சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 12, 2013

பரம(ன்) ரகசியம் – 75



ஸ்வரால் உடனே எதுவும் பேச முடியவில்லை. அவன் இதயத்துடிப்புகள் சம்மட்டி அடிகளாக மாறி விட்டிருந்தன. சற்று முன் கண்ட காட்சியை நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அன்று அந்த சித்தர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

கெட்டவங்க யுத்தம் இல்லாமல் ஜெயிச்சிடுவாங்க அவ்வளவு தான். அவங்க கிட்டயும் அறிவு நிறையவே இருக்கு. அவங்க செய்யறது எல்லாம் தான் சரின்னு கணபதியை நம்ப வைக்க அவங்களுக்கு சுலபமா முடியும். கணபதி அவங்க பக்கம் போனா மத்ததெல்லாம் அவங்களுக்கு சுலபம். தப்பான மனசு, தப்பான அறிவு, தப்பான ஞானம் இது மூணும் போதாதா உலகத்தை அழிக்கிறதுக்கு?

நல்ல மனசும், நல்ல அறிவும் இருக்கறவங்களே காப்பாத்தப்படணும்னு உறுதியா முயற்சிகள் எடுக்கலைன்னா அவங்க இருக்கிற சமுதாயம், உலகம் காப்பாத்தக்கூட தகுதி இல்லாததாயிடுது.... கடவுளுக்கு கவனிக்க இந்த உலகம் மட்டும் இல்லை, கோடான கோடி உலகங்கள் இருக்கு.... தகுதி இருக்கற உலகங்களை அவர் காப்பாத்திட்டுப் போறார்...

ஈஸ்வர் ஒரு குற்றவாளியைப் போல் உணர்ந்தான். இப்போதைக்கு அவன் இதைப் பற்றி வீட்டில் யாரிடமும் சொல்லும் நிலைமையில் இல்லை....

மறுபடி பார்த்தசாரதி பதற்றத்துடன் கேட்டார். “ஈஸ்வர் உங்களுக்கு என்ன ஆச்சு? உடம்புக்கு முடியலையா?

ஈஸ்வர் பதில் சொல்லாமல் அவரையே பார்த்தான். இத்தனை நாட்கள் பழகிய வரையில் அவர் நேர்மையானவர், நம்பிக்கைக்கு உகந்தவர் என்பதில் அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை. யாரிடமாவது அவனுக்குச் சொல்ல வேண்டும், கேட்கிற ஆளுக்குப் புரியவும் வேண்டும். அதற்கு இவர் பொருத்தமானவர் தான் என்று தோன்றியது.

பசுபதி மறைவுக்குப் பின் சில சமயங்களில் சிவலிங்கம் காட்சி தந்ததைச் சுருக்கமாக அவரிடம் தெரிவித்த ஈஸ்வர் அக்னி நேத்திர சித்தரை நேரில் பார்த்த இரண்டு சந்தர்ப்பங்களையும், கடைசியாக சந்தித்த போது அவர் சொன்ன விஷயங்களையும், கடைசியாக இப்போது தோன்றிய காட்சியையும் விரிவாகவே சொன்னான்.

பார்த்தசாரதிக்கு ஏதோ மாயாஜாலக் கதையைக் கேட்பது போல் இருந்தது. சொன்னது ஈஸ்வராக இல்லாமல் இருந்திருந்தால், அவனது தற்போதைய அதிர்ச்சி நிலையை நேரில் பார்க்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் நம்பி இருக்க மாட்டார். கேட்டதை ஜீரணிக்க மேலும் சிறிது நேரம் தேவைப்பட்டது.    

ஈஸ்வர் சொன்னான். “எனக்கென்னவோ உலகத்தைக் காப்பாத்தற பொறுப்பை ஒன்னு ரெண்டு பேர் கிட்ட கடவுள் ஒப்படைப்பார்ங்கறதை இன்னும் நம்ப முடியலை.

பார்த்தசாரதிக்கும் நம்ப முடியவில்லை.  ஆனால் சித்தர் சொன்னதாய்ச் சொன்ன அந்த வாக்கியத்தை அவரால் புறக்கணிக்க முடியவில்லை. நல்ல மனசும், நல்ல அறிவும் இருக்கறவங்களே காப்பாத்தப்படணும்னு உறுதியா முயற்சிகள் எடுக்கலைன்னா அவங்க இருக்கிற சமுதாயம், உலகம் காப்பாத்தக்கூட தகுதி இல்லாததாயிடுது...”.  இது ஈஸ்வருக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதனுக்கும் சொல்லப்பட்ட எச்சரிக்கையாக அவருக்குத் தோன்றியது.

“கடவுளுக்கு காப்பாத்தற வேலை மட்டுமா இருக்கு. அழிக்கிற வேலையும் அவரோடது தானே. அவர் அந்த வேலையைச் செய்வார்....”  அது சித்தர் கிண்டலாகச் சொல்லியதாக ஒரு பக்கம் தோன்றினாலும் இன்னொரு பக்கம் எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார்என்று அலட்சியமாக எந்த மனிதனும் இருந்து விட முடியாது என்று சுட்டிக்காட்டிய பயங்கர உண்மையாகத் தான் அவருக்குத் தோன்றியது. இது ஈஸ்வர் என்கிற தனிப்பட்ட மனிதனுக்கு சொல்லப்பட்டதா, இல்லை அவன் மூலம் எல்லோருக்கும் சொல்லப்பட்டதா?

“சரி என்ன செய்யலாம்னு இருக்கீங்க?பார்த்தசாரதி கேட்டார்.

“தெரியலைஈஸ்வர் ஒப்புக் கொண்டான். ஆனா எதாவது உடனடியாய் நான் செய்தாகணும். உலகத்தைக் காப்பாத்தப்போற சூப்பர் ஹீரோவாய் இல்லாட்டியும் என்னை அண்ணான்னு கூப்பிட்ட கள்ளங்கபடமில்லாத கணபதியைக் காப்பாத்தறதுக்காகவாவது  நான் ஏதாவது செய்தாகணும்.... இல்லாட்டி நான் என்னையே மன்னிக்க முடியாது சார்...

பார்த்தசாரதி சொன்னார். “சீர்காழில இருந்த அந்தப் பையன் இருக்கறதைக் குறிபார்த்துச் சொன்ன கிழவியையே மறுபடியும் கூப்பிட்டு முதல்ல சிவலிங்கமும் இருக்கிற இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாமா? தெரிஞ்சா தெரியுது. தெரியாட்டியும் நமக்கு நஷ்டம் இல்லையே

ஈஸ்வர் சம்மதித்தான். இருவரும் அடுத்த முக்கால் மணி நேரத்தில் அந்தக் கிழவியின் வீட்டில் இருந்தார்கள். பார்த்தசாரதியைப் பார்த்ததுமே கிழவி முகத்தில் திகில் பரவியது.

ஈஸ்வர் கிழவியிடம் நட்புடன் பேசினான். “பயப்படாதீங்க. எங்களுக்கு இன்னொரு தகவல் தெரிய வேண்டி இருக்கு. அதுக்காகத் தான் வந்தோம். ஏதாவது தெரிஞ்சா மட்டும் சொல்லுங்க. தெரியலைன்னா பரவாயில்லை...

கிழவி மெல்ல தலையாட்டினாள். ஈஸ்வர் சிவலிங்கம் கணபதி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியுமா என்று கேட்டான். கிழவி கேட்டாள். “அந்தப் பையனைப் பத்தி சொல்லுங்க சாமி. பேர் என்ன? வயசு, தொழில் என்ன? பார்க்க எப்படி இருப்பான்?.     

ஈஸ்வர் சொன்னான். பின் வெற்றிலை பாக்கையும் 101 ரூபாயையும் தந்தான். அவள் இந்த முறை பணத்தை மறுக்கவில்லை. வாங்கிக் கொண்டாள். பிறகு கண்களை மூடிக்கொண்டே அவன் தந்த வெற்றிலையை வருட ஆரம்பித்தாள். ஐந்து நிமிடங்கள் கழித்துக் கண்களைத் திறந்து சொன்னாள்.

“ஒன்னுமே பாக்க முடியல சாமி. என்னமோ மந்திரம் பண்ணி அந்த இடத்த மூடி வச்சிருக்காங்க மாதிரி தெரியுது.... நான் மட்டுமில்ல சாமி, வேறெந்த குறி பார்க்கற ஆளாலும் அந்த இடத்தைக் கண்டு பிடிக்க முடியாது.... அந்த அளவு உறுதியாய் அந்த இடத்துக்கு மந்திர கவசம் போட்டுருக்காங்க

ஈஸ்வர் ஏமாற்றத்துடன் எழுந்தான். அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கிழவி அப்போது தான் அவனிடம் ஏதோ ஒன்றைக் கவனித்து விட்டு “ஒரு நிமிஷம் அப்படியே நில்லுங்க சாமிஎன்று சொல்லி மறுபடியும் கண்களை மூடினாள். இரண்டு நிமிடங்கள் கழித்து கண்களைத் திறந்து சொன்னாள். “ஆனா... உங்களால அந்த இடத்த பாக்க முடியும் சாமி....

“என்னாலயா?ஈஸ்வர் ஆச்சரியத்துடன் கேட்டான். “இப்ப தான் எந்த குறி சொல்ற ஆளும் அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியாதுன்னு சொன்னீங்க. நான் குறி சொல்ற ஆள் கூட இல்லை. பின்ன எப்படி என்னால பார்க்க முடியும்னு சொல்றீங்க?

கிழவி சொன்னாள். “நீங்களும், அந்த பையனும், அந்த சிவலிங்கமும் முதல்லயே சம்பந்தப்பட்டவங்க சாமி.  சம்பந்தப்பட்டவங்கள அந்த மந்திரத்தால கூட தடுக்க முடியாது

ஈஸ்வர் திகைத்துப் போனான். இதற்கு மேல் தன்னால் ஒன்றும் சொல்ல முடியாது என்று கிழவி சொல்லி விட்டாள்.  கட்டாயப்படுத்தி சொல்லச் சொன்னால் கிழவி கற்பனையாகத் தான் எதையாவது சும்மா சொல்ல ஆரம்பிப்பாள் என்று புரிந்து கொண்ட இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

னகதுர்காவிற்கும் மீனாட்சிக்கும் பேச நிறைய இருந்தது. சங்கரைப் பற்றி சலிக்காமல் பேசினார்கள். பிறகு தங்கள் பிள்ளைகளைப் பற்றிப் பேசினார்கள். மகேஷைப் பற்றி மீனாட்சி சொல்ல, ஈஸ்வரைப் பற்றி கனகதுர்கா சொன்னாள். விஷாலி ஈஸ்வரைப் பற்றி கனகதுர்கா சொன்னதை எல்லாம் மிகவும் சுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள். மகனின் சின்னச் சின்ன குறும்புகள், புத்திசாலித்தனம், கோபம், பிடிவாதம் பற்றி எல்லாம் கனகதுர்கா உதாரணங்களுடன் சொல்லியதை தன்னை மறந்து ரசித்து விஷாலி கேட்டுக் கொண்டிருந்தாள்.

அதை இடையே கவனிக்க முடிந்த கனகதுர்காவிற்கு அந்தப் பெண் ஈஸ்வரைக் காதலிக்கிறாள் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்கவில்லை. அவனைப் பற்றிய பேச்சைக் கேட்கும் போது அவ்வப்போது விஷாலி முகத்தில் தெரிந்த வெட்கம் அவளைக் காட்டிக் கொடுத்தது.  

மீனாட்சி சொன்னாள். “மகேஷ் அவங்கப்பா கிட்டயும் தாத்தா கிட்டயும் கோபத்தைக் காட்டறதில்லை. எல்லா கோபமும் எங்கிட்ட தான் காண்பிப்பான்....

தாய்மார்களுக்குக் குழந்தைகள் தங்களிடம் கோபம் காட்டுவது கூடப் பெருமை தான் என்று விஷாலிக்குத் தோன்றியது.

கனகதுர்கா சொன்னாள். “ஈஸ்வருக்கு யாராவது நியாயமில்லாமல் அவன் கிட்ட நடந்துகிட்டா தாங்க முடியாது. நாங்களே அவன் செய்யாத தப்புக்கு அவனை ஏதாவது சொல்லிட்டாலோ, அநியாயமா ஏதாவது திட்டிட்டாலோ அவனால பொறுத்துக்க முடியாது. எரிமலையா வெடிக்க ஆரம்பிச்சுடுவான். வெளியாள்கள் கிட்ட அப்படி வெடிக்க மாட்டான். பனிமலையாய் மாறிடுவான். அவங்க கிட்ட அவனுக்குப் பேசக் கூடப் பிடிக்காது. அவன் வாழ்க்கைல இருந்தே அவங்களை ஒதுக்கிடுவான்.....

விஷாலி முகம் ஒரேயடியாய் மாறியது. விழிகளில் ததும்ப ஆரம்பித்த கண்ணீரை அவர்களுக்குக் காட்ட விரும்பாமல் எதோ வேலையாகப் போவது போல அங்கிருந்து அவள் போய் விட்டாள். அதை கனகதுர்கா கவனிக்கத் தவறவில்லை.


விஸ்வநாதன் வந்து சம்பிரதாயத்திற்கு கனகதுர்காவிடம் பேசி விட்டுச் சென்றார். இந்த வீட்டுக்கு சங்கர் திரும்பி வரா விட்டாலும் அவர் மகன் முதலில் வந்தான்... இப்போது மனைவியும் வந்து விட்டிருக்கிறாள்... அவர்கள் ராஜாங்கம் தான் இனி நடக்கப் போகிறது என்று நினைக்கையில் விஸ்வநாதனுக்கு வயிறு எரிந்தது.

அவரிடம் மீனாட்சி சொன்னாள். “என்னங்க மகேஷ் போன் செஞ்சா அத்தை வந்திருக்காங்கன்னு சொல்லிடுங்க...


விஸ்வநாதனுக்குத் தலையில் அடித்துக் கொள்ளத் தோன்றியது.

சிறிது நேரம் தூங்கி விட்டு சுறுசுறுப்புடன் எழுந்து வந்த ஆனந்தவல்லி பிறகு  மீனாட்சியை கனகதுர்காவிடம் பேச விடவில்லை. “நீ அப்புறமா உங்க அண்ணி கிட்ட பேசு மீனாட்சி. எனக்கு அவள் கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டி இருக்குஎன்று சொல்லி கனகதுர்காவைத் தனதறைக்குக் கூட்டிக் கொண்டு போய் விட்டாள்.

துர்கா உன் மகன் அந்தப் பொண்ணைக் காதலிக்கறதை கண்டுபிடிச்சியா இல்லையாஎன்பது தான் அவள் முதல் கேள்வியாக இருந்தது.

“அந்தப் பொண்ணு அவனை பாதிச்சிருக்கான்னு புரிந்துச்சு பாட்டி. ஆனா அது காதலா, காதல்னா எந்த அளவு இதெல்லாம் சரியா தெரியலை”  கனகதுர்கா சொன்னாள்.

உன் பையன் பாடிக் கேட்டிருக்கியோ?

“ரொம்ப சந்தோஷமாய் இருக்கறப்ப பாட்டை முணுமுணுப்பான். ஆனா அது அபூர்வம் தான்

ரெண்டு நாள் இங்க அவன் ஒரே பாட்டு தான். முதல் நாள் ஏதோ இங்கிலீஷ் பாட்டு பாடினான். ரெண்டாவது நாள் தமிழ்ப் பாட்டுப் பாடினான்... முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிஞ்சுகிட்டே இருந்துச்சு. நான் அவனை அந்த அளவு சந்தோஷமாய் பார்த்ததே இல்லை.  அந்தப் பொண்ணு வீட்டுக்கு அவன் போயிட்டு வந்ததுக்கப்பறம் தான் இதெல்லாம். ஆனா அதுக்கப்பறம் எல்லாம் நின்னு போச்சு. ரெண்டு மூணு நாள் அவனைப் பார்க்கவே சகிக்கலை.... பாட்டும் இல்லை...பல்பும் இல்லை... என்னடான்னு கேட்டேன். அவன் எங்கே என் கிட்ட பிடி குடுத்துப் பேசறான்... அப்புறம் இந்தப் பொண்ணு இங்கே பரமேஸ்வரனைப் பார்க்க வந்துச்சு. அப்ப தான் இவனோட நடவடிக்கை எல்லாம் பார்த்து கண்டுபிடிச்சேன்....

கனகதுர்காவிற்கு அவன் விஷாலி வீட்டுக்குப் போய் விட்டு வந்த பிறகு பேசுகையில் விஷாலியைப் பற்றி பேசின போது அவன் குரலில் கூடுதலாக ஒரு குதூகலம் இருந்தது மறுபடியும் நினைவுக்கு வந்தது. மறுநாள் கூட அனாதாசிரமம் போய் வந்ததை விவரிக்கையில் விஷாலி பற்றி மிக நெருக்கமாக அவன் பேசியது போல் இருந்தது. ஆனால் அதற்குப் பின்  அவன் அவளைப் பற்றிப் பேசவே இல்லை. எல்லாம் என் கற்பனை தானோஎன்று எண்ணிய கனகதுர்கா பின் அதை மறந்து விட்டிருந்தாள்.  இப்போது தான் அது கற்பனை அல்ல என்று புரிகிறது.

ஆனந்தவல்லி சொன்னாள். “அவங்க ரெண்டு பேரும் நடந்துக்கறதைப் பார்த்தா அந்தப் பொண்ணு மேல தான் ஏதோ தப்பிருக்கிற மாதிரி தெரியுது. ஆனா அந்தப் பொண்ணு இப்ப அதுக்காக வருத்தப்படற மாதிரியும் தெரியுது. ஆனா உன் பையன் லேசுப்பட்டவன் இல்லையே. இன்னும் கோவமாவே இருக்கிறான்.... நீ தான் ஏதாவது செஞ்சு அவன் மனசை மாத்தி சட்டுபுட்டுன்னு அவன் கல்யாணத்துக்கு சீக்கிரம் ஏற்பாடு செய்யணும்...

ஆனந்தவல்லி உடனடியாக கல்யாணம் வரைக்கும் போனது கனகதுர்காவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் சொன்னாள். “பாட்டி அவனை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி கட்டாயப்படுத்தினா அவன் பிடிவாதம் அதிகம் தான் ஆகும்.... ரொம்பவே ரோஷக்காரன்....

ஆனந்தவல்லி பெருமையும் ஆதங்கமும் கலக்கச் சொன்னாள். “பார்க்க தான் அவன் என் புருஷன் மாதிரி. ரோஷத்துல என்னை மாதிரி. நான்  அப்படி தான் இருந்தேன். எங்கப்பாவை படாதபாடு படுத்தி இருக்கேன்.... என் புருஷனையும் தான்... என்ன புத்தி சொன்னாலும் என் தலையில ஏறாது.... ஆனா அவன் என்னை விடப்பரவாயில்லை... நான் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்... அவன் ரொம்ப நேசிக்கிறவங்க சொன்னா கேட்பான்... முக்கியமா நீ சொன்னா கேட்பான்... உன் மேல உயிரையே வச்சிருக்கான்....

ஈஸ்வர் சொல்லிக் கேட்கிற ரகம் அல்ல என்று கனகதுர்கா சொன்னாலும் ஆனந்தவல்லி ஒத்துக் கொள்ளவில்லை. குறைந்தபட்சம் அவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்றாவது கனகதுர்காவிற்குத் தெரியும் என்று நம்பிய அவள் அதையாவது செய்யச் சொன்னாள்.

“உண்மையாய் அவன் காதலிச்சா அவனை யாரும் வழிக்குக் கொண்டு வரணும்னு இல்லை பாட்டி. அந்த உண்மைக்காதலே அதைச் செஞ்சுடும். நீங்க கவலைப்படாதீங்க

ஆனந்தவல்லி கனகதுர்காவின் கைகளைப் பிடித்துக் கொண்டு குரல் கரகரக்கச் சொன்னாள். “உண்மை தான் துர்கா. இல்லைங்கலை. ஆனா காலம் என் பக்கம் இல்லைம்மா. உன் மகன் கோபம் தானாய் குறைய காலம் நிறைய ஆகும். அது வரைக்கும் நான் இருக்க மாட்டேன். பசுபதி என்னைக்குப் போயிட்டானோ அப்பவே நான் பாதி போயிட்டேன். உன் மகனைப் பார்த்த பிறகு மீதியை கொஞ்ச காலம் தக்க வைக்க போராடிகிட்டு இருக்கேன்... வாழ்க்கைல ஒரு பிடிப்பு வந்திருக்கு.... அவரே இவனாய் வந்த மாதிரி ஒரு பாசம் ஏற்பட்டிருக்கு.... அவன் கல்யாணம், அவனுக்கொரு குழந்தை, அது கூட கொஞ்ச நாள்னு பேராசை வந்திருக்கு.... அந்தப் பொண்ணு நல்ல பொண்ணு... ஆனா அதுக்கு அவனை எப்படி சமாளிக்கணும்னு கூடத் தெரியலை... நீ தான் ஏதாவது வழி செய்யணும்...


தென்னரசுக்கு இப்போது தான் பயம் பூரணமாய் விலகி விட்டிருந்தது. சின்ன வயதில் இருந்தே அவரை ஈர்த்திருந்த விசேஷ மானஸ லிங்கம் கடவுளா இல்லை சித்தர்கள் சேமித்து வைத்திருந்த விசேஷ சக்தியா என்பதில் அவருக்கு எப்போதுமே குழப்பம் தான் இருந்தது. இப்போது அது கடவுள் இல்லை என்று தெளிவாகப் புரிந்தது.

சங்கர் இந்தியாவில் இருந்த காலத்தில் அது சித்தர்கள் பூஜித்த லிங்கம் என்பது சங்கருக்கே தெரிந்திருக்கவில்லை. அதனால் அந்தத் தகவல் தென்னரசுக்கும் தெரியவில்லை. அந்த சிவலிங்கம் ஒளிர்ந்ததை ஒரு முறை பார்த்திருந்ததால் அதைப்பற்றி மட்டும் அவர்கள் இருவரும் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டார்கள். ஒரு சித்தர் கொண்டு வந்து தந்த அந்த சிவலிங்கத்தில் ஏதோ விசேஷ சக்தி இருக்கிறது என்பது மட்டும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

அவர்கள் இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சங்கரும் அவரும் சேர்ந்து படிக்க தோட்ட வீட்டிற்கு அடிக்கடிப் போவதுண்டு. அந்தத் தோட்டத்தில் யார் தொந்தரவும் இல்லாமல் அவர்களால் அமைதியாகப் படிக்க முடிந்தது. பசுபதி அவருடைய தனி உலகத்தில் எப்போதும் இருப்பவர் என்பதால் அவரும் அவர்கள் படிப்பிற்கு இடைஞ்சலாக இருக்கவில்லை.

அப்படி ஒரு விடுமுறை நாளில் சங்கரும் அவரும் அங்கு படிக்கலாம் என்று தீர்மானமாகி இருந்தது. தென்னரசு படிக்கக் கிளம்பி தோட்ட வீட்டை அடைந்த போது அப்போதைய தோட்டக்காரன், தற்போதைய தோட்டக்காரன் முனுசாமியின் மாமன், சொன்னான். “சங்கர் தம்பி போன் செஞ்சார். அவர் படிக்க வரலையாம்... அவங்கப்பா கூட எங்கேயோ வெளியே போறாராம். சொல்லச் சொன்னார்.

அது செல் போன் இல்லாத காலமாய் இருந்ததால் சங்கருக்கு தென்னரசுவை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடிந்திருக்கவில்லை. என்ன செய்வது என்று யோசித்த தென்னரசு, வந்ததற்குப் படித்து விட்டே போகலாம் என்று முடிவு செய்து உள்ளே போனார்.

தோட்டக்காரன் சொன்னான். “....பெரியவர் ஏதோ தியானத்துல இருக்கார் போல் இருக்கு. போன் அடிச்சது அவர் காதுலயே விழலை. நான் தான் போய் போன் எடுத்துப் பேசினேன். அது கூட அவருக்குத் தெரியலை

பசுபதியின் தியானம் அவ்வளவு சீக்கிரம் கலைக்க முடியாதது என்பதை முதலிலேயே தென்னரசுவும் அறிந்திருந்தார்.

தோட்டத்தில் அமர்ந்து அவர் படிக்க ஆரம்பிக்க தோட்டக்காரக் கிழவன் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தான். அரை மணி நேரம் கழித்து தாகம் எடுக்க தென்னரசு தண்ணீர் குடிக்க வீட்டுக்குள் போனார். அந்த நேரத்தில் தான் அந்த அபூர்வக் காட்சியைத் தென்னரசு பார்க்க நேர்ந்தது. அவருக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.


பசுபதி சிவலிங்கத்தின் அருகே ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருக்க அந்த சிவலிங்கத்தின் மேலே ஒரு பிரம்மாண்டமான சக்தி தாண்டவம் நடந்து கொண்டிருந்தது....

(தொடரும்)
என்.கணேசன்


15 comments:

  1. தப்பான மனசு, தப்பான அறிவு, தப்பான ஞானம் இது மூணும் போதாதா உலகத்தை அழிக்கிறதுக்கு?”

    காப்பாற்றவும் சில சக்திகள் முயற்சிக்கிறதே..!
    நல்லதே நடக்கட்டும்..!

    ReplyDelete
  2. மிக மிக அருமையாக சென்றுகொண்டு இருக்கிறது. ... .
    அற்புதமான வசனங்கள் இல்லை, உண்மையை உணர்த்த கூடிய சம்பவங்கள். ... . ஆயிரம் கோடி வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். ... .

    ReplyDelete
  3. This episode is really very interesting & explaining some concepts which we are following/doing in our day to day activities....
    Waiting for the next episode :)

    ReplyDelete
  4. அர்ஜுன்December 12, 2013 at 7:54 PM

    அருமை. எல்லா கோணங்களிலும் அருமை. அடுத்த வியாழன் சீக்கிரம் வரட்டும்

    ReplyDelete
  5. sir ovoru thursday epa varumnu iruku

    ReplyDelete
  6. லக்‌ஷ்மிDecember 12, 2013 at 10:18 PM

    ஆனந்தவல்லி கனகதுர்கா இருவர் கேரக்டர்களும் யதார்த்தம். பேரனிடம் கல்யாணம் திணிக்கப்பார்க்கும் இந்தியா பாட்டி, சுதந்திரம் கொடுத்துப் பழகி வற்புறுத்த தயங்கும் அமெரிக்காவில் இருக்கும் அம்மா குணங்கள் இந்த அத்தியாய பேச்சில் யதார்த்தமாய் சொல்லி இருக்கிறீர்கள். ரோஷத்தில் என்னை மாதிரின்னு சொல்கிற இடத்திலும் தொடர்ந்து பேசுகிற பேச்சிலும் ஆனந்தவல்லி பர்ஃபெக்ட்.

    ReplyDelete
  7. STUNNING TURNAROUNDS.... EXCELLENT GOING... Sir...

    WISHES FOR THE NexT Episode ..!!!

    awaiting eagerly....,

    ReplyDelete
  8. Ganesan Sir, As usual very nice. Romba curiousa iruku. How many more episodes? solalamna solunga.. It is okay if you can't say it.

    ReplyDelete
    Replies
    1. Ooops.. sir.. only.. 15* .., i was expecting.. about 140 some how. Atleast like அமானுஷ்யன் ..120*,

      சித்தர்கள் அவ்வுளவு எளிதில் முடித்து விடுவார்களா...

      lets c..., Its fine sir.. just shared my thoughts

      Delete
  9. Going great Ganeshan Sir... Keep rocking !!!

    waiting for next episode...

    ReplyDelete
  10. Really fantastic story narration. Like u r writing.....

    ReplyDelete
  11. Enna ezhurathunne theriyala, ithuvarai ippadi oru novel padichathe illa, Ganesan sir u really great

    ReplyDelete
  12. I dont know what should I write, really wonderful, I never read such a novel, Ganesan sir, you are really great.

    ReplyDelete
  13. எழுத்து காட்சியமைப்பைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது...

    அருமையான கதையோட்டம்...

    ReplyDelete