பேரனையே பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தவல்லி அவனிடம் ஏற்பட்ட திடீர் மாற்றத்தைக் கண்டவுடன் கரிசனத்துடன் கேட்டாள்.
“என்னடா ஆச்சு?”
ஈஸ்வர் தன்னை உடனடியாக சுதாரித்துக்
கொண்டான். “ஒன்னுமில்லை”. தனக்கேற்பட்ட
உணர்வு நிதானமாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய ஒன்று என்று நினைத்த அவன் அதை
ஆனந்தவல்லிக்கு விளக்க முற்படவில்லை. ஒன்றுமே நடக்காதது போல் சகஜ நிலைக்கு மாறிய
அவன் “சரி பாட்டி, சிவலிங்கத்தைப் பத்தி உங்களுக்கு என்ன எல்லாம் தெரியுமோ,
அதையெல்லாம் சொல்லுங்க” என்றான்.
ஆனந்தவல்லிக்கு அவன்
பாட்டி என்றழைத்ததில் பரம திருப்தி. ஆனால் அதைக் காண்பித்துக் கொள்ளாமல் சொன்னாள்.
“உண்மையை சொன்னா அந்த சிவலிங்கத்தைப் பத்தி பேசக் கூட எனக்குப் பிடிக்கலை. அந்த
போலீஸ் அதிகாரி வந்து கேட்டப்ப கூட நான் வேண்டா வெறுப்பா தான் சொன்னேன். இப்ப
நீயும் அதையே கேட்கிறே”
”அந்தப் போலீஸ் அதிகாரி கிட்ட என்ன எல்லாம் சொன்னீங்களோ
அதையே என் கிட்டயும் சொல்லுங்க”
ஆனந்தவல்லி ஒருவித சலிப்புடன்
எல்லாவற்றையும் சொன்னாள்.
எல்லா தகவல்களையும் ஒருவித பிரமிப்புடன்
கேட்டுக் கொண்ட ஈஸ்வர் கேட்டான். “அந்த ரகசியக்குழு பத்தி வேறெதுவும் உங்க
வீட்டுக்காரர் உங்க கிட்ட சொல்லலையா?”
”நான் தான் அவரை இது சம்பந்தமா பேசவே விடலையே?
விட்டிருந்தா சொல்லி இருப்பாரோ என்னவோ?”
ஈஸ்வர் ஆழமாக யோசித்தான். ஆனந்தவல்லி
கேட்டாள். “என்னடா யோசிக்கிறே?”
“அப்படி ஒரு ரகசிய குழு உண்மையிலேயே
இருந்திருந்தா அது இப்ப என்ன பண்ணிகிட்டிருக்குன்னு யோசிக்கிறேன். இந்தக் கொலை
நடக்கவும், சிவலிங்கம் திருட்டுப் போகவும் ஏன் அனுமதிச்சுதுன்னு யோசிக்கிறேன்”
ஆனந்தவல்லி யோசிக்காமல் சொன்னாள். “அந்த
ரகசிய குழுவே ஒரு கற்பனைன்னு நான் சொல்றேன். உன் பெரிய தாத்தா வெளுத்ததெல்லாம்
பாலுன்னு நினைக்கிறவர். கொடுக்கிறப்ப அந்த சித்தர் சொல்லி இருப்பார். இவர் நம்பி
இருப்பார்.”
”அந்த சித்தரை நீங்க பார்த்திருக்கீங்களா? அவரை உங்க
ரெண்டாவது பிள்ளை சமீபத்தில் பார்த்தேன்னு சொல்றதை நீங்க நம்பறீங்களா?”
ஆனந்தவல்லிக்கு அவன் பரமேஸ்வரனை இரண்டாவது
பிள்ளை என்று சொன்னது பிடிக்கவில்லை. மறுபடியும் அவனை முறைத்தாள். அவள் எதற்கு
முறைக்கிறாள் என்பதை உடனடியாகப் புரிந்து கொண்ட ஈஸ்வர் இறுகிய முகத்துடன்
கேட்டான். “நான் இங்கே இருக்கவா? இல்லை ஏதாவது ஓட்டல்ல போய் தங்கிக்கவா?”
அவளை பாட்டி என்று அழைத்தது போல
பரமேஸ்வரனைத் தாத்தா என்று அழைக்க ஈஸ்வர் தயாரில்லை என்பது
சந்தேகத்திற்கிடமில்லாமல் புரிய ஆனந்தவல்லி பெருமூச்சு விட்டாள். வெளியே
நின்றிருந்த மீனாட்சிக்கும் வருத்தமாய் இருந்தது. ‘அப்பா கொஞ்சமாவது இறங்கி
வந்தால் ஒழிய இவன் மாற மாட்டான். அவரோ உயிரே போனாலும் இறங்கி வர மாட்டார். அண்ணா!
உன் மகனையும் நம்ம அப்பாவையும் எப்படி தான் சேர்த்து வைக்கிறது நீயே சொல்லு” என்று அண்ணனிடம் மானசீகமாய் கேட்டாள்.
ஆனந்தவல்லி சொன்னாள்.
“பரமேஸ்வரன் பார்த்தேன்னு சொன்னா பார்த்து தான் இருப்பான். அந்த சித்தர் இன்னும்
உயிரோட தான் இருக்கணும். நான் அந்த ஆளை ஒரு தடவை கூட பார்த்தது கிடையாது.
பார்க்கக் கிடைச்சா நாக்கை பிடுங்கற மாதிரி கேட்டிருப்பேன். “. அவனை சாக விட்டுட்டு
நீ இன்னும் உயிரோட இருக்கியே ஏன்யா இப்ப உனக்கு திருப்தியா”ன்னு.”
மீனாட்சி உள்ளே நுழைந்தபடி சொன்னாள்.
“அப்படி எல்லாம் சித்தர்களை சொல்லக்கூடாது பாட்டி”
ஆனந்தவல்லி பேத்தியிடம் எரிந்து
விழுந்தாள். “சித்தராவது புத்தராவது. என் வயித்தெரிச்சலை யார் கொட்டிகிட்டாலும்
அப்படி தான் கேட்பேன். நானே இன்னும் இருக்கறப்ப உங்க பெரியப்பாவுக்கு சாகிற வயசாடி”
ஈஸ்வர் புன்னகையுடன் சொன்னான். “நீங்க
இருக்கறதுக்கு அந்த சித்தர் என்ன பண்ணுவார் பாட்டி? பாவம்!”
”கடன்காரா, உனக்கும் நான் இருக்கிறது உறுத்துதா” என்று ஆனந்தவல்லி அவன் காதைப் பிடித்துத் திருகினாள். ஏதாவது ஒரு
சாக்கிலாவது அவனைத் தொட்டுப் பார்க்க ஆவலாக அவளுக்கு இருந்தது.
நாற்காலியை
பின்னுக்கு தள்ளி அவள் கைக்கெட்டாத தூரத்தில் உட்கார்ந்து கொண்ட ஈஸ்வர் சிரித்துக்
கொண்டே அருகே நின்றிருந்த மீனாட்சியிடம் ரகசியமாக சொன்னான். ”கிழவி நல்லா
ஸ்ட்ராங்கா தான் இருக்கு“.
மீனாட்சி பாட்டியைப்
பார்த்து புன்னகைக்க ஆனந்தவல்லி கேட்டாள். “என்னடி சொல்றான் அவன்?”
”நீங்க ரொம்ப தங்கமானவங்கன்னு சொன்னேன். அதை விடுங்க.
நீங்க கடைசியா போய் உங்க மகனைப் பார்த்தீங்களே அவர் என்ன சொன்னார்?”
”அப்பவும் முதல்ல அவனை எங்கே நான் பேச விட்டேன். ’பெத்த தாயை பார்க்கணும்னு இப்ப தான் தோணிச்சாடா’ன்னு ஆரம்பிச்சவ. நல்லா
திட்டிட்டேன்.” சொல்லும் போது அவள் குரல் கரகரத்தது.
“நீங்க திட்டினதுக்கு அவர் எதுவும்
சொல்லலையா?”
ஆனந்தவல்லி பெருமையுடன் சொன்னாள். “என்
வீட்டுக்காரரும் சரி, என் குழந்தைகளும் சரி என்னை எதிர்த்துப் பேச மாட்டாங்க....” சொல்லி விட்டு அவனைப் பார்த்து பொய்யான கடுமையுடன் சொன்னாள்.
“எதுக்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசற உன்னை மாதிரி கிடையாது....”
”பிரச்சினையே அது தான். ஒராளாவது கண்டிச்சிருந்தா
கொஞ்சமாவது உங்களை அடக்கி வச்சிருந்திருக்கலாம்” என்று ஈஸ்வர்
புன்னகையுடன் சொல்ல ஆனந்தவல்லி செல்லமான கோபத்துடன் கொள்ளுப் பேரனைப் பார்த்தாள்.
மீனாட்சி
ஆச்சரியத்துடன் அவர்கள் இருவரையும் பார்த்தாள். இது நாள் வரை ஆனந்தவல்லியிடம்
யாரும் இப்படி பேசியதும் இல்லை. பேச அவள் அனுமதித்ததும் இல்லை. ஏன் பரமேஸ்வரன் கூட
அவளிடம் அப்படி உரிமை எடுத்துக் கொண்டு பேசியதாக அவளுக்கு நினைவில்லை....
ஈஸ்வர் சொன்னான்.
“சரி பாட்டி நம்ம கதையை அப்பறம் வச்சுக்குவோம். உங்க மகன் பேசறப்ப என்ன சொன்னார்?”
ஆனந்தவல்லியின் முகம் மிகவும்
மென்மையாகியது. “உடம்பை நல்லா பார்த்துக்க சொன்னான். என்னென்ன சாப்பிடணும்... எப்ப
எப்ப சாப்பிடணும்னு பொறுமையா சொன்னான்...”
“சிவலிங்கத்தைப் பத்தி எதாவது சொன்னாரா?”
“சொல்லி இருந்தா, இப்ப உன் காதைப் பிடிச்ச
மாதிரி அவன் காதையும் பிடிச்சிருப்பேன்”
ஈஸ்வர் தன் காதைத் தடவிக் கொண்டே கேட்டான்.
“நீங்க எப்பவாவது அந்த சிவலிங்கம் ஜொலிக்கறதைப் பார்த்திருக்கீங்களா?”
ஆனந்தவல்லி சொன்னாள். “ஜொலிக்கறதுக்கு அந்த
சிவலிங்கம் தங்கமா, வைரமா? உங்கப்பன் தான் சின்னதுல எதையோ பார்த்துட்டு வந்து அது
ஜொலிக்கிறதா சொன்னான். வேற யாரும் சொன்னதில்லை. கிறுக்குப் பய”
கிறுக்குப் பயல் என்று தந்தையைச்
சொன்னதற்கு ஈஸ்வர் ஆனந்தவல்லியை முறைத்தான்.
“என்னடா முறைக்கிறே. உனக்கு
அப்பனாகிறதுக்கு முன்னாடியே அவன் எனக்குப் பேரன். ரொம்பத் தான் முறைக்கிறான்”
பெருமூச்சு விட்ட ஈஸ்வர் கேட்டான். “சரி
அந்த சிவலிங்கத்துல ஏதாவது வித்தியாசமா பார்த்திருக்கீங்களா?”
“ஒரு வித்தியாசத்தையும் பார்த்ததில்லை...”
“நீங்க சரியா பார்க்கலை போல இருக்கு”
”ஏழெட்டு தடவை தான் அதைப் பார்த்திருக்கேன்னாலும் சரியா
தான் பார்த்திருக்கேன். என் வீட்டுக்காரர் வேற அதை போட்டோ எடுத்து ப்ரேம் போட்டு
வச்சிருந்தார்....”
“அந்த போட்டோ என்ன ஆச்சு?”
“பரண்ல இருக்கு. அவர்
வெச்சிருந்த ஒரு டிரங்குப் பெட்டில இருக்கு.”
“அவர் சிவலிங்கம் சம்பந்தமா வேற எதாவது
வச்சிருந்தாரா?”
“இல்லையே”
“நீங்க எதையும் வீசிடலையே?”
“அவர் பத்திரமா வச்சிருந்த அதை வீச எனக்கு
மனசு வரலை. அதனால அவரோட மத்த சில பொருள்களோட அப்படியே வச்சிருக்கேன்....”
ஈஸ்வருக்கு அந்தப் புகைப்படத்திலோ அவர் வைத்திருந்த
மற்ற பொருள்களிலோ ஏதாவது முக்கிய தகவல் இருக்கலாம் என்று தோன்றியது. அவன் திடீர் என்று எழுந்து நின்றான். “பாட்டி எனக்கு
அவர் வச்சிருந்ததை எல்லாம் பார்க்கணும்...”
“இப்பவேவா?”
“ஆமா”
“பரண்ல தூசி நிறைய இருக்கும்டா. நாளைக்கு வேலைக்காரங்களை விட்டு சுத்தம்
செய்யச் சொல்றேன். அப்புறம் பாருடா”
“பரவாயில்லை. இப்பவே பார்க்கறேன்”
“சரி வா” என்று ஆனந்தவல்லி
எழுந்தாள். அவனைத் தன் அறைக்கு அழைத்துக் கொண்டு போவதில் அவளுக்கு சந்தோஷம்
இருந்தது. அவள் முன்னே செல்ல ஈஸ்வர் பின் தொடர்ந்தான். அவர்கள் போவதையே பார்த்துக்
கொண்டிருந்த மீனாட்சி அவர்களைப் பின் தொடராமல் தனதறைக்குப் போனாள். அப்போது தான் வீட்டுக்குள் வந்திருந்த மகேஷ் வழியில் அவளை இடைமறித்துக் கேட்டான்.
”என்னம்மா உங்க பாட்டி அதிசயமா அவனை ரூமுக்குக்
கூட்டிகிட்டு போறாங்க?”
”எங்க தாத்தா வச்சிருந்த பொருள்களை எல்லாம் அவனுக்குப்
பார்க்கணுமாம்”
”எதுக்காக?”
”அதுல அந்த சிவலிங்கம் சம்பந்தமான தகவல் எதாவது
இருக்கான்னு அவனுக்குப் பார்க்கணுமாம்...”
“அப்படி என்ன இருந்தது அவர் கிட்டே?”
“அந்த சிவலிங்கத்தோட போட்டோ ஒன்னு அவர்
கிட்ட இருந்ததுன்னு பாட்டி சொன்னாங்க. அவன் வேறெதாவதும் இருக்கான்னு பார்க்கப்
போறான். ஏன் கேட்கறே”
“சும்மா தான்” மகேஷ்
சுரத்தில்லாமல் சொன்னான்.
ஆனந்தவல்லியின் அறை
மிகப் பெரிதாக இருந்தது. அவள் அறையில் அவள் கணவர் படம் மிகப் பெரியதாக மாட்டப்
பட்டிருந்தது. அவள் பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த போது எடுக்கப்பட்ட படமும்,
திருமணமான புதிதில் அவளும் அவள் கணவரும் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இருந்தன.
அந்தப் படத்தில் அவர் அச்சாக அவனைப் போலவே இருந்தது ஈஸ்வருக்கு வியப்பாக இருந்தது.
“உட்கார்டா” என்றாள் ஆனந்தவல்லி.
“இல்லை சாவகாசமாய்
பிறகு உட்கார்றேன். முதல்ல பரண்ல பார்த்துடறேன்”
“சரி போ. மேலே நீலக்கலர்ல இருக்கிற பெரிய
டிரங்குப் பெட்டி தான் அவருது” என்று சொல்லி அவள் அறையின் ஓரத்தில் இருந்த தேக்கு
மரப்படிகளைக் காண்பித்தாள். அவன் படியேறிச் செல்கையில் தன் கணவரின்
புகைப்படத்தையும் அவனையும் மாறி மாறி அவள் பெருமையுடன் பார்த்தாள். மேலே சென்றவுடனேயே
அவன் தும்மல் சத்தம் கேட்டது. “தூசி இருக்குன்னு சொன்னா கேட்டால் தானே. என்னை
மாதிரியே பிடிவாதம் அவனுக்கு” என்று செல்லமாக அவனை மனதிற்குள் கடிந்து கொண்டாள்.
பரணில் தூசி படிந்த பழங்காலப் பொருள்கள்
நிறைய இருந்தன. ஆனந்தவல்லி சொன்ன நீல நிற பெரிய டிரங்குப் பெட்டி ஒரு மூலையில்
இருந்தது. ஈஸ்வர் இரண்டு முறை தும்மி விட்டு அந்த டிரங்குப் பெட்டியைத் திறக்க
முயற்சித்தான். ஆரம்பத்தில் திறக்க வரவில்லை. கஷ்டப்பட்டு தான் திறக்க முடிந்தது.
உள்ளே ஒரு பட்டு
அங்கவஸ்திரம், பட்டு வேட்டி, பட்டு சட்டை, ஃப்ரேம் போடாமல் அட்டையில் ஒட்டிய ஒரு
மிகப்பழைய கறுப்பு வெள்ளைப் புகைப்படம்,
ஒரு வலம்புரி சங்கு, ஒரு குடை, ஒரு
வெள்ளி வெற்றிலை பாக்கு டப்பா இவற்றோடு ஆனந்தவல்லி சொன்ன ஃப்ரேம் போட்ட சிவலிங்கம்
புகைப்படம் இருந்தது. இரண்டு புகைப்படங்களைத் தவிர மற்றவை எல்லாம் கணவர்
சாந்தலிங்கம் தினசரி உபயோகித்த பொருள்களை ஆனந்தவல்லி எடுத்து தேர்ந்தெடுத்து பத்திரப்படுத்தி
வைத்தது போல இருந்தது. ஃப்ரேம் போடாத
கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை எடுத்து ஈஸ்வர் ஆராய்ந்தான். புகைப்படம் பழுதாகி
இருந்தாலும் யாரோ ஒரு வயதானவர் கறுப்புக் கோட்டு போட்டுக் கொண்டிருந்தது போலத்
தெரிந்தது. ஆனந்தவல்லி அல்லது சாந்தலிங்கத்தின் தகப்பனாராக இருக்கலாம் என்று தோன்றியது.
சிவலிங்கத்தின்
புகைப்படத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு அவன் ஆவலோடு பார்த்தான். எத்தனையோ
ரகசியங்களைத் தன்னில் உள்ளடக்கி வைத்திருக்கிற அந்த சிவலிங்கத்தை நிறைய நேரம்
பார்த்தான். எதிர்பார்க்காத நேரங்களில் எல்லாம் அந்தரத்தில் தெரிந்து அவனைத்
திகைக்க வைத்த சிவலிங்கம் இப்போது எதிர்பார்ப்போடு பார்த்த போது அமைதியாக இருந்தது.
அந்தப் புகைப்படத்தில் சிவலிங்கத்தின் தனித்தன்மை எதுவும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை...
சாந்தலிங்கம் இதைப்
புகைப்படமாக எடுத்து வைக்க ஏதாவது பிரத்தியேகக் காரணம் இருக்குமா என்று ஈஸ்வர்
யோசித்தான். அவர் அதை சக்தி வாய்ந்த சிவலிங்கம் என்று நம்பியதால் அதைப் படம்
எடுத்து வீட்டில் வைத்து இருக்கலாம்... அப்படியும் இல்லை என்றால்...?
சிவலிங்க புகைப்படக்
கண்ணாடியில் தூசி இருந்தது. ஈஸ்வர் அந்த தூசியைத் துடைத்தான். கண்ணாடி அசைந்தது. கண்ணாடி சரியாகப் பதிக்கப்படவில்லை போல
இருக்கிறது என்று எண்ணியவனாய் மேலும் அதை அசைக்க ஒரு புறத்தில் கண்ணாடி ஃப்ரேமை
விட்டு வெளியே வந்தது. கண்ணாடியைப் பத்திரமாக ஈஸ்வர் கழற்றி வைத்தான். கண்ணாடி
வந்த கையோடு சிவலிங்கம் புகைப்படமும் வெளியே வந்தது. சிவலிங்கத்தின் புகைப்படத்தின்
பின்புறம் இருந்து ஒரு காகித உறையும் அவன் மேல் விழ அவன் திகைப்புடன் அந்த காகித
உறையை எடுத்துப் பார்த்தான். உறையின் மீது எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை. அந்த உறையினுள்ளே ஏதோ ஒரு தாள் இருந்தது தெரிந்தது. உறை
ஒட்டப்பட்டிருக்கவில்லை.
இதயம் வேகமாக துடிக்க
ஆரம்பிக்க அந்த உறையைப் பிரித்து உள்ளே இருந்த தாளை ஈஸ்வர் வெளியே எடுத்தான்....
(தொடரும்)
-
என்.கணேசன்
sir எவ்வளவு நேரம் உங்க கதைக்காக காத்திருக்க...சரியா 6 மணிதானா
ReplyDeleteபடிக்க படிக்க மனது படபடக்குது கணேசன் சார்......
ReplyDeleteகதை நல்ல வேகம் எடுக்கிறது....
ஆனந்தவல்லியுடன் ஈஸ்வர் உரையாடல்கள் கண்முன்னே காட்சிகளாக அப்படியே விரிகிறது.........அருமை......அருமை......
இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்க அடுத்த வியாழ கிழமையை எதிர்பார்த்துள்ளேன்.....
ReplyDeleteகண்முன்னால் கதாபாத்திரங்களை கொண்டு வந்து நிருத்தி விடுகிறீர்கள். விருவிருப்புக்கும் பஞ்சமில்லை. நல்ல எழுத்து நடை. பாராட்டுக்கள்.
ReplyDeleteபாட்டியும் பேரனும் உரையாடல் அருமை..
ReplyDeleteViruviruppu.
ReplyDeleteபடிக்கும் போது வெறும் எழுத்தாக இல்லமல் உணர்வால் அனுபவிககூடியதாக உங்கள் நடை, அருமை - எழில், Toronto
ReplyDeleteவிறுவிறுப்பு
ReplyDeleteஅருமையாக உள்ளது அண்ணா.
ReplyDeleteஅன்புடன்.
அமர்க்களம் கருத்துக்களம்,
www.amarkkalam.net
அருமையான TWIST !
ReplyDelete