சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 18, 2017

ஷாமனின் சக்தி யாத்திரை!

அமானுஷ்ய ஆன்மீகம் – 24


ஷாமனாக மாறுவது என்பது ஒருவருக்கு மறுபிறவியைப் போன்றதாகக் கருதப்படுகிறது. பழையது அனைத்தையும் புறந்தள்ளி நீக்கி விட்டு, புதியது ஒன்றாக முழுவதுமாக மாறி விடுவது யாருக்குமே எளிதான அனுபவமாக இருக்க முடியாது. ஆனால் பழையதைப் பிடித்துக் கொண்டே இருந்தால் புதியதில் புகுதல் முடியாது என்கிற இக்கட்டான நிலையில் அறியாமையும், பலவீனமுமான பழைய வாழ்க்கையை நிராகரித்து ஞானமும், சக்தியும் நிறைந்த புதிய வாழ்க்கைக்கு ஒரு ஷாமன் முழு மன உறுதியுடனேயே நுழைய வேண்டியிருக்கிறது.  

எடுத்திருக்கும் புதிய அவதாரத்தின் அனைத்துப் பரிமாணங்களுக்கும் புதியது என்பதால் எல்லாவற்றையும் சந்தேகத்துடனும், பயத்துடனேயுமே ஒரு ஷாமன் சில காலமாவது  அணுகவேண்டி வருவது இயற்கையாகவே இருக்கிறது. எனவே ஷாமனாக வாழ்வைப் புதிதாகத் துவங்கும் காலகட்டத்தில் பயம், சந்தேகம், குழப்பம் ஆகியவற்றை ஷாமன் அதிகமாகவே வெளிப்படுத்த வேண்டி வருகிறது. உணவில் அதிக விருப்பம் இல்லாமை, மற்றவர்களுடன் சேர்ந்து பழகுவதில் நாட்டமில்லாமை, வெறித்த பார்வை, அதிக தூக்கம், அதிக மௌனம் முதலானவை ஷாமனின் புதிய சக்தி யாத்திரையில் ஆரம்ப நிலைகளாக இருக்கின்றன.

ஷாமன்கள் அனைவரும் இணையான சக்திகள் படைத்தவர்களாக இருப்பதில்லை என்பது ஷாமனிஸத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம். ஷாமனிஸத்தில் கடவுள் என்கிற உச்ச தெய்வீக சக்தி அதிகம் பேசப்படுவதில்லை. மனித சக்திக்கும், இறை சக்திக்கும் இடைப்பட்ட பலவித மகாசக்திகளே அதிகம் பயன்பாட்டு சக்திகளாக கவனிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஷாமனும் தன் இயல்பிற்கும், தகுதிக்கும் தகுந்த அந்தவகை ஒரு மேல்நிலை சக்தியாலேயே தொடர்பு கொள்ளப்படுகிறார். அந்த சக்தியும் தனக்கு இணையான சக்திகளையே அந்த ஷாமனுக்கு அறிமுகப்படுத்தவும், பயிற்சிகள் தரவும் செய்கின்றன. எனவே அந்த சக்தி அல்லது சக்திகளின் எல்லைகளே அந்த ஷாமனுடைய எல்லைகளாகவும் அமைந்து விடுகின்றன.

அதனால் ஷாமன்களில் பல சக்தி நிலைகள் கொண்ட ஷாமன்கள் இருக்கிறார்கள். அவர்களை அந்தந்த நிலைகளிலேயே ஷாமனிஸம் ஏற்றுக் கொள்கின்றது. அந்த ஷாமன்களை அவர்களுக்குரிய ஸ்தானங்களையே தந்து அந்த அளவிலேயே பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு ஷாமனின் நோய்க்காலம் முடிந்து ஷாமன் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்த பின்னர் மூத்த ஷாமன்கள் மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அந்த ஷாமன் வரவழைக்கப்படுகிறார். புதிய ஷாமனிடம் அவர்கள் சில கனவுகளுக்கு அர்த்தம் என்ன என்று  கேட்பார்கள். தாவர, மிருக சக்திகளிடம் அறிந்தவை என்ன, அவை அனுப்பிய செய்திகள் என்ன என்றெல்லாம் கேட்பார்கள். பதில்களை புதிய ஷாமன் விவரித்துச் சொல்ல வேண்டும். அந்தப் புதிய ஷாமன் தான் அடைந்திருக்கும் சக்தியை அவர்கள் முன் நிரூபிக்கவும் வேண்டும். அதையெல்லாம் வைத்தே அவர்கள் புதிய ஷாமனின் வெற்றி குறித்தும், புதிய ஷாமனைத் தொடர்பு கொண்ட சக்திகள் குறித்தும், புதிய ஷாமனின் சூட்சும அறிவுத் திறன் குறித்தும் ஒரு முடிவுக்கு வருவார்கள். அந்த தாவரம், மிருகம் சம்பந்தப்பட்ட உடைகளும், சின்னங்களையுமே அந்த ஷாமன் அணிவது வழக்கமாகப் பின்பற்றப்படும். அதனால் ஷாமன்கள் அணியும் உடைகள், அணிகலன்கள், சின்னங்கள் வைத்தே ஒருவர் அந்த ஷாமன் குறித்த விவரங்கள் பலவற்றையும் அறிய முடியும்.

ஷாமனிஸம் பின்பற்றப்படும் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் ஷாமன்களின் எண்ணிக்கை ஏறத்தாழவும் ஒரே அளவில் இருக்காது. உதாரணத்திற்கு சைபீரியா பகுதியில் ஷாமன்கள் மிக அபூர்வமாக அங்கொருவரும், இங்கொருவருமாகத் தான் இருப்பார்கள். ஆனால் அமேசான் பகுதியில் ஷாமன்களின் எண்ணிக்கை அதிகமிருக்கும்.     

ஷாமன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே அவர்களுக்குத் தீட்சை அளித்து அவர்கள் கௌரவிக்கப்பட்டு விடுவதில்லை. ஷாமன்கள் தாங்கள் அறிந்தவற்றையும், தங்கள் சக்திகளையும் மெருகேற்றி, பலப்படுத்திக் கொள்ள அவர்களுக்கு உரிய காலம் தரப்படுகின்றது. கவனம் சிதறாமல், அலட்சியம் இல்லாமல் ஷாமன்கள் தாங்கள் அறிந்த சக்திகளை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் முழுவதுமாகத் தேர்ச்சி பெற்று விட்டார்கள் என்ற நம்பிக்கை வந்த பின்னரே அவர்களுக்கு தீட்சை அளிக்கப்படுகின்றது.

தீட்சையின் போது ஷாமன் தன்னை நிரூபித்தாக வேண்டும். அந்த முறைகள் சில பகுதிகளில் மிகவும் கடினமானதாக இருக்கும். உதாரணத்திற்கு வடகிழக்கு சீனப்பகுதியில் மஞ்சு இனத்து மக்களின் ஷாமன் பொது இடத்தில் எரியும் நிலக்கரியின் மீது நடக்க வேண்டும். நம் ஊரின் தீ மிதித்தல் சீனாவின் அப்பகுதியிலும் உண்டு. அப்படி ஷாமன் நடந்து காலில் எந்த தீக்காயமும் இல்லாமல் இருந்தால் தான் உயர்சக்திகள் அல்லது ஆவிகளின் அருள் பெற்றிருக்கிறார் என்று நம்பினார்கள். அதே போல் பனிக்காலத்தில் பனிப்பரப்பில் ஒன்பது குழிகள் தோண்டி ஒரு குழியில் இறங்கி மறு குழி வழியாக மேலே வர வேண்டும். அப்படி ஒன்பதாவது குழி வரை இறங்கி ஏறி வந்தால் தான் அந்த ஷாமன் சக்தி படைத்த ஷாமன் என்று ஒத்துக் கொள்வார்கள்.

சீனாவில் அக்காலத்தில் பின்பற்றப்பட்ட இந்த கடுமையான சோதனை அருகே இருந்த திபெத் மூலமாக வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள். திபெத்திலும் இது போன்ற கடுமையான சோதனைகள் உண்டுஅங்கும் கடும் உறைபனிக்கால இரவில் நனைந்த துணிகளை தன் வெற்றுடம்பின் சூட்டாலேயே ஒரு யோகி உலர்த்திக் கொடுக்க வேண்டும். அந்த அளவு சூட்டைத் தன் உடலில் எந்த பாதிப்பும் இல்லாமல் உருவாக்கிக் கொடுக்க முடிந்தவரே ஷாமன் என்று அங்கீகரிக்கப்பட்டார். உறைபனிக்காலத்தில் உடல் சூட்டை எந்த அளவு உயர்த்த முடியும் என்பதை வைத்தே எஸ்கிமோக்களும் ஷாமனாக ஒருவரை அங்கீகரிக்கிறார்கள். சில பகுதிகளில் இரண்டு ஷாமன்கள் சண்டையிட்டு வெற்றி வாகை சூடுபவர் சிறந்த ஷாமனாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.


பிற்காலத்தில் அது போன்ற கடுமையான சோதனைகள் கைவிடப்பட்டன. உடல் சக்தியை விட, நிகழ்த்த முடிந்த அமானுஷ்ய அறிவுசக்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தர ஆரம்பித்தார்கள். அதே போல அவர்கள் ஆவியுலகில் இருந்து பெற்றுத்தரும் ஆலோசனைகள் எந்த அளவு பலன் அல்லது வெற்றி தருகின்றது என்பதை வைத்தே ஷாமன்கள் மதிக்கப்பட்டார்கள்.

ஒரு ஷாமனின் சக்தி யாத்திரையில் அவர் மூன்று வித்தைகளில் முழுவதுமாகத் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒன்று மூலிகைகள் குறித்த முழுமையான ஞானம். இது தாவர சக்திகளைத் தொடர்பு கொண்டு அவற்றின் ஆசி பெற்றவர்க்கே முழுமையாக வாய்க்கும் என்று ஷாமனிஸம் நம்புகிறது. அதனால் எந்த நோய்க்கும் எந்தத் தாவரத்தின் எந்தப் பகுதி மருந்தாகலாம் என்று சொல்வது மட்டுமல்லாமல் அந்தத் தாவரப் பகுதியை உடனடியாகத் தருவித்து உயிர்காப்பது கைதேர்ந்த  ஷாமனின் அத்தியாவசியத் திறமையாக ஷாமனிஸம் கருதுகிறது.

இரண்டாவது ஒரு ஷாமன் மிகுந்த மனோ தைரியம் படைத்தவராக இருக்க வேண்டும் என்று ஷாமனிஸ மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆபத்துக் காலங்களில் அந்த மனோதைரியம் இல்லா விட்டால், எதிரில் வரும் சக்தி கண்டு அந்த ஷாமன் பயந்து அதன் ஆளுமைக்கு உட்பட்டு விட்டால் ஷாமன் தானும் அழிந்து தன்னைச் சேர்ந்தவர்களையும் அழித்து விடும் அபாயம் இருக்கிறது என்று எண்ணினார்கள். ஒரு ஷாமனுடைய முக்கிய வேலையே பல அமானுஷ்ய சக்திகளைக் கையாள்வதில் இருப்பதால் அதை மனம் நடுங்காமல் ஆளுமையோடு செய்யும் திறன் ஷாமனுக்கு இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று நம்பினார்கள்.

மூன்றாவது ஒரு ஷாமன் அமானுஷ்ய சக்திகளைத் தொடர்பு கொள்ள முடிந்த தியான மயக்க நிலைக்குச் செல்லும் சக்தியை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சாதாரண உணர்வு நிலையில் எந்த அமானுஷ்ய சக்தியையும் ஒருவரால் தொடர்பு கொள்ள முடியாது என்பதால் குறுகிய நேரத்தில் அந்த உயர் தியான மயக்க நிலைக்குப் போய் அந்த அமானுஷ்ய சக்திகளைத் தொடர்பு கொண்டு அறிய வேண்டியதை அறிந்து தன் இன மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆபத்துக் காலங்களில் ஒவ்வொரு கணமும் மிக முக்கியமானது என்பதால் விரைவாகச் சரியாகச் செயல்பட ஷாமனின் காலம் தாழ்த்தாத விரைவான தகவல் அறியும் முறைக்கு அதிமுக்கியத்துவம் தருகிறார்கள்.

இந்த மூன்றிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஒரு ஷாமனின் சக்தி யாத்திரை பரிபூரணமாகிறது.

(அமானுஷ்யம் தொடரும்)


என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 18.08.2017

1 comment:

  1. புதுமையான தகவல் அருமை....

    ReplyDelete