சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 6, 2012

ஒரு வெற்றியாளரின் மூன்று அனுபவ பாடங்கள்!




றிவுரை வழங்க அறிவு தேவையில்லை. யாரும் யாருக்கும் அறிவுரை வழங்கலாம். காது கொடுத்து கேட்க ஆட்களிருந்தால் காசின்றி அறிவுரை வழங்கவும் ஏராளமான ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். அறிவுரை வழங்க தங்களுக்கு முழுத் தகுதியும் இருப்பதாகத் தான் பெரும்பாலானோரும் நம்புகின்றனர். அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவே விவரமானவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் மிகப்பெரிய சாதனைகள் செய்து காட்டியவர், மிக வெற்றிகரமாக வாழ்ந்து காட்டியவர், மற்றவர்கள் எட்டாத உயரங்களுக்கு சென்று காட்டியவர் அறிவுரை வழங்குவாரேயானால் அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் கோடி பெறும்; வெற்றிக்கு வழி காட்டும்; எத்தனையோ அனுபவங்களுக்கு ஈடாகும். அது போன்ற அறிவுரைகளைக் கேட்டு கடைப்பிடிக்க எந்த ஒரு புத்திசாலியும் தவறி விடக் கூடாது.

ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மனிதர் அப்படிப்பட்ட வெற்றிகரமான மனிதர். இன்று நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்களின் உருவாக்கத்திற்கு அவர் அளித்த பங்கு மிகப்பெரியது. ஆப்பிள் மற்றும் நெக்ஸ்ட் கம்ப்யூட்டர்களை உருவாக்கியவர் அவர். இன்று நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்களின் செயல்முறைகளில் அவர் முத்திரைகள் எத்தனையோ உண்டு. அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர். வெற்றிகரமாக பல நிறுவனங்களை நடத்தியவர். உச்சாணிக் கொம்பிலிருந்து ஒருசில முறை அடிமட்டத்திற்கு வந்த போதும் மீண்டும் தன் திறமையாலும், உழைப்பாலும் முன்னேறி முந்தைய உயரத்தை விட அதிக உயரத்தை எட்டியவர். அவர் 2005 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய போது தன் வாழ்வில் கற்ற பாடங்களை மூன்று முக்கிய நிகழ்வுகள் மூலமாகச் சொன்னார். அவை மூன்றும் அவர் வாழ்க்கையை மாற்றி அமைத்த நிகழ்வுகள். கொஞ்சம் ஏமாந்திருந்தாலும் அடிமட்டத்திற்கு ஒருவரை நிரந்தரமாக அனுப்பி வைத்து புதைக்க வல்லவை அவை. ஆனால் வாழ்க்கையில் தெளிவாகவும், தைரியமாகவும் இருக்க முடிந்ததால் அவற்றை அவர் உபயோகப்படுத்தி சரித்திரம் படைத்தார். அவர் விவரித்த அந்த வாழ்க்கை நிகழ்வுகளையும் அதன் மூலமாகக் கிடைத்த பாடங்களைப் பார்ப்போமா?

முதல் நிகழ்வு/பாடம்:

17 ஆவது வயதில் கல்லூரிக்குச் சென்ற அவருடைய படிப்புக்கு அவர் வளர்ப்புக் பெற்றோர் செலவழிக்க நேர்ந்த தொகை மிகப் பெரியது. கிட்டத்தட்ட தங்கள் சேமிப்பு முழுவதையுமே அவர்கள் செலவழிக்க வேண்டி இருந்தது. பணவசதி அதிகம் இல்லாத குடும்பத்திலிருந்து வந்த அவருக்கு இத்தனை செலவழித்து படித்து எதை சாதிக்கப் போகிறோம் என்ற மிகப்பெரிய கேள்வி ஆறு மாதம் அலைக்கழித்தது. எந்த விதத்தில் அந்தக் கல்வி அவர் வாழ்க்கையை உயர்த்தப் போகிறது என்ற கேள்விக்கு திருப்திகரமான பதில் கிடைக்காததால் அவர் கல்லூரிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தார். கல்லூரியில் ஒரு பட்டம் பெற வேண்டி பிடித்ததை விடவும் பிடிக்காததை அதிகமாகப் படித்து கல்வியையும் வாழ்க்கையையும் அவர் சுமையாக்கிக் கொள்ள விரும்பவில்லை.

கல்லூரிப் படிப்பை விட்ட அவர் பெற்ற கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நண்பர்களின் அறைகளில் தரையில் படுக்க நேர்ந்ததையும், கோகோ பாட்டில்களை சேகரித்து திருப்பித்தந்து கிடைத்த பணத்தில் உணவுக்கு செலவு செய்ததையும், ஹரே கிருஷ்ணா கோயிலில் கிடைக்கும் அன்னதானத்திற்காக ஒவ்வொரு ஞாயிறும் ஏழு மைல் தூரம் நடந்ததையும் நினைவு கூர்ந்த அவர் அத்தனையையும் மீறி அந்தத் தீர்மானம் தனக்கு எப்படி நன்மை செய்தது என்பதைச் சொன்னார். பிறகு பிடித்த விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிவு செய்த அவர் தனக்குப் பிடித்த கையெழுத்துக் கலை (calligraphy) வகுப்புகளுக்குச் சென்று அதில் நன்றாகக் கற்றுத் தேர்ந்தார்.

அது பிற்காலத்தில் அவர் வடிவமைத்த முதல் மேசிண்டோஷ் (Macintosh) கம்ப்யூட்டருக்கு பலவித எழுத்துக்களை உருவாக்குவதற்கு மிகவும் உதவியது.  அந்தக மேசிண்டோஷ் கம்ப்யூட்டர் எழுத்துக்களையே விண்டோஸ் அப்படியே பின்னர் எடுத்துக் கொண்டதால் இப்போதுள்ள கம்ப்யூட்டர்கள் அழகான எழுத்து வடிவங்களைப் பயன்படுத்த ஸ்டீவ் ஜாப்ஸின் அன்றைய எழுத்து வகைகள் தான் உதவியது. மேலும் அவர் தனக்குப் பிடிக்காத கல்லூரிப் படிப்பிலேயே தங்கி இருந்தால் ஒரு ஊழியராக ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து அடையாளம் இல்லாமல் போயிருந்திருப்பார் என்பதும் உண்மையே.

மனிதன் ஆட்டு மந்தையாக இருந்து விடாமல் தன் தனித்தன்மையின் படியும் உள்ளுணர்வின் படியும் நம்பிக்கையுடன் இயங்கினால் அது கண்டிப்பாக அவன் வாழ்க்கைக்கும் உறுதுணையாகவும் மிகவும் உபயோகமாகவும் இருக்கும் என்பது அவர் முதல் அறிவுரை. அது ஆரம்ப கட்டத்தில் புரியா விட்டாலும் பிற்காலத்தில் கண்டிப்பாகப் புரிய வரும் என்பது அவர் முதல் அனுபவ அறிவுரை.

(படிக்கிற படிப்பை நிறுத்தி விட வேண்டும் என்பதல்ல பாடம். திறமையும் ஆர்வமும் வேறொன்றாக இருக்கையில் அதற்கு சம்பந்தமில்லாத படிப்பைத் தொடர்வது வெற்றிக்கு எதிரானது என்பதை அவர் சொல்வதாக எடுத்துக் கொள்வது முக்கியம்.)


இரண்டாம் நிகழ்வு/பாடம்

தன் 20வது வயதிலேயே ஆப்பிள் நிறுவனத்தை பெற்றோரின் கிடங்கில் ஆரம்பித்த ஸ்டீவ் ஜாப்ஸ் பத்து வருடங்களில் நூறு கோடி ரூபாய் மதிப்பும், 4000 ஊழியர்களும் கொண்ட நிறுவனமாக உயர்த்தி மாபெரும் வெற்றி கண்டார். ஆனால் அவர் தான் ஆரம்பித்த நிறுவனத்தை விட்டே வெளியேற நேர்ந்தது. அவர் திறமையாளர் என்று எண்ணி நிர்வாகத்தில் சேர்த்த ஒரு நபர் அவருக்கு எதிராக செயல்பட்டு, கம்பெனி டைரகடர்களையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு ஸ்டீவ் ஜாப்ஸை வெளியேற்றி விட்டார். எது அவர் வாழ்வின் எல்லாமாக இருந்ததோ எதை அவர் மிக மிக நேசித்தாரோ அது அவர் வாழ்வில் இருந்து பறிக்கப்பட்டது. சில மாதங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அவர் விதியையும், வெளியேற்றிய நபரையும் நொந்து கொண்டு முடங்கி விடாமல் இனி என்ன மிஞ்சி இருக்கிறது என்று யோசித்தார். ஆப்பிள் நிறுவனம் கை விட்டுப் போனாலும் தன் திறமையும், ஆர்வமும் தன்னிடம் இன்னமும் மிஞ்சி உள்ளது என்று தெளிந்த அவர் அதை வைத்துக் கொண்டு மறுபடி நெக்ஸ்ட் (NeXT) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதையும் பின்னர் (Pixar) என்ற நிறுவனத்தையும் ஆரம்பித்த அவர் அந்த இரு நிறுவனங்களையும் திறம்பட நடத்திய பின் இரண்டாம் நிறுவனத்தின் மூலமாக டாய்ஸ் ஸ்டோரி என்ற கம்ப்யூட்டர் அனிமேஷன் திரைப்படம் எடுத்தார். அந்தத் திரைப்படம் பெரிய வெற்றியைக் கண்டது.

ஒரு கால கட்டத்தில் அவருடைய நெக்ஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனமே வாங்கி விட ஸ்டீவ் ஜாப்ஸ் மறுபடி ஆப்பிள் நிறுவனத்திற்குள் நுழைந்தார். அவர் நெக்ஸ்ட் நிறுவனத்தில் உருவாக்கி இருந்த மிக முக்கிய தொழில் நுட்ப மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் எடுத்துக் கொண்டு புதிய பரிமாணம் பெற்றது. ஸ்டீவ் ஜாப்ஸ் படிப்படியாக உயர்வையும், உலகப் புகழையும் சந்தித்தார்.

ஆப்பிளில் இருந்து முதல் முறை வெளியேற்றப்பட்டதை நினைவுகூர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அது பல விதங்களில் நல்லதாகவே முடிந்தது என்று சொன்னார். எத்தனையோ முன்னேற்றங்களும், மாற்றங்களும் ஆரம்பத்தில் இருந்து அங்கேயே இருந்திருந்தால் தன் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்காது என்கிறார். தான் காதலித்து மணம் புரிந்த மனைவியின் சந்திப்பு முதல், திரைப்படத் துறை பிரவேசம் வரை பல நன்மைகளை அதன் மூலம் சந்தித்ததை அவர் தெரிவித்தார்.

மாற்றங்களும், இழப்புக்களும் நாம் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் இழக்காத வரை கசப்பாக இருந்தாலும் கூட மிகப்பெரிய நன்மையையே ஏற்படுத்தும் என்பது அவருடைய இரண்டாவது அனுபவ அறிவுரை. அதனால் எதை நேசிக்கிறீர்களோ அதை விட்டு விட வேண்டாம் என்றும் எதை நேசிக்கிறோம் என்று தெரியா விட்டால் அதைக் கண்டுபிடிக்கிற வரை ஒய்ந்து விட வேண்டாம் என்றும் அவர் கூறுகிறார். அதைக் கண்டு பிடிக்கிற போது அதை இதயம் அறியும், அதன் பிறகு எல்லாமே முன்னேற்றப் பாதையில் முடியும் என்றும் அந்த சாதனை மனிதர் கூறுகிறார்.


மூன்றாவது நிகழ்வு/பாடம்
2004 ஆம் ஆண்டு அவருக்கு ஒரு வித கொடிய கான்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது அவருக்கும் குடும்பத்தாருக்கும் பேரிடியாக இருந்தாலும் அவர் முன்பு போலவே அதையும் நல்ல விதமாகவே எடுத்துக் கொள்ள முடிந்தது பெரும் வியப்பே. தன் சிறு வயதில் படித்த ஒரு வாசகம் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாக அவர் சொன்னார். “ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள் என்பது போல் வாழ். ஒரு நாள் நீ நினைத்த மாதிரியே அதுவே கடைசி நாளாக அமைந்து விடும்”.  அதன் பின் ஒவ்வொரு நாள் காலையிலும் இது என் கடைசி நாளாக இருந்தால் இதை நான் செய்வேனா என்பதே எனது கேள்வியாக அமைந்து விட்டது என்கிறார். பல நல்ல மாறுதல்களுக்கு அந்த கான்சரும் வழிவகுத்து விட்டதாக அவர் சொல்கிறார்.
மரணம் அருகில் இருக்கிறது என்று தெரியும் போது வாழ்க்கையின் அனாவசியங்களில் ஈடுபடாமல் ஒதுக்கி விடுவதும் எது முக்கியம் என்று உணர்கிறோமோ அதில் முழு மனதுடன் ஈடுபடுவதும் சுலபமாகிறது என்பது அவர் சொன்ன மூன்றாவது பாடம். மரணம் நிச்சயமானது, வாழ்க்கை குறுகியது என்பதால் முழுமையான வெற்றிகரமான வாழ்க்கையை வாழ விரும்புபவன் ஒவ்வொரு நாளையும் வீணாக்காமல் இருக்க அவர் அறிவுறுத்துகிறார். அந்தக் குறுகிய வாழ்க்கையை அடுத்தவர்கள் அபிப்பிராயங்களுக்காக வாழாமல் இருக்கும்படியும் இதயபூர்வமாக உள்ளுணர்வு காட்டும் வழியில் தைரியமாக வாழும்படியும் அவர் கூறுகிறார்.
(2005ல் இதை அவர் குறிப்பிட்டாலும் அக்டோபர் 2011 வரை அவர் உயிர் வாழ்ந்தார். கடைசி நாட்களில் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு தன் அன்புக் குடும்பத்துடன் கழித்து அமைதியாக உயிர் விட்டார்.)
வெற்றியை பணத்தால் மட்டும் அளக்க முடியாது. மனம் விரும்பிய ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடிந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி. அப்படி வாழ முடிந்தவன் பணத்தை சம்பாதிக்க முடியாது என்பது முட்டாள்தனம். மனம் விரும்பிய வாழ்க்கையுடன், பணத்தையும், வெற்றியையும் சேர்த்தே ஒருவன் பெற முடியும் என்பதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு மிக நல்ல உதாரணம். அப்படிப்பட்ட மனிதர் அன்று ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக மாணவர்களுக்கு சொன்ன இந்த முப்பெரும் அறிவுரைகள் எக்காலத்திலும் எவருக்கும் ஏற்றுக் கொண்டு வாழத்தக்க அறிவுரைகள். அதை நம் இதயத்திலும், கருத்திலும் ஏற்றுக் கொண்டு பலனடைவோமே!

-என்.கணேசன்

22 comments:

  1. Nice Posting.. thx

    ReplyDelete
  2. ஒவ்வொரு வெற்றியாளர் கடந்து வந்த பாதை கரடு முரடானது ,அருமையான பதிவு .

    ReplyDelete
  3. Thank U Once again

    ReplyDelete
  4. his famous Stanford university speech, which inspired lot of engineering students
    http://www.youtube.com/watch?v=Hd_ptbiPoXM

    ReplyDelete
  5. முத்தான மூன்று பாடங்கள்... நன்றி...
    தொடர வாழ்த்துக்கள்...


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
  6. மிக அருமையான பதிவு ... மிக்க நன்றி

    ReplyDelete
  7. அருமையான பதிவு.

    //காது கொடுத்து கேட்க ஆட்களிருந்தால் காசின்றி அறிவுரை வழங்கவும் ஏராளமான ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.//

    காது கொடுத்து கேட்க ஆளில்லாவிட்டாலும் நாங்கள் அறிவுரை வழங்குவோம்.

    ReplyDelete
  8. அனைவரும் அவசியம் படித்து மனதில்
    பதிந்துவைத்துக் கொள்ளவேண்டிய
    அருமையான மூன்று முத்துக்களை
    மிக அழகாக பதிவு செய்து
    தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. முத்தான மூன்று தன்முனைப்பு நிகழ்வுகள் .நன்றி

    ReplyDelete
  10. மிக அழகாக பதிவு, அனைவரும் அவசியம்

    ReplyDelete
  11. excllent. Rellay its motivating me. Thanks for the wonderful post.

    ReplyDelete
  12. மூன்று அனுபவ பாடங்கள் எல்லோரும் படிக்க வேண்டிய பாடம் தான்.
    எல்லோருக்கும் உதவும் சிந்தனை.
    நன்றி.

    ReplyDelete
  13. இந்த கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது; படிக்கும்போதே எனக்குள் ஒரு நம்பிக்கையை மேலும் ஊட்டியது. ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்கையை உங்களது வரிகளில் படிப்பது இன்னும் சுவாரசியமாக இருக்கிறது. உங்களது தொடர் வாசகனாய் இருக்கலாமென, இந்த கட்டுரை என்னுள் ஏற்படுத்தி இருக்கிறது.

    ReplyDelete
  14. Fine article. Highly motivational.

    ReplyDelete
  15. மிகவும் அருமை. ஏற்கனவே தெரிந்தாலும் அந்த கருத்து உங்கள் எழுத்தில் வராதா என எதிர்பார்க்கவைக்கிறது. அந்த முதல் நிகழ்வுக்கு விளக்கம்...ஹா..ஹா..ஹா.சான்ஸே இல்லை.

    ReplyDelete
  16. //மனிதன் ஆட்டு மந்தையாக இருந்து விடாமல் தன் தனித்தன்மையின் படியும் உள்ளுணர்வின் படியும் நம்பிக்கையுடன் இயங்கினால் ....//

    என்ற வரிகளை படித்தவுடன் எங்கேயோ படித்தது, நினைவுக்கு வந்தது:


    Winners are not doing different things; But
    They are doing the things differently.

    ReplyDelete