சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 3, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 61



லீ க்யாங் அசந்து போனாலும் பிடிகொடுக்காமல் சொன்னான். “அந்தக் குழு தான் இயங்கி இருக்கிறதா இல்லை வேறு யாராவது செய்தார்களா, இல்லை தற்செயலாக நடந்ததா என்று தெரியவில்லை. அதனால் தான் உங்களிடம் வந்தேன்....

“நம் துறையில் நாம் தற்செயல் என்கிற வார்த்தையையே நம்புவதில்லையே லீ க்யாங்.... “ என்று அவர் சொல்லி விட்டுப் புன்னகைத்தார்.

அவனும் புன்னகைத்தான். ஆனால் நடந்தது என்ன என்பதை அவரிடம் தெரிவித்து விளக்க அவன் முற்படவில்லை. அவரை அவன் நூறு சதவீதம் நம்பினான். அவரிடம் சொல்லும் விஷயங்களை அவர் கண்டிப்பாக வெளியே சொல்லி விடப்போவதில்லை. ஆனாலும் அவன் தெரிவிக்கப் போவதில்லை. அவரிடம் அவன் கேட்டான்.  “அந்தக் குழு பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொன்னால் உதவியாக இருக்கும் சார்

“என்ன நடந்தது என்று எனக்குத் தெரிவிக்க நீ தயக்கம் காட்டுகையில் நான் மட்டும் எனக்குத் தெரிந்ததை உன்னிடம் சொல்வேன் என்று நீ எப்படி லீ க்யாங்  எதிர்பார்க்கிறாய்?”  அவர் சிரித்துக் கொண்டே கேட்டார்.

அவனும் சிரித்துக் கொண்டே சொன்னான். “நாட்டில் வேரூன்றி இருக்கும் தீய சக்தியாக அந்தக் குழு இருக்கலாம் என்று உளவுத் துறையின் இப்போதைய உபதலைவன் சந்தேகப்படுவதாய் சொன்னால் தேசபக்தி மிகுந்த அதன் பழைய தலைவர் கண்டிப்பாக அந்தக்குழு பற்றித் தனக்குத் தெரிந்த தகவல்களை அளிப்பார் என்று நம்புகிறேன் சார்

அவர் வாய் விட்டுச் சிரித்தார். அவன் வேலையில் சேர்ந்த நாளில் இருந்து அவர் பார்த்து வருகிறார். அவன் புத்திசாலித்தனம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் வருகிறது.... அவர் சொன்னார்.  எனக்குத் தெரிந்திருக்கும் தகவல் மிகப் பழையது. அது அந்தக்குழு இருப்பது உண்மையே என்பதையும், ரகசியமானது என்பதையும் தவிர வேறெதையும் ஆணித்தரமாகச் சொல்லவில்லை.....

“பரவாயில்லை சார். சொல்லுங்கள்......

அவர் மேஜையில் வைத்திருந்த தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டுக் கடிகாரத்தைப் பார்த்தார். இன்று சீக்கிரம் உறங்க இவன் விடமாட்டான் போலிருக்கிறதேஎன்ற எண்ணம் அவர் மனதில் ஓடியது. அதை அவர் அவனிடமிருந்து மறைக்க முயற்சிக்கவில்லை. அவன் அது தெரியாதது போல் நடித்து அவரையே ஆர்வத்துடன் பார்த்தான்.

அவர் பழைய நினைவுகளில் ஆழ்ந்தபடி சொல்ல ஆரம்பித்தார். “நான் சொல்லப் போவது பதினைந்து வருடங்களுக்கு முந்தைய சம்பவம். என் நண்பரின் மகன் ஒருவன் மலையேற்றத்திலும் மலைக்காடுகளில் பயணிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவன். வீடு விட்டுப் போனால் வாரக்கணக்கில் திரும்பி வர மாட்டான். பல நாடுகளுக்குப் போய் காடு மலை என்று சுற்றி விட்டு வருவான். அப்படி அந்த ஆண்டு திபெத் போயிருந்தான்....

திபெத் என்றதுமே லீ க்யாங்கின் ஆர்வம் அதிகமாகியது. அவர் சொல்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

“....திபெத்திலும் மலைப்பகுதியில் அப்படிச் சுற்றிக் கொண்டிருந்த போது ஒரு குகையை அவன் பார்த்திருக்கிறான். படிகள் கூட இருந்திருக்கின்றன. அதில் இறங்கிப் போனவன் ஒரு பெரிய மண்டபம் போன்ற இடத்தைப் பார்த்திருக்கிறான். சுமார் நூறு ஆட்கள் தாராளமாக அமர்ந்திருக்க முடிந்த இடம். மண்டப ஓரத்தில் ஒரு சிறிய அறையும் அதில் ஒரு சிலையும் இருந்திருக்கிறது. அது ஏதோ பழங்காலக் கோயில் என்று மட்டும் அவனுக்குப் புரிந்தது. ஆனால் அந்தச் சிலை இவனுக்குத் தெரிந்த எந்தத் தெய்வத்தின் சிலையும் அல்ல...... வெளியே இருக்கும் குளிர் சிறிதும் தெரியாதபடி கதகதப்பு இருந்ததால் அங்கு அப்படியே இளைப்பாறி இருக்கிறான். திடீரென்று யாரோ பேசிக்கொண்டு வரும் சத்தம் கேட்டதும் ஏதோ ஒரு எச்சரிக்கை உணர்வு அவனை அங்கே ஒளிந்து கொள்ளச் சொல்லி இருக்கிறது. வேகமாக அந்தச் சிலையின் பின்னால் போய் ஒளிந்து கொண்டிருக்கிறான்....

“இரண்டு பேர் பேசிக் கொண்டே குகையின் படிகளில் இறங்கி வந்தார்களாம். அவர்கள் கையில் கம்பளம், புலித்தோல் எல்லாம் இருந்திருக்கிறது. அதை இறக்கி ஒரு  மூலையில் வைத்து விட்டு, பேசிக் கொண்டே அந்த மண்டபத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இரண்டு பேரும் பார்க்க நாகரிகமாகவும், படித்தவர்களாகவும் தெரிந்திருக்கிறார்கள். ஒளிந்து கொள்வதற்குப் பதிலாக அவர்களை எதிர் கொண்டிருந்தால் இந்தக் கோயில் பற்றிய விவரங்களை அவர்களிடம் இருந்து பெற்றிருக்கலாமே என்று கூட அவனுக்குத் தோன்றி இருக்கிறது. என்ன செய்வது என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கையில் அவர்கள் ஏதோ ஒரு ரகசியக்குழுவின் உறுப்பினர்கள் என்பது அவர்கள் பேச்சில் இருந்து அவனுக்குப் புலனாகி இருக்கிறது.... அவர்கள் பேச்சு அவர்கள் குழுவில் இருக்கிற ஒரு சிறுவனின் அசாதாரணமான அமானுஷ்ய சக்திகள் பற்றித் திரும்பியதாம்.... அவன் அளவுக்கு அறிவுகூர்மையான ஆள் அந்தக் குழுவிலேயே இல்லை என்று அவர்களின் தலைவரே சொல்லி இருக்கிறாராம்.... அடுத்தவர் மனதை அவனால் படிக்க முடியுமாம், காற்றாக அவனால் இயங்க முடியுமாம்.... அவன் பார்வைக்கு கொடிய விலங்குகள் கூட பயப்பட்டுப் பின் வாங்குமாம்.... இப்படியெல்லாம் வர்ணித்திருக்கிறார்கள். கடைசியில் ஒருவன் இன்னொருவனிடம் சொன்னானாம். “நாம் வணங்கும் மாராவே அவதாரம் எடுத்து இப்படி வந்திருக்கிறார் என்று தலைவரே நம்புகிறார்”.  அதைக் கேட்ட பின்பு தான் ஒளிந்து கொண்டிருக்கும் இந்த சிலை மாராவினுடையதாக இருக்கலாம் என்பது அவனுக்குத் தெரிந்தது...

லீ க்யாங்குக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது. இது என்ன அவதாரக் காலமா? முதலிலேயே புத்தரின் அவதாரம் ஒன்று வந்து குடைச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் மாரா என்ற சைத்தானும் அவதாரம் எடுத்து வந்திருக்கிறானா?

அவர் தொடர்ந்தார். “.....அப்போது அவர்கள் புத்தரின் மறு அவதாரமான மைத்ரேயன் பிறந்தால் அவனைச் சந்திக்க மாராவின் இந்த அவதாரம் சகல சக்திகளை ஏற்படுத்தி மைத்ரேயனை வீழ்த்தக் காத்திருக்கிறது என்பது போல் பேசி இருக்கிறார்கள். என் நண்பரின் மகனுக்கு இது போன்ற அவதாரங்களில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. வேறு வழி இல்லாமல் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறான். அதற்குப் பிறகு அவர்கள் பேசிய பேச்சில் அன்றிரவு அங்கு அந்த ரகசியக்குழுவின் உயர்மட்ட உறுப்பினர்கள் கூடுகிறார்கள் என்றும் அதற்காகத் தான் அந்த இடத்தைச் சுத்தம் செய்ய இந்த இருவரும் வந்திருக்கிறார்கள் என்பதும் தெரிந்திருக்கிறது.

“அந்த இடத்தைச் சுத்தம் செய்து விட்டு அவர்கள் அந்தச் சிலை இருக்கும் சிறிய அறையையும் சுத்தம் செய்ய வந்தால் என்ன செய்வது என்று என் நண்பரின் மகன் பயந்திருக்கிறான்.... நல்ல வேளையாக அந்தச் சிலையை அவர்கள் மண்டபத்தில் இருந்தே தொழுது விட்டுக் கிளம்பி இருக்கிறார்கள். அவர்கள் போன பின் சுமார் கால் மணி நேரம் காத்திருந்து விட்டு இவனும் கிளம்பி இருக்கிறான்.

அவன் ஏழு மைல் தள்ளி இருந்த ஒரு சிறிய கிராமத்தில் அப்போது தங்கி இருந்தானாம். மாலை நெருங்க நெருங்க அந்த ரகசியக்குழுவின் உயர்மட்ட உறுப்பினர்கள் எப்படி இருப்பார்கள், என்ன பேசுவார்கள், முக்கியமாக மாராவின் அவதாரம் என்று சொல்லப்படுகிற சக்தி வாய்ந்த சிறுவனும் வருவானா என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. அதையும் ரகசியமாய் ஒளிந்து பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்து என் நண்பனின் மகன் இரவு அந்தக் குகை இருக்கும் இடத்திற்குப் போயிருக்கிறான்....

லீ க்யாங்கின் ஆர்வம் கூடியது. அவரை அவன் ஆர்வத்துடன் பார்க்க அவர் அவனிடம் சொன்னார். “இதே ஆர்வம் தான் எனக்கும் அன்று இருந்தது. ஆனால் ஆச்சரியம் என்ன என்றால் என் நண்பரின் மகனால் அந்தக் குகையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சுற்றி சுற்றி வந்து பார்த்திருக்கிறான். குகையைக் காணோம். அந்தக் குகைக் கோயிலுக்கு ரகசியமாய் வர வேண்டிய ஆட்களையும் அந்தப் பகுதியில் அவனால் பார்க்க முடியவில்லை. அதிகாலை மூன்று மணி வரை சுற்றிப் பார்த்து சலித்து விட்டு அவன் திரும்பி இருக்கிறான்....

லீ க்யாங் சொன்னான். “அவன் இடம் மாறிப்போயிருக்கலாம்... நகரத்தில் இருக்கும் மனிதர்களுக்கு மலைக்காடுகளில் இடங்கள் எல்லாம் ஒரே போலத் தான் தோன்றும்.

அவர் சொன்னார். “அவனுக்கு காடுகளும் மலைகளும் நன்றாகப் பரிச்சயமானவை. சிறு வயதிலிருந்தே அது போன்ற பகுதிகளில் பயணித்து பழகியவன். ஒரு இடத்தை ஒரு முறை பார்த்தால் அடுத்த முறை அங்கு எந்த விதமான சிரமமும் இல்லாமல் போகக் கூடியவன். அதனால் அவனுக்கு அன்றிரவு கண்டுபிடிக்க முடியாமல் திரும்பியது அவமானமாக இருந்திருக்கிறது. மறுநாள் காலையில் எழுந்தவுடன் மறுபடி அந்த இடத்தைப் பார்க்கப் போயிருக்கிறான்.

லீ க்யாங் கேட்டான். “மறுநாள் காலை போன போது அந்தக் குகையை மறுபடி பார்க்க முடிந்திருக்குமே?

அவர் அமைதியாகச் சொன்னார். “அது தான் இல்லை. மறு நாளும் அவனால் அதைப் பார்க்க முடியவில்லையாம். காலையில் இருந்து மாலை வரை அங்கேயே சுற்றி வந்திருக்கிறான். அவனால் அந்தக் குகையைக் கண்டுபிடிக்க முடியவே இல்லை

லீ க்யாங்கால் நம்ப முடியவில்லை.   அவருடைய நண்பரின் மகன் போதைப் பழக்கம் உடையவனாக இருந்திருக்கலாமோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. போன இடம் வேறாகவும், தேடிய இடம் வேறாகவும் இருந்திருக்க வேண்டும்.

அவர் தொடர்ந்தார். “...ஏமாற்றத்துடன் அவன் தங்கி இருந்த இடத்தில் அக்கம் பக்கம் விசாரித்திருக்கிறான். அவர்கள் யாருக்கும் அப்படி ஒரு குகை இருப்பதே தெரிந்திருக்கவில்லை. ஒரே ஒரு கிழவர் மட்டும் இவன் அந்தக் குகை பற்றி விசாரித்த போது சொல்லி இருக்கிறார். உன் உயிர் மேல் ஆசை இருந்தால் இது போல் விசாரிக்காதே. கண்கட்டு வித்தையில் மாத்திரமே அவர்கள் வல்லவர்கள் என்று நினைத்து விடாதே. உயிரை எடுப்பதிலும் அவர்கள் வேகமானவர்கள்”.  அந்தக் கிழவர் அதைச் சொன்ன விதமும், குகையைக் கண்டு பிடிக்க முடியாமல் போனதும் அவனுக்கு இதில் ஆர்வத்தை அதிகப்படுத்தி தான் விட்டிருக்கிறது. பீஜிங் திரும்பியவுடன் என்னைச் சந்தித்து நடந்ததை எல்லாம் சொன்னான். எனக்கு அவனை எந்த அளவு நம்புவது என்று தெரியவில்லை. அவன் அந்த ரகசியக்குழு பற்றி எனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டான். வதந்திகளைத் தவிர எங்களிடம் ஆதாரபூர்வமான தகவல் இல்லை என்று சொன்னேன். ஏமாற்றத்துடன் போய் விட்டான்.....

ஒன்றரை வருடம் கழித்து அவன் பரபரப்புடன் எனக்குப் போன் செய்தான். அவன் திபெத்தில் குகைக் கோயிலில் பார்த்த இருவரில் ஒருவனை மறுபடி பீஜிங்கில் பார்க்க நேர்ந்ததாகச் சொன்னான்....

லீ க்யாங் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்  



6 comments:

  1. Going very interesting. Eagerly waiting for next Thursday.

    ReplyDelete
  2. மதிவதனிSeptember 3, 2015 at 6:58 PM

    தத்ரூபமான பாத்திரப்படைப்புகள், மிக சுவாரசியமான சம்பவங்கள், அருமையான தத்துவங்கள் கொண்டு கதையை அழகாக கொண்டு செல்கிறீர்கள். வியாழக்கிழமை வந்து விட்டாலே இன்று புத்தம் சரணம் கச்சாமி அப்டேட் ஆகும் என்ற மகிழ்வு மனதை தொத்திக்கொள்கிறது.

    ReplyDelete
  3. அப்பப்பா..... என்ன ஒரு விறுவிறுப்பு.....? எப்போதடா வரும் என்று ப்ளாக்-ஐ பார்த்துகொணடே இருந்து......
    பேருந்தில் (ஸ்டேன்டிங் வேறு....!) படித்து முடித்தேன்.... அதற்கேற்றாற்போல் பேருந்தும் 100 kmph வேகத்தில் பறந்தகொண்டிருந்தது.... நம் நாவலோ..... 200 kmph......!! செம.....

    ReplyDelete
  4. ஹப்பா என்ன ஒரு விறுவிறுப்பு..... எப்போது வியாழன் வரும் என்று காத்திருக்க வைத்த கதை...! ஒவ்வொரு அப்டேட்டும் முடியும்போது, செம சஸ்பென்சாக இருக்கு... அடுத்து என்ன நடக்கும் என்று ஒரு பரபரப்பு...!!

    ReplyDelete
  5. Unkalathu puthakam ilam vayathinaruku oru puthu vekathai kudukirathu...anal enoda santhegam enavendram ithu anaithum karpanaiya ila ethaenum unmai irukiratha

    ReplyDelete