நண்பனாக இருந்தும் எதிரியை அழிக்கப்
போவதில்லை என்று சொல்கிறானே என்று திகைத்த க்ரிஷ் “ஏன்?” என்று கேட்டான்.
“நான்
அவனை அழித்து விட்டுப் போனால் அவனைப் போலவே சீக்கிரமே இன்னொருவன் உருவாகி
விடுவான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் உன் உலகம் இருக்கிறது. அவனை அழித்து
அந்த தீமைக்கான சூழ்நிலையையும் அழித்தால் மட்டுமே உன் உலகம் காப்பாற்றப்படும். அதை
வெளியிலிருந்து யாரும் செய்வது தற்காலிகத் தீர்வாகுமே ஒழிய நிரந்தரத் தீர்வாகாது.
உள்ளிருந்தே, உள்ளிருப்பவர்களே அதற்கான எல்லா முயற்சிகளும் செய்ய வேண்டும். அப்படிச்
செய்து அந்த முயற்சியில் ஜெயித்து உள்ளிருக்கும் நல்லவர்கள் தங்கள் சக்திகளை
வளர்த்துக் கொண்டால் மட்டுமே உலகம் அழிவிலிருந்து நிரந்தரமாக மீளும்....”
“என் எதிரியைப் பேரறிவாளன் என்கிறாய், பலமானவன்
என்கிறாய், சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கக் கிளம்பியிருக்கிறான் என்கிறாய்,
அப்படிப்பட்டவனை நான் ஜெயிக்க முடியும் என்று நீ நினைக்கிறாயா?...”
“அது உன்
உறுதியையும், முயற்சியையும் பொறுத்தது...”
க்ரிஷ் பெருமூச்சு விட்டான். வேற்றுக்கிரகவாசியிடம் அவன் கடந்த
அமாவாசைகளில் நிறைய பேசியிருக்கிறான். இந்த பூமியையும், மனிதனையும் தங்கள்
ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டிருப்பதாய் சொன்ன வேற்றுக்கிரகவாசிக்கு கசப்புகளைச்
சாயம் பூசாமல் தெரிவிப்பதில் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. உலகத்தின் ஜீவராசிகளில் உச்சமான மனிதன் இன்னும்
அடைய வேண்டிய சிகரங்கள் ஏராளமானவை என்று சொன்னவன் அந்தச் சிகரங்களை அடைவதற்கு
முன்பாகவே மனிதன் தன்னையும் அழித்து இந்தப் பூமியையும் அழித்து விடும் அபாயம்
சமீபத்தில் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறான். பிரச்னை அரசியல்வாதிகளிடமும்,
அதிகாரிகளிடமும் இருப்பதாக சராசரி மனிதன் எண்ணுவது சுய ஏமாற்று வேலை என்று
ஆணித்தரமாகச் சொன்னான். சரியான மனிதர்கள் தவறான தலைவர்களைச் சகித்துக் கொள்ள
மாட்டார்கள் என்றான்... தனிமனித சிந்தனைகளைப் படிக்க முடிந்தது போலவே
வேற்றுக்கிரகவாசிக்கு ஒட்டு மொத்த மனித சமுதாயத்தில் மேலோங்கும் சிந்தனைகளையும்
படிக்க முடிந்ததை அவன் சொன்னான். இன்று அணு ஆயுதங்கள், மதக்கலவரங்கள், இயற்கை வளம்
காப்பதில் அலட்சியங்கள் முதலானவை எல்லாம் பூமி அழிவை அரங்கேற்கக் காத்திருக்கின்றன
என்கிற சூழல் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மூல காரணம் தனிமனிதனின் தரம் குறைவது
தான் என்றான் ....
“தனிமனித மதிப்பீடுகள் தரம் குறையும் போது அவன் வாழும் சமுதாயத்தின்
தரமும் குறைய ஆரம்பிக்கிறது. அப்போது தான் அழிவிற்கான விதைகள் விதைக்கப்
படுகின்றன. பொதுநலம் மறக்கப்பட்டு, தன் உண்மையான நலமும் எதுவெனத் தெரியாமல் மனிதன்
மயங்கும் சூழ்நிலை உருவாக ஆரம்பித்து, அந்தச் சூழ்நிலையில் தீமைகள் வேகமாக விளைய
ஆரம்பிக்கின்றன. அப்போது தன் நிலைமைக்குத் தானே பொறுப்பேற்க மனிதன் மறக்கிறான்.
அடுத்தபடியாக உடனடிக்
கிளர்ச்சிகளுக்காகவும் அற்ப சந்தோஷங்களுக்காகவும், நீண்டகால நன்மைகளையும்,
உயர்வுகளையும் மனிதன் அலட்சியம் செய்ய ஆரம்பித்து, தன்னை அழித்துக் கொள்ளத் தயாராகிறான்.
அவன் ஆறாவது அறிவைப் பயன்படுத்துவது குறைய ஆரம்பிக்கிறது. அழிவின் வேகம்
அதிகரிக்கிறது….. ”
ஒரு கணிதக் கோட்பாட்டை வரிசையாக விளக்குவது போல அவன் அழிவின் போக்கை விளக்கிய
போது க்ரிஷால் அதில் தவறு காண முடியவில்லை. இது வரை உலக வரலாற்றில் உச்சம் எட்டிய
எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் இருந்த சுவடில்லாமல் அழிந்த காரணங்களும் இவன் சொல்வதை
ஒட்டியே அல்லவா இருக்கின்றன?
அடுத்தவர்களிடம் எதிர்பார்க்கும் தரத்தை மனிதன் தன்னிடமே
எதிர்பார்ப்பதில்லை என்பதை எத்தனையோ முறை கண்டிருப்பதை க்ரிஷ் எண்ணிப் பார்த்தான்...
பலதும் கலந்த சமூகத்தைச் சொல்வானேன், அவன் குடும்பத்தினரே அன்பானவர்கள் தான்,
நல்லவர்கள் தான்... ஆனால் அவர்களே, (சொல்வது அவன் என்பதால்) அவன் சொல்லிப் பல
விஷயங்களில் மாறியிருக்கிறார்களே ஒழிய,
சொன்னது சரி என்று உணர்ந்து மாறியிருப்பதாக அவன் சொல்ல முடியாது. வேறு
யாராவது சொல்லியிருந்தால் விரோதிகளாய் தான் பார்த்திருப்பார்கள்.... அவனுக்குத் தெரிந்து நல்லதை உயர்வானதாகவே
நினைத்து அந்த எண்ணத்துடனேயே பின்பற்றும் ஒரு ஜீவன் ஹரிணி.... அவளைப் பற்றி
எண்ணும் போது மனம் பெருமிதம் கொண்டது... லேசாகியது....
க்ரிஷ் மனதைப் பலவந்தமாக வேற்றுக்கிரகவாசியின் எச்சரிக்கைக்கு
மாற்றினான். பின் சொன்னான். “இப்போதைய சூழ்நிலை மோசமாக இருக்கிறது என்பதை நான்
ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரேயடியாக பூமியே அழிந்து போய் விடும் என்று நீ சொல்வது
அதிகப்படுத்திச் சொல்வது மாதிரி இருக்கிறது.... எத்தனையோ நாகரிகங்கள், சாம்ராஜ்ஜியங்கள் உச்சம் வரை சென்று பின் தரம் தாழ்ந்து அழிந்து
போயிருக்கின்றன. ஆனால் மறுபடி மனிதன் மீண்டு வந்திருக்கிறான். உலகம் இருந்து
கொண்டு தான் இருக்கிறது...”
“அப்போதெல்லாம் மனிதன் அழிந்து போயிருந்தாலும் இயற்கை அழிக்கப்படவில்லை.
பூமி அழிக்கப்படவில்லை. அதை விட்டு வைத்ததால் தான் திரும்பி மீண்டு வர பூமி
இருந்திருக்கிறது. இந்த முறை மனிதன் தான் மட்டும் அழியப்போவதில்லை. தன் அழிவோடு
பூமியையும் சேர்த்தே அழித்து விட்டுப் போகும் அபாயம் இருக்கிறது...”
“பேரறிவாளன்
என்கிறாய். அவன் மூலமாகவே அழிவு நிகழும் என்கிறாய். ஒரு அறிவாளி பூமியை அழித்துக்
கொண்டு தன்னையே அழித்துக் கொள்ளும் வேலையைச் செய்வானா?”
“நல்ல குணங்களோடு சேர்ந்திருக்காத அறிவு அழிவை நோக்கியே யாரையும்
கூட்டிச் செல்லும்...... அப்படி குணம் சாராத பேரறிவோ பேரழிவிலேயே முடியும்...”
ஜீனியஸ் என்று சிறுவயது முதலே அழைக்கப்பட்ட க்ரிஷுக்கு மற்றவர்கள்
ஏதாவது ஒரு விஷயத்தில் தன்னை விடக் கூடுதல் அறிவு படைத்தவர்களாக இருந்தாலும்
என்றுமே பொறாமை ஏற்பட்டதில்லை. மாறாக ’எனக்குக் கற்றுக் கொடுக்க இவனிடம் கூடுதல் அறிவு இருக்கிறதே.
இவனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற ஆவல் தான் என்றும் மேலோங்கி
இருந்திருக்கிறது. வேற்றுக்கிரகவாசியே பாராட்டும் அந்தப் பேரறிவாளன் தன்
கவனத்திற்கு எப்படி வராமல் போனான் என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது.
அவன் எண்ணத்துக்கு வேற்றுக்கிரகவாசி உடனடியாகப்
பதிலளித்தான். “பிரபலம் ஆனால் மற்றவர்கள் கண்பார்வையிலேயே அதிகம் இருக்க வேண்டி
வரும், தன் சுதந்திரம் பறிபோய் விடும் என்பதால் தன் அறிவை அடுத்தவர் பார்வைக்கு
அவன் அதிகம் தெரிய விட்டதில்லை.....”
அந்த அளவு சிந்தித்து, கட்டுப்பாட்டுடன் இருப்பவன், எதிரியாக
இருக்கும் பட்சத்தில் மிக மிக ஆபத்தானவன் என்பதை க்ரிஷ் உணர ஆரம்பித்தான்...
அவன் உடல் இன்னும் பழைய சக்தியைப் பெற்று விடவில்லை. களைப்பாக இருந்தது.
அவனை அறியாமல் கண்மூடினான். தூக்கம் அவனை ஆட்கொண்டது...
மாஸ்டர்
வாரணாசி நகர எல்லையையும் தாண்டி நடந்து சென்று கொண்டிருந்தார். எல்லையைத் தாண்டிய
பின் மக்கள் நடமாட்டம் அதிகமில்லை. சில நிமிடங்களுக்கு ஒரு முறை மனிதனையோ,
வாகனத்தையோ பார்க்க முடிந்தது. அவர் அன்று காவி நிற கதர்ச்சட்டையில் தன் குருவின்
பேனாவை வைத்திருந்தார். இதயத்தின் அருகேயே இருந்து அந்தப் பேனா வருடிக் கொடுத்தது
குரு பற்றிய நினைவுகளைக் கிளப்பி விட்டது. மனம் கனமானது....
குருவின் மரணத்திற்குப் பின் அவர் ஒரு வறண்ட தனிமையை உணர்ந்து வருகிறார்.
அவர்களது ரகசிய ஆன்மீக இயக்கத்தின் தலைமைக்குழுவில் இருக்கும் உறுப்பினர்கள்
அனைவரும் அலைவரிசைகளில் வரும் செய்திகளைப் படிக்க முடிந்தவர்கள். எனவே அந்தத் தலைமைக்குழு
உறுப்பினர்களுக்கு தியான நிலைக்குச்
சென்று குருவின் மரணச் செய்தியை அனுப்பி விட்ட மாஸ்டர் மீதமுள்ள 95 சதவீத
உறுப்பினர்களைக் கூட்டித் தகவல் சொல்லும் பொறுப்பை ஹரித்வாரில் இருந்த
விஸ்வத்திடம் ஒப்படைத்து விட்டார். அந்தப் பொறுப்பை விஸ்வம் வேண்டாவெறுப்பாகவே
ஏற்றுக் கொண்டார். கணக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அதிக ஈடுபாட்டை என்றுமே
காட்டாத விஸ்வத்துக்கு குருவின் மரணம் சம்பந்தமான கசப்பான தகவலை உறுப்பினர்களுக்கு
விவரிப்பது கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை மாஸ்டரால் கணிக்க முடிந்தது. இன்னேரம்
ஹரித்வாரில் அந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்... மாஸ்டருக்கு இப்போது
அதிமுக்கிய வேலை ஒன்று காத்திருக்கிறது.
கடைசி சந்திப்பின் போது ஒருவேளை அவருக்கு திடீர் மரணம் சம்பவித்தால்
என்ன செய்ய வேண்டும் என்று குரு சொல்லியிருந்ததை நிறைவேற்றத் தான் இப்போது மாஸ்டர்
வாரணாசி வந்திருக்கிறார்.
“வளர்பிறை சப்தமி நாளில் சந்தியா கால நேரத்தில் வாரணாசி எல்லையைத்
தாண்டி இருக்கும் பாழடைந்த பத்ரகாளி கோயிலுக்குப் போ....” என்று ஆரம்பித்து ரகசியமாய்
மிகத் தாழ்ந்த குரலில் குரு சொன்னது இப்போதும் அவர் காதில் ஒலிப்பது போலிருந்தது.
மாஸ்டர் பாழடைந்த பத்ரகாளி கோயிலை நெருங்கி
விட்டார். நேரம் சந்தியாகாலம் தான். தன் இயல்பான கட்டுப்பாட்டையும் மீறிய ஒரு
சின்ன பரபரப்புடன் அவர் கோயிலுக்குள் நுழைந்தார். கோயிலில் பூஜை நடப்பது சில
வருடங்களுக்கு முன்பாகவே நின்று போயிருந்ததால் கோயிலின் உள்ளே குப்பைகள்
சேர்ந்திருந்தன. சில குடிகாரப் பயல்கள் அங்கு குடித்து விட்டு பாட்டில்களைப்
போட்டு விட்டுப் போயிருந்தார்கள். கோயிலையும் விட்டு வைக்காத அந்த அராஜகம் அவரை
முகம் கடுக்க வைத்தது.
மாஸ்டர் கர்ப்பக்கிரகத்தை நெருங்கினார்.
பத்ரகாளியின் கற்சிலை பயங்கரமாய் இருந்தது. குப்பைகளுக்கு மத்தியில் பத்ரகாளியின்
சிலை இருந்தாலும் ஒருவித அமானுஷ்ய அலைகளை அது வெளிப்படுத்துவதாக அவர் உணர்ந்தார்.
பத்ரகாளியைக் கைகூப்பி வணங்கி சில வினாடிகள் நின்றவர் சிலையின் பின்பக்கமாகப்
போனார். பின் சுவற்றின் ஒரு கல்லின் மத்தியில் குரு தெரிவித்தது போலவே ஒரு
திரிசூலம் வரையப்பட்டிருந்தது. குரு அந்தக் கல்லை உடைத்து தான் எடுக்க
வேண்டியிருக்கும், ஏனென்றால் கோயில் கட்டிய காலத்தில் சுவரில் வைக்கப்பட்டு
சிமெண்ட் பூசப்பட்டு சுண்ணாம்பும் பூசப்பட்டு, அடையாளத்திற்காக சிவப்பு நிறத்தில் திரிசூலக்குறியீடு
வரையப்பட்டிருக்கும் என்று சொல்லியிருந்தார். ஆனால் இப்போதோ அந்தக் கல்லை யாரோ
பெயர்த்து முன்பே எடுத்து விட்டுத் திரும்ப வைத்திருப்பது தெளிவாகவே தெரிந்தது.
எதிரி இங்கும் அவருக்கு முன்பே வந்து
போயிருக்கிறான்!
(தொடரும்)
என்.கணேசன்
Excellent and thought provoking episode. Hats off sir.
ReplyDeleteஏலியன் சொல்கிற ஒவ்வொரு வார்த்தையும் பொன்மொழியா குறிச்சுக் கொள்ள வேண்டிய வார்த்தைகள். மாஸ்டருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் அதிர்ச்சி தான். என்ன பண்றது? அடுத்த வியாழன் வரை பொருத்து தான் ஆகணும். வினாயகர் சதிர்த்திக்கு போனஸா ஒரு அத்தியாயம் போடுவீங்களா சார்.
ReplyDeleteஏலியன் நல்லவணா? கெட்டவணா?? அந்த பேரறிவாலன்தான் ஏலியனா??? திருப்பத்துக்கு மேல் திருப்பம்.... அருமை.... !!! வாரம் இரு அத்தியாயம் வந்தால் இன்னும் பரபரப்பு அதிகரிக்கும்... விநாயகர் சதுர்த்தி சிறப்பு அத்தியாயத்திர்க்கு ஆவலுடன் காத்திருக்கிரோம்..... ஏமாத்திராதிங்க....
ReplyDeleteதனி மனித ஒழுக்க சீரழிவு,இயற்கை சீரழிவு இவற்றினால் ஏற்படப்போகும்
ReplyDeleteமனித குல அழிவோடு, சேர்ந்து பூமியின் அழிவும் நிச்சயம் என்பதை வேற்று கிரக வாசி மூலம் அருமையாக விளக்கியிருக்கீங்க......G....
மாஸ்டர் தேடி செல்வது, மர்ம மனிதன் சதாசிவ குருக்களிடம் கொடுத்த ஜாதகங்களோ....!!!
இந்தப்பதிவின் முதல் பாதி அற்புதமான கருத்தாழமிக்குடையதாக உள்ளது.பாராட்ட வார்த்தைகள் இல்லை என்று சொல்லும் விதம் மிகச்சிறப்பாக அமைத்துள்ளீர்கள்.பல முறை படித்து சிந்தித்து உள்வாங்க வேண்டிய கருத்துக்கள். நன்றி வணக்கம்.
ReplyDeleteIntha vaara thodar..aumai....karuthukkal super
ReplyDeleteஉண்மை G 100% உண்மை எபியின் முதல் பாதியில் இன்றைய நிலை.... தனிமனித தரத்தை பற்றிய அலசல்.... உலகம் செல்லும் பாதை பற்றிய விவரணை நெற்றியடி ...ஏற்கனவே எங்காவது சொல்லப்படவயாக இருக்கலாம் ஆனால் சொல்லும் விதம் மனதை தைக்க வேண்டும் நிலைக்க வேண்டும் உங்கள் எழுத்து அதை உணர்த்துகிறது
ReplyDeleteநல்ல குணங்களோடு சேராத அறிவு அழிவை நோக்கி ......குணம் சேராத பேரறிவு பேரழிவை நோக்கி மிக பெரிய அறிவுரையை மிக சிறிய வாசகத்திற்குள் அடக்கிவிட்டிர்கள் இன்றய சமுத்தியாத்திர்ற்கு மிகவும் தேவையானவை
எதிரி முந்தி கொண்டான் அவன் புத்திசாலித்தனம் கெட்டதிற்கு உபயோகப்படுகிறது