ஹரிணி
காணாமல் போனது தெரிய வந்த போது க்ரிஷ் உள்ளூர நொறுங்கிப் போனான். விமான நிலையத்தில்
அவன் அதை வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும், அவனை அழைத்துவரப் போன உதய் பார்வையிலேயே
தம்பியின் மனநிலையை உணர்ந்தான்.
“கடத்தினவங்க
கிட்ட இருந்து போன் ஏதாவது வந்ததா?” என்று
க்ரிஷ் கேட்டதற்கு உதய் இல்லை என்றான்.
சுடுகாட்டுப்
பகுதியில் ஹரிணியின் ஸ்கூட்டி நின்று கொண்டிருந்தது என்ற தகவல் க்ரிஷை பயமுறுத்தியது.
“அவளுக்கு…. அவளுக்கு எதுவும் ஆயிருக்காதில்லடா?” என்று குரல் உடைய அண்ணனிடம் கேட்டான்.
தம்பியை
அணைத்துக் கொண்டு உதய் சொன்னான். “ஒன்னும் ஆயிருக்காதுடா. கவலைப்படாதே……”
இருவரும்
காரில் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கையில் “மாஸ்டர் என்ன சொல்றார்?” க்ரிஷ் ஆவலோடு
கேட்டான்.
“ஆரம்பத்துலயே
அவள் இருக்கற இடத்தை உணர்றது கஷ்டம்னு சொல்லி இருந்தார். எதிரி கண்டிப்பா அதற்கு வழி
விட மாட்டான்னு சொல்லி இருந்தார். அதற்குத் தகுந்த மாதிரி ஹரிணி அம்மா மூலமா அவர்னால
அவள் இருக்கிற இடத்தைக் கண்டுபிடிக்க முடியலை…… ஹரிணியம்மா, நம்ம அம்மா திருப்திக்காக
அவள் நலமா இருக்கிறான்னு மட்டும் தெரியுது
மத்த விவரம் எதுவும் தெரியலன்னு சொல்லிட்டார்…… அதைக் கேட்டு அவங்களும் ஓரளவு நம்பிக்கையோட
இருக்காங்க. போலீஸ் இதுல முழு வீச்சுல இறங்கியிருக்கு….. ஆனா எந்தத் தகவலும் இன்னும்
கிடைக்கல….. செந்தில்நாதன் சாரை வரச் சொல்லிட்டேன்…… இப்ப அவர் இங்கே இருந்தார்னா உதவியாய்
இருக்கும்னு தோணுச்சு……”
க்ரிஷ்
மனதை அமைதிப்படுத்த பெரும்பாடுபட்டான். பிரபஞ்ச சக்தியின் அங்கம், இறைசக்தியின் துளி
போன்ற வார்த்தைகளில் சிக்க மனம் மறுத்தது. மூச்சில் கவனம் செலுத்த முயற்சி செய்தான்.
சில வினாடிகளுக்கு மேல் அதுவும் முடியவில்லை. வீடு வந்து சேர்ந்தவன் முகம் பேயடித்தாற்போல்
இருந்ததை பெற்றோர் கவனித்தார்கள். கமலக்கண்ணன் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு
இதில் மட்டும் தற்போது கவனம் செலுத்துவதாகச் சொன்னார். ஹரிணி நலமாக வருவாள், கவலை வேண்டாம்
என்று சொன்னார். அவர் இது வரையில் இளைய மகன் இப்படி உடைந்து பார்த்ததில்லை. பத்மாவதி
மூன்று சக்தி வாய்ந்த கோயில்களில் வேண்டிக் கொண்டிருப்பதாகவும், இதற்கு முன் அவன் காணாமல்
போன போது கூட வேண்டிக் கொண்ட கோயில்கள் தான் அவை என்றும், அவன் நலமாக வந்தது போல் ஹரிணியும் நலமாக வருவாள் என்றும் அசைக்க முடியாத உறுதியுடன் சொன்னாள். மாஸ்டர் சுவாமியும் கூட
அவள் நலமாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் என்பதையும் சொன்னாள். எதுவும் காதில் விழுந்த
அளவு மனதில் பதியவில்லை. மனமெல்லாம் ஹரிணியே நிறைந்திருந்தாள்…..
மாஸ்டரைச்
சென்று பார்க்கும் வரை மனதில் அடைத்து வைத்திருந்த துக்கம், அவரைப் பார்த்த கணத்தில்
வெடித்து வெளியே வந்தது. அவர் காலடியில் அமர்ந்து அவர் தொடை மேல் தலை வைத்து க்ரிஷ்
குமுறிக் குமுறி அழுதான். அவர் அவனை அழ விட்டார். அவன் தலைமுடியைக் கோதினார். ஒரு பேரழுகை
அழுது விட்டு அவன் குரல் உடையச் சொன்னான். “மாஸ்டர் நான் சாதாரண மனிதன்…… எனக்கு எந்த
சக்தியும் வேண்டாம்…… வேற்றுக்கிரகவாசி நண்பன் சொன்ன எந்த சுமையும் எனக்கு சுமக்க முடியாது……
என் ஹரிணியையோ, என் குடும்பத்தையோ எனக்கு இழக்க முடியாது…… அவங்களோட நான், என் புத்தகங்கள்,
ஆராய்ச்சிகள்னு எனக்கு இந்தச் சின்ன வட்டம் போதும்….. அதுக்குத் தான் நான் லாயக்கு…..
எதிரியோட சக்திகளோட அளவுல ஒரு சதவீதம் கூட எனக்கில்லை…… அவனோட மன உறுதி, அவனோட வைராக்கியம்
எனக்கில்லை….. அவன் மோசமானவன்…… அவன் யாரை என்ன வேணும்னாலும் செய்வான்…… எனக்கு வாய்ப்பு
கிடைச்சாலும் அப்படியெல்லாம் செய்ய மனசு வராது….. அவனை எதிர்க்க அவன் மாதிரியே ஒரு
ராட்சஸனால வேணா முடியலாம்…. என்னை மாதிரி ஒரு சாதாரணமான, பலவீனமான, அன்பு மட்டுமே நிறைஞ்ச
ஆளால முடியாது. நான் விலகிக்கறேன் மாஸ்டர்…… ”
மாஸ்டர்
அமைதியாகச் சொன்னார். “இதைத் தான் எதிரியும் எதிர்பார்க்கிறான். அவன் ஒரு காயைத் தான்
நகர்த்தியிருக்கான். நீ அதுலயே அரண்டு போய் தோல்வியை ஒத்துகிட்டு ஆட்டத்தையே முடிச்சுடலாம்கிறே”
க்ரிஷ்
ஈரமான கண்களில் அவரைப் பரிதாபமாகப் பார்த்தான். நான் என்ன செய்ய முடியும் என்று அவன்
பார்வை பரிதாபமாகக் கேட்டது.
“நீ
யாருக்காக இந்த முடிவை இப்ப எடுக்கிறியோ அவள் திரும்பி வந்த பிறகு நீ எடுத்த முடிவு
சரின்னு சொல்வாளா க்ரிஷ்….?”
மாட்டாள்.
நியாயத்தில் பின்வாங்குவது அவளுக்குப் பிடித்தமானதல்ல. உண்மையிலேயே அவள் தைரியசாலி.
போராளி. கோழைத்தனம் அவளால் சகிக்க முடியாத விஷயம்….. அவளுக்காகவே செய்வதானாலும் அவள்
அதை ஒத்துக் கொள்ள மாட்டாள். அவனுடைய ஹரிணியை அவனுக்குத் தெரியும். க்ரிஷ் ஒன்றும்
சொல்லாமல் அவரைப் பார்த்தான்.
”எல்லையில்லாத
சக்திகள் இருக்கிற அந்த ராட்சஸனை, மன உறுதி வைராக்கியம் படைச்சவனை ஏதோ ஒரு விதத்துல
நீ பாதிச்சிருக்கே. அதனால தான் அவன் ஹரிணியைக் கடத்திகிட்டுப் போயிருக்கான். அந்த ராட்சஸனையே
பாதிக்க முடிஞ்ச நீ எப்படி பலவீனமானவனாய் இருக்க முடியும்? இந்த உலகத்துல எத்தனையோ
கோடிக்கணக்கான ஜனங்கள் இருக்கையில, எல்லார் மனசையும், எல்லார் பலம் பலவீனங்களயும் தெரிஞ்சிக்க
முடிஞ்ச அந்த வேற்றுக்கிரகவாசி அத்தனை பேர்ல உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறான்னா நீ
எப்படி சாதாரண ஆளாய் இருக்க முடியும்?”
அவர்
வார்த்தைகள் அவன் அடிமனம் வரை சென்று யோசிக்க வைத்தன. அவன் கண்களை மூடிக் கொண்டான்.
“எல்லார்
மனசுலயும் என்ன இருக்குன்னு புகுந்து தெரிஞ்சுக்க முடிஞ்ச எதிரிக்கு உன் மனசுல என்ன
இருக்குன்னு தெரியாது. நீ என்ன நினைக்கிறாய், என்ன திட்டம் போடுகிறாய்னு தெரியாது.
வேற்றுக்கிரகவாசி உனக்கு மட்டும் அந்த சக்தியைக் கொடுத்துட்டுப் போயிருக்கான். எதிரிக்கே
புதிராய் இருக்கிற நீ எப்படி உன்னைக் குறைச்சு சொல்லிக்கலாம்?”
க்ரிஷ்
கண்களைத் திறந்தான். “நீங்க சொல்றதெல்லாம் சரி தான் மாஸ்டர். ஆனா ஹரிணி…. அவ கதி….”
அவன் குரலில் வலி தெரிந்தது.
“உன்
குடும்பத்தை அவன் அவ்வளவு சுலபமாய் நெருங்க முடியாதுங்கறதால இப்போதைக்கு உனக்கு ‘செக்”
வைக்க எதிரிக்கு இருக்கற ஒரே துருப்புச்சீட்டு அவள் தான். எதிரி கிட்ட எத்தனையோ குறையிருக்கலாம்.
ஆனால் அறிவுக்குறை கிடையாது. எடுத்தேன் கவிழ்த்தேன்கிற
மாதிரி எதுவும் செய்ய மாட்டான். அதனால அவளுக்கு உடனடி ஆபத்து இருக்காது…..”
அவர் சொன்னது அவனுக்குச் சரியாகவே தோன்றியது. ஹரிணிக்கு உடனடியாக பெரிய ஆபத்தில்லை என்று புரிந்தவுடனேயே மனதிலிருந்து சிறிது பாரம் இறங்குவதை க்ரிஷ் உணர்ந்தான். மனம் ஓரளவு சமாதானமடைந்தது. அவரைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தான். மாஸ்டர் அவன் கன்னத்தை லேசாகத் தட்டினார்.
”ஸ்டீபன்
தாம்சன் என்ன சொல்றார்?” மாஸ்டர் கேட்க அங்கு நடந்ததை க்ரிஷ் ஒன்று விடாமல் சொன்னான்.
மாஸ்டரும் திருவனந்தபுரத்தில் சதாசிவ நம்பூதிரியைச் சந்தித்ததையும், அங்கு நடந்ததையும்
விவரித்தார். கடைசியில் சொன்னார். “எதிரிக்கு நீ இன்னும் சரியாய் பிடிபடலை. அமானுஷ்ய
சக்திகள் எதுவுமே இல்லாத நீ எப்படி அவனுக்கு சவாலாகலாம்னு ரொம்பவே குழம்பறான். அதைத்
தான் அந்தப் பெரியவர் கிட்ட வேற வார்த்தைகளில் மறைமுகமாய் கேட்டிருக்கான்….. அவர்
”ஒரு விதைக்குள்ளே எத்தனை காடுகள் இருக்கும்னு யாருக்குத் தெரியும்”னு சொன்னது அவனுக்குத்
திகிலைக் கிளப்பி இருக்கும்னு நினைக்கிறேன்…..” என்று சொல்லி விட்டு மாஸ்டர் சிரித்தார்.
“அந்த
விதை எப்படி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எப்படி பயந்து நடுங்கி வெலவெலத்துப் போச்சுன்னு
அவனுக்குத் தெரியாது பாவம்” என்று சொன்னபடியே க்ரிஷும் அவர் சிரிப்பில் கலந்து கொண்டான்.
மாஸ்டர்
பிறகு அவனிடம் மனம் விட்டுப் பேசினார். தங்கள் இயக்கம் பற்றியும், தன் குரு பற்றியும்,
குருவின் மரணம் நிகழ்ந்த விதம் பற்றியும் சொன்னார். குருவின் மரணம் பற்றிச் சொல்லும்
போது அவர் கண்கள் கலங்கின. “நான் உன்னோட வேற்றுக்கிரகவாசி தான் அவரைக் கொன்னுட்டான்னு
சந்தேகப்பட்டேன். அவன் உன்னைப் பயன்படுத்தறான்கிறதால உன்னாலயும் கெட்டது நடக்கும்னு
நினைச்சேன்….”
க்ரிஷ்
அவரைக் குழப்பத்துடன் பார்த்தான். மாஸ்டர் அவனிடம் அவர்களது இயக்கத்தின் சிறந்த துறவியான
பரஞ்சோதி முனிவர் சமாதியடைவதற்கு முன் தெரிவித்ததைச் சொன்னார். ’அன்னிய சக்தி நம் பூமியை
ஆட்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. அது தன் திட்டத்திற்குத் தூய்மையிலும் தூய்மையான, அறிவிலும் உச்சமான ஒருவனைத்
தன் கைப்பாவையாகப் பயன்படுத்தப் போகிறது’ன்னு சொன்ன அவரோட வர்ணனை உனக்குத் தான் பொருத்தமாய் இருந்தது.
அதனால தான் சந்தேகம் வந்தது”
க்ரிஷ் புன்னகையுடன் சொன்னான். “அந்த வர்ணனை உங்களுக்குக் கூடப் பொருத்தமாய்
இருக்கிறதே மாஸ்டர்.”
(தொடரும்)
என்.கணேசன்
Very dynamic and emotional update.
ReplyDeleteGreat twist at the end.
ReplyDeleteகிரிஷ் போலவே நம் அனைவருக்கும்..ஒருகட்டத்தில் 'இவை அனைத்தும் வேண்டாம்' என தோன்ற ஆரம்பித்துவிடுகிறது...
ReplyDeleteஅது போன்ற சமயத்தில் என்ன செய்ய வேண்டும்? என்பதை அருமையாக கூறினீர்கள்...
தொடர் முடியும் போது வரும் திருப்பம் அருமை..
இப்படியும் ஒரு புதிய கோணம் தகப்பன் சாமியாய் ஹரிஷ்
ReplyDeleteஅந்த கடைசி வரிளுக்கு கைதட்டல் & விசில் சப்தம்
ReplyDelete