அவன்
அழுகையினூடே உதவி கேட்டதும் ஜானகிக்கு மறுக்க முடியவில்லை. ஆனால் அவனுக்குத்
தன்னால் எப்படி உதவி செய்ய முடியும் என்பது அவளுக்கு விளங்கவில்லை. ”நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
அவன் சொன்னான். “வருண் உங்கள் குடும்பத்தோடு நெருக்கமாய் இருக்கிறான்.
உங்கள் மகளிடம் நல்ல நண்பனாகவே பழகுகிறான் என்பதையும் கவனித்திருக்கிறேன். அதனால்
அவனுடைய அப்பா உயிரோடு இருப்பது அவனுக்குத் தெரியுமா, உண்மையான தந்தையைப் பற்றி
அவன் மனதில் என்ன எண்ணங்கள் இருக்கின்றன என்பதை உங்கள் மகள் நாசுக்காகக் கேட்டுத் தெரிந்து
கொள்ள முடியும்.......”
ஜானகி உடனடியாக
எதுவும் சொல்லாமல் யோசித்தாள். அடுத்தவர் வீட்டு விவகாரங்களில் அதிகமாய் மூக்கை
நுழைக்கக் கூடாது என்று உறுதியாக இருப்பவள் வந்தனா. அவளிடம் இதைச் சொன்னால் என்ன
சொல்வாளோ? மேலும் இது போன்ற விஷயங்களை ஒருவர் நேரடியாகவே கையாள்வது தானே முறை!
அவன் சொன்னான்.
“அவர்கள் என்னை விட்டுப் போன போது என் மகனுக்கு ஐந்து வயது தான் இருக்கும். அவனிடம் சஹானா என்ன சொல்லி வைத்திருக்கிறாள்
என்பது தெரியவில்லை. நான் தான் அவர்களைக் கைவிட்டு விட்டேன் என்று சொல்லி
இருக்கிறாளா, இல்லை நான் செத்தே விட்டேன் என்று கூடச்
சொல்லி இருக்கிறாளா என்பது தெரியவில்லை. இன்னும் எத்தனையோ சொல்லி இருக்கலாம். நான்
மகா மோசமானவன் என்றெல்லாம் கூடச் சொல்லி இருக்கலாம். அவனுக்கு என்னைப் பற்றிய
நினைவுகள் அந்த வயதில் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. அதனால் தெளிவாக ஒரு
அபிப்பிராயத்தை அவன் எட்டி இருக்கவும் வாய்ப்பில்லை. அந்த வயதில் அம்மா சொல்வது
அத்தனையும் நிஜம் என்று அவன் நம்பி இருந்தால் அதை நான் தவறு என்று சொல்ல
மாட்டேன்...”
இதை அவன்
இரண்டாம் முறையாகச் சொல்கிறான் என்பதை ஜானகி கவனித்தாள். அவனைப் பார்க்கவே
அவளுக்குப் பாவமாக இருந்தது. தன்னைப் பற்றித் தவறாக மகன் நினைக்க
வாய்ப்பிருக்கிறது, அவன் அப்படி நினைத்தால் அது தவறல்ல என்று நினைப்பது ஒரு பாசம்
நிறைந்த, புரிதல் உள்ள தந்தையின் உயர்ந்த மனமாக அவளுக்குத் தோன்றியது. இந்த நிலைமை
யாருக்கும் வரக்கூடாது என்று எண்ணினாள். சொந்த மகனிடம் பேசக்கூட இந்த ஆள் தயங்க
வேண்டி இருக்கிறதே... பாவம்!
அவன்
தொடர்ந்தான். “திடீரென்று நான் நேரடியாக அவனைச் சந்தித்துப் பேசினால் அந்த
அதிர்ச்சியை அவன் எப்படித் தாங்குவான் என்று எனக்குத் தெரியவில்லை. அவன் அப்பா
இருக்கிறேன், இத்தனை காலமாய் அவனைத் தேடிக் கொண்டே இருந்திருக்கிறேன், உயிருக்கு
உயிராக நேசித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை எல்லாம் அவன் தெரிந்து கொண்டபின், இந்த
உண்மையை அவன் ஓரளவு ஜீரணித்த பிறகு நான் அவனிடம் பேசினால் பிறகு எந்த முடிவையும்
எடுப்பது அவனுக்குச் சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன்....”
அவள்
யோசித்தாள். ஏதோ சொல்ல முற்பட்டவள் அதற்கும் முன் அவன் பெயரைக் கேட்டுத் தெரிந்து
கொள்வது முக்கியம் என்று நினைத்தவளாய் “உங்கள் பெயரை நீங்கள் சொல்லவில்லையே” என்றாள்.
“சேகர்” என்று அவன் தன் சொந்தப் பெயரையே சொன்னான்.
”சேகர் நீங்களே சொல்லுங்கள், வந்தனா எப்படி வருணிடம்
இந்தப் பேச்சை ஆரம்பிக்க முடியும்? எத்தனை நெருங்கிய நட்பாக இருந்தாலும் இது
திடீரென்று எடுத்துப் பேச முடிகிற விஷயம் இல்லையே....?” ஜானகி இழுத்தாள்.
அவன் அவள் பார்த்து விட்டுக் கீழே வைத்திருந்த புகைப்படத்தைக் காட்டிச்
சொன்னான். “இந்தப் புகைப்படம் கிடைத்தது. உங்களுடன் இருக்கிற ஆள் யார் என்று உங்கள்
மகள் வருணிடம் கேட்கலாம் அல்லவா...?.”
யோசித்து விட்டு அவள் சம்மதித்தாள். இது யதார்த்தமாக யாரும் கேட்க முடிந்த
கேள்வி தானே!
மாரா
திபெத்தின் இந்திய மற்றும் நேபாள எல்லைப் பகுதிகளின் வரைபடங்களில் ஆழ்ந்து
போயிருந்தான். அமானுஷ்யன் தன்னைப் பின் தொடர்ந்து வரும் ஆட்களின் கண்களில் எப்படி
மண்ணைத் தூவி இருப்பான் என்பதைக் கணிக்க முடிந்த அவனுக்கு அவன் இப்போது
எங்கிருப்பான்? என்ன செய்து கொண்டிருப்பான், அவன் திட்டம் என்ன என்பதை எல்லாம்
சிறிதும் யூகிக்க முடியவில்லை.
லாஸாவிலிருந்து
விமானம் வழியாக அமானுஷ்யன் தப்பிச் செல்ல வழியே இல்லை. லீ க்யாங் எடுத்துக் கொண்டு
இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அந்த அளவில் இருந்தன. அமானுஷ்யன் தனியாகவாவது ஏதேனும் சாகசம்
புரியலாம். ஆனால் மைத்ரேயன் என்ற சிறுவனையும் கூட அழைத்துப் போவது நடக்காத
காரியமே.
இந்தியாவுக்கும்
திபெத்துக்கும் இடையே சாலைகளே கிடையாது என்பதால் சாலைப் போக்குவரத்தும் இல்லை. மற்றபடி
மூன்று முக்கிய கணவாய்கள் இந்தியாவையும் திபெத்தையும் இணைக்கின்றன. இந்த மூன்று
கணவாய்களும் 1962 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த போருக்குப்பின்
பல ஆண்டுகள் மூடப்பட்டே இருந்தன.
ஷிப்கி கணவாய்
இந்தியாவின் ஹிமாசலப்பிரதேச மாநில எல்லையில் திபெத்தை இணைக்கிறது. இந்தக் கணவாய்
1994 ஆம் ஆண்டு தான் திறந்து விடப்பட்டது. இருபக்க சிறு வணிகர்களும் பிரத்தியேக
அனுமதி பெற்று தங்களுக்குள் வர்த்தகம் செய்து கொள்ளலாம். அதுவும் ஒவ்வொரு வருடமும்
அனுமதிக்கப்பட்ட காலங்களில் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும். அதனால் அந்த எல்லையில்
வாழும் மனிதர்களைத் தவிர வேறு யாரும் அந்தக் கணவாய் அருகில் கூட வர முடியாது.
லிபுலேக்
கணவாய் இந்தியாவின் உத்தரகண்ட் மாநில எல்லையில் திபெத்தை இணைக்கிறது. இந்தக்
கணவாய் 1992 ஆம் ஆண்டு தான் திறந்து விடப்பட்டது. இந்த வழியாகப் பயணிக்க சீனாவின் சிறப்பு அனுமதி
வேண்டும். கைலாச மலைக்கு யாத்திரை போகும் யாத்திரீகர்கள் சில சமயங்களில்
அனுமதிக்கப்படுவதுண்டு.
நாதுலா கணவாய் இந்தியாவின்
சிக்கிம் மாநில எல்லையில் திபெத்தை இணைக்கிறது. இந்தக் கணவாய் 2006ல் தான் திறந்து
விடப்பட்டது. இங்கும் இரு தரப்பு சிறு வர்த்தகர்களும் கோடை காலத்தில் மட்டும் தங்களுக்குள்
வர்த்தகம் செய்து கொள்ளலாம். அதுவும் சில குறிப்பிட்ட நாள்களில் தான் வர்த்தகம்
செய்து கொள்ள அனுமதி உண்டு.
இந்த மூன்று
கணவாய்களிலும் பொதுவாகவே சீனாவின் கண்காணிப்பு தீவிரமாக இருக்கும். லிபுலேக்
கணவாய் வழியாக பிரத்தியேக அனுமதியில்லாமல் யாரும் செல்ல முடியாது. மற்ற இரண்டு
கணவாய்களில் அனுமதிச்சீட்டு வாங்கி வைத்திருக்கும் எல்லை வாழ் வர்த்தகர்களே எல்லா
சமயங்களிலும் போய் வர முடியாது. குறிப்பிட்ட காலம், குறிப்பிட்ட நாட்கள் என்று
அங்கும் கடுமையான கட்டுப்பாடு இருக்கிறது.
இந்தக்
காரணங்களினால் பொதுவாகவே இந்தியா திபெத் இடையே தரைவழிப் போக்குவரத்து நேபாளம்
வழியாகவே நடக்கிறது. லாஸாவில் இருந்து நேபாளம் வரை செல்லும் 830 கிலோமீட்டர்
நெடுஞ்சாலை சீன-நேபாள நட்பு நெடுஞ்சாலை என்று அழைக்கப்படுகிறது. சீன தேசிய
நெடுஞ்சாலை எண் 318 குறிக்கப்பட்ட அந்த நெடுஞ்சாலை மூலமாகவே தினந்தோறும்
நூற்றுக்கணக்கான ஆட்கள் வாகனங்களுடன் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த
நெடுஞ்சாலை நேபாள எல்லையைக் கடந்து நேபாளத் தலைநகர் காத்மண்டு வரை நீள்கிறது. அந்த
எல்லையில் பொதுவாகவே சோதனைகள் தீவிரமாக இருக்கும். ஆட்களையும் பொருட்களையும் தீவிர
சோதனைகள் செய்யாமல் நகர அனுமதிப்பதில்லை. சோதனைகள் போடும் போது வரைபடங்களோ, தலாய்
லாமா புகைப்படமோ கிடைத்தால் அவற்றைக்கூட எடுத்து வைத்துக் கொண்டே திபெத்தைக் கடக்க
அனுமதிப்பார்கள். சாதாரண காலங்களிலேயே அப்படி என்றால் மைத்ரேயனைத் தேடும் இந்த
சமயங்களில் சோதனையின் தீவிரம் எந்த அளவில் இருக்கும் என்று சொல்ல வேண்டியதே இல்லை.
இருக்கும் இந்த
வழிகளில் அந்தக் கணவாய்கள் வழியாகவோ, நட்பு நெடுஞ்சாலை வழியாகவோ திபெத்திய
எல்லையைக் கடப்பது கிட்டத்தட்ட முடியாத காரியமே. அப்படி இருக்கையில் அமானுஷ்யனால் மட்டும்
இது முடியுமா என்று மாரா யோசித்தான். முடியாது என்றே தோன்றியது.
மற்ற வழிகளில்
தப்பிக்க இயற்கை வழிவகுத்திருக்கவில்லை. பனிக்காலம் வேறு நெருங்குகிறது. இமயமலையின்
பனி மிகவும் அபாயகரமானது. பார்க்க மிக அழகாக ரம்யமாகக் காட்சி அளித்தாலும் பனிப்புயல்,
பனிப்பாறைச் சரிவுகள், நிலச்சரிவுகள் என்று திடீர் அபாயங்களை இமயமலை தனக்குள்
ஒளித்தே வைத்திருக்கிறது.
இப்படி
இருக்கையில் அமானுஷ்யனும், மைத்ரேயனும் எப்படித் தப்பிக்கப் போகிறார்கள் என்று
மாரா யோசித்தான். அமானுஷ்யன் திட்டம் அவனுக்குப் பிடிபடவில்லை.
அதே
சிந்தனையில் தான் லீ க்யாங்கும் இருந்தான். திபெத்தின் எல்லா எல்லைகளிலும்
பாதுகாவலைப் பலப்படுத்தி இருந்தான். கூடுதலான திறமையான ஆள்களை இந்திய எல்லைக்
கணவாய்களிலும், சீன-நேபாள நட்பு நெடுஞ்சாலையின் நேபாள எல்லையிலும் நிறுத்தி
இருந்தான். சம்யே மடாலயப் பகுதியில் இருந்து தலைமறைவான மைத்ரேயனும் பாதுகாவலனும்
திபெத்தில் மற்ற இடங்களில் இது வரை சிக்கவில்லை. அவன் உள்ளுணர்வு அவர்கள்
கண்டிப்பாக விரைவிலேயே திபெத்திய எல்லையைக் கடக்க முயல்வார்கள் என்று தெரிவித்தது.
அவர்கள் இருவரையும் எல்லையில் கையும் களவுமாய் பிடிக்க லீ க்யாங் ஆவலோடு காத்திருந்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
உண்மைத் தகவல்களை வைத்து தத்ரூபமான நிகழ்வுகளையும், பாத்திரங்களையும் கொண்டு நீங்கள் இந்த பரபரப்பான கதையைத் தருவது நிஜமான சம்பவத்தையே நேரில் பார்ப்பது போல எனக்கு நினைக்க வைக்கிறது. Really classic and fantastic.
ReplyDeleteநாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம் அமானுஷ்யன் சாகசத்தை காண. . .
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி அண்ணா. . .
Very Interesting Sir.
ReplyDeleteReading your novel is really a great experience for readers like me.
ReplyDelete'Paran ragasiyam' padithapodhu, ungaluku andha 'Eesan arul' pooranamaha irukiradhu enbadhai unarndhom. Aanal ipodhu andha Maithreya buthar arulum ungaluku irukiradhu enbadhum engaluku pirindhu vitadhu sir!
ReplyDeleterompa super
ReplyDeleteThis story seems to be watching a live relay in Television.
ReplyDeleteWonderful Presentation Sir!
Super G
ReplyDeleteமுடிஞ்சா கொஞ்சம் அதிகமா எழுத முயற்சி செய்யுங்கள் சார்.... வர வர கன்டன்ட் கம்மி பண்றீங்களா... இல்ல ஸ்பீடா போறதால எங்களுக்கு அந்த மாதிரி தெரியுதான்னு தெரியலை.....
ReplyDeleteசெம ஸ்பீடு.....