அலி ஆதில்ஷா சிவாஜியை அழிக்கும் விஷயத்தில் எந்தக் கேள்வியும்
கேட்காமல், குழப்பமான ஆலோசனைகளுக்குள் ஆழ்ந்து போகாமல் உடனே சம்மதித்தது அப்சல்கானுக்குத்
திருப்தியாக இருந்தது. அவன் அலி ஆதில்ஷாவிடம் சொன்னான். “அரசே இது வரை சிவாஜியின் வெற்றிகளைப்
பார்த்தீர்களானால் பெரும்பாலானவை அடுத்தவர்கள் தயார்நிலையில் இல்லாத போதே அவனால் பெறப்பட்டிருக்கிறது.
அவன் பல கோட்டைகளைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறான். தன் நிதி நிலைமையை நன்றாக
உயர்த்திக் கொண்டிருக்கிறான் என்றாலும் படைபலம் அவனுக்கு இன்னும் போதாது. அதனால் ஒரு
வலிமையான படையுடன் போனால் அவனால் கண்டிப்பாக எதிர்கொள்ள முடியாது. மேலும் மலைப்பகுதிகளில்
போராட வல்லமை உடைய ஆட்களையும் கணிசமாக என்னுடன் அனுப்பி வைத்தால் வெற்றி நமக்கு நிச்சயம்”
அலி
ஆதில்ஷா சொன்னான். “உங்களுக்குத் தேவையான அளவு படைபலத்துடன் செல்லுங்கள். வெற்றியோடு
வாருங்கள். இனி நான் அவனைப் பற்றிக் கவலைப்படத் தேவையிருக்கக்கூடாது. அவ்வளவு தான்”
அப்சல்கான்
12000 குதிரை வீரர்கள், 3000 மாவல் வீரர்கள், பீரங்கிகள், ஏராளமான வெடிமருந்துகள்,
யானைகள் என்று ஒரு பெரும்படையை அமைக்க ஆரம்பித்தான்.
சிவாஜிக்கு முகலாயத் தலைநகரின் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.
சக்கரவர்த்தியின் படை தாரா ஷுகோவ் தலைமையில் ஒரு சகோதரனான ஷா ஷுஜாவை வென்றதை அறிந்த
ஔரங்கசீப் தன் கடைசி சகோதரன் முராத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான். இருவரும்
சேர்ந்து தாரா ஷுகோவுடன் போராடலாம் என்றும் வென்ற பின் ராஜ்ஜியத்தை சரிசமமாகப் பங்கு
போட்டுக் கொள்ளலாம் என்றும் கூற முராத்தும் ஒப்புக் கொண்டான். பின் இரு படைகளும் சேர்ந்து
தாரா ஷுகோவை எதிர்க்க தாரா ஷுகோவ் தோற்றுப் போனான். மேலும் சில இடங்களில் நடந்த போர்களும்
தாரா ஷுகோவுக்குச் சாதகமாக இருக்கவில்லை. வெற்றி மேல் வெற்றி பெற்ற ஔரங்கசீப் தாரா
ஷுகோவைக் கைது செய்தான். இனி தன் தம்பி முராத்தின் தயவு தேவை இல்லை என்றானவுடன் அவனையும்
தந்திரமாகச் சிறைப்படுத்தினான். தன்னையே பேரரசராக அறிவித்து அரியணையில் அமர்ந்த அவன்
தந்தையையும் சிறைப்படுத்தி, தாரா ஷுகோவுக்கு மரண தண்டனை விதித்தான்.
எல்லாவற்றையும்
கேள்விப்பட்ட சிவாஜிக்கு அதிர்ச்சியாக இருந்தது. எப்படி ஔரங்கசீப்புக்குப் பெற்ற தந்தையையும்
சகோதரனையும் சிறையில் தள்ள மனம் வந்தது? எப்படி ஒரு சகோதரனுக்கு மரண தண்டனை விதிக்கும்
அளவு மனம் கல்லாகியது. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லாம் சக்கரவர்த்தி ஷாஜஹானின்
கர்மாவே இதற்கெல்லாம் காரணம் என்று தோன்றியது. அவரும் இப்படி கொன்றும் சிறைப்படுத்தியும்
தான் பேரரசர் ஆனார் என்பதைக் கேள்விப்பட்டிருந்தான். சரித்திரம் திரும்புகிறது…… விதைத்ததையே
அனைவரும் அறுவடை செய்கிறார்கள்.
அரசியலில்
வஞ்சகம் தந்திரம் இருப்பது சிவாஜிக்குப் பெரிய அநியாயமாகத் தெரியவில்லை. அரசியலில்
அதெல்லாம் ஒரு பகுதியே என்பதை அவன் அறிந்திருந்தான். அவனும் அப்படிப் பயன்படுத்துபவனே.
ஆனால் குடும்பத்திற்குள் வஞ்சகத்தையும், கொடூரத்தையும் அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
என்ன மனிதர்கள் இவர்கள் என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கையில் அவனுக்கு அப்சல்கான் அவனுக்கு
எதிராகப் பெரும்படையைத் திரட்டிக் கொண்டிருக்கும் செய்தி வந்து சேர்ந்தது.
இத்தனை
பெரிய பீஜாப்பூர்ப் படை தனக்கு எதிராக வலிமை மிக்க அப்சல்கானின் தலைமையில் திரளும்
என்று சிவாஜி சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் அதிர்ச்சியடைந்தான்.
ஔரங்கசீப் தன் சகோதரி ரோஷனாராவுடன் பேசிக் கொண்டிருக்கையில்
காவல் வீரன் வந்து தெரிவித்தான். “தங்கள் மூத்த சகோதரி ஜஹானாரா பேகம் தங்களைக் காண
விரும்புகிறார் சக்கரவர்த்தி”
ஔரங்கசீப்
தன் மூத்த சகோதரிக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுஷா பேகம் பதவியைப் பறித்து அந்தப் பட்டத்தைத்
தன் இளைய சகோதரி ரோஷனாராவுக்கு சில நாட்களுக்கு முன்னால் தான் தந்திருந்தான். ஜஹானாராவைச்
சந்தித்தும் சில நாட்களாகி இருந்தது. அவன் அவளைச் சந்திக்க விரும்பவில்லை. தனிப்பட்ட
முறையில் அவள் மிக நல்லவள், தர்மசிந்தனை மிக்கவள், பாசமானவள் என்பதில் எல்லாம் அவனுக்கு
மாற்றுக் கருத்து இல்லை. அவனை வளர்த்தவள் என்பதால் அவள் அவனுக்குத் தாயிற்கு சமமானவளும்
கூட. ஆனால் அரியணைப் போட்டியின் போது மூத்த சகோதரன் பக்கமும், தந்தையின் பக்கமும் நின்றவள்
என்பதால் அவனுக்கு அவள் மீது நிறையவே கோபம் இருந்தது.
சிறிது
யோசித்து விட்டு ”வரச் சொல்” என்று ஔரங்கசீப் சொன்னான். காவல் வீரன் நகர்ந்தவுடன் ரோஷனாரா
சொன்னாள். “உருக்கமாகப் பேசி தந்தைக்கு விடுதலையையும் சகோதரர்களுக்கு மன்னிப்பையும்
கேட்பாள் பார்”
ஜஹானாரா
பேகம் உள்ளே நுழைந்த போது ஔரங்கசீப் முகத்தை மிகக் கடுமையாக வைத்திருந்தான். ரோஷனாரா
தன் மூத்த சகோதரி என்ன வேண்டுகோளோடு வந்திருக்கிறாள் என்பதை அறியும் ஆவலில் இருந்தாள்.
அவள் அறிந்து மூத்த சகோதரி எதையும் கேட்டு யாரும் இதுவரை மறுத்ததில்லை. இன்று ஏதாவது
கேட்டு முதல் முறையாக மறுப்பைச் சந்திக்கப் போகிறாள் என்று நினைக்கையிலேயே ரோஷனாராவுக்கு
மகிழ்வாக இருந்தது. அவள் ஜஹானாராவின் முகத்தில் துக்கத்தைக் காணக் காத்திருந்தாள்.
ஆனால் அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக ஜஹானாரா பேகம் அமைதியாக வந்து நின்றாள். சக்கரவர்த்திக்கு
வழங்க வேண்டிய வணக்கத்தையும் அவள் தரவில்லை.
மற்றவர்களிடம்
எதிர்பார்க்கும் வணக்கத்தை ஔரங்கசீப்பும் தன் மூத்த சகோதரியிடம் எதிர்பார்த்திருக்கவில்லை.
அவன் கடுமையான முகபாவனையுடன் சொன்னான். “நான் உபதேசம் கேட்கும் மனநிலையில் இல்லை சகோதரியாரே”
ரோஷனாராவுக்கு
சகோதரன் எடுத்த எடுப்பில் ஜஹானாராவின் பிரசங்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மகிழ்ச்சியாக
இருந்தது.
ஜஹானாரா
அமைதியாகச் சொன்னாள். “நானும் உபதேசம் செய்யும் மனநிலையில் இல்லை சகோதரனே. நான் ஒரே
ஒரு வேண்டுகோளோடு தான் உன்னிடம் வந்திருக்கிறேன்.”
“மன்னிப்பு,
விடுதலை என்ற இரு வார்த்தைகளைத் தவிர எதை வேண்டுமானாலும் கேளுங்கள் சகோதரியாரே”
“சரி
சகோதரனே. தந்தை உடல்நலம் குன்றிக் கொண்டே வருகிறது. சிறையில் அவருக்குப் பணிவிடை செய்ய
என்னை அனுமதித்தால் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்.”
ஔரங்கசீப்
அந்தக் கோரிக்கையை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் முகபாவனையிலேயே தெரிந்தது. அவன்
முகத்திலிருந்த கடுமை லேசாகக் குறைந்தது. அவன் சொன்னான். “தந்தைக்குப் பணிவிடை செய்ய
வேண்டுமளவு பணியாளர்களை நியமித்திருக்கிறேன் சகோதரியாரே”
“பணியாளர்களின்
பணிவிடையில் பாசத்தை எதிர்பார்க்க முடியாது சகோதரனே. அவருடைய அந்திம காலத்தில் நான்
அவருக்குப் பணிவிடை செய்து காலங்கழிக்க விரும்புகிறேன்….”
”உங்கள்
விருப்பம் அதுவானால் நான் அனுமதி தருகிறேன் சகோதரியாரே” ஔரங்கசீப் சொன்னான்.
“நன்றி
சகோதரனே” என்று சொல்லி விட்டு ஜஹானாரா விடை பெற்றாள். ரோஷனாராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கடைசியிலும் கேட்டதைப் பெற்று விட்டே அல்லவா செல்கிறாள் மூத்த சகோதரி. வந்ததிலிருந்து செல்லும் வரை அவள் பக்கம் தன் பார்வையையும்
ஜஹானாரா திருப்பவில்லை. அதுவும் அவளை அவமதித்தது போல் இருந்தது.
ஔரங்கசீப்பை
அடுத்ததாகச் சந்திக்க வந்தவன் தக்காணத்தைச் சேர்ந்த ஒற்றன். அவன் சிவாஜிக்கு எதிராக
அப்சல்கானை அனுப்ப அலி ஆதில்ஷா தீர்மானித்திருப்பதையும், அப்சல்கான் செய்து வரும் ஆயத்தங்களையும்
விரிவாகச் சொன்னான். அவனை அனுப்பி விட்டு ஔரங்கசீப் சிந்தனைகளில் ஆழ்ந்தான்.
தெற்கில்
இருந்து வந்திருக்கும் இந்தச் செய்தி நல்ல செய்தியாகவே அவனுக்குப் பட்டது. இப்போதைக்கு
அவன் தெற்குப் பக்கம் கவனம் செலுத்த வழியில்லை. சகோதரர்கள் மூவரையும் அப்புறப்படுத்தும்
வரை வேறு எதுவும் முக்கியமில்லை. சிவாஜி அதிசாமர்த்தியம் காட்டி ஜுன்னார், அகமதுநகர்
கொள்ளைகளை நடத்தியதில் இப்போதும் அவனுக்குக் கோபம் தீரவில்லை. ஆனால் சிவாஜியைத் தண்டிக்கக்
கூடிய சூழலில் அவனில்லை. இந்த நிலையில் தெற்கில்
சிவாஜியை அப்சல்கான் வென்றாலும் சரி, அப்சல்கானை சிவாஜி வென்றாலும் சரி அவனைப் பொருத்த
வரை அது லாபமே. இப்போதைக்கு இருவரும் அவனுக்கு நண்பர்கள் அல்ல. சொல்லப் போனால் தனியாக
அவரவர் பூமியை ஆண்டு வரும் அந்த இரு பக்கமும் அவன் எதிரிகளே. இருவரில் ஒருவர் அழிந்தால்
அவன் மீதமிருக்கும் ஒருவரை எதிர்காலத்தில் சமாளித்தால் போதும். படைபலம் மிக்க அப்சல்கான்
வெல்கிறானா, தந்திரம் மிக்க சிவாஜி வெல்கிறானா பார்ப்போம் என்று ஔரங்கசீப்பும் காத்திருந்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
Aurangazeb's family interactions are very interesting. In fact I learnt about his sisters from your novel only.
ReplyDeleteரொம்ப சுவாரசியமாகப் போகிறது இந்த வித்தியாசமான சத்ரபதி நாவல். அப்சல்கானும், சிவாஜியும், ஔரங்கசீப்பும் ஆளுக்கொரு கணக்கு போடுகிறார்கள். யார் கணக்கு எப்படி ஜெயிக்கும்?
ReplyDeleteஎதிர்பார்க்காத திருப்பங்களுடன் விருவிருப்பாக செல்கிறது....தந்திரம் ஜெயிக்குமா? படைபலம் ஜெயிக்குமா???
ReplyDeleteஹரி ஓம்.. சரித்திரம் அனைவரும் அறிந்த ஒன்று.ஆனால் அதையும் திருப்பங்களும் , உணர்ச்சிகளுடன் ,வாழும் நிகழ்காலத்துடனும்,
ReplyDeleteஅடுத்தது என்ன? என்ற ஆவலுடனும்
கொண்டு போகும் திரு.கணேசன்சார் அவர்களுக்கு வணக்கங்கள்.
உங்கள் எழுத்து நடை எப்படி உள்ளது என்றால் 'நாங்கள் அனைவரும் சிவாஜி காலத்தில் அல்லவா வாழவைத்து விட்டீர்களே.hats Offsir.Super பின்னுகிறீர்கள்.
மாஸ்டர் பேசுவது போல் பற்றற்ற தன்மையை காண்பிக்கிறீர்கள் (இரு வேறு உலகத்தில் )
சிவாஜி பேசுவது போல் குடும்பத்தை சமுதாயத்தை போற்றி பேசுகிறீர்கள். என்ன level சார்? தலை வணங்குகிறேன் உங்கள் அறிவுக்கு .கடவுள் கொடுத்த கொடை சார் , உங்களது எழுத்தறிவும் ஞானமும்.
நன்றி சார்.சேலம் ஆண்டாள் ராஜசேகரன்