சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 10, 2012

ஆசிரியைத் தாய்




    இடம்: இராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரை அடுத்த அமர்கார் என்ற ஒரு சேரிப்பகுதியில் உள்ள சிறிய பள்ளி. ஒரு எழுபது வயது மூதாட்டியின் குரல் கணீரென்று இந்தியில் ஒலிக்கின்றது. "ஹவா சலீ, ஹவா சலீ, பீலே ரங் கா ஹவா சலீ" (காற்று வீசுகிறது, காற்று வீசுகிறது, மஞ்சள் நிறத்தில் காற்று வீசுகிறது).  பாட்டைக் கேட்டவுடன் குழந்தைகள் விளையாட்டு சாமான்களின் குவியலில் இருந்து மஞ்சள் நிற பொம்மைகளை எடுத்துக் காண்பிக்கின்றனர்.  குழந்தைகள் எல்லாம் மூன்று அல்லது நான்கு வயதிற்குட்பட்டவர்கள்.  குழந்தைகளுக்கு நிறங்களைக் கற்றுத் தரும் பணியில் ஈடுபட்டிருந்த அந்த மூதாட்டியின் பெயர் பாட்டூல் ஆபா (ஆபா என்பது கிட்டத்தட்ட உள்ளூர் மொழியில் 'அத்தை' என்பதற்கு சமமான சொல்). வயது எழுபதானாலும் பாட்டூல் ஆபாவின் உற்சாகமும் சுறுசுறுப்பும் இருபது வயதினரை பொறாமைப் படுத்தும் அளவில் உள்ளதைக் காண முடிந்தது. அந்த மழலைப் பள்ளியில் குழந்தைகள் ஆடியும் பாடியும் ஆனந்தமாகக் கல்வி கற்கிறார்கள்.  இந்த வித்தியாசமான சூழ்நிலையில் இருக்கும் கல்விமுறையின் பின்னணியைப் பார்ப்போம். 

   கல்வித் துறையில் உலக அளவில் செய்யப்பட்ட பல ஆராய்ச்சிகள் குழந்தைகளின் ஆரம்ப காலக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.   மூன்று வயதாகும் போதே குழந்தைகளின்  மூளை 85% வளர்ச்சி அடைந்து விடுவதால் அப்போது அவர்களுக்குக் கிடைக்கும் கல்வியின் அணுகுமுறை மிக முக்கியத்துவம் வாய்ந்ததென அறிஞர்கள் கருதுகின்றனர். கல்வி கற்பிக்கப்படுவதும், கற்றுக் கொள்வதும் எந்திரத்தனமாகி விட்ட இன்றைய சூழ்நிலையில் அந்தக் குழந்தைகளுக்கு உயிரூட்டமுள்ள விதத்தில் கற்பிக்க முடிந்தால் அது அவர்களின் பிற்காலக் கல்விக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும் என்பது ஆராய்ந்த அறிஞர்களின் கருத்து. இதனை கருத்தில் கொண்டு ஆகாகான் அறக்கட்டளை (Aga Khan Foundation) என்கிற சமூக சேவை அமைப்பு சில மேலை நாட்டு அமைப்புகளின் உதவியுடன் ஏற்படுத்திய புதிய கல்விமுறைத் திட்டத்தின் ஒரு பகுதி தான் தாய்-ஆசிரியைத் திட்டம். அந்தத் திட்டத்தின் விளைவு தான் அமர்கார் சேரிப்பகுதியில் நாம் காண முடிந்த அந்த  வித்தியாசமான காட்சி.

   அமர்கார் பகுதி மக்களில் பெரும்பாலானோர் முகமதியர்கள்.  கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களும் நகைகளுக்குப் பயன்படுத்தப்படும்  பலநிறக் கற்களுக்கு மெருகூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.  மிகவும் பின் தங்கிய அந்தப் பகுதியில் அந்தப் பள்ளி 1990ல் துவங்கப்பட்டது.  சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் பாட்டூல் ஆபாவை முன்-பள்ளி (Pre-school) ஆசிரியையாக்க பள்ளியின் நிர்வாகக்குழு அழைத்த போது அவர் பெரிதும் தயங்கினார்.  "நானே பள்ளிக்குச் சென்றதில்லை.  எழுதப் படிக்கத் தெரியாது. நான் எப்படி ஆசிரியை ஆக முடியும்?" என்று கேட்டார். பள்ளி நிர்வாகக்குழுவோ அவர் அப்பகுதியைச் சேர்ந்தவர், அம்மக்களது மரபுவழிகளை நன்கு அறிந்தவர் என்பதால் சிறு பயிற்சிக்குப் பின் அக்குழந்தைகளுக்கு நெருக்கத்துடன் பாடம் கற்றுத் தரமுடியும் என்று கணக்கிட்டனர்.

   அவர்கள் கணக்கு பொய்க்கவில்லை.  குறுகிய காலப் பயிற்சிக்குப் பின் பாட்டூலின் முதல் பணி அந்த சேரி மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுக்குக் குடும்ப நலத்திட்டம், சுகப்பிரசவ முறைகள், சுத்தம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருந்தது. ஆரம்பத்தில் அவர் பணி சுலபமாக இருக்கவில்லை.  குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் பற்றியெல்லாம் அவர்கள் பேசக்கூட தயங்கினர்.  பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் அவர்கள் பெரும் தயக்கம் காட்டினர்.  ஆனாலும் பாட்டூலின் நட்பான அணுகுமுறை அவர்களை நாளடைவில் மாற்றியது.

   பாட்டூல் ஆபா போன்று அங்கு பணியாற்றும் மற்ற ஆசிரியைத் தாய்களும் ஆரம்பத்தில் கல்வி அறிவு இல்லாமல் வந்து பயிற்சி பெற்ற பின் குழந்தைகளோடு சேர்ந்து தாங்களும் கல்வி அறிவு பெற்றவர்களே.  இந்த வகையில் இத்திட்டம் இரு சாராருக்கும் பெரும்பலனைத் தருகின்றது.  குழந்தைகளும் வீட்டு, விளையாட்டு சூழ்நிலையில் கல்வி கற்கின்றனர். அதே போல் அந்த முதியோரும் கல்வியும் தன்னம்பிக்கையும் பெறுகின்றனர்.

   குழந்தைகளை தவறாமல் தினமும் பள்ளிக்கு வரவழைப்பதே இவர்களுக்கு முதல் முக்கியப் பணி. பள்ளிக்கு வருகை தராதவர்களின் வீட்டுக்குச் சென்று காரணம் கண்டறியும் அளவு தீவிர ஈடுபாடு கொண்டுள்ளார்கள்.  பெரும்பாலும் வீட்டுப் பெரியவர்களின் சண்டை சச்சரவுகளே குழந்தைகள் பள்ளிக்கு வராமலிருக்க காரணமாக இருப்பதுண்டு.  அவர்களிடம் தனித்தனியாகவும், ஒன்று சேர்த்தும் பொறுமையுடன்  பேசி குழந்தைகளின் எதிர்காலத்திற்குக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி மீண்டும் குழந்தைகள் தவறாமல் பள்ளிக்கு வரும்படி இந்த ஆசிரியைத் தாய்கள் பார்த்துக் கொள்கின்றனர்.  குழந்தைகளுக்குக்  கல்வியின் அறிமுகத்தையே அளிப்பவர் இந்த ஆசிரியைத் தாய் என்பதால் இந்த ஆசிரியைத் தாயின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

இன்று கல்வி என்பது எத்தனையோ குழந்தைகளுக்கு இன்னும் கனவாகவோ, பயமுறுத்தலாகவோ தான் இருக்கின்றது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி போல ஆரம்பத்தில் அந்த பிஞ்சு உள்ளங்களுக்கு அன்பு சேர்த்து கல்வியை ஊட்டவில்லை என்றால் அதன் விளைவுகள் கடைசி வரை குறைபாடுள்ளதாகவே இருக்கும். எனவே இந்தப் புதிய அணுகுமுறை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாகப் பரவினால் அது நல்ல பலனைக் கொடுக்கும்.

பாட்டூல் ஆபா போன்ற வயதான, அன்பானவர்களுக்கும் இத்திட்டம் வாழ்வில் ஒரு பொருளையும், பொருளாதார வசதியையும் கொடுக்கும் அதே நேரத்தில் கிராமப்புறங்களில் கல்வி உட்பட மேலே குறிப்பிட்ட பல சேவைகள் முழுமையாகப் போய் சேரவும் இது வாய்ப்பை ஏற்படுத்தும். 
அமர்கார் போன்ற பின்தங்கிய பகுதிகள் நம் நாட்டில் இன்னும் எத்தனையோ இருக்கின்றன.  அறியாமை இருட்டில் மூழ்கித் தவிக்கும் மக்கள் கூட்டங்களும் எத்தனையோ உள்ளன. மத்திய மாநில அரசுகளும் கூட இத்திட்டத்தை நல்ல முறையில் அமலாக்கினால் அந்தப் பின் தங்கிய பகுதி மக்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் சில நல்ல மாற்றங்கள் ஏற்படுத்த பேருதவியாய் இருக்கும்.   


-    என்.கணேசன்

5 comments:

  1. நல்ல பகிர்வு.
    இவர்களின் பணி தொடரட்டும்.

    ReplyDelete
  2. "பாட்டூல் ஆபா போன்ற வயதான, அன்பானவர்களுக்கும் இத்திட்டம் வாழ்வில் ஒரு பொருளையும், பொருளாதார வசதியையும் கொடுக்கும் அதே நேரத்தில் கிராமப்புறங்களில் கல்வி உட்பட மேலே குறிப்பிட்ட பல சேவைகள் முழுமையாகப் போய் சேரவும் இது வாய்ப்பை ஏற்படுத்தும்" உண்மைதான்.... படித்து தெளிவு பெற வேண்டிய பதிவு

    ReplyDelete
  3. "இன்று கல்வி என்பது எத்தனையோ குழந்தைகளுக்கு இன்னும் கனவாகவோ, #பயமுறுத்தலாகவோ# தான் இருக்கின்றது"

    பயமுறுத்தலாக இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இப்பொழுது குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் , தன்னம்பிக்கை இழந்து தற்கொலை செய்வதற்கும் காரணம் அவர்களின் சிறுவயதில் ஏற்படும் பய உணர்வின் ஆழமான பாதிப்பே ஆகும். ஆகாகான் போன்ற அறக்கட்டளைகளும், பாட்டூல் போன்ற ஆசிரிய தாயும் ஒவ்வொரு ஊரிலும் தோன்ற வேண்டும் என்பதே எங்களின் விருப்பமும் பிராத்தனையும்.


    ReplyDelete
  4. இவர்களின் பணி மிகவும் நல்லது...உங்கள் பணி மென்மேலும் தொடர என்னுடய வாழ்த்துக்கள்...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  5. மிகவும் நல்ல பகிர்வு. ஒரு சின்ன திருத்தம் "மேலை நாட்டு அமைப்பு " என்பதை "மேற்கத்திய நாட்டு அமைப்பு " என்று எழுதினால் நன்றாக இருக்கும்.colonization era presentation of western nationsஐ உங்களைப் போன்ற ஒரு நல்ல தமிழ் எழுத்தாளர் செய்ய வேண்டாமே.

    ReplyDelete