சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 12, 2018

சத்ரபதி – 7


ந்தவன் தன்னை அயூப்கான் என்றும் அகமதுநகர் ராஜ்ஜியக் கோட்டை ஒன்றின் தலைவன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டான். பணிந்து வணங்கி நின்ற அயூப்கானை மொகபத்கான் சந்தேகத்தோடு பார்த்தான். அவன் சொன்ன கோட்டை மிகச் சிறிய, எந்த முக்கியத்துவமும் இல்லாத கோட்டைகளில் ஒன்று என்பதால் மொகபத்கான் அயூப்கானை அமரக்கூடச் சொல்லவில்லை.

“வந்த காரணம் என்ன அயூப்கான்?”

“பேரரசரின் ஊழியத்திற்கு வந்து விட எண்ணியிருக்கிறேன். என் வசம் இருக்கும் கோட்டையையும் ஒப்படைக்கிறேன். நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் தலைவரே”

”பேரரசருக்கு முத்துக்கள் வேண்டும் அயூப்கான். கிளிஞ்சல்கள் தேவையில்லை”

மொகபத்கான் கிளிஞ்சல் என்று வர்ணித்தது தன்னையா, அல்லது தன் கோட்டையையா என்று அயூப்கானுக்கு விளங்கவில்லை. குழப்பத்துடன் மொகபத்கானை அவன் பார்க்க மொகபத்கான் தூரத்தில் பிரம்மாண்டமாய் தெரிந்த தௌலதாபாத் கோட்டையைக் காட்டினான். 

“இது போன்ற ஒரு கோட்டை உன் வசமிருந்து அதை நீ ஒப்படைத்தால் பேரரசருக்கு உன் மேல் நம்பிக்கை வரும். உன்னை உடனே ஏற்றுக் கொள்ளவும் தோன்றும்.  தானாக உதிர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசாட்சியின் உதவாக்கரை கோட்டை ஒன்றை ஒப்படைக்க வந்திருப்பதை பேரரசர் ஏற்றுக் கொள்வார் என்று தோன்றவில்லை…..”

அயூப்கான் இதை எதிர்பார்க்கவில்லை. உதிர்ந்து கொண்டிருக்கும் அரசாட்சியில் தானும் உதிர்ந்து சருகாகிப் போக விரும்பாமல் தான் அவன் முகலாயர்கள் பக்கம் சேர வந்துள்ளான். ஆனால் உதவாக்கரை கோட்டை என்று சொல்லி மொகபத்கான் சுவாரசியம் காட்ட மறுத்தது ஏமாற்றத்தை அளித்தது. என்ன சொன்னால் இந்த படைத்தலைவன் ஏற்றுக் கொள்வான் என்று யோசித்தபடி அயூப்கான் நின்றான்.

மொகபத்கான் திடீரென்று சந்தேகத்தோடு சொன்னான். “நீ ஷாஹாஜி அனுப்பிய ஒற்றனாகக் கூட இருக்கலாம் என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறதே”

அயூப்கான் அரண்டு போனான். “ஐயோ தலைவரே. அபாண்டமாய் என் மீது பழி சுமத்தாதீர்கள். உங்கள் சந்தேகத்தைப் போக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். செய்து உங்கள் சந்தேகத்தைப் போக்கி விடுகிறேன்”

உடனடியாக எதுவும் சொல்லாமல் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மொகபத்கான் மூளையில் சிறு பொறி தட்டியது. முயற்சி செய்து பார்ப்பதில் நஷ்டமில்லை…..

“ஷாஹாஜியையோ, அவன் மனைவி மற்றும் குழந்தையையோ கைது செய்து எங்களிடம் ஒப்படைத்தால் பேரரசர் உன் மேல் பெருமதிப்பு கொள்வார். உயர்ந்த பதவி கொடுத்து எங்களுடன் சேர்த்துக் கொள்ளவும் செய்வார். இப்போது எங்களுக்கு வேண்டியிருப்பது ஷாஹாஜி தான். சில்லறைக் கோட்டைகள் அல்ல. போய் வா அயூப்கான்….” 

அயூப்கான் வெறும் கையோடு திரும்ப விரும்பவில்லை. யோசித்தான். ஷாஹாஜி அவன் கைப்பற்ற முடிந்த ஆள் அல்ல. அதற்கு முயன்றால் அவன் உயிர் தப்புவதும் கஷ்டம் தான். ஆனால் ஜீஜாபாயும் அவள் குழந்தையும் வேறு விஷயம். …. இந்த முயற்சி வெற்றி பெற்றால் முகலாயப் பேரரசில் ராஜபோக வாழ்க்கை அனுபவிக்கலாம்….


றுநாள் இரவில் அயூப்கான் பைசாப்பூர் வந்து சேர்ந்தான். ஷாஹாஜியிடமிருந்து அவசரத்தகவல் கொண்டு வந்திருப்பதாகச் சொல்லி ஜீஜாபாயைச் சந்திக்கும் அனுமதி பெற்றான். ஜீஜாபாய் அவனை முன்பே சில முறை பார்த்திருக்கிறாள். அகமதுநகர் கோட்டை ஒன்றின் தலைவன் அவன் என்பது தெரியும். எத்தனையோ முறை அவன் ஷாஹாஜியிடம் வந்து பேசிக் கொண்டிருப்பதை அவள் கண்டிருக்கிறாள். ஆனால் ஷாஹாஜியின் நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்தவன் அல்ல அவன். அதனால் அவன் மூலம் தகவல் வந்திருப்பது அவளைச் சிறிது சந்தேகம் கொள்ள வைத்தது.

அவள் சந்தேகம் கொள்வாள் என்பதை முன்பே யூகித்து வைத்திருந்த அயூப்கான் அழகாய் ஒரு கதை பின்னிச் சொன்னான். “ஆபத்தான சூழ்நிலை உருவாகியிருக்கிறது தாயே. அதனால் தான் தலைவர் ஷாஹாஜி தன் நண்பர்களையோ, நெருங்கிய வட்டத்து ஆட்களையோ அனுப்பினால் ஒற்றர்கள் மூலம் அறியப்பட்டு விடுவார்கள் என்ற அச்சத்தினால் தான் தந்திரமாக என்னை அனுப்பியிருக்கிறார்….

”சொல்லுங்கள். என்ன விஷயம்?”

“தௌலதாபாதில் முகாமிட்டிருக்கும் முகலாயப்பேரரசின் படைத்தலைவன் மொகபத்கான் உங்கள் கணவர் மீது கோபமாக இருக்கிறான் தாயே. அவரை அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறான். படைபலம் பெரிதாக இருந்தாலும் கூட உங்கள் கணவரின் மறைந்திருந்து தாக்கும் தன்மையால் அவமானப்பட்டிருக்கிறான் அந்த அற்பப் பதர். அவரை அடக்க அவன் உங்களையும் உங்கள் குழந்தையையும் சிறைப்பிடிக்க ரகசியத்திட்டமிட்டு இருப்பதாக உங்கள் கணவருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அவர்கள் நாளையே இங்கு வரலாம் போலத் தெரிகிறது. அதனால் ஷாஹாஜி இரவோடிரவாக உங்களையும், குழந்தையையும் பத்திரமாக ஓரிடத்துக்கு அழைத்து வரும் பொறுப்பை எனக்குத் தந்திருக்கிறார்….”

ஜீஜாபாய்க்குப் பாதி சந்தேகமும் பாதி நம்பிக்கையுமாக இருந்தது. மெல்லக் கேட்டாள். “என் கணவர் உங்களை எப்படிச் சந்தித்தார்?”

அயூப்கான் இதற்குப் பதிலை முன்கூட்டியே யோசித்து வைத்திருந்ததால் சிறிதும் தயங்காமல், குழறாமல், யோசிக்காமல் சொன்னான். “உண்மையில் அவரைச் சந்திக்கச் சென்றது நான் தான் தாயே. ஃபதேகான் முகலாயர்களிடம் எங்களை விற்று விட்டதில் எனக்குச் சிறிதும் உடன்பாடில்லை. உங்கள் கணவருடன் சேர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையைப் பற்றி நான் ஆலோசித்துக் கொண்டிருக்கையில் தான் உங்களையும் குழந்தையையும் சிறைப்பிடிக்கப் போகும் தகவல் ஒற்றர் மூலமாக அவருக்கு வந்து சேர்ந்தது. முதலில் அவருடைய ஆட்களையே அனுப்பத் தீர்மானித்திருந்தார். ஆனால் அவருடைய ஆட்கள் வெளியே அடையாளம் காணப்பட்டவுடனேயே எதிரிகள் கண்காணிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். வேறு வேடம் போட்டுக் கிளம்பினாலும் முகலாய ஒற்றர்களின் பார்வைக்குத் தப்புவதில்லை என்பதால் என்னிடம் இந்த உதவியைக் கேட்டார். வேறு ஆட்களை அனுப்பினால் உங்களுக்கு நம்பி அவர்களுடன் செல்லச் சிரமமிருக்கும் என்றும், என்னைப் போல் ஒரு கோட்டைத்தலைவனே உங்களை அழைத்துப் போக வந்தால் நீங்கள் தைரியமாக வரலாம் என்று அவர் சொன்னார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு இந்தச் சிக்கலில் சிக்க விருப்பமில்லை. ஆனால் அவர் முதன் முதலில் என்னிடம் கேட்ட உதவியை மறுப்பது என் வீரத்துக்கும் என் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல என்று உள்ளுணர்வு சொன்னது. அதனாலேயே வந்தேன்….”

சிவாஜி ஓடி வந்து தாயின் மடியில் அமர்ந்து கொண்டான். அயூப்கான் சொன்னதை எல்லாம் மனதில் அசைபோட்டுக் கொண்டே ஜீஜாபாய் யோசித்தாள். இந்தக் கோட்டைத்தலைவன் முகலாயர் பக்கம் போனதாய் இது வரை தகவல் வரவில்லை. ஏதோ ஒரு பக்கம் வந்தாக வேண்டிய கட்டாயத்திலிருந்த இவன் ஷாஹாஜி பக்கம் வந்திருக்கிறான்…. வந்த இடத்தில் அவர் உதவி கேட்க மறுக்க முடியாமலேயே வந்தது போலத்தான் தெரிகிறது. முகலாயர் அவளையும் அவள் குழந்தையையும் சிறைப்பிடிக்க முயற்சி செய்யலாம் என்று அவள் சந்தேகப்பட்டது நடக்கப் போகிறது. ஒருவேளை இவனே ஏமாற்றுப் பேர்வழியாக இருந்தால் என்கிற சந்தேகம் கடைசியாக மெல்ல எட்டிப்பார்த்தாலும் ஒரு கோட்டைத்தலைவன் அந்த அளவு தரம் தாழ்வானா என்ற கேள்வியும் கூடவே எழுந்தது.

”எப்படிச் செல்லலாம் என்று திட்டமிட்டிருக்கிறீர்கள்?”  ஜீஜாபாய் கேட்டாள்.

”என் தாய் சில மகான்களின் சமாதிகளைத் தரிசிக்க புனித யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். அவர் போல நான் உங்களை அழைத்துப் போகிறேன். நம் பிராந்தியங்களில் பயணம் செய்ய முடிந்த திரைச்சீலையால் மூடிய சிறிய ரதம் ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறேன். ரதத்தில் நீங்கள் அமர்ந்து வாருங்கள். முன்னால் நான் குதிரையில் செல்கிறேன். நம்முடன் சில வீரர்கள் மட்டுமே குதிரையில் வருவார்கள். அதனால் சந்தேகம் ஏற்பட வழியில்லை…. இது ஷாஹாஜி போட்ட திட்டம்….”

திட்டம் அவளுடைய கணவனின் திட்டம் போல புத்திசாலித்தனமாகத் தான் இருந்தது. அவள் சிவாஜியைத் தோளில் போட்டுக் கொண்டு எழுந்தாள். “சரி சிறிது வெளியே காத்திருங்கள். நான் என் முக்கிய உடைமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு வருகிறேன்…..”

அயூப்கான் பணிவுடன் தலை தாழ்த்தி வெளியே சென்றுக் காத்திருந்தான். தனியறைக்குள் சென்று அவசரமாய் சில துணிமணிகளை ஒரு பட்டுப் பையில் போட்டுக் கொண்டவளின் அடிவயிற்றைக் காரணம் தெரியாத ஒரு பயம் புரட்டியது. போகிற வழியில் ஒரு வேளை பிடிபட்டால்….? சிறிது யோசித்து விட்டு மகனைச் சுவரோரமாக நிற்க வைத்து விட்டு அவன் காதில் இரகசியமாய்ச் சொன்னாள். “நான் முன்பே சொன்னபடி இது ஆபத்துக்காலம். நீ சத்யஜித் மாமாவுடன் வா. நான் முன்னால் தனியாகப் போகிறேன்….”

சிவாஜி அழுவான் அல்லது அடம்பிடிப்பான் என்று அவள் பயந்திருந்தாள். ஆனால் அவன் முகம் வாடிய போதும் அழவில்லை. மறுத்து எதுவும் பேசவில்லை. தாயை யோசனையுடன் பார்த்து விட்டுச் சொன்னான்.

“கடவுள் என்னுடன் வேண்டாம். உன்னுடனே வரட்டும்….” அவனும் தாழ்ந்த குரலில் சொன்னான்.

அவளுக்குப் புரியவில்லை. “ஏன்?”

“என்னுடன் சத்யஜித் மாமா இருக்கிறார். நீ தனியாகப் போக வேண்டாம். கடவுள் உன்னுடன் வரட்டும்…”

அப்போது தான் அவளுக்குச் சில நாட்கள் முன்பு அவனிடம் பேசிய பேச்சும் “உங்களுடன் கடவுள் இருப்பார்” என்று அவள் சொன்னதும் நினைவுக்கு வந்தது. தன்னுடன் கடவுள் வந்தால் அம்மா தனித்து விடப்படுவாள் என்று அவள் குழந்தை யோசிக்கிறான்…. கண்கள் ஈரமாக மகனை வாரியணைத்து முத்தமிட்ட ஜீஜாபாய் மகனிடம் சொன்னாள். “கடவுள் உன்னுடனும் இருக்கமுடியும். அதே நேரம் என்னுடனும் இருக்க முடியும் மகனே! உண்மையில் அவர் எல்லோருடனும் தான் இருக்கிறார். நாம் தான் அதை அறியத் தவறிவிடுகிறோம்… அதனால் தான் பலமிழந்தவர்களாகப் பரிதவிக்கிறோம்…..”

சிவாஜிக்கு தாய் சொன்னதில் ஒன்று தான் புரிந்தது. ’கடவுள் அம்மாவுடனும் இருக்க முடியும், அதே நேரத்தில் அவனுடனும் இருக்க முடியும்….. இருவரையும் அவர் காப்பார்…….’ அவன் புன்னகைத்தான். அவள் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டே சத்தமில்லாமல் ஓரமாக ஒளிந்து நிற்க சைகை காட்டி விட்டு ஒரு தலையணையைத் தோளில் போட்டு அதில் ஒரு பட்டுத்துணியைப் போர்த்திக் கொண்டு இன்னொரு கையில் துணிமணிகள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

எல்லாம் திட்டமிட்டபடி சரியாகவே நடந்தால் அவள் முன் போய்ச் சேர்வாள். பின்னால் மகன் வந்து சேர்வான். ஒருவேளை ஏதாவது ஆபத்து வந்தால் அவள் சிக்கினாலும் அவள் மகன் தப்பித்துக் கொள்வான்! அவளுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை. அவள் குழந்தை பாதுகாப்பாக இருந்தால் சரிதான்!

(தொடரும்)
என்.கணேசன் 

6 comments:

  1. சிவாஜி சூப்பர் சார். கடவுள் உன்னுடன் வரட்டும் என்று தாயிடம் சொல்லும் காட்சியில் கண்கலங்கி விட்டேன். தாய் மகன் பாசம் விவரிக்க வார்த்தை இல்லை.

    ReplyDelete
  2. Political games and Jijabai-Sivaji deep affection shown excellently. Great Update.

    ReplyDelete
  3. சுந்தர்February 12, 2018 at 8:06 PM

    கண்முன் சரித்திரம் விரிகிறது. சரித்திர மனிதர்கள் உயிர்பெற்று வருகிறார்கள் உங்கள் எழுத்தில். எத்தனையோ நல்ல விஷயங்களையும், பரமன் ரகசியம், அமானுஷ்யன் போன்ற ஒப்பற்ற நாவல்களையும் தமிழில் தந்த நீங்கள் இந்த சிவாஜி சரித்திர நாவலையும் சிறப்பாகத் தமிழில் தந்து சரித்திரம் படைத்து விட்டீர்கள். மனமுவந்த பாராட்டுகள் என்.கணேசன்.

    ReplyDelete
  4. அருமை..... ஜீஜா விற்க்கு செய்யப்படும் சூழ்ச்சி கொடுமையிலும்... கொடுமை..

    ReplyDelete
  5. ஜீஜா பாய், அறிவு பூர்வமாக சிந்தித்து முடிவெடுக்கிறார்.....குழந்தை சிவாஜி......அழகு....

    ReplyDelete