அப்சல்கான் பண்டாஜி கோபிநாத்தை உள்ளே அனுப்பச் சொல்லித் தன்
வீரன் ஒருவனுக்குக் கட்டளையிட்டான். பண்டாஜி கோபிநாத் உள்ளே வந்தவுடன் அப்சல்கான் சிறிதும்
எதிர்பாராதவிதமாகத் தடால் என்று காலில் விழுந்து வணங்கினார். தன்னையுமறியாமல் இடை வாளில்
கை வைத்த அப்சல்கானுக்கு அவர் வணங்குகிறார் என்பது பின்பு தான் புரிந்தது.
பின்
மிகுந்த பணிவுடன் எழுந்து “பிரபு, மகாபிரபு! தங்களைச் சந்தித்த இன்னாள் எனக்குப் பொன்னாள்.
தந்தைக்கு நிகரான உங்களுக்கு என் அரசர் சிவாஜி அவருடைய சிரம் தாழ்ந்த வணக்கங்களை என்
மூலம் அனுப்பி இருக்கிறார். அதைப் பெற்றுக் கொண்டு அவரை ஆசிர்வதியுங்கள் ஆண்டவரே!”
என்று தழுதழுத்த குரலோடு சொல்லி பாதி வளைந்த நிலையிலேயே பண்டாஜி கோபிநாத் நின்றார்.
தொடர்ந்து
பேச அனுமதி கேட்டு தான் மனிதர் அப்படி நிற்கிறார் என்பது புரிய அப்சல்கானுக்குச் சிறிது
நேரம் பிடித்தது. பேசு என்று சைகை செய்தான் அப்சல்கான்.
“உண்மையில்
வணக்கத்திற்குரிய பீஜாப்பூர் சுல்தானிடம் பொது மன்னிப்பையும், வாழ ஒரு சிறு பகுதியையும்
மட்டுமே எதிர்பார்த்திருந்த என் அரசருக்கு, இருப்பது எதையும் இழக்கத் தேவையில்லை என்றும்,
மன்னிப்பு மட்டுமல்லாமல் மரியாதைக்குரிய பதவியும் சுல்தான் அவர்களிடமிருந்து பெற்றுத்
தருகிறேன் என்றும் தெரிவித்ததற்கு என் அரசர் சிவாஜி ஆயிரம் கோடி நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார்.
தந்தைக்குச் சமமான நீங்கள் அந்தப் பெருந்தன்மையையே காட்டியிருக்கிறீர்கள் என்பதை அவர்
உணர்ந்திருக்கிறார். தாங்கள் அழைத்தபடி இங்கே
பேச்சு வார்த்தைக்கு வருவதற்கு என் அரசர் சிவாஜி விரும்பினாலும் அவரை அனுப்பி வைக்க
அங்கு அனைவரும் பயப்படுகிறார்கள். தங்கள் உத்தரவாதமே இறைவனின் உத்தரவாதம் என்று மன்னர்
சிவாஜி எண்ணிய போதும் அங்குள்ளவர்களை நம்ப வைப்பதில் அவர் சிரமத்தை உணர்கிறார். இத்தனை
பெருந்தன்மையைக் காட்டிய தாங்கள், சொந்த மகனைப் போல் எம் மன்னரைக் கருதும் தாங்கள்,
அங்கு வந்தால் உரிய அரச மரியாதையுடன் தங்களை வரவேற்று விருந்தளித்து கௌரவித்துப் பேச்சுவார்த்தை
நடத்த ஆசைப்படுவதாகக் கூறிப் பணிவான வணக்கங்களுடன் மன்னர் சிவாஜி பேச்சுவார்த்தைக்கு
அங்கே வரச் சொல்லி தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்”
அப்சல்கான் பண்டாஜி கோபிநாத் மூலமாக சிவாஜி அழைத்த அழைப்பில்
உடனடியாக ஆர்வத்தைக் காட்டவில்லை. சகாயாத்ரி மலை அவனுக்குச் சாதகமான இடமல்ல என்பதை
அவன் அறிவான். சிவாஜியும், அவன் தந்தை ஷாஹாஜியும் அந்தச் சூழலில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.
முகலாயப் படை கூட சகாயாத்ரி மலைத்தொடரில் ஷாஹாஜி பதுங்கி இருந்த போது அவரை நெருங்க
முடியவில்லை என்பது அவனுக்கு இப்போதும் நன்றாக நினைவிருந்தது. அந்த இடத்திற்கு பெரும்
படையோடு போவதிலும் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் அடர்ந்த மலைக்காடுகளில்
அபாயங்களும் இருக்கின்றன….
பண்டாஜி
கோபிநாத்தை வெளியே காத்திருக்கச் சொல்லி விட்டு கிருஷ்ணாஜி பாஸ்கரிடம் ”நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள்” என்று அப்சல்கான் கேட்டான்.
“பிரபு.
சிவாஜி தங்களைச் சந்திக்கப் பயப்படுகிறான் என்றே நான் நினைக்கிறேன். அவன் இங்கு வர
விருப்பம் கொண்டிருப்பதாகவும், அவனுடைய ஆட்கள் அனுப்பத் தயங்குவதாகவும் அவன் தூதர்
சொன்னது சிவாஜியின் பயத்தை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில் உள்ள தயக்கமாகவே நான் நினைக்கிறேன்.
இத்தனை நாள் அவனைப்பற்றிய சாகசங்களை நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில்
அவன் உங்களைப் போன்ற ஒரு மாவீரரையும், இது போன்ற ஒரு பெரும்படையையும் இது வரை சந்தித்திருக்கவில்லை.
ஏமாற்றியும், தந்திரமாகவும், இது வரை சில்லறை
யுத்தங்களையும், சிறு மனிதர்களையுமே அவன் வென்றிருக்கிறான். முதல் முறையாக உங்களைப்
போன்ற மாவீரர் இத்தனை பெரிய படையுடன் போரிட வருகிறீர்கள் என்பதைக் கேள்விப்பட்டவுடன்
அவன் கதிகலங்கிப் போயிருக்கிறான். அதனால் தான் இங்கே வரப் பயப்படுகிறான். பேச்சு வார்த்தைக்கு
அங்கே உங்களை அழைப்பதின் நோக்கமும் அது தான். ஒரு வேளை இந்தப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால்
அவனுக்குப் பழக்கமான சகாயாத்திரி மலைத்தொடர் சூழலில் அவன் எப்படியும் தப்பித்து உயிர்பிழைத்துக்
கொள்ளலாம் என்று நினைக்கிறான். இங்கே வந்தால் அப்படி அவன் தப்பித்து உயிர் பிழைக்க
வழியில்லை. அவனைப் பொறுத்த வரை புத்திசாலித்தனமாகவே முடிவு எடுத்திருக்கிறான் என்றே
எண்ணுகிறேன்….”
அப்சல்கான்
கேட்டான். “பேச்சு வார்த்தைக்கு அவனை இங்கே வரவழைக்க வழி தான் என்ன?”
“அதற்கு
வழியிருப்பதாகத் தோன்றவில்லை பிரபு. அவன் நீங்கள் என்ன உத்தரவாதம் கொடுத்தாலும் இங்கே
வரத் துணிவான் என்று தோன்றவில்லை”
“பின்
அவனைப் பிடிக்க வழி தான் என்ன?”
“நீங்களே
படையோடு அங்கே செல்ல வேண்டும். அவனோடு அங்கே போர் புரிய வேண்டும். அது தான் அடுத்த
வழி. போருக்குப் போவதற்கு அந்த மலைக்காட்டுப் பகுதி வசதியானதல்ல. மாவல் பிரதேச வீரர்கள்
அதற்குப் பழக்கப்பட்டிருக்கலாம். மற்றவர்களுக்கு அதில் பயணம் செல்வது மிகவும் கஷ்டம்.
அந்த வழியாகப் போவதே கஷ்டம் என்னும் போது போய் போர் புரிவது கஷ்டத்திலும் கஷ்டம்….”
அப்சல்கான்
யோசனையுடன் கேட்டான். “போருக்குப் போவது கஷ்டம் என்றால் இத்தனை பெரிய படையோடு பேச்சு
வார்த்தைக்குப் போவதும் கஷ்டம் தானே. படையை இங்கேயே விட்டு விட்டு ஒரு குழுவாக மட்டும்
அங்கே போவது முட்டாள்தனமாயிற்றே”
கிருஷ்ணாஜி
பாஸ்கர் சொன்னார். “உண்மை. பேச்சு வார்த்தைக்குக் குழுவாகப் போவது பேராபத்து தான்.
ஆனால் பேச்சு வார்த்தைக்கு படையோடு நீங்கள் போகலாம். அதற்கு வசதிகள் செய்து கொடுக்கும்படி
சிவாஜியிடம் கேட்டுக் கொள்ளலாம். சில இடங்களில் காட்டு வழிகள் குறுகலானவை. அந்த வழிகளை
அகலப்படுத்திக் கொடுக்கச் சொல்லலாம். பயணத்திற்கு வசதி செய்து தரச் சொல்வது போல் உணவுக்கும்
நீருக்கும் கூட சரியான வசதிகள் செய்து தரச் சொல்லலாம்….”
அப்சல்கானுக்கு
அது நல்ல யோசனையாகத் தெரிந்தது. “ஆனால் அதற்கு சிவாஜி ஒத்துக் கொள்வானா?” என்று சந்தேகத்துடன்
கேட்டான்.
கிருஷ்ணாஜி
பாஸ்கர் சொன்னார். “விருந்தினரை அழைத்தால் அவர்கள் வரவும், வந்து தங்கவும் வசதிகளையும்,
ஏற்பாடுகளையும் செய்து தருவது அழைத்தவர்களின் தர்மம் தானே. இங்கே வர மறுக்கும் சிவாஜி
அங்கே நீங்கள் செல்ல வேண்டிய வசதிகள் செய்து தரவும் மறுப்பது நியாயம் அல்ல என்பதையும்,
அப்படி மறுத்தால் நீங்கள் அங்கே செல்ல ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அறிவான்.
அதனால் கேட்டுப் பாருங்கள். அதற்கு சிவாஜி ஒத்துக் கொண்டால் நீங்கள் அங்கு போகலாம்.
அவன் மறுத்தால் இந்தப் பேச்சு வார்த்தை விஷயத்தையே விட்டு விட்டு வேறு என்ன என்று நீங்கள்
யோசிக்கலாம்….”
அப்சல்கான்
யோசித்தான். அவர் சொல்வது சரியாகவே தோன்றியது. ஆனால் இன்னொரு சந்தேகம் அவனுக்கு எழுந்தது.
“நம் படை அங்கு வர இத்தனை வசதிகள் செய்து தருவது பேச்சு வார்த்தை வெற்றி பெறா விட்டால்
சிவாஜிக்கு ஆபத்தல்லவா? அவன் அதை யோசிக்க மாட்டானா?”
கிருஷ்ணாஜி
பாஸ்கர் சொன்னார். “நாம் பேச்சு வார்த்தைக்குத் தான் போகிறோம் என்பதில் அவனுக்குச்
சந்தேகம் வந்தால் தான் அவன் அதைப் பற்றி எல்லாம் யோசிப்பான். அதில் அவனுக்குச் சந்தேகம்
வராவிட்டால் யோசிக்க மாட்டான் என்று நினைக்கிறேன்…. நீங்கள் கேட்டுப் பார்ப்பதில் நஷ்டமில்லையே.
நான் அவனிடம் பேசியதில் அவன் சண்டையை விரும்பவில்லை என்பது நிச்சயம். அது அவன் மகன்
பிறந்த பிறகு ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம்…. அவன் பிறந்த போதிருந்த சூழ்நிலை அவன் மகன்
பிறந்த பின் தொடர வேண்டாம் என்று தோன்றியிருக்கலாம்”
கிட்டத்தட்ட
இதே சிந்தனை அவனுக்கிருப்பதைத் தான் மாவல் வீரனும் அன்று தெரிவித்திருந்தான். ஆனால்
யோசித்துப் பார்த்த அப்சல்கானுக்கு அவர்கள் படை அங்கு போக எல்லா வசதிகளையும் செய்து
தர ஒருவன் முட்டாளாக இருந்தால் ஒழிய ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றே தோன்றியது. கிருஷ்ணாஜி
சொல்வது போல் அவன் ஏமாந்து போயிருந்தால், போரைத் தவிர்க்க என்ன விலை கொடுக்கவும் தயாராக
இருந்தால் ஒத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இவர் சொல்வது போல கேட்டுப் பார்ப்பதில்
தவறில்லை.
அப்சல்கான்
காவல் வீரனிடம் வெளியே காத்திருக்கும் சிவாஜியின் தூதுவனை உள்ளே அனுப்பச் சொன்னான்.
காவல் வீரன் தயக்கத்துடன் சொன்னான். “அவர் வெளியே காத்து நிற்கவில்லை பிரபு”
அப்சல்கான்
திகைப்புடன் கேட்டான். “ஏன்? அவன் போய் விட்டானா?”
(தொடரும்)
என்.கணேசன்
Interesting sir.
ReplyDeleteசிவாஜி அப்படி என்ன திட்டம் தான் தீட்டியிருக்கிறான்?...கணிக்க முடியவில்லையே...?
ReplyDeleteஅப்சல்கானின் திட்டம் வெற்றியடையுமா? சிவாஜியின் திட்டம் வெற்றியடையுமா???