குருஜி கணபதி முகத்தையே கூர்ந்து பார்த்தார். அந்த முகத்தில் களங்கமோ,
புத்திசாலித்தனமோ சிறிதும் தெரியவில்லை. புன்னகையுடன் கணபதியை வரவேற்றார். ”வா கணபதி பஞ்சமுக ஆஞ்சநேயர் தரிசனம் எப்படி இருந்துச்சு?”
”உங்க தயவுல எந்தக் குறையும் இல்லாமல் ஆஞ்சநேயர் தரிசனம்
நல்லா இருந்துச்சு குருஜி. இந்த ஏழைக்கு ஏ.சி கார் தேவை இருந்திருக்கலை. பஸ்லயே
போயிருந்திருப்பேன்....” கணபதி பணிவுடன் சொன்னான்.
குருஜி புன்னகையுடன்
சொன்னார். “நான் சொன்னேன்னு உன்னோட பிள்ளையாரைக் கூட விட்டுட்டு சிவலிங்கத்திற்கு
பூஜை செய்ய இங்கே வந்திருக்கே. உனக்கு நான் இது கூட செய்யலைன்னா எப்படி கணபதி.
எத்தனை நேரம் தான் நீ இங்கே போரடிச்சுப் போய் உட்கார்ந்திருப்பாய். அதான் போகச்
சொன்னேன். அந்தக் கார் வழியில ரிப்பேர் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன். எனக்கே
சங்கடமாயிடுச்சு....”
”அதுலயும் நல்லதே ஆச்சு குருஜி. அதனால எனக்கு ஒரு அண்ணன்
கிடைச்சாரு...”
முகத்தில் ஆச்சரியத்தைக் காண்பித்த குருஜி
கேட்டார். “அண்ணனா? அது யாரு?”
கணபதி உற்சாகமாய் ஈஸ்வரைச் சந்தித்த
விதத்தையும் அவன் தனக்கு பட்டு உடைகள் வாங்கித் தந்ததையும் விவரித்தான். அவன் மீது
வைத்த கண்களை எடுக்காமல் குருஜி மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
“...நான் வேண்டாம்னு எத்தனை சொல்லியும்
அவர் கேட்கலை. ‘நீ என்னை வேற மனுஷனாய் நினைக்கறியான்னு
கேட்டு வாயடைச்சுட்டார். என்னோட பிள்ளையாருக்கும் ஒரு பட்டு வேட்டி வாங்கித்
தந்தார். இன்னைக்கு என்னால உங்களுக்கும் ஈஸ்வர் அண்ணாவுக்கும் அனாவசிய செலவு.
எல்லார் கிட்டயும் வாங்கிகிட்டே இருக்கேன். எப்ப இதை எல்லாம் திருப்பித் தரப்
போறேன்னு தெரியலை...” சொல்லும் போது அவன் குரல் தழுதழுத்தது.
அவன் ஈஸ்வர்
அண்ணாவிடம் என்னவெல்லாம் பேசினான் என்பதை குருஜி துருவித் துருவிக் கேட்டு
தெரிந்து கொண்டார். அவன்
தன் கிராமத்து விலாசத்தை ஈஸ்வரிடம் தெரிவித்தது அவருக்கு அபாயத்தை எச்சரித்தது.
ஈஸ்வர் கணபதியின் பிள்ளையாரைப் பார்க்க வர முடிவது கஷ்டம் என்று சொன்னது சற்று
திருப்தியைத் தந்தாலும் கூட அவருக்கு நெருடலாகவே இருந்தது.
வாய் விட்டே குருஜி கேட்டார். “நீ இங்கே
சிவலிங்கத்திற்குப் பூஜை செய்யறதைச் சொல்லிடலையே”
“சொல்லலை. பிள்ளையாரோட அப்பாவுக்குப் பூஜை
செய்யறேன்னு சொன்னேனே ஒழிய எங்கேன்னு நான் சொல்லலை. அவர் யார் கிட்டயும் சொல்லப்
போக மாட்டார்னாலும் நீங்க சொன்னது ஞாபகம் வந்ததால் நான் சொல்லலை.”
தலையசைத்த குருஜி கணபதியைக் கூர்ந்து
பார்த்தபடி சொன்னார். “உன் கிட்ட இன்னைக்கு ஏதோ ஒரு பெரிய மாற்றம் தெரியுது கணபதி.
அது என்னன்னு எனக்கு சொல்ல வரலை. ஒரு அண்ணன் கிடைச்ச சந்தோஷமா இல்லை ஆஞ்சநேயரைப்
பார்த்த சந்தோஷமான்னு தெரியலை. ஆனா ஏதோ மாறின மாதிரி மட்டும் நிச்சயம் தெரியுது.”
கணபதி திடீர் என்று நினைவு வந்தவனாகச்
சொன்னான். “எனக்கு அந்த ஜவுளிக் கடையில ஷாக் அடிச்சுது. அதுகூட காரணமாய்
இருக்கலாம்...”
“ஷாக் அடிச்சுதா எப்படி?”
கணபதி தனக்கும் ஈஸ்வருக்கும் இடையே போகும் போது
தங்களைத் தொட்ட மனிதனைப் பற்றிச் சொன்னான். ”... அவர் தொட்டது
கரண்ட் கம்பி மேல பட்டது மாதிரி இருந்துச்சு. அப்படித்தான் ஈஸ்வர் அண்ணாவுக்கும்
இருந்துச்சுன்னு நினைக்கிறேன். நான் அந்த ஆள் முகத்தைக் கூடப் பார்க்கலை. நாங்க
சுதாரிக்கறதுக்குள்ள அந்த ஆள் மாயமா மறைஞ்சுட்டார். ஈஸ்வரண்ணா அப்பவே ஓடிப் போய்
பார்த்தார். அந்த ஆள் தெரியலை. ஈஸ்வரண்ணா கடைக்காரங்க கிட்ட எல்லாம் அந்த ஆளைப்
பத்தி கேட்டுப் பார்த்தார். யாருமே அவரை சரியா பார்க்கலை... எனக்கு கனவு மாதிரி
இருந்தாலும் இப்பவும் அந்த ஷாக் அடிச்ச உணர்வை மறக்க முடியலை.”
குருஜிக்கு சிறிது நேரம் எதுவும் பேச
முடியவில்லை. பேச முடிந்த போது கேள்விக்கணைகளால் கணபதியைத் துளைத்தெடுத்தார்.
கணபதியின் பதில்களை வைத்து அந்தக் காட்சியை நேரிலேயே பார்ப்பது போல் உணர்ந்த
அவருக்கு ஈஸ்வருக்கும் கணபதிக்கும் இடையே புகுந்து தொட்டு விட்டுப் போன ஆள் யார்
என்பதில் சந்தேகம் இருக்கவில்லை.
அடுத்ததாக அவர் கேள்விகள் கணபதியும்
ஈஸ்வரும் தொடப்பட்ட நேரத்தைப் பற்றியதாக இருந்தன. மிகச்சரியாக வினாடி துல்லியமாக
எந்த நேரம் என்பதைத் தெரிந்து கொள்ள குருஜி விரும்பினார். அந்த ஆள் தொட்டு
விட்டுப் போய் ஐந்து நிமிடங்களுக்குள் டிரைவர் அழைத்துப் போக வந்து விட்டான் என்று
கணபதி தெரிவிக்கவே மீதியை டிரைவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்த
அவர் கணபதிக்கு விடை கொடுத்தார்.
அவ்வளவாக சாமர்த்தியம் போதாத கணபதிக்கே
அவர் கேட்ட கேள்விகள் ஆச்சாரியத்தைத் தந்ததால் போவதற்கு முன் கேட்டான். ”ஏன் இவ்வளவு தூரம்
கேட்கறீங்க குருஜி?”
குருஜி கட்டாயமாய் புன்னகையை வரவழைத்துக்
கொண்டு சொன்னார். “வித்தியாசமாய் எதைக் கேட்டாலும் அதை ஆழமாய் புரிஞ்சுக்கற
வரைக்கும் என்னால் விட முடியாது கணபதி. உன் அனுபவம் வித்தியாசமாய் இருந்ததால் தான்
கேட்டேன்”
அதற்காக அந்த நேரத்தை ஏன் துல்லியமாக தெரிந்து
கொள்ள ஆசைப்படுகிறீர்கள், அந்த நேரத்தில் என்ன இருக்கிறது என்று கேட்கும் அளவு
புத்தி கூர்மை இல்லாத கணபதி குருஜி தந்த பதிலில் திருப்தி அடைந்தவனாக அவரை வணங்கி
விட்டுக் கிளம்பினான்.
அவன் போனவுடன் டிரைவரை அழைத்து கேள்விகள்
பல கேட்டு அந்த நேரத்தை சரியாகத் தெரிந்து கொண்ட குருஜி அவனை அனுப்பி விட்டு அவசர
அவசரமாய் பஞ்சாங்கத்தை எடுத்துப் புரட்டினார். அந்த நேரம் அபூர்வ சக்திகளின்
தீட்சைக்கோ, உபதேசத்துக்கோ பொருத்தமான மிகப் புனிதமான முகூர்த்த நேரம்.....
அதிர்ச்சியில் இருந்து மீள இந்த முறை
குருஜிக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. கணபதியை சூழ்ந்திருந்த சக்தி வட்டம் எப்படி
வந்ததென்று அவருக்கு இப்போது புரிந்தது....
அந்த நேரத்தில் குருஜியின் பர்சனல்
செல்போன் இசைத்தது. ஜான்சன் தான் பேசினார். “குருஜி நான் ஓட்டலில் இருந்து
பேசுகிறேன். பத்து நிமிஷங்களுக்கு முன் தான் வந்து சேர்ந்தேன். உங்களை சந்திக்க
வரலாமா?”
”வா” என்று சுருக்கமாகச் சொல்லிய குருஜி முக்கால் மணி நேரம்
கழித்து ஜான்சன் வந்து சேரும் வரை ஆழ்ந்த சிந்தனையிலேயே இருந்தார். எப்போதுமே
தெளிவாகவும் சக்தி பிரவாகமாகவும் இருக்கும் குருஜி அன்று ஆழ்ந்த யோசனையுடனும், களைத்துப் போயும் இருந்ததாக ஜான்சனுக்குத் தோன்றியது.
“என்ன குருஜி ஏதாவது பிரச்சினையா?” என்று ஜான்சன் கேட்டார்.
”எதுவுமே பிரச்சினை இல்லை ஜான்சன். எல்லாமே சில
சூழ்நிலைகள் தான். சமாளிக்கத் தெரியாத வரை பிரச்சினைகள் போல தெரியலாம்.
சாமர்த்தியமாக சமாளிக்க முடிந்தால் அந்த சூழ்நிலைகள் நமக்கு அனுகூலமாய் கூட மாறலாம்....
இது பற்றி அப்புறம் சொல்கிறேன். மும்பையில் பாபுஜியுடன் சந்திப்பு எப்படி
இருந்தது? அதை முதலில் சொல்”
ஜான்சன் எல்லாவற்றையும் சொன்னார். முகம்
தெரியாத அறுவர் பற்றி சொன்ன போதும் குருஜி எந்த ஆச்சரியத்தையும் காட்டாததைப்
பார்த்த போது அந்த அறுவர் பற்றி குருஜி முன்பே அறிவார் என்பது புரிந்தது. குருஜியை
நம்பிய அளவுக்கு அவர்கள் தன்னை நம்பவில்லை அதனால் தான் இருட்டில்
இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கையில் அவருக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அவர் முகபாவனையிலேயே அதை உணர முடிந்த
குருஜி ஆறுதல் படுத்தும் விதமாகச் சொன்னார். “ஜான்சன், சில விஷயங்கள் தெரியாமல்
இருப்பது தான் நல்லது. அது தான் பாதுகாப்பு”
”யார் அவர்கள்?” பதில் வரும் என்று நம்பிக்கை இல்லாவிட்டாலும்
ஜான்சனுக்குக் கேட்கத் தோன்றியது.
குருஜி சொன்னார்.
“இந்த ப்ராஜெக்டின் ஸ்பான்சர்ஸ். வேறு வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். அந்தந்த
நாடுகளில் சக்தி வாய்ந்தவர்கள். நாளைய உலகைத் தீர்மானிக்கப் போகிறவர்கள்.....
உன்னிடம் ஒன்று கேட்க நினைத்து இருந்தேன்.. நீ அந்த மீட்டிங்கில் பாபுஜியின்
அப்பாவைப் பார்த்தாயா?”
”அந்த ஆறு பேரில் ஒருவராக அவர் உட்கார்ந்திருந்தால்
எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. வெளிச்சத்தில் பாபுஜியைத் தவிர வேறு யாரும்
இருக்கவில்லை.”
“அந்த ஆள் சக்கர நாற்காலியில் தான்
உட்கார்ந்திருப்பார். மங்கலான வெளிச்சத்தில் கூட அது உனக்குத் தெரியாமல் போகாது.”
“இல்லை குருஜி. சக்கர நாற்காலியில் யாரும்
இருக்கவில்லை. ஏன் கேட்கிறீர்கள்?”
”அவர் ஆரம்பத்தில் இருந்தே இந்தப் ப்ராஜெக்ட் சரிவர
முடியுமா என்பதில் சந்தேகமாக இருந்தவர். பாபுஜி அவர் அபிப்பிராயத்திற்கு மதிப்பு
தருபவன். அதனால் தான் நீ பேசுவதைக் கேட்க அவரை அவன் அழைத்து வந்தானா
என்று கேட்டேன்.”
ஜான்சனிற்கு பாபுஜியின்
தந்தையார் பற்றித் தெரிந்து கொள்ள பெரிய ஆர்வம் இருக்கவில்லை. அவர் ஆர்வம்
முழுவதும் விசேஷ மானஸ லிங்கம் மீது இருந்தது. அதனால் பரபரப்புடன் கேட்டார். ”குருஜி சிவலிங்கத்துடன் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?”
குருஜி
சிவலிங்கத்திடம் பேசிய பேச்சுக்களை ஜான்சனிடம் சொல்லவில்லை. மற்றபடி தன் அனுபவத்தை
முழுமையாகச் சொன்னார். ஒளி வெள்ளத்தில் மிதந்து நிற்பது போல் காட்சி அளித்த விசேஷ
மானஸ லிங்கம் காந்தமாய் தன்னை இழுத்ததையும், நெருங்க நெருங்க அவர் மனதையே கரைக்கப்
பார்த்ததையும் சொன்ன போது ஜான்சனுக்கு பிரமிப்பாய் இருந்தது.
குருஜியின் மன
உறுதியை ஜான்சன் நன்றாக அறிவார். சொல்லப் போனால் அந்த அளவு மன உறுதி உள்ள எந்த
மனிதரையும் இது வரை ஜான்சன் தன் வாழ்நாளில் இது வரை பார்த்தது இல்லை. அவரையே
ஆட்கொள்ள முடிந்த அந்த சிவலிங்கம் எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று
எண்ணிய ஜான்சன் கேட்டார். ”இப்படி இருந்தால் எப்படி ஆராய்ச்சி செய்ய முடியும்?”
”சிவலிங்கத்தில் இருந்து பன்னிரண்டு அடிகள் தள்ளி
இருக்கிற வரை பிரச்சினை இல்லை. ஆராய்ச்சிகளை அந்தத் தூரத்தில் இருந்து கூடத்
தாராளமாகச் செய்யலாம்....”
“நாம் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துபவர்கள்
அந்த சிவலிங்கத்தின் ஒளியைப் பார்க்க முடியுமா?”
”அபூர்வமாய் சில சமயங்களில் ஓரிரண்டு வினாடிகள் பார்க்க
முடிந்தாலும் முடியலாம். ஆனால் அதற்கு மேல் பார்க்க முடியாது. அதனால் அவர்களுக்கே
தாங்கள் பார்த்தது ஒளி தானா இல்லை பிரமையா என்ற சந்தேகம் வந்து விடும். அதனால் கவலைப்படாதே....”
”சரி... கணபதியை நாம் ஆராய்ச்சியில் பயன்படுத்த
முடியுமா?”
“அவனை ஏதாவது சொல்லி நம்ப வைத்து
ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவது ஒன்றும் கஷ்டமல்ல. ஆனால் இப்போது அவன் எந்த அளவுக்கு
ஆராய்ச்சிக்குப் பயன்படுவான் என்பது தான் கேள்விக் குறியாக இருக்கிறது.”
“ஏன் குருஜி?”
குருஜி கணபதி-ஈஸ்வர் சந்திப்பையும் சித்தர்
அவர்களைத் தொட்டு விட்டுப் போனதையும் சொல்லி விட்டுத் தொடர்ந்தார். “இப்போது
கணபதியைச் சுற்றியும் ஒரு சக்தி வட்டம் தெரிகிறது. அது அந்த சித்தர் வேலை தான்
என்பதில் சந்தேகம் இல்லை. இப்போதைய கேள்வி அந்த சக்தி வட்டம் என்ன எல்லாம்
செய்யும், என்ன எல்லாம் செய்யாது என்பது தான்....”
”அப்படின்னா அந்த ஈஸ்வரைச் சுற்றியும் அந்த சக்தி வட்டம்
இருக்கலாமா?”
“இருக்கலாம். அந்த சித்தர் அவர்களைத் தொட்ட
நேரம் ஒரு அபூர்வமான முகூர்த்த நேரம். அது போன்ற முகூர்த்த நேரத்தை தீட்சை தரவும்
மந்திர உபதேசம் தரவும் தேர்ந்தெடுப்பதுண்டு ...”
சிறிது நேரம் ஜான்சன் பேசும் சக்தியையே
இழந்தது போல இருந்தது. அவருக்கு ஏதேதோ புரிகிறது போலவும் இருந்தது. ஒன்றுமே
புரியாதது போலவும் இருந்தது. அவர் முகத்தில் கவலையின் ரேகைகள் படர்ந்தன.
“என்ன யோசிக்கிறாய் ஜான்சன்?” குருஜி கேட்டார்.
“நம் எதிரிகளின்
பட்டியலில் ஈஸ்வர் இருப்பதை நான் விரும்பவில்லை குருஜி. நான் அன்றைக்கு உங்களிடம்
சொன்னதன் பிறகு நீங்கள் அவனைப் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டும் இருப்பீர்கள்.
அதனால் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். அந்த சித்தர் அவனையும் நமக்கு
எதிராக பயன்படுத்த நினைத்தால் அவன் அவருக்குப் பயங்கரமான ஆயுதமாவான். அவனை
கணபதியைப் போல் நாம் அலட்சியப்படுத்தி விட முடியாது. பசுபதி அவன் பெயரைச் சொல்லி
விட்டுப் போனது, அவன் கணபதியை சந்தித்தது, சித்தர் அவனைத் தொட்டு விட்டுப் போனதில்
அவனுக்கு ஏதாவது சக்தி கூடி இருந்தாலோ, சக்தி வட்டம் சேர்ந்திருந்தாலோ, அது- இந்த
மூன்றுமே எனக்கு சரியாகப் படவில்லை....”
”ஜான்சன் நீ மனோதத்துவம் படித்தவன். அதனால் உனக்குத்
தெரியாதது இல்லை. மனிதன் தைரியத்தை இழக்க ஆரம்பிக்கும் போது எல்லாவற்றையும் இழக்க
ஆரம்பிக்கிறான்....”
ஜான்சன் பலவீனமாகச் சொன்னார். “புரிகிறது.
ஆனால் என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?”
“எதற்குப் பயப்படுகிறோமோ அதை நேரடியாக
உடனடியாகச் சந்திக்கலாம் என்கிறேன். பயத்தை விரட்ட அதை விட சிறந்த வழி என்ன இருக்க
முடியும்?”
“எனக்குப் புரியவில்லை”
“ஈஸ்வரை நேரில் சந்திக்கலாம் என்று சொல்கிறேன்.”
“நான் அவனைச் சந்திக்க வேண்டுமா?” ஜான்சன் திகைப்புடன் கேட்டார்.
“உன்னை இந்தியாவில்
பார்ப்பது அவனுக்கு பல சந்தேகங்களை இப்போதில்லா விட்டாலும் பிறகாவது கிளப்பலாம்.
அதனால் நான் அவனைச் சந்திக்கிறேன். அவனை நேரில் எனக்கும் பார்க்க வேண்டி இருக்கிறது.
அவனைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அவன் இந்த
வேதபாடசாலைக்கு வந்து பார்க்க அனுமதி கேட்டு இருக்கிறான். நம் ஆராய்ச்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்னால் அவனை நான் சந்திப்பது நல்லது
என்று தான் நானும் நினைக்கிறேன். அவனை
நாளைக்கே வரச் சொல்கிறேன். நீ கவலையை விடு....”
அந்த சிவலிங்கத்தையே பார்த்து எடை போட
முடிந்த குருஜிக்கு ஈஸ்வரை எடை போடுவது ஒரு பெரிய விஷயம் அல்ல என்ற நம்பிக்கை
ஜான்சனுக்கு இருந்தது. அது மட்டுமல்ல
ஈஸ்வரை எப்படிக் கையாள்வது என்பதையும் குருஜி சீக்கிரமே கண்டுபிடித்து விடுவார்.
ஜான்சன் முகத்தில் சற்று பிரகாசம் வந்தது.
(தொடரும்)
-
என்.கணேசன்
இத்தனை சுவாரசியமான பரபரப்பான நாவலை நான் சமீப காலத்தில் படித்ததில்லை. ஆன்கிலத்தில் டாவின்சி கோட் படிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் போல் இருக்கிறது. பாராட்டுகள் கணேசன் சார்.
ReplyDelete-விஜய் தங்கராஜ்
கதை நாயகியையும்,நாயகனையும் இரண்டு வாரமாக சந்திக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு :(
ReplyDeleteகுருஜியும்,ஈஸ்வரும் சந்திக்கும் நேரத்தை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்!
அபூர்வ சக்திகளின் தீட்சைக்கோ, உபதேசத்துக்கோ பொருத்தமான மிகப் புனிதமான முகூர்த்த நேரம்.....
ReplyDeleteஅற்புதமான திருப்பம் ..!
Eagerly waiting for Guruji and Eswar Meeting....
ReplyDeleteவழக்கம் போல் சிறிதும் குறையாத பரபரப்பு......மின்னல் வேகம்எடுக்கும் கதையோட்டம்...
ReplyDeleteஅசத்தல்....அசத்தல்...
வாழ்த்துகள்....
வழக்கம்போல் இன்னும் ஒரு வாரம் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.. :(
சுவாரஸ்யத்துடன் செல்கிறது... தொடர்கிறேன்...
ReplyDeleteVery interesting and thrilling. Going in good speed. But waiting till Thursday is very difficult for us.
ReplyDeleteஅற்புதமாக செல்கின்றது .தொடரட்டும்
ReplyDeleteகாத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறது... விறுவிறுப்பான நடை. தொடருங்கள்...
ReplyDeleteகதை நாயகியையும்,நாயகனையும் இரண்டு வாரமாக சந்திக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருக்கத் தான் செய்கிறது
ReplyDeleteஎதுவுமே பிரச்சினை இல்லை. எல்லாமே சில சூழ்நிலைகள் தான். சமாளிக்கத் தெரியாத வரை பிரச்சினைகள் போல தெரியலாம். சாமர்த்தியமாக சமாளிக்க முடிந்தால் அந்த சூழ்நிலைகள் நமக்கு அனுகூலமாய் கூட மாறலாம்.
ReplyDeleteஎனக்கு இருந்த பிரச்சனைகளுக்கு கிடைத்த வரி..
நன்றி.