சிவாஜி தாதாஜி கொண்டதேவுக்கு வாக்களித்தபடியே அன்றே பீஜாப்பூர்
சுல்தானுக்கு நீண்டதொரு ஓலை அனுப்பினான். அவரை வானளாவப் புகழ்ந்து வணக்கம் தெரிவித்து
விட்டு எழுதினான்.
“தங்கள்
பரந்த ராஜ்ஜியத்தில் சுபிட்சத்திற்குக் குறைவில்லை. அதை நான் தங்கள் ராஜ்ஜியத்தின்
பிரஜையாகவும், தங்களிடம் அன்பு பாராட்டும் ஒருவனாகவும் உறுதியாகக் கூறுவேன். ஆனால்
நிலவில் களங்கம் இருப்பது போல் தங்கள் அதிகாரிகள் சிலர் தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும்
பொறுப்பினை உணர்ந்து அதைத் திறம்படச் செய்யத் தவறுகிறார்கள் என்பதைக் காணுகையில் மிகுந்த
வருத்தம் அடைகிறேன். எங்களுக்கு மிக அருகில் இருக்கும் டோரணா கோட்டை நிர்வாகத்தையே
நான் இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். தலைநகருக்குத் தொலைவில் இருக்கும் காரணத்தினால்
தங்களுடைய மேலான கவனத்திற்கு வர வாய்ப்பில்லை என்று கருதி டோரணா கோட்டையை கோட்டைத்
தலைவர் மிகவும் இழிந்த நிலையிலேயே வைத்திருக்கிறார். அதைக் கண்டு வேதனையடைந்த நான்
எங்கள் பகுதிக் கோட்டைகளை நாங்கள் வைத்திருக்கும் முறையினை அவருக்குச் சுட்டிக் காட்டினேன்.
ஆனாலும் அது அவர் மனப்போக்கை மாற்றி விடவில்லை. மேலும் சில சமயங்களில் அவர் கோட்டையிலேயே
இருப்பதில்லை. அடிக்கடி கோட்டையை அலட்சியப்படுத்தி விட்டு எங்காவது சென்று விடுகிறார்.
ஒரு கோட்டைக்கு அதைவிட ஆபத்து வேறிருக்க முடியாதல்லவா? தங்களை எதிர்க்கும் வல்லமை பெற்றவர்கள்
இந்தப் பிராந்தியத்தில் யாரும் இல்லை என்ற போதும் காவல் சரியில்லாத கோட்டைகளை எதிரிகள்
எளிதாகக் கைப்பற்றி விடுவது சாத்தியமே அல்லவா? இதை எல்லாம் கண்டு நான் வெகுண்டு, தங்கள்
ராஜ்ஜியத்தின் மேலான சிறப்பைக் கருதி, தங்களுக்குச் சேவை செய்யும் நோக்கத்துடன் டோரணா
கோட்டையை நிர்வகிக்கும் பொறுப்பை என்வசம் ஏற்றிருக்கிறேன்.”
“அதை
ஏற்ற பிறகு கணக்குகளைச் சரிபார்த்த போது தங்கள் ஊழியனாக சிறந்த முறையில் செயலாற்ற கோட்டைத்தலைவர்
தவறியிருப்பதை கணக்குகளில் குறையிருப்பதன் மூலமாகவும் கண்டு துணுக்குற்றேன். வரிவசூலில்
மந்தத் தன்மை, வசூலித்ததிலும் ஒழுங்காகக் கணக்கு வைக்காத தன்மை எல்லாம் கண்ட போது தங்கள்
கஜானாவுக்குச் சேர வேண்டிய பெருந்தொகை அங்கு வந்து சேராமலிருப்பதையும் வேதனையுடன் கண்டுபிடித்தேன்.”
“முறைப்படி
தங்களிடம் சொல்லி அனுமதி பெற்று விட்டுத் தான் கோட்டையை நான் நிர்வாகிக்க முடியும்
என்ற போதும் அதற்காகக் காத்திருக்கும் வேளையில் நாளுக்கு நாள் சீரழிந்து கொண்டிருக்கும்
கோட்டை மேலும் வீழ்ச்சியைக் கண்டுவிடுமோ என்ற
அச்சத்தில் கோட்டையின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட என் செயலை அங்கீகரித்து
தங்களுக்குத் தொடர்ந்து சேவை செய்ய என்னை அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இது
வரை தங்கள் கஜானாவுக்கு அரைகுறையாய் வந்து கொண்டிருந்த இந்தக் கோட்டையின் வரிவசூல்
இனி முழுமையாகவும் அதிகமாகவும் வந்து சேரும் என்று உறுதியளிக்கிறேன்.
தங்கள்
மேலான அனுமதியை வேண்டி நிற்கும்
தங்கள்
ஊழியன் சிவாஜி
ஓலையை
அனுப்பிய வீரனிடமே ரகசியமாக பீஜாப்பூர் நிதி அதிகாரிக்குத் தரப் பரிசுப் பொருள்களையும்
சிவாஜி தந்தனுப்பினான். அந்த நிதி அதிகாரி அவன் பீஜாப்பூர் சென்ற காலத்திலேயே நட்பானவர்.
சுல்தான் கண்டிப்பாக அந்த நிதி அதிகாரியை அழைத்து டோரணாக் கோட்டையின் வரவு செலவுகள்
குறித்து விசாரிக்கக்கூடும் என்று அவன் எதிர்பார்த்தான். டோரணா கோட்டையின் வரவு செலவுகளில்
பல ஒழுங்கீனங்களை சிவாஜியே கண்டுபிடித்திருந்தான். ஆனால் அதை விரிவாக அவன் சொல்வதை
விட நிதி அதிகாரி மூலமாக சுல்தான் அறிவது தனக்குச் சாதகமாக இருக்குமென்று சிவாஜி நம்பினான்….
சிவாஜியின் ஓலை பீஜாப்பூர் சுல்தான் கையில் கிடைத்த போது சிவாஜி
எழுதியுள்ளதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாமல் ஆதில்ஷா திகைத்தார். கோட்டைகள்
அவருக்குத் தெரிந்த வரை இப்படிக் கைமாறியது இல்லை. அவரது அனுமதி இல்லாமல் தானாக அவன்
கோட்டையை ஏற்றுக் கொண்டதும் குற்றம், கோட்டைத்தலைவன் ஒப்படைத்ததும் குற்றம்….. ஆனால்
சிவாஜியின் உத்தேசம் கோட்டையைக் கைப்பற்றுவது என்பதாக இருந்தால் முறைப்படி கடிதம் எழுதியிருக்க
மாட்டான். கோட்டை நிர்வாகத்தைப் பற்றி மிக மோசமாக வேறு எழுதியிருக்கிறான்…. உண்மை நிலவரத்தை
அறிந்து கொள்ள அவர் சிவாஜி எதிர்பார்த்தபடியே நிதி அதிகாரியை வரவழைத்தார்.
சிவாஜியின்
ஓலையைப் படிக்கக் கொடுத்து விட்டு அந்த அதிகாரியிடம் டோரணா கோட்டையின் நிதி நிர்வாகம்
குறித்துக் கருத்து கேட்டார்.
“அந்தக்
கோட்டையின் தலைவர் குழப்பவாதி அரசே. சரியாக வரி வசூலித்து கணக்குடன் அனுப்புவதில்லை.
அனுப்பும் கணக்கிலும் நிறைய பிழைகள் இருக்கின்றன. செலவினங்களிலும் முரண்பாடுகள் வெளிப்படையாகவே
தெரியும். அது குறித்துக் கேள்விகள் எழுப்பினால் சம்பந்தமில்லாத பதில்கள் அனுப்புவது
வாடிக்கை. அவரது ஊதியத்தில் மட்டும் அக்கறையாக இருப்பார்….”
ஆதில்ஷா
கேட்டார். “பின் ஏன் அந்த நபரை நாம் அந்தக் கோட்டையின் பொறுப்பில் வைத்திருக்கிறோம்?”
“சகாயாத்ரி
மலைத்தொடர் பகுதிகளில் இருக்கும் கோட்டைகளை நிர்வகிக்க நமக்கு சரியான ஆட்கள் கிடைப்பதில்லை
அரசே. அதனால் கிடைப்பவர்களை நாம் வைத்துக் கொள்கிற சூழல் தான் இருக்கிறது. கோட்டையின்
பராமரிப்பும் எளிதானதல்ல. அதற்கும் ஆள் பற்றாக்குறை. திறமையான ஆட்கள் கிடைப்பதேயில்லை.
இது ஒரு கோட்டையின் நிலைமை மட்டும் அல்ல. அப்பகுதியில் பெரும்பாலான கோட்டைகளின் நிலைமை
அப்படியே தானிருக்கிறது…..”
ஆதில்ஷா
யோசித்தார். முகலாயர்கள் கிடைத்த கோட்டைகளையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு அதற்குப்
பதிலாக அவரிடமிருந்து பணம், தங்கம், வெள்ளி என்று பெற்று அள்ளிக் கொண்டு போனது நினைவு
வந்தது. முகலாயர்கள் இந்த விஷயத்தில் விவரமானவர்கள்….
நிதி
அதிகாரி தொடர்ந்தார். “எனக்குத் தெரிந்தவரை அந்தப் பகுதியில் வளமாக இருப்பவர்களும்,
சீராக நிர்வாகம் செய்பவர்களும் ஷாஹாஜியின் ஆட்களே. அதனால் டோரணா கோட்டை சிவாஜியின்
கைக்குப் போவது நமக்கு ஒருவிதத்தில் நல்லதென்றே தோன்றுகிறது அரசே. கேட்டவுடன் கோட்டையை
ஒப்படைத்து விட்டுப் போகும் அற்பங்களிடம் கோட்டையை விட்டு வைப்பதும் ஆபத்து. அவரிடம்
கணக்கும் இல்லை, பொறுப்புணர்வும் இல்லை….. சிவாஜியை மறுத்து விட்டு வேறு ஒரு ஆளை நாம்
தேடி ஒப்படைக்கவும் இப்போது நம்மிடம் காலமில்லை. அப்படியே தேடினாலும் சரியான ஆள் கிடைப்பதரிது….”
ஆதில்ஷாவுக்கு
நிதி அதிகாரி சொல்வது சரியென்றே பட்டது. கோட்டை கை மாறியது முறையாக நடக்கவில்லை என்றாலும்
ஒழுங்கீனமான, பொறுப்பற்றவன் கையிலிருந்து கோட்டையை சிவாஜி எடுத்துக் கொண்டது நல்லது
தான்…..
சிவாஜியின் செயலை அங்கீகரித்து, சிவாஜி அனுசரிக்க வேண்டிய ஷரத்துக்களை எல்லாம் தெரிவித்து சுல்தான் ஆதில்ஷா அனுப்பிய நீண்ட ஓலை ஒருவழியாக சிவாஜிக்கு வந்து சேர்ந்தது. ஓலை வருவதற்கு முன்பே சிவாஜி டோரணா கோட்டையைப் பழுது பார்க்கும் பணியை ஆரம்பித்திருந்தான். அந்த ஷரத்துக்களை அவன் படிக்கும் சிரத்தையை மேற்கொள்ளவில்லை. காரணம் அவருடைய எந்த ஷரத்தையும் அவன் அனுசரிப்பதாய் இல்லை. அந்த ஓலையை தாதாஜி கொண்டதேவிடம் கொண்டு போய் காட்டிய போது அவர் நிம்மதியடைந்தார். போகின்ற வழி சரியோ தவறோ அவருடைய மாணவன் நினைத்ததைச் சாதித்து விடுகிறான் என்று நினைத்து உள்ளுக்குள் பெருமிதம் அடைந்தாலும் அதை அவர் வெளியே காட்டவில்லை. ஆனால் அவரைக் கண்ணாடி போல் படிக்க முடிந்த அவரது மாணவன் படித்துப் புன்னகைத்தான்.
அவரையும்
ஜீஜாபாயையும் சிவாஜி அந்தக் கோட்டைக்கு அழைத்துச் சென்று காண்பித்தான். “இதற்கு ’பிரசண்டகாட்’
என்று பெயர் மாற்றியிருக்கிறேன் ஆசிரியரே” என்று சொன்னான். மராத்தியில் பிரசண்டகாட்
என்றால் பிரம்மாண்டமான கோட்டை என்று அர்த்தம்.
தாதாஜி
கொண்டதேவ் அந்தக் கோட்டையில் ஒவ்வொரு இடத்திலும் செய்ய வேண்டிய மாற்றங்களை மாணவனுக்கு
விவரித்தார். அதைச் செய்வதால் என்ன பலன், செய்யா விட்டால் என்ன பிரச்னை என்பதை எல்லாம்
விவரித்தார். சிவாஜி முழுக் கவனத்துடன் கேட்டுக் கொண்டு வந்தான்.
கடைசியில்
“இதற்கெல்லாம் எத்தனை செலவாகும் ஆசிரியரே?” என்று சிவாஜி கேட்டான். செலவுக் கணக்கில்
அவரால் எதையும் துல்லியமாகவே சொல்ல முடியும்! அவர் சொன்ன தொகை பெருந்தொகையாக இருந்தது.
அவனிடம் அதில் பத்தில் ஒரு பகுதி கூட இல்லை. ஆனாலும் அமைதியாகவே அவன் இருந்தான்.
“அந்தத்
தொகைக்கு என்ன செய்யப் போகிறாய் சிவாஜி?” ஜீஜாபாய் கேட்டாள். அவளுக்கு மகன் கையிருப்பில்
எவ்வளவு இருக்கக்கூடும் என்று தெரியும். அவன் திட்டம் என்ன என்று அறிய நினைத்த அவளுக்கு
தாதாஜி கொண்டதேவ் கஜானாவில் இருந்து எதாவது தருவாரா என்பதையும் அறிய வேண்டியிருந்தது.
ஷாஹாஜியின் அனுமதி இல்லாமல் காலணா அவர் தர மாட்டார் என்பது அவள் அனுமானம். அதை மெய்ப்பிப்பது
போலவே அவரும் கவலையுடன் சிவாஜியை என்ன செய்யப் போகிறாய் என்பது போல பார்த்தார்.
தாய்
வார்த்தையாலும், ஆசிரியர் பார்வையாலும் கேட்ட கேள்விக்கு சிவாஜி அசராமல் உறுதியாகப்
பதில் சொன்னான். “இறைவனை மட்டுமே நம்பி நான் இறங்கியிருக்கும் வேலையிது. இறைவன் கண்டிப்பாக
ஏதாவது வழிகாட்டுவான் தாயே, கவலையை விடுங்கள்”
அவன்
குழந்தையாக இருந்த போது இறைவன் உடன் இருப்பான் என்று சொல்லி வைத்தது வெறும் வார்த்தையாக
இல்லாமல் அவன் மன ஆழம் வரை அசைக்க முடியாத நம்பிக்கையாக மாறி இருந்ததில் ஜீஜாபாய் நெகிழ்ந்து
போனாள். ஆனால் இறைவன் எப்படி வழிகாட்டுவான் என்பதற்கு அவள் அறிவுக்கெட்டிய வரை எதுவும்
புலப்படவில்லை.
(தொடரும்)
என்.கணேசன்
சிவாஜியின் தந்திரம் அருமை. வித்தியாசமாக சிந்திக்கிறான். சூப்பர்.
ReplyDeleteThe way he uses the situations and people, shows Sivaji's brilliance. Superb sir.
ReplyDeleteசிவாஜியின் முதல்திட்டம் வெற்றிபெற்றது மகிழ்ச்சி... அரசாங்க நிர்வாகம் பற்றி கூறியது புரியும்படி எளிமையாக இருந்தது..
ReplyDeleteஇறைவன் எவ்வாறு உதவுவார் என்பதை நாங்களும் அறிய ஆவலாக உள்ளோம்.