அமானுஷ்ய ஆன்மீகம் - 21
அடிப்படைத்
தேவைகள் பூர்த்தியான பின் அதோடு திருப்தியடையாமல் ஆதிமனிதன் அதற்கும் மேலான விஷயங்களைச்
சிந்திக்க ஆரம்பித்தவுடனேயே அவன் வாழ்க்கையில் ஆன்மிகம் நுழைந்து விட்டது. அவனுடைய
சக்திகளின் எல்லைகளை உணர ஆரம்பித்தவன், அவனுக்கும் மேலான சக்திகளையும், அவனுக்குப்
புரியாத சக்திகளையும் பற்றியும் கூட சிந்திக்க ஆரம்பித்தான். அதற்கெல்லாம் தன் அறிவுக்கெட்டியபடி
சித்தாந்தங்களையும், அர்த்தங்களையும் ஏற்படுத்திக் கொண்டான். அவற்றை வைத்து பல பரிசோதனைகள்
செய்தான். அந்த உயர் சக்திகளை வழிபட்டு அந்த சக்திகளிடமிருந்து வழிகாட்டுதலையும், பலன்களையும்
பெற தீவிரமாக முயன்றான். அப்படிப் பிறந்ததே ஆதி மனிதனின் ஆன்மிகமாகப் பலரும் கருதும்
ஷாமனிஸம் (shamanism). அப்படி அந்த சக்திகளிடம்
இருந்து தகவல் அறிபவன் ஷாமன் (shaman)
என்றழைக்கப்பட்டான்.
ஷாமன்
என்ற சொல் ரஷியாவின் சைபீரியாவில் வாழும் பழங்குடி மக்களின் மொழியிலிருந்து வந்த சொல்.
அதற்கு ஏறத்தாழ ’இருட்டில் காண முடிந்தவன்’ என்று பொருள். ஷாமன் கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்து,
தெய்வீக சக்திகளிடம் இருந்து பிரச்னைகளின் தன்மையையும், அவற்றிற்கான தீர்வையும் அறிய
முடிந்தவனாகக் கருதப்பட்டான். மனிதன், மற்றும் சமூகத்தின் இருண்ட பகுதிகளையும் காண
முடிந்தவனாகவும், அவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு சொல்பவனாகவும் இருந்ததால்
அந்தப் பெயர் அவனுக்கு வைக்கப்பட்டது. சைபீரியாவில் மட்டுமல்லாமல் ஆசியா, ஐரோப்பா,
ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, க்ரீன்லாந்து முதலான உலகின்
அனைத்து பகுதிகளிலும் அந்தந்த பகுதி பழங்குடியினரால் சிறிய சிறிய வித்தியாசங்களுடன்
கடைபிடிக்கப்பட்ட அந்த ஆதிகால ஆன்மிக வழிமுறைகள் பொதுவாகவே ஷாமனிஸம் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. ஆகவே
ஷாமனிஸம் என்பது தனி மதமல்ல, ஆன்மிக வழிமுறைகளும், நம்பிக்கைகளுமே ஆகும்.
ஆராய்ச்சியாளர்களும்,
வரலாற்றாசிரியர்களும் ஷாமனிஸம் குறைந்த பட்சமாக நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே
பின்பற்றி வந்த ஆன்மிக முறையாகக் கருதுகிறார்கள். அதற்கு குகைகளில் வாழ்ந்த மனிதர்களின்
ஓவியங்களை ஆதாரமாக அவர்கள் காட்டுகிறார்கள். எழுத்துக்கள், மொழிகள் மூலமாக மனிதன் சிந்தனைகளைப்
பதிவு செய்வதற்கு முன்பாகவே ஓவியங்கள் மூலமாகச் சிந்தனைகளைப் பதிவு செய்த அக்காலத்திலேயே
ஷாமனிஸம் பின்பற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
ஆதிமனிதனின்
ஆன்மிகமாக ஷாமனிஸம் இருந்த போதும், அந்த ஆன்மிகம் கற்கால மனிதனின் காட்டுமிராண்டித்தனமான
அணுகுமுறையாகவோ, மூடத்தனமான நம்பிக்கைகளின் தொகுப்பாகவோ இருந்து விடவில்லை என்பது ஷாமனிஸத்தின்
விசேஷ அம்சம். எத்தனையோ வினோத, அமானுஷ்ய அம்சங்கள் இருந்த போதிலும் கூட, பல விஷயங்களில்
பிற்கால தத்துவார்த்த சிந்தனைகளின் சாயலும், இக்கால விஞ்ஞான உண்மைகளின் அடிப்படைகளை
உணர்ந்த தன்மையும் ஷாமனிஸத்தில் காணப்படுகின்றன.
விரிவாகப்
பின்பு பார்க்கலாம் என்றாலும் உதாரணத்திற்கு சில ஷாமனிஸ அடிப்படைகளையும், இன்றைய விஞ்ஞானம்
எட்டியிருக்கும் நிலையைத் தன்வழியில் அன்றைய ஷாமனிஸம் எந்த அளவு எட்டியிருக்கிறது என்பதையும்
சற்று பார்ப்போம்.
ஷாமனிஸத்தைப்
பொறுத்த வரையில் எதுவுமே ஜடமல்ல. மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போலவே தாவரங்கள்,
கல், மண் ஆகியவை கூட ஜடத்தன்மை கொண்டவை அல்ல. இதே உண்மையை இன்றைய க்வாண்டம் விஞ்ஞானம் சொல்கிறது.
நோபல் பரிசு பெற்ற நீல்ஸ் போஹ்ர் (Niels Bohr) போன்ற அணுசக்தி விஞ்ஞானிகள் எதுவுமே உலகில் உயிரற்ற
ஜடமாக இல்லை என்று சொல்கிறார்கள். எல்லாமே சக்தி மயம் என்றும் பாறை, கல், மண் போன்றவற்றைக்
கூட மிக நுண்ணிய மைக்ராஸ்கோப் கருவிகளில் ஆராய்ந்து பார்த்தோமானால் வெட்ட வெளிகளில்
சக்திக் கதிர்வீச்சுகளைத் தான் காண முடியும் என்கிறார்கள். மைக்ராஸ்கோப் போன்ற நவீனக்
கருவிகள் இல்லாத காலத்திலேயே தன் உள் உணர்வினால் சக்திகளால் நிரம்பிய உலகத்தைக் காண
முடிந்த ஷாமனின் அறிவாற்றல் நம்மை வியக்கவே வைக்கிறது.
எல்லாவற்றிற்கும்
ஆத்மா, அல்லது உயிர்சக்தி உண்டு என்று ஷாமனிஸம் நம்புகிறது. அது இல்லாத, அது பரவியிருக்காத
இடம் எதுவுமே இல்லை என்பது ஷாமனிஸத்தின் ஆழ்ந்த நம்பிக்கை. அனைத்தையும் இறைவனாகவும்,
இறைவன் பரவியிருக்காத இடம் இல்லை என்பதாகவும், காணும் பிற்கால அத்வைத வேதாந்த சாரத்தை
இந்த நம்பிக்கையில் நம்மால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஆனால் இப்படி எல்லாவற்றிலும் சக்திகள் உண்டு என்று
நம்பிய ஷாமனிஸம் பிற்கால அத்வைதம் நம்பியது போல அது ஒரே சக்தி என்றோ, ஒரே சக்தியின்
பலவித நிலைகள் என்றோ நினைக்கவில்லை. கண்ட எல்லாவற்றையும் பல வித சக்திகளாகவே ஷாமனிஸம்
எடுத்துக் கொண்டது. அந்த சக்திகள் புறக்கண்ணுக்குப் புலப்படாதவை என்றும் அந்த சக்திகளை
அறிவது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை என்றும் ஷாமனிஸம் நம்பியது.
அந்த
சக்திகளை அறிவது பிரத்தியேகக் கூடுதல் சக்தியுடன் பிறந்த சிலருக்கே முடியும் என்று
நம்பிய ஷாமனிஸம் அந்தப் பிரத்தியேக சக்தி கொண்டவர்கள் தியான நிலைக்குச் சென்றே எல்லாவற்றிலும்
உள்ள சக்திகளை அறிய முடியும் என்றும், அந்தச் சக்திகள் மூலம் தகவல்கள் பெற முடியும்
என்றும் நம்பினார்கள். அப்படி அறியவும், காணவும் முடிந்த பிரத்தியேக சக்தி படைத்தவர்கள்
ஷாமன்கள் என்றழைக்கப்பட்டார்கள். அந்த ஷாமன்களுக்கு அக்கால மனிதர்கள் குருமார்களுக்கான
அந்தஸ்தையும், கவுரவத்தையும் தந்து சிறப்பு நிலையில் வைத்திருந்தார்கள். மக்கள் என்ன
பிரச்னையானாலும் அந்த ஷாமனிடம் சென்று சொல்லி அதற்குத் தீர்வு கேட்பார்கள். வியாதி
வந்தாலும் சரி, வேறு பிரச்னைகள் வந்தாலும் சரி, ஷாமன் தான் அதற்குத் தீர்வைக் கண்டுபிடித்துச்
சொல்ல வேண்டும்.
கண்ணுக்குத்
தெரியாத எத்தனையோ சூட்சும உலகங்கள், சூட்சும சக்திகள் இருப்பதாக ஷாமன்கள் நம்பினார்கள்.
பிரச்னைகளுக்கான காரணத்தையும், தீர்வையும் ஷாமன் தன் தியான சக்தி அல்லது வேறு பிரத்யேக
சக்தி மூலமாக அந்த சூட்சும நிலைகளுக்கோ அல்லது சூட்சும உலகங்களுக்கோ சென்று கண்டுபிடித்து
வந்து மக்களுக்குச் சொல்ல வேண்டும். வியாதிகள் வந்தாலும் கூட அதற்கும் ஆன்மிக ரீதியான
காரணங்கள் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. அதையும் ஷாமன் கண்டுபிடித்துச்
சொல்ல வேண்டும். அதற்கான உதவிகள் ஷாமனுக்கு அந்த சூட்சும உலகங்களில் கிடைக்கும். அந்த
ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து தருவது சூட்சும உலகின் ஆவிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு.
அப்படி அறிந்து சொல்லப்படும் பெரும்பாலான தீர்வுகள் சடங்குகளாகவே ஷாமனிஸத்தில் இருக்கின்றன.
அந்தச் சடங்குகளை முறையாக நடத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் ஷாமனுக்குத் தான் உண்டு.
பொதுவாக நோய்கள் தீர்ப்பதும், ஆன்மிக வழிகாட்டுதலும், மனிதர்களை வாட்டும் பிரச்னைகளைத்
தீர்த்து வைப்பதும் ஒரு ஷாமனுடைய முக்கிய சேவைகளாகக் கருதப்படுகின்றன என்றாலும் எதிர்கால
நிகழ்வுகள் குறித்து முன்பே அறிந்து சொல்வதும், பொதுவான இன, சமூகப் பிரச்னைகள் வரும்
போது காப்பாற்ற செய்ய வேண்டியதைச் செய்து வழிநடத்திச் செல்வதும் கூட ஷாமனுடைய பொறுப்பாகவே
இருக்கின்றன.
அத்துடன்
ஆவிகளைத் திருப்திப்படுத்துவது, காணாமல் போன பொருள்களைக் கண்டுபிடித்துச் சொல்வது,
மழையில்லா விட்டால் மழையை வரவழைப்பது, இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பது, கனவுகளுக்குப்
பலன் சொல்வது போன்ற வேலைகளும் ஷாமனுக்கு உண்டு. இத்தனை பொறுப்புகளைச் சுமக்கும் ஷாமன்
ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம். நுட்பமான சக்திகள் படைத்திருப்பது தான்
முக்கியமாகக் கருதப்பட்டதே ஒழிய மற்றபடி இருபாலினரும் இந்த விஷயத்தில் இணையாகவே மதிக்கப்பட்டார்கள்.
இந்த முற்போக்கு நிலை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கூட ஷாமனிஸத்தில் இருந்திருப்பதும்
வியப்பே அல்லவா?
ஷாமனைத்
தேர்ந்தெடுப்பது எப்படி, அவர்கள் செயல்முறைகள் என்ன, அவர்கள் சடங்குகள் என்ன என்று
விரிவாகப் பார்ப்பதற்கு முன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட சில ஆதாரபூர்வமான சுவாரசியமான
உண்மைச் சம்பவங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.
(அமானுஷ்யம்
தொடரும்)
என்.கணேசன்
தினத்தந்தி
– 28.7.2017
ஷாமன் பற்றி வரும் தொடர்களை அரிய காத்துக் கொண்டிருக்கிறேன்.
ReplyDelete