சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 27, 2012

பரம(ன்) ரகசியம் – 24





பரம(ன்) ரகசியம் – 24

ன்று கம்பெனியில் முக்கியமான மீட்டிங் ஒன்று இருந்ததால் பரமேஸ்வரனும், விஸ்வநாதனும் இரவு எட்டு மணிக்கு மேல் தான் வந்தார்கள். மகேஷும் தாமதமாகவே வந்தான். அவர்கள் வருவதற்கு முன்பே பயணக் களைப்பில் ஈஸ்வர் உறங்கி விட்டான். தந்தையின் அறையில் அவனுக்கு மிக ஆழ்ந்த தூக்கம் வந்து விட்டிருந்தது. மறு நாள் காலை அவர்கள் போகும் வரை அவன் எழுந்திருக்கவில்லை. அவன் கண் விழித்த போது ஆனந்தவல்லி அவனையே பார்த்தபடி அருகே அமர்ந்திருந்தாள். தூங்குகின்ற போது கொள்ளுப்பேரன் அவள் கண்களுக்கு மிக அழகாகத் தெரிந்தான். அவள் முகத்தில் ஒரு தனிக்கனிவு தெரிந்தது.

கண்விழித்த ஈஸ்வருக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்தான். அவன் தந்தைக்கும் அவன் தூங்குவதைப் பார்க்கப் பிடிக்கும். அவன் ஒரு குழந்தை போல் தூங்குவதாக அவர் சொல்வார்.... ஆனால் இந்தக் கிழவியும் ஏன் இப்படிப் பார்க்கிறாள் என்று நினைத்தவனாக அவன் கேட்டான். “என்ன?

ஆனந்தவல்லி சொன்னாள். என்ன இன்னமும் எழுந்திருக்கலையான்னு  பார்க்க வந்தேன். தூங்கிட்டு இருந்தாய். அப்படியே நானும் இங்கே உக்காந்துட்டேன்.

அவன் எழுந்து போய் தன் காலைக்கடன்களை முடித்து விட்டு வரும் வரை ஆனந்தவல்லி அங்கேயே அமர்ந்திருந்தாள். அவன் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

அவள் சொன்னாள்.உனக்கு தொந்தரவாய் இருந்தாய் போயிடறேன்...

“தொந்தரவெல்லாம் இல்லை. நானே உங்க கிட்ட பேச வரணும்னு இருந்தேன்.

“எதைப் பத்தி?

“அந்த சிவலிங்கத்தைப் பத்தி...

ஆனந்தவல்லி முகம் இறுகியது. சிறிது நேரம் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கேட்டாள். “அப்படின்னா நீ இங்கே வந்தது அந்த சிவலிங்கம் பத்தி தெரிஞ்சுக்கத் தானா?

ஆமா பின்ன இங்கே எனக்கு வேறென்ன இருக்கு?

“ஏண்டா இங்கே நாங்க எல்லாம் இல்லையா?

நீங்க எல்லாம் இருக்கீங்க. ஆனா நீங்க இருக்கற மாதிரி இது வரைக்கும் நீங்க காமிச்சுக்கவே இல்லையே

வார்த்தைகளின் கூர்மைக்குத் தகுந்தது போல் அவன் முகத்திலும் கடுமை தெரிந்தது. ஆனந்தவல்லி கேட்டாள். “ஏண்டா நீ தகராறு பண்றதுக்குன்னே வந்திருக்கயா?

அந்த நேரத்தில் மருமகன் எழுந்து விட்டானா என்று பார்க்க வந்த மீனாட்சி உள்ளே நுழையாமல் அப்படியே நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டாள். அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்வது அவளுக்குச் சுவாரசியமாக இருந்தது.

ஈஸ்வர் சொன்னான். “உண்மையை சொன்னா தகராறா? இந்த வீட்டு ஹால்ல ஜோடி ஜோடியா பெருசா படங்களை மாட்டி இருக்கீங்களே. எங்கப்பா அம்மா படம் இருக்கா? என் படம் இருக்கா?

ஆனந்தவல்லி அசந்து விடவில்லை. அந்த அறையில் இருந்த படங்களையும், பதக்கங்களையும் கோப்பைகளையும்  காட்டிக் கேட்டாள். ஏண்டா இதெல்லாம் யார் படம்? இதெல்லாம் யார் வாங்கின மெடல்...?

“இதெல்லாம் எங்க அத்தை பத்திரமா வச்சிருக்கறது. நான் ஹால்ல சொல்றேன். நாலு பேர் பார்க்கிற இடத்தில் இருக்கா?

ஹால்ல இருக்கற படங்கள் எதையும் நான் வைக்கலை. நீ வேணும்னா உங்கப்பா அம்மா போட்டோவைக் கொண்டு போய் மாட்டிக்கோ. உன் தாத்தா கிட்ட இருக்கற கோபத்தை நீ ஏண்டா என் கிட்ட காமிக்கிறாய்?”

அந்த ஆள் இப்படி இருக்கிறதுக்கு நீங்க தான் காரணம்...

“ஏண்டா நீ இப்படி இருக்கறதுக்கு உங்கப்பன் காரணமா? அவன் ஒரு வார்த்தை பெரியவங்களை எதிர்த்துப் பேசினதில்லையேடா? உங்கப்பன் சாதுவா இருந்ததுக்கு அவங்கப்பன் காரணமா? பிள்ளைங்க எப்படி இருக்காங்கங்கறதுக்கு பெத்தவங்க தான் காரணம்னு சொன்னா, நீயும், உங்கப்பனுமே பெத்தவங்க மாதிரி இல்லையேடா. நீ ஏதோ பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கேன்னு சொன்னாங்க. படிக்காதவன் மாதிரி அல்ல பேசறே

ஈஸ்வர் தன்னையும் மீறி புன்னகைத்தான். கிழவியின் பேச்சு சாமர்த்தியம் அவனுக்குப் பிடித்திருந்தது. சிறிய வயதிலிருந்தே அவனிடம் சரிசமமாக வாக்குவாதம் செய்து சண்டை போடுபவர்கள் யாரும் இருக்கவில்லை. பெற்றோர் இருவரும் அமைதியானவர்கள் என்பதாலும், அவனுக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதாலும் சின்னச் சின்ன சண்டைகள் போடுவதில் உள்ள சந்தோஷம் குடும்பத்தில் அவனுக்குக் கிடைத்ததில்லை. அப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஆனந்தவல்லி அவனுக்குத் தரவே அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தான். அவன் தொடர்ந்தான். “நான் கோவப் படறப்ப எல்லாம் எங்கப்பா புத்தி சொல்லுவாரு. அந்த மாதிரி நீங்க உங்க மகனுக்கு புத்தி சொல்லி இருக்கீங்களா?

ஆனந்தவல்லியும் மனதிற்குள் பேரன் பேச்சுத் திறமையை ரசித்தாலும் வெளியே காண்பித்துக் கொள்ளாமல் சொன்னாள். உங்கப்பனைப் பத்தி அவன் இது வரைக்கும் யார் கிட்டயும் பேசினதே இல்லையேடா. யாராவது பேசினாலும் அந்த இடத்தை விட்டுப் போயிடுவான். உங்கத்தை கிட்ட கூட அவன் பேசினதில்லை. வேணும்னா அவ கிட்ட கேட்டுப்பாரு. அவன் எதிர்பாராம விழுந்த அடிடா அது. அவனால அதை இன்னைக்கு வரைக்கு தாங்க முடிஞ்சதில்லை...

ஒருத்தன் காதல் கல்யாணம் பண்ணிக்கறது தப்பா?

“உன்னை மாதிரி உங்கப்பன் இருந்திருந்தா பரமேஸ்வரன் பிள்ளை கிட்ட எதையும் எதிர்பார்த்திருக்க மாட்டாண்டா. அப்பா கிழிச்ச கோடு தாண்டாத பிள்ளையாவே காலம் பூரா வளர்ந்தவண்டா உங்கப்பன். போடற டிரஸ் தேர்ந்தெடுக்கறது அப்பா, பைக் தேர்ந்தெடுக்கறது அப்பா, கார் தேர்ந்தெடுக்கறது அப்பா. அவங்கப்பனும் தேர்ந்தெடுக்கறதுன்னா சும்மா இல்லை... இருக்கறதுலயே எது உசத்தியோ அது தான் பையனுக்கு கிடைக்கணும்னு அப்படி பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பான்... அப்பவே சொல்வேன் “இப்படி குழந்தைகளை ஓவரா தலையில தூக்கி வச்சு ஆடறது நல்லதில்லைடான்னு. கேட்டால் தானே. உங்கப்பன் கல்யாணம் பண்ணிட்டு போனவுடனே இவன் பாதி செத்தே போயிட்டான்னு தான் சொல்லணும். அதுக்கப்பறம் மகனைப் பத்தி யார் கிட்டயும் பேசறதை நிறுத்திட்டான்...

கிழவி தன் மகனுக்காக பரிந்து பேசினதில் இருந்த உண்மையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் உன்னை மாதிரி உங்கப்பன் இருந்திருந்தான்னு சொன்னீங்களே எந்த அர்த்தத்துல?என்று பொய்யான கோபத்தைக் காட்டி அவன் கேட்டான்.

ஆனந்தவல்லியிடமும் எதிர்த்து சரிசமமாய் சண்டை போடுபவர்கள் இது வரை யாரும் இருந்ததில்லை. தந்தை, கணவன், பசுபதி மூவரும் பெரிதாய் கோபம் கூட காட்ட மாட்டார்கள். கோபப்படும் பரமேஸ்வரன் கூட அதைத் தாயிடம் வார்த்தைகளில் காண்பிக்க மாட்டார். அதனால் அவனிடம் இப்படிப் பேசுவதில் அவளுக்கும் உள்ளூர ஒரு திருப்தி இருந்தது. “உன்னை மாதிரி எடக்கு முடக்கா எப்பவாவது பேசி இருந்தான்னு தான்?

“நான் எப்ப எடக்கு முடக்கா பேசினேன்?

“ஒரு சேரிப் பொண்ணை கட்டிகிட்டு நாலஞ்சு பெத்துகிட்டு இந்த வீடெல்லாம் சுத்தி விளையாட விடுவேன்னு சொன்னியே அதென்ன?

“ஏன் சேரிப் பொண்ணை கட்டிக்கிறதுல என்ன தப்பு?

“தப்பே இல்லை. ஏன் நீ பிச்சைக்காரியைக் கூட கட்டிக்கலாம்.ஆனந்தவல்லி எகத்தாளமாய் சொன்னாள்.

ஈஸ்வர் சிரிக்காமல் இருக்க கடும் முயற்சிகள் செய்து ஜெயித்தான். “அதுசரி இது வரைக்கும் நாம தான் எல்லாத்தையும் மகனுக்காக தேர்ந்தெடுத்தோம்... முதல் தடவையா அவனா ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்திருக்கிறான், அதை மதிக்கணும்னு உங்க மகனுக்குத் தோணலை. வாழ்க்கை பூரா சேர்ந்திருக்கிற மனைவியைத் தேர்ந்தெடுக்கற உரிமையைக் கூட தன் மகனுக்கு உங்கள் மகன் தரலை. அந்தக் கோபத்துல சாகற வரைக்கும் அவன் கிட்ட பேசக்கூட இல்லை... அது உங்களுக்கு தப்பாய் படலை பார்த்தீங்களா? நீங்களே உங்க மூத்த பிள்ளை மேல கோவிச்சுகிட்டு ஐம்பது வருஷத்துக்கு மேல பேசாம தானே இருந்தீங்க? எல்லாம் ஒரே ரகம் தான் போல இருக்கு?

ஆனந்தவல்லிக்கு சுருக்கென்றது. ஈஸ்வரை முறைத்தாள். ஏண்டா, அவன் வீட்டுக்கு வரலைன்னா பெத்தவ நான் சாகற வரைக்கும் உண்ணாவிரதம் இருப்பேன்னு இருக்கேன் கொஞ்சம் கூட அசைஞ்சு குடுக்காம கண்டுக்காமல் அவன் இருக்கான். இந்த காலத்துல அரசியல்வாதிகளே நிஜமான உண்ணாவிரதம்னா பேச்சு வார்த்தைக்காவது வந்து போறாங்க. அவன் அது கூட செய்யலை. கோவம் வராதா?

நீங்க சாகலையில்ல. அப்புறம் என்ன?ஈஸ்வரன் கிண்டலடித்தான்.

ஆனந்தவல்லி முறைத்தாள்.

ஈஸ்வர் சொன்னான். “அவருக்குத் தெரிஞ்சிருக்கும் நீங்க சாக மாட்டீங்கன்னு. அதனால தான் கண்டுக்கலை போல இருக்கு.

ஆனந்தவல்லி முகத்தில் வேதனை தெரிந்தது. “அவன் செத்ததுக்கப்புறமும் நான் இருப்பேன்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கும்... சாப்பாடு பெருசுல்ல, ஆடம்பரம் பெருசுல்ல, பணம் பெருசுல்லன்னு சன்னியாசி மாதிரி என் குழந்தை இருக்கிறப்ப எப்படி எனக்கு இருந்துச்சு தெரியுமா? இனி இந்த உலகத்துல யாரையுமே அளவுக்கு அதிகமா நேசிக்கக் கூடாதுன்னு நான் அப்பவே தீர்மானிச்சுட்டேன்.... இந்தப் பாசமும் வேண்டாம். அதுல இருந்து வர்ற துக்கமும் வேண்டாம்னு விலகியே இருக்கப் பழகிட்டேன்

தன் பேரக் குழந்தைகளிடம் கூட அவள் சற்று தொலைவிலேயே இருந்ததற்குக் காரணம் இப்போது இதைக் கேட்டுக் கொண்டு நின்ற மீனாட்சிக்கு விளங்கியது. ஈஸ்வரும் மனம் இளகினாலும் காட்டிக் கொள்ளாமல் சொன்னான். நேசிக்காத மனுஷங்களுக்கு உண்மையான சந்தோஷத்தையும் உணர முடியாதுசுவரில் இருந்த பரமேஸ்வரன், சங்கர், மீனாட்சி புகைப்படத்தைக் காட்டி சொன்னான்.பாருங்க இந்த மாதிரி சந்தோஷத்தை உணர்ந்திருக்கீங்களா?

ஆனந்தவல்லி அந்தப் புகைப்படத்தைப் பார்த்தபடியே சொன்னாள். “இப்படி சந்தோஷமா இருந்த என் மகன் பின்னாடி எப்படி துக்கப்பட்டான்னு நான் பார்த்திருக்கேன்

ஈஸ்வர் சொன்னான். “இந்த சந்தோஷத்தோட நினைவுகளை கடைசி வரை தக்க வச்சுகிட்ட என் அப்பாவை நான் பார்த்திருக்கேன். அந்த பழைய நாட்களைப் பத்தி பேசறப்ப எல்லாம் மறுபடி மறுபடி அந்த நாட்கள்ல வாழ்ந்துட்டு இருந்தார் அவர்....

அதைக் கேட்டு மீனாட்சி ஈரமான கண்களைத் துடைத்துக் கொண்டாள். அண்ணன் மறுபடி மறுபடி அந்த நினைவுகளில் வாழ்ந்தான் என்பதை அவன் மகன் வாயால் கேட்ட போது நெகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ஆனந்தவல்லி அப்படி நெகிழ்ச்சியடையவில்லை. “ஆனால் அந்த நினைவுகள் அப்பாவுக்காக காதலை தியாகம் செய்யற அளவுக்கு பலமா இல்லைஎன்றாள்.

ஈஸ்வருக்கு நிஜமாகவே கோபம் வந்தது. “ஆமா நீங்க எல்லாம் என்ன நினைக்கிறீங்க? நீங்க நேசிக்கிறீங்கங்கற காரணத்திற்காகவே அடுத்தவங்க உங்க அடிமையாகணுமா? அந்த ஆள் என்னடான்னா நான் வேணுமா அந்தப் பொண்ணு வேணுமான்னு கேட்கிறார். நீங்க என்னன்னா உங்க பையன் கிட்ட அந்த சிவலிங்கத்தை விடறியா நான் உண்ணா விரதம் இருந்து சாகவான்னு கேட்கிறீங்க. அன்பை ஏன் வியாபாரமாக்கிறீங்க?

சுர் என்று அவனுக்கு எழும்பிய கோபத்தைப் பார்த்த ஆனந்தவல்லி அவனுக்கு அவன் அப்பாவை யாராவது எதாவது தப்பாய் சொன்னால் ரத்தம் கொதிக்கிறது என்று புரிந்து கொண்டாள்.  ஏண்டா எங்க ரெண்டு பேரையும் விமரிசனம் செய்யத் தான் நீ அமெரிக்காவுல இருந்து வந்தியா?

“இல்லை அந்த சிவலிங்கத்துக்காக தான் வந்தேன்....நல்ல வேளையா ஞாபகப்படுத்தினீங்க. சரி கொஞ்சம் சீரியஸா பேசலாமா? எனக்கு அந்த சிவலிங்கம் பத்தி முழுசும் தெரியணும். உங்களுக்குத் தெரிஞ்சதை எல்லாம் சொல்றீங்களா?என்றவன் ஒரு வெள்ளைத் தாளையும் பேனாவையும் எடுத்துக் கொண்டான். அவன் முகத்தில் இருந்த கோபம் சுத்தமாய் காணாமல் போனது. படுக்கையில் இருந்து எழுந்து வந்து ஒரு நாற்காலியை அவள் அருகே நகர்த்திப் போட்டு உட்கார்ந்தான்.

ஒரு நொடியில் நேர்மாறாக மாறிய அமைதியான ஈஸ்வர் முகத்தையே லேசான சோகத்துடன் ஆனந்தவல்லி பார்த்தாள்.  பின் மிகுந்த பாசத்துடன் அவன் தோளில் கை வைத்து சொன்னாள். “ஈஸ்வர் வேண்டாண்டா. பசுபதி ஏன் உன் கிட்ட தெரிவிக்கச் சொன்னான்னு எனக்கு தெரியாது. ஆனாலும் நீயும் அது பின்னாடியே போயிடுவியோன்னு எனக்கு பயமா இருக்குடா. இந்த குடும்பத்துல ஒருத்தன் அதுக்கு பூஜை பண்ணி உசிரை விட்டது போதும். இனி இந்த குடும்பத்துல யாரும் பலியாகிறதை பார்க்கற சக்தி எனக்கு இல்லைடா.

மனிதர்களை எடை போடுவதில் என்றுமே ஈஸ்வர் தவறியதில்லை. நடிக்கத் தெரியாத, நடிக்கும் அவசியத்தையும் லட்சியம் செய்யாதவள் ஆனந்தவல்லி என்பதை அவன் முன்பே கணித்திருந்தான். அப்படிப்பட்ட ஆனந்தவல்லியின் முகத்தில் தெரிந்த வேதனையும், பேசிய பேச்சும் ஆத்மார்த்தமாய் வந்தவை என்பது புரிந்த போது அவன் மிகவும் நெகிழ்ந்து போனான். தோளில் அவள் வைத்த கைகளை எடுத்துத் தன் இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு பரிவுடன் சொன்னான். “நீங்க அனாவசியமா பயப்படறீங்க. அப்படி எல்லாம் ஆகாது. இன்னொரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்க. உங்க மூத்த பிள்ளையை பலி வாங்கினது அந்த சிவலிங்கம் இல்லை. மரணத் துடிப்புல கூட அவரோட பத்மாசனம் விலகலைன்னு கேள்விப்பட்டேன்.  தன் உடம்புல அத்தனை கட்டுப்பாடு வச்சிருந்த அவர் நினைச்சிருந்தா அந்த கொலைகாரனை சுலபமா தடுத்திருக்க முடிஞ்சிருக்கும். அவர் எந்தக் காரணத்தாலயோ அதை செய்யலை. ஒரு வேளை மரண காலம் இதுன்னு அவர் உணர்ந்திருக்கலாம். அதனால அதுக்கு இசைஞ்சு கொடுத்திருக்கலாம். அவர் உங்களைக் கூப்பிட்டு பேசினது, உங்க ரெண்டாவது பிள்ளை கிட்ட பேசினது எல்லாம் வச்சி பார்த்தா முதல்லயே அவர் தன் காலம் முடியப்போறதுன்னு உணர்ந்த மாதிரி தான் தெரியுது....

ஆனந்தவல்லி அவன் பரிவான பேச்சில் உருகிப் போனாள். அவள் மூத்த பிள்ளை குறித்து கவலைப்பட்ட சமயங்களில் எல்லாம் எத்தனையோ முறை அவள் கணவர் அவளை இதே பரிவுடன் அவள் துக்கத்தைக் குறைக்க முயன்றிருக்கிறார். அப்போதெல்லாம் அவள் அவரை எல்லாம் உங்களால் தான்என்கிற விதத்தில் மிகக் கடுமையாகத் திட்டியும் இருக்கிறாள். ஒருமுறை கூட அவர் அவளைக் கோபித்துக் கொண்டதில்லை. அவர் மரணத்திற்குப் பிறகு அதைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவள் மிகவும் பச்சாதாபப்பட்டிருக்கிறாள். இன்று அவர் தோற்றத்தில் இருக்கும் கொள்ளுப் பேரன் அவனுடைய வழக்கமான எடக்கு முடக்குத் தனத்தை விட்டு விட்டு அதே பரிவுடன் பேசிய போது மறுபடி அவனிடம் அவரையே கண்டாள். லேசாகக் கண் கலங்கினாள்.  

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சியும் நெகிழ்ந்து போனாள். சற்று முன் வரை மிகவும் காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்த இருவரும் மிகவும் பாசமாக மாறியது அவளுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. தானாடா விட்டாலும் சதையாடும்னு சொல்வாங்க. அது உண்மை தான். அப்பா கிட்டயும் இவன் இப்படியே மாறிட்டா போதும் கடவுளேஎன்று அவள் வேண்டிக் கொண்டாள்.

ஈஸ்வர் தொடர்ந்து சொன்னான். “நான் உங்க மூத்த பிள்ளை சொன்னார்ங்கறதுக்காக அந்த சிவலிங்கத்தைப் பத்தி கேட்கலை. எனக்கு வேற சில ஆராய்ச்சிகளுக்காக அதைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப காலமா ஆர்வம் இருக்கு. எங்கப்பா கிட்ட நான் நிறையவே அது பத்தி விசாரிச்சிருக்கேன். இது பத்தி உங்க கிட்டயும் உங்க ரெண்டாவது பிள்ளை கிட்டயும் நிறைய தகவல் கிடைக்கும்னு நம்பறேன். அதனால தான் கேட்கறேன். சொல்லுங்க ப்ளீஸ்

ஆனந்தவல்லி திடீரென்று கோபித்துக் கொண்டாள். “என்னடா ஆரம்பத்துல இருந்தே பார்த்துகிட்டிருக்கேன், நீங்க, உங்க மூத்த பிள்ளை, ரெண்டாவது பிள்ளைன்னே சொல்லிகிட்டிருக்கே? நீ பாட்டின்னு கூப்பிட்டு கேட்கலைன்னா நான் வாயே திறக்க மாட்டேன். என்ன ஆனாலும் சரி

மிக உறுதியாகச் சொல்லி விட்டு நாற்காலியில் அவள் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். பரமேஸ்வரன் மேல் இருந்த கோபம் ஈஸ்வருக்கு ஆனந்தவல்லியிடம் இருக்கவில்லை. சொல்லப்போனால் இங்கு வரும் வரை அவளைப் பற்றி அதிகம் அவன் நினைத்தது கூட இல்லை. இங்கே அவளிடம் பேசப் பேச அவளை அவனுக்குப் பிடித்தும் விட்டிருந்தது.ஆனாலும் அவ்வளவு சீக்கிரம் அவளை பாட்டி என்று கூப்பிட வேண்டுமா என்று அவன் எண்ணினான்.

அந்த நேரமாகப் பார்த்து அவனுக்குள்ளே ஏதோ ஒரு உணர்வு அவளிடம் உள்ள தகவல்களில் ஒன்று மிக முக்கியமாக இருக்கும் என்று அவனுக்கு ஆணித்தரமாகச் சொன்னது. அந்த உணர்வு எப்போதும் அவனுக்கு ஏற்படும் உள்ளுணர்வு போல இருக்கவில்லை. அதில் ஏதோ ஒரு பெரிய வித்தியாசத்தை அவன் உணர்ந்தான். ஏதோ வெளிசக்தி, டெலிபதியாக அவனுக்கு சொல்வது போல் இருந்தது. ஆழ்மனம் மற்றும் அதீத சக்திகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் அவனுக்கு அது தெளிவாகப் புரிந்த போது ஒரேயடியாக வியர்த்தது.....

(தொடரும்)
என்.கணேசன்



6 comments:

  1. Anandavalli charaterization is very realistic. Her talk with Ishwar is natural. Besides the suspense you create lively characters.

    ReplyDelete
  2. அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்வது அவளுக்குச் சுவாரசியமாக இருந்தது ..//


    ஏதோ வெளிசக்தி, டெலிபதியாக அவனுக்கு சொல்வது போல் இருந்தது. /

    அருமையான கதை ..!

    ReplyDelete
  3. கதாபாத்திரங்களை கண்முன்னே கொண்டுவந்து கதை சொல்வதுபோல் உள்ளது கணேசன் சார்.....

    வாழ்த்துகள்........

    ReplyDelete
  4. Looks like Anantavali's glibness let Eshwar to gear down, Interesting one !!

    PK Pillai

    ReplyDelete
  5. Wonderful debate between anandhavalli and easwar....
    You justify their every words is very fantastic.

    Sakthivel
    Tiruppur

    ReplyDelete
  6. நல்ல கதை.நன்றி .தொடருங்கள்

    ReplyDelete