சிகரம் தொட்ட அகரம் - 6
திறமை இருப்பவர்கள் எல்லாம் வெற்றி பெற்று விடுவதில்லை என்பதைக்
கண்கூடாகப் பார்க்கிறோம். திறமையுடன் உழைப்பும் சேர்ந்து சூழ்நிலையும்
ஒத்துழைத்தால் வெற்றிக்கு வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலான வெற்றியாளர்கள் அந்த
வகையைச் சார்ந்தவர்களே! நல்ல திறமை இருந்து, விதிவசத்தால் சூழ்நிலைகள் எதிரணியில்
இருந்தாலோ அந்த மனிதர்கள் வெளிச்சத்திற்கு வராமலேயே போய்விடுகிறார்கள் என்பது தான்
யதார்த்தம். இந்த யதார்த்தத்தைப் பொய்யாக்கி, கடும் மன உறுதியுடன் விதியுடன்
போராடி, வெற்றி காணும் அபூர்வ சாதனையாளர்களும் உண்டு. அப்படிப்பட்ட
சாதனையாளர்களில் ஒருவர் தான் பென் ஹோகன் (Ben Hogan).
ஒரு ஏழை கொல்லனின் மூன்றாவது பிள்ளையாக அமெரிக்காவில் டெக்சாஸில் 1912
ஆம் ஆண்டு பிறந்தவர் பென் ஹோகன். ஏழ்மை மற்றும் பல தனிப்பிரச்னைகள் காரணமாக அவர்
தந்தை பென் ஹோகனின் ஒன்பதாவது வயதில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை
செய்து கொண்டார். அதுவும் பென் ஹோகனின் முன்னாலேயே அந்தக் கோர சம்பவம்
நடந்திருக்கிறது. பென் ஹோகனின் தாயார் தையல்காரி. அவர் வருமானம் குடும்பம் நடத்தப்
போதாததாக இருந்ததால் பென் ஹோகன் தினமும் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் அருகிலிருந்த ரயில்
நிலையத்தில் பத்திரிக்கைகள் விற்கும் வேலை செய்ய வேண்டி வந்தது.
பதினோராவது வயதில் ஒரு கால்ஃப் க்ளப்பில் பந்துகள் பொறுக்கும் எடுபிடி
வேலைக்காரப் பையனாக வேலைக்குச் சேர்ந்தார். அந்த விளையாட்டு அவரை மிகவும் கவர்ந்தது.
அந்த விளையாட்டு வீரர்கள் விளையாடும் நுட்பங்களை அருகில் இருந்து கவனிக்கும்
வாய்ப்பை மற்ற வேலைக்கார சிறுவர்களை விட நன்றாகவே பென் ஹோகன் பயன்படுத்திக்
கொண்டார். சிறுவயதிலேயே தந்தையின் கோர மரணத்தை நேரடியாகப் பார்த்த விளைவால் அதிகம்
யாருடனும் பேசாமல், பழகாமல், தனியாகவே இருந்து வந்த பென் ஹோகன் முழுக் கவனமும்
கால்ஃப் விளையாட்டின் பக்கம் திரும்பியது.
பல நாட்கள் அந்த கால்ஃப் க்ளப் அலுவலகத்திலேயே பழைய தினசரிப்பத்திரிக்கைகளை
விரித்து அதன் மேல் படுத்துக் கொண்டு அதிகாலையிலேயே முதல் ஆளாக எழுந்து விளையாட்டு
வீரர்களுக்கு முன்னதாகவே பென் ஹோகன் தயாராக நின்றிருப்பார். அந்த க்ளப்பிலேயே அந்த
விளையாட்டில் பயிற்சிகள் செய்து 17வது வயதிலேயே ஒரு சிறந்த கால்ஃப் விளையாட்டு வீரராக
அவர் உருவானார்.
ஆனால் ஏழ்மை அவர் வாழ்வில் இருந்து விடைபெற்று விடவில்லை. தொடர்ந்து ஒன்பது
ஆண்டுகள் அவர் மிகவும் சிரமப்பட வேண்டி வந்தது. வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும்
நடந்த பல போட்டிகளுக்குப் போய் வரவே அவரிடம் பணம் இருக்கவில்லை. இத்தனை
சிரமங்களுக்கு நடுவே நடந்த ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அன்பான மனைவி வாய்த்தது
தான். அவரது மனைவி கணவரின் விளையாட்டுத் திறமையில் அபார நம்பிக்கை வைத்திருந்தார்.
தம்பதியர் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டே வாழ்க்கை நடத்தினர். போட்டிகளில் கலந்து கொள்ள ஆகும் செலவுக்கே
அவர்கள் பல தியாகங்கள் செய்து சேமிக்க வேண்டி வந்தது. அவரது 26வது வயதுக்குப் பின்
கிடைத்த வெற்றிகள், அதன் மூலம் கிடைத்த பணம் எல்லாம் ஓரளவு வாழ்க்கையை
சுலபமாக்கின. இரண்டாம் உலகப்போர் நடந்த போது போரிலும் கலந்து கொண்டார். போர்
முடிந்த பின் நடந்த பல போட்டிகளிலும் வெற்றி பெற்று பிரபலமடைந்த அவர் 1948ல் U.S. Open Open Championship ல் வென்று சாதனை படைத்தார்.
ஆனால் விதி மறுபடி அவர் வாழ்வில் விளையாடியது. 1949 ஆம் ஆண்டு
பிப்ரவரி மாதத்தில் அதிகாலை காரில் மனைவியுடன் பயணித்துக் கொண்டிருந்த போது மூடுபனியின்
காரணமாக ஒரு பாலத்தில் எதிரே வந்து கொண்டிருந்த பஸ்ஸில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
அந்த விபத்தில் இடுப்பு எலும்பு, கணுக்கால் எலும்பு, விலா எலும்பு எல்லாம் உடைந்து
அவர் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவர் இனி
எழுந்து நடமாடுவதே சிரமம் என்று சொல்லி விட்டார்கள். ஆனால் அது அவர்கள் கருத்தாக
இருந்ததே ஒழிய பென் ஹோகன் கருத்தாக இல்லை. சக்கர நாற்காலியிலேயே மீதிக் காலத்தைக்
கழிக்க விரும்பாத பென் ஹோகன் தனது கால்ஃப் க்ளப்பு (மட்டை)களை மருத்துவமனை
அறையிலேயே ஒரு மூலையில் வைக்கும்படி மனைவியுடம் சொன்னார். தினமும் அதைப்
பார்த்தபடியே தன் மன உறுதியை வளர்த்துக் கொண்ட அவர் கடுமையான பயிற்சிகள் செய்து
நிற்கவும் நடக்கவும் முடியுமளவு முன்னேறினார். 59 நாட்கள் மருத்துவமனையில் இருந்த
அவர் வெளியேறும் போது சக்கர நாற்காலியில் வெளியேறாமல் நடந்தே வெளியேறிய போது
மருத்துவர்கள் பிரமித்தார்கள். பின் தினமும் நடைப்பயிற்சிகள், உடற்பயிற்சிகள் செய்ததன் மூலம்
அவர் ஓரளவு மேலும் தேறினார்.
அதோடு நின்றுவிடாமல் மறுபடி கால்ஃப் விளையாட்டுகளில் கலந்து கொள்ள
பென் ஹோகன் விரும்பினார். “என்னால் எதெல்லாம் முடியாது என்று மற்றவர்கள் சொல்லிக்
கொண்டிருக்கையில் அதெல்லாம் முடியும் என்று காட்டுவது எனக்கு முக்கியமாகத்
தோன்றியது” என்று பிற்காலத்தில் கூறிய பென் ஹோகன் கடுமையாக
விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டார். உறுதியாக நிற்கவே சிரமப்பட்ட அவர்
விளையாட்டுப் பயிற்சியின் போது என்னேரமும் விழுந்து விடலாம் என்றே தோன்றியதாக ஒரு
பத்திரிக்கைப் பார்வையாளர் தெரிவித்தார். ஆனால் அடுத்த ஆண்டே, அதாவது விபத்துக்கு
16 மாதங்கள் கழித்து, மறுபடி U.S. Open Open Championship ல் அவர்
வென்றது சரித்திர சாதனையாகியது. விளையாட்டு உலகம் பிரமித்தது. 1951 ஆம் ஆண்டு அவர்
வாழ்க்கையை மையமாக வைத்து Follow
the Sun என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது.
மேலும் இருபதாண்டு காலம் விளையாடி மேலும் இரண்டு U.S. Open Open Championship கோப்பை உட்பட பல கோப்பைகளை உலக அளவில்
வென்று விளையாடிய பென் ஹோகனின் கால்ஃப் விளையாட்டில் மட்டை சுழற்சி முறைகள்
பிற்கால விளையாட்டு வீரர்களுக்குப் பாடங்களாக அமைந்தன. மற்றவர்களுக்கோ அவர் வாழ்க்கையே
பாடமாக அமைந்திருக்கிறது.
1997 ஆம் ஆண்டு மறைந்த அவருக்கு கால்ஃப் விளையாட்டில் இருந்த ஆர்வம்
அதீதமானது. “எப்போது விடியும், விளையாடப் போகலாம் என்று என் இளமைக்காலங்களில் காத்திருப்பேன்” என்றும் “ஒவ்வொரு நாளும் ஏதாவது புதிய பாடத்தை விளையாட்டின் போது
கற்றிருக்கிறேன்” என்றும் அவர் கூறுகிறார். ”வாழ்க்கைப்
பாதையில் நடக்கும் போதே வழியில் ரோஜா மணத்தை முழுமையாக நுகர்ந்து அனுபவித்து விட
வேண்டும். ஏனென்றால் அதில் திரும்பி வரும் வசதியில்லை” என்று கூறிய அவர் வாசகம் சிந்திக்கத் தக்கது.
”எழுதுவதும், சொல்வதும் சுலபம். எனக்கு வந்த கஷ்டம் போல் வந்தால் தெரியும்” என்ற பாணியில் தங்கள் சாதனைக்குறைவுகளுக்குச் சப்பைக்கட்டு கட்டும்
மனிதர்கள் இந்த மனிதரைப் பார்த்துத் திருந்த வேண்டும். அவருக்கு வாழ்வில் ஒன்றா
இரண்டா பிரச்னைகள்! அந்தப் பிரச்னைகளும் சாதாரணமானவையா? பிரச்னைகளையும்,
சூழ்நிலைகளையும் மீறிச் சாதிக்க நமக்குள்ளே ஒரு அக்னி இருக்க வேண்டும். அந்த அக்னியைத்
தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்து கடுமையாக முயற்சிகள் செய்தால் மட்டுமே ஒருவர் தன்
திறமையின் உச்சத்தை எட்டி அதை வெளிப்படுத்த முடியும். ”ஏன் என்னால்
முடியவில்லை” என்பதற்கான காரணங்கள் கண்டுபிடிப்பவர்கள் புலம்பிக் கொண்டிருக்கையில்,
காரணங்களை அலட்சியப்படுத்தி தளர்வில்லாமல் முன்னேறுபவர்கள் சரித்திரம் படைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
-
என்.கணேசன்
truly inspiring ! believe in our self. Anything is possible
ReplyDeleteamazing thoughts ji..
ReplyDelete