காத்திருப்பது சுலபமல்ல. அதுவும் மிக முக்கியமான, இக்கட்டான தருணங்களில்
வினாடி முள் கூட மிக மிக நிதானமாகவே நகரும். வேகமாக நடக்க முடிந்த பழைய காலமாய்
இருந்தால் பஞ்சுத் தலையர் அவன் கூடவே போயிருப்பார். கொடுத்த வேலை எப்படி நடக்கிறது
என்று பக்கத்தில் இருந்தே கண்காணித்திருப்பார். சாகிற போது அந்த இளைஞன் முகபாவனை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க
அவருக்குப் பேராவலாக இருந்தது. ஆனால் இப்போதைய
வயோதிகத்தினால் மலை மேல் வேகமாக நடக்கும் சக்தி அவருக்கில்லை. மலையுச்சியை அவரும்
சற்று குனிந்து கூர்ந்து பார்த்தார். மலையுச்சியில் காரிருள் மண்டிக் கிடந்ததே
தவிர எந்த அசைவும் தெரியவில்லை. பொறுமை இல்லாமல் தொடையில் தாளம் போட ஆரம்பித்தார்.
இப்போது போனவன் கண்டிப்பாகத் தன் வேலையை
முடித்து விட்டு வெற்றியோடு தான் திரும்புவான்... சந்தேகமேயில்லை..... ஏனென்றால்
அந்த வாடகைக் கொலையாளி மிகவும் திறமையானவன்.... கொலை போலத் தெரியாமல் அந்த மரணம்
நிகழ வேண்டும் என்று சொன்ன போது சிறிதும் யோசிக்காமல் ஒத்துக் கொண்டான். ஆனால்
எப்படிச் செய்யப் போகிறாய் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்திய போது
மட்டும் அவன் தயங்கினான். பின் மெள்ளச் சொன்னான். அவன் தெரிவித்த திட்டம் மிகவும்
கச்சிதமானது. யாரும் கண்டுபிடிக்க வழியே இல்லை. ஆனாலும் ஏதோ ஒன்று அவரை
அமைதியிழக்க வைத்தது....
பேய்க்காற்று ஊளையிடும் தொனியில் வீசியது. இதை
வைத்துத் தான் இங்கு பேய்கள், ஆவிகள் உலாவுவதாக முட்டாள்கள் ஒரு காலத்தில் பேசி
இருக்க வேண்டும். அந்தப் பகுத்தறிவு அமைப்பினர் மட்டும் இங்கு வந்திரா விட்டால்
இப்போதும் இந்த முட்டாள் ஜனங்கள் நம்பி நடுங்கிக் கொண்டிருப்பார்கள். இத்தனை
தெளிவாக எல்லாம் வெளியாகி இருந்தும் போன மாதம் ஒரு பணக்காரன் இந்த மலையுச்சியில் சிறியதாக
ஒரு அம்மன் கோயிலைக் கட்டியிருக்கிறான். சாமி இருந்தால் பேய், ஆவி எதுவும்
வராதாம். சாமிக்குப் பேயோட்டும் வேலை தான் போலிருக்கிறது...
ஏதோ அபசகுனம் போல வானத்தில் பெரிய கரிய
பறவை ஒன்று மலை உச்சி நோக்கிப் பறந்தது தெரிந்தது. வௌவாலா, வேறெதாவது பறவையா
தெரியவில்லை. சாகப் போகிற அந்த இளைஞனைக் கேட்டால் அந்தப் பறவையின் பெயர்
மட்டுமல்லாமல் அந்தப் பறவையினம் தோன்றிய காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை
அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியையும் விளக்கி இருப்பான். பாவம், அறிவின்
அளவுக்கு அவனுக்கு ஆயுசு அதிகம் இல்லை.....
எல்லையில்லாமல் நீண்ட காலம், திடீரென்று
முடிவுக்கு வந்தது. சற்று தூரத்தில் அந்த வாடகைக் கொலையாளி தெரிந்தான். வேகமாக
வந்தவன் மிகவும் கவனமாகத் தன் கையில் இருந்த அட்டைப்பெட்டியை காரின் பின் சீட்டில்
வைத்து விட்டுக் காரைக் கிளப்பினான்.
“என்ன ஆச்சு?” என்று அவர்
அமைதியிழந்து கேட்டார்.
“செத்துட்டான்” அவன் அமைதியாகச் சொன்னான்.
அவருக்கு உடனடியாக சந்தோஷப்பட முடியவில்லை.
அவருக்கு ஏனோ முதலிலேயே எதிர்பார்த்திருந்தாலும் கூட இப்போது நம்பக் கஷ்டமாகவே
இருந்தது. ஒரு நிமிடம் அவனையே கூர்ந்து பார்த்தார். அவன் வந்த வழியே காரை ஓட்டிக்
கொண்டிருந்தானே ஒழிய அவர் பார்வையைப் பொருட்படுத்தவில்லை.
“எப்படி?” அவர் கேட்டார்.
“நான் முதல்ல சொன்ன மாதிரியே தான்....” என்று சொன்னவன் காரின் வேகத்தை
அதிகப்படுத்தினான். இந்த ஆளுடன் இருக்கும் நேரத்தை அவன் குறைக்க விரும்பினான். சில
மனிதர்களைச் சகித்துக் கொள்வது சுலபமல்ல. இந்த ஆள் அந்த வகையைச் சேர்ந்தவர்
தான்....
அவருக்கு அவன் பதில்
திருப்தியளிக்கவில்லை. விரிவாக என்ன நடந்தது என்பதைச் சொன்னால் தேவலை என்று
தோன்றியது. அதனால் விரிவாகச் சொல் என்று சொல்ல வாய் திறந்தார். ஆனால் அந்த
நேரமாகப் பார்த்து அவர் அலைபேசி பாடித் தொலைத்தது. எடுத்துப் பேசியவர் ஒரே
வார்த்தையில் பதில் சொன்னார். “முடிஞ்சுது”
அவர் பேச்சை முடிக்க
எதிர்தரப்பு அனுமதிக்கவில்லை போல் தெரிந்தது. அழைத்துப் பேசிய நபர் தொடர்ந்து
பேசிக் கொண்டிருக்க, இடையிடையே “ஆமா”, “ம்”, “வந்துகிட்டிருக்கோம்...” என்றெல்லாம்
சொல்லிக் கடைசியில் ஒருவழியாக அவர் அலைபேசியைக் கீழே வைத்த போது அவர்கள் கார்
மெயின் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பருகே வந்திருந்தது. அவரது பணியாள்
வேகமாக ஓடி வந்து அந்தச் சாலைத் தடுப்புகளை அப்புறப்படுத்தினான்.
வெளியே எட்டிப் பார்த்து
அந்த வேலையாளிடம் அவர் கேட்டார். “ப்ரச்னை எதுவும் இல்லயே”
“இல்லீங்கய்யா”
கார் மறுபடி பறந்தது. சில வினாடிகளில்
அவருடைய சொந்தக் கார் டிரைவருடன் தூரத்தில் நின்றிருந்ததைப் பார்த்தார். இனி அவர்
அருகில் அமர்ந்திருந்தவனிடம் விரிவாகக் கேட்க நேரமில்லை. அதனால் ஒரே கேள்வி கேட்டார்.
“பாம்பு அவனை எங்கே கடிச்சுது”
“வலது கால்
பெருவிரல்ல” என்றான்.
அவர் கார் அருகே அவன் தன் காரை நிறுத்தினான். அவர் இறங்கிக் கொள்ள அவன்
கார் மீண்டும் பறந்தது. கொலைக்காட்சியைத் தெளிவாகவும், முழுவதுமாகவும் அவன் வாய்
வழியே கேட்க முடியாத அதிருப்தியுடன் கண்களைச் சுருக்கிக் கொண்டே அந்தக் காரையே
பார்த்துக் கொண்டு அவர் நின்றார். ஏழே நொடிகளில் கார் அவர் கண் பார்வையிலிருந்து
மறைந்தது.
காரில் ஏறிய அவர் தன் டிரைவரிடம் சொன்னார். “அவன் மாதிரியே வேகமாய் போடா”
அன்றிரவு அவரால் உறங்க
முடியவில்லை. எப்போது விடியும் என்று ஆவலோடு காத்திருந்தார். அந்த அறிவுஜீவி
இளைஞனின் பிணத்தை டிவியில் பார்க்கிற வரை நிம்மதியில்லை.... மெள்ள விடிந்தது.
பிணத்தை யார்
முதலில் பார்க்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. காலையில் சுள்ளி பொறுக்கப்
போகிற பெண்களா, ஆடு மேய்க்கும் பையன்களா, மலை மேல் இருக்கும் அந்தச் சின்னக்
கோயிலுக்குப் பூஜை செய்யப் போகும் பூசாரியா என்று எண்ணியபடி அவர் டிவி
நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆரம்பித்தார்.
பக்தி இசை,
கோயில் உலா, திருக்குறள், இன்றைய விருந்தினர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து போய்க்
கொண்டே இருந்தன. ஆனால் அவர் எதிர்பார்த்த செய்தி இன்னும் வரவில்லை. மணி எட்டான
போது அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. அவரைப் போலவே இருப்பு கொள்ளாமல் இருந்த
இன்னொரு நபரின் அலைபேசி அழைப்பு வந்தது. “என்ன, ந்யூஸ்ல ஒன்னயும் காணோம்....?”
“தெரியல. பொறு.
ஆளனுப்பிப் பார்க்கறேன்” என்றவர், நேற்று இரவு கண்காணிப்பு வேலையில்
ஈடுபடுத்தியிருந்த அதே வேலையாளை
அலைபேசியில் தொடர்பு கொண்டார்.
முக்கால் மணி நேரத்தில் அவன் போன் செய்தான். “ஐயா அவனோட பைக் இன்னும்
மலையடிவாரத்தில் தான் இருக்கு”
அவருக்குக்
கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. அவன் உயிரோடு இருந்திருந்தால் காலை ஆறரைக்குள் பைக்கோடு கிளம்பியிருப்பான். இப்போது
மணி ஒன்பது.
அவர் வேலையாளிடம் சொன்னார். “நீ மலைக்கு
மேல அங்கிருக்கற கோயிலுக்குப் போற மாதிரி போ. போய் அவன் பிணம் இருக்கான்னு
பாரு. அவன் பிணத்தை முதல்லயே யாராவது பாத்திருந்தா நீயும் அவங்களோட சேர்ந்து
வேடிக்கை பாரு. அவனைத் தெரிஞ்ச மாதிரியே காட்டிக்காதே.... பிணத்த யாரும்
கண்டுபிடிக்காம இருந்தா அது எங்க இருக்குன்னு உடனடியா கண்டுபிடி. கண்டுபிடிச்ச
பிறகு யார் கிட்டயும் அங்கே சொல்லப் போகாம அமுக்கமா கிளம்பி வந்துடு. ஏன்னா
எப்பவுமே போலீஸ்காரனுக முதல்ல பிணத்த பாத்தது யாருன்னு தான் முதல்ல கேப்பானுக....
அவனுக உன்னை விசாரிக்க வேண்டாம்....”
“சரிங்கய்யா...” என்று சொல்லிவிட்டுப் போனவன் திரும்ப அழைக்கும்
வரை அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. இந்தக் காலத்து வேலையாட்கள் சுறுசுறுப்பில்லாத
பாதி சவங்களாகத் தான் இருக்கிறார்கள். ஏன் தாமதம் என்று கேட்டால் மட்டும்
சளைக்காமல் சொல்ல ஏராளமான பதில்கள் வைத்திருப்பார்கள். ஒருவன் சரியில்லை என்று வேலையில்
இருந்து நீக்கினால் அடுத்து வேலைக்குச் சேர்பவன் முந்தைய ஆளே பத்து மடங்கு
பரவாயில்லை என்று நினைக்க வைத்து விடுகிறான். எல்லாம் காலத்தின் கோலம்.....
அவன் பத்தரை
மணிக்கு அவரை அலைபேசியில் அழைத்தான். “ஐயா மலைக்கு மேல கோயில்ல பூசாரி பூஜைய முடிச்சுட்டு நான் போறதுக்குள்ளயே
கீழ வந்துட்டாரு. மேல சும்மா சுத்திகிட்டிருந்த ரெண்டு பசங்க, சுள்ளி பொறுக்கற ஒரு
கிழவி தவிர யாரும் இல்லீங்கய்யா. நான் எல்லா இடங்கள்லயும் நல்லாவே தேடிட்டேன். ஆனா
பிணம் கிடைக்கலீங்கய்யா....”
அவர் அந்தத்
தகவலில் அதிர்ந்து போனார். ”ஒழுங்கா தேடினியா?”
“ஆமாங்கய்யா.
அதனால தான் இவ்ளவு லேட்டு”
அவருக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. அவர் அடுத்ததாக வாடகைக்
கொலையாளிக்குப் போன் செய்தார். மணி அடித்தது. அடித்துக் கொண்டே இருந்தது. ஆனால் அவன்
போனை எடுக்கவே இல்லை.....
அவர் ஆபத்தை உணர்ந்தார். என்ன ஆயிற்று?
என்.கணேசன்
Really superb..
ReplyDeleteசிறிதும் யோசித்துப் பார்க்காத டர்னிங் பாயிண்ட் இரண்டாம் அத்தியாயத்திலேயே. அபாரம் கணேசன் சார்.
ReplyDeleteகணேசன் சார் தீபாவளியில் புதுநாவல் ஆரம்பமானது எனக்குத் தெரியவில்லை. இப்போது வந்து பார்த்தால் இரண்டு சேப்டர் அப்டேட் செய்திருக்கீங்க. எடுத்தவுடனேயே செம ஸ்பீடு. இனி மறுபடி ஒவ்வொரு வாரமும் எங்களுக்கு ஸ்பெஷல் தான். நன்றீ. நன்றி. நன்றீ.
ReplyDeleteSir Book eppo release? coming book fair la expect pannalaamaa???
ReplyDeleteI know this too will be super hit. Hearty wishes for that.
Not that much soon.
Deletewell you have some RAJESH KUMAR in you.. keep going...
ReplyDeletearumai ji..
ReplyDeleteSuper start up Sir! I am happy that you have started your second innings.
ReplyDeleteதொடர்கிறோம்...
ReplyDeleteஅற்புதம் ! என்ற வாசகம் கூட அற்பமாக தெரிகிறது கதையின் ஓட்டத்தில் வார்த்தைகளற்ற ஈர்ப்பில் வாசகன்
ReplyDeleteஅற்புதம் ! என்ற வாசகம் கூட அற்பமாக தெரிகிறது கதையின் ஓட்டத்தில் வார்த்தைகளற்ற ஈர்ப்பில் வாசகன்
ReplyDelete