சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 9, 2012

ரகசிய தீட்சை பெற தகுதிகள் என்ன?


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 17
ரகசிய தீட்சை பெற தகுதிகள் என்ன?

சிரிஸ் கோயில்களில் மட்டுமல்லாமல் பழங்கால எகிப்தில் வேறுசில கோயில்களிலும் ரகசிய தீட்சை முறைகள் இருந்தன. அங்கும் தகுதி இருப்பதாக நினைப்பவர்களுக்கு மட்டுமே ரகசிய தீட்சை தரப்பட்டது. மதம், மொழி, இனம், சமூக அந்தஸ்து ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டே, தனிமனித பக்குவத்தைப் பொறுத்தே, தகுதி நிர்ணயிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் ரகசிய தீட்சைக்காகச் சென்ற போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் பொருத்தமானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ரகசிய தீட்சை பெற்றவரும், தத்துவாசிரியரும், கணித மேதையுமான பித்தகோரஸ் அக்காலத்தில் சிறப்பு கல்வி பயிற்றுவிக்க ஒரு அகாடமி நடத்தி வந்தார். அக்காலத்தில் அங்கு கல்வி பயில தேர்ந்தெடுக்கப்படுவது பெரிய விஷயமாக கருதப்பட்டது.  பலர் சென்றாலும் சிலர் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டார். காரணம் கேட்ட போது ஒரு முறை பித்தகோரஸ் சொன்னார். “எல்லா மரங்களும் சிற்ப வேலைக்குப் பொருத்தமாக இருக்காது”.
அவர் சொன்னது அந்த சிறப்புக்கல்வியை விட ரகசிய தீட்சைக்கு மிகவும் பொருத்தமான பதிலாக இருந்ததாக பால் ப்ரண்டன் நினைத்தார்.

ஒரு ரகசிய தீட்சை முறையில் தீட்சைக்கு பெறுவதற்கு முன் கடைசியாக சொல்லி அனுப்பும் வாக்கியம் இதுவாக இருந்தது. “இது வரை அனுபவித்திராத ஒரு புதிய அனுபவத்தைப் பெறப் போகிறாய். மனிதனாக இருந்தவன் தெய்வமாக மாறப் போகிறாய். போய் வா”.

பல ரகசிய தீட்சை முறைகளில் தெய்வீக நிலைக்கு முன் சில அபூர்வ சக்திகளைத் தந்து பயங்கரமான மோசமான நிலைகளைக் காண வைத்தனர் என்றும் அதில் தளர்ந்து விடாமல் தாக்குப் பிடிப்பவர்களையே அடுத்த தெய்வீக நிலைக்குத் தேர்வு செய்து அனுப்பியதாக சொல்லப்படுகிறது. அது போன்ற சில பயங்கரமான அனுபவங்களில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நிலை கூட இருக்கும் என்றும் சரியான தகுதி இல்லாத நபர்கள் நிலை குலைந்து போகவோ, பைத்தியமாக மாறி விடவோ, இறக்கவோ கூட வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறார்கள். அந்த அபூர்வ சக்திகளை தன் வசப்படுத்தும் திறமையோ, தகுதியோ இல்லாதவர்களுக்கு அதைக் கற்றுத் தந்தால் கண்டிப்பாக அந்த மனிதர்களுக்கும், மற்றவர்களுக்கும் நல்லது நடக்காது என்கிற ஞானம் அவர்களுக்கு இருந்ததாகத் தெரிகிறது.

(இதையெல்லாம் படிக்கையில் மிக உறுதியும், வலிமையும் உள்ள மனிதர்கள் தான் இந்த தீட்சை முறைகளைப் பெற முடியும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிகிறது. ஞானமல்லாத வேறு நோக்கத்தோடு செல்பவர்கள், பலவீனர்கள் எல்லாம் ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்க்ள் என்பதால் கிடைக்கும் ஞானம் கலப்படமில்லாமல் தூய்மையாகவும் ரகசியமாகவும் பாதுகாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. அதில் தேர்ந்த பின் தான் இறைநிலையை ஒருவரால் அடைய முடிகிறது. அந்த நிலை வார்த்தைகெட்டா நிலை, பேரமைதியும், பேரானந்தமும் உள்ள நிலை என்று கிட்டத்தட்ட எல்லா தீட்சை முறைகளிலும் பல விதமான வர்ணனைகளில் சொல்கிறார்கள்.)

தீட்சை முறையில் கிட்டத்தட்ட ஹிப்னாடிச முறையில் மயக்க நிலைக்கு ஒருவரை அழைத்துச் சென்று தான் வேறுபல அனுபவங்களையும், மேலான உணர்வு நிலைகளையும் அடைய வைக்கிறார்கள் என்றாலும் சாதாரண, நவீன ஹிப்னாடிசத்திற்கும், அக்கால தீட்சை முறை ஹிப்னாடிசத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. இன்றைய ஹிப்னாடிச முறையில் ஹிப்னாடிசம் செய்பவர் தான் செயல் புரிபவராகவும், ஹிப்னாடிசம் செய்யப்படுபவர் முன்னவர் விருப்பப்படி செயல்பட முடிபவராகத் தான் இருக்கிறார். ஹிப்னாடிசம் முடிந்த பின் என்ன நடந்தது என்பது கூடத் தெரியாமல் தான் ஹிப்னாடிசம் இருக்கிறார். ஆனால் அக்கால தீட்சை முறையில் உபயோகப்படுத்திய ஹிப்னாடிசத்தில் ரகசிய தீட்சை பெறுபவர் கிட்டத்தட்ட மரண நிலையிலேயே உடலளவில் ஆழமாகச் செல்லக்கூடிய அளவில் இருக்கிறார். ஆனாலும் கூட அவர் நடப்பவை அனைத்தையும் மிகத் தெளிவாக உணர முடிபவராகவும், அந்த அனுபவங்களில் முழுப்பங்கு வகிப்பவராகவும் இருக்கிறார். நவீன ஹிப்னாடிசத்தில் ஹிப்னாடிசம் முடிந்த பிறகு முன் போலவே ஹிப்னாடிசம் பெற்றவர் இருக்கிறார். ஆனால் ரகசிய தீட்சை ஹிப்னாடிசத்தில் எல்லா அறியாமைகளும் நீங்கி புது ஜென்மம் எடுத்தவராக தீட்சை பெற்றவர் நினைவு திரும்புகிறார். எல்லா விஷயங்களிலும் மேம்பட்டவராகவும், ஞானியாகவும் மாறுகிறார். சாக்ரடீஸ் சொல்கிறார். “இது போன்ற ரகசிய ஞானத்தைப் பெற்றவர்கள் உண்மையான மரணம் வரும் போது கூட நம்பிக்கையோ, தைரியமோ இழக்காமல் சற்றும் வருத்தமில்லாமல் இனிமையாக மரணத்தை சந்திக்கிறார்கள்”.  உண்மைக்காக விஷம் தரப்பட்டு சாக முன் வந்த மனிதர் வாயால் அதைக் கேட்கும் போது அதில் உள்ள நூறு சதவீத உண்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  

பால் ப்ரண்டன் இந்த இடத்தில் அவருடைய நண்பர் ஒருவர் அனுபவத்தையும் கூறுகிறார். அவருடைய நண்பர் விமானப்படை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஆத்மா, இறந்த பின் உள்ள வாழ்க்கை என்பதில் எல்லாம் சிறிதும் நம்பிக்கை இல்லாதவர். அப்படிப்பட்டவருக்கு ஒரு அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து தரப்பட்டது. அது அவருக்கு நூதன அனுபவத்தை ஏற்படுத்தியது. உடல் உணர்ச்சிகள் அனைத்தும் அற்றுப் போன அவர் காற்றில் மிதப்பது போல உணர்ந்த பின்னர் தன்னுடைய அறுவை சிகிச்சையையே அடுத்தவர் அறுவை சிகிச்சையைப் போல அமைதியாகப் பார்க்க முடிந்ததாம். அந்த அனுபவம் அவரை முற்றிலும் புதியவராக மாற்றியதாக அவர் கூறுகிறார். இப்படி நம்மால் விளக்க முடியாத அபூர்வ நிகழ்வுகளிலும் அரைகுறையாக சில அனுபவங்கள் கிடைப்பதுண்டு.

ரகசிய தீட்சை விஷயத்தில் இன்னொரு உண்மையையும் நாம் கவனிக்க வேண்டும். ரகசிய தீட்சை பெற்றவர்கள் எண்ணிக்கை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் கணிசமாக இருந்திருக்க வேண்டும். முன்பு சொன்ன அக்கால ஞானிகள் மட்டுமல்லாமல் பெயரே தெரியாத, பிரபலமல்லாத எத்தனையோ பேர் ஓசிரிஸ் கோயிலில் ரகசிய தீட்சை பெற்றிருந்த போதும் அத்தனை பேரும் அந்த ரகசியத்தைக் காத்த விதம் பிற்கால வரலாற்றாசிரியர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட ஆச்சரியத்தை அளிப்பதாகவே இருக்கிறது.

மொத்தத்தில் அன்றைய ரகசிய தீட்சை பெற்றவர்களிடம் தூய்மை, பொறுமை, மன வலிமை, ரகசியம் காக்கும் தன்மை ஆகிய நான்கும் பிரதானமாக இருந்ததாகத் தெரிகிறது.

அப்படி புனிதக் கோயில்களில் கிடைத்த ரகசிய தீட்சை என்ற ஆன்மிக ஞானம் காலம் செல்லச் செல்ல மறைந்தே போகிற அளவு ஆகக் காரணம் ஆன்மிகம் அமைப்புகள், மற்றும் மதம் சார்ந்த விஷயமாக பிற்காலத்தில் மாறியது தான் என்கிறார் பால் ப்ரண்டன். கலப்படம் ஆரம்பித்து  உண்மையின் சாராம்சம் அதில் மிகவும் குறைந்து விட்டது என்று அவர் நினைத்தார்.

அடுத்த நூற்றாண்டில் இருக்கும் நமக்கும் அதை மறுக்க முடியவில்லை அல்லவா?

(தொடரும்)

- என்.கணேசன்

9 comments:

  1. unmaiyil ungal katturaikal anaiththum aacharyamum piramipum nirainthaai ullathu ayya..vaalthukkal

    ReplyDelete
  2. ithai ezhuthuvadarkum oru gnanam vendum...

    ReplyDelete
  3. very good infirmation,thanks,,,,,

    ReplyDelete
  4. இதைப் போன்ற அறிய தகவல்களை இன்னும் தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கின்றோம். தங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. 17 க்கு பிறகு அடுத்து உள்ள தொடர்கள் வரலியே! எந்த பதிப்பில் பார்க்க வேண்டும் என்பதை தெரிவிக்கவும்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இத்தொடர் நூலாக வெளி வர இருக்கிறது. அதனால் இதில் தொடரவில்லை. நூல் வெளிவந்ததும் தகவல் தெரிவிக்கிறேன். நன்றி.

      Delete