்கும் போதும் சேர்க்கும் பணத்தை
மட்டுமே கணக்குப் போட்டு பெருமை கொள்ளும் போக்கு அவனுக்கு இருக்கும். சேர்த்த பணம்
எந்த வழியில் வந்திருக்கிறது, இதில் எத்தனை பாவம், அதர்மம் கலந்திருக்கிறது என்றெல்லாம்
யோசிக்க முடியாத அளவு இதயம் மரத்துப் போனவனாக அவன் இருக்கிறான். அவன் அநியாயமாய்ச்
சேர்த்திருப்பதையும் தன் சாமர்த்தியத்தில் சேர்த்ததாகவே எண்ணி பூரிப்படைவான். இன்னும்
இத்தனை இருக்கிறது, இதை வைத்து இதெல்லாம் அனுபவிக்கலாம் என்ற கணக்கே அவன் மனதில் ஓடிக்
கொண்டிருக்கும்.
மேன்மையான விஷயங்களுக்கும்,
உணர்வுகளுக்கும் என்றோ இறந்து போனவனாக அவன் இருப்பான். ஒருவிதத்தில் அவன் நடமாடும்
பிணமே. படும் துன்பங்களைக்கூட அவன் முழுமையாய் உணர்வதில்லை. அடிபட்டு அங்கங்கே இரத்தம்
வழிந்து கொண்டிருந்தாலும் வலி தெரியாத குஷ்ட ரோகி போலத் தான் அவன் வாழ்கிறான். ஆனால்
அந்த நிலைமை கூட உறைக்காத அந்த நடைப்பிண வாழ்க்கையிலும் கூட பணப்பேய் அவனைப் பிடித்து
ஆட்டுகிறது.
இது இன்று வாழும்
எத்தனையோ அசுரர்களை விவரிப்பது போல் இருக்கிறதல்லவா?
பாதை நீளும்...
என்.கணேசன்
இந்தகாலத்தில் இருக்கும் அசுரர்களை இந்தப் பகுதி துல்லியமாய் கூறுகிறது... மேலும் அவர்களின் பரிதாப நிலையும் கூடவே இது எடுத்துக் கூறுகிறது...
ReplyDeleteஅவர்கள் அசுரத் தன்மையினால் துன்பம் அடைவது மட்டுமில்லாமல்.. மற்றவர்களும் சேர்ந்தே அந்த துன்பத்தை அனுபவிப்பது தான் கொடுமை.