சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 2, 2012

சத்தியம் தவறாத பசுவின் கதை

முன்பெல்லாம் கல்விப்பாடங்களில் உயர்குணங்களை வலியுறுத்தும் பாடல்கள் அதிகம். எல்லா இந்திய மொழிகளிலும் இசையுடன் கூடிய மிக அருமையான பாடல்கள் குழந்தைகள் மனதில் ஆழமாய் பதியும்படி அமைந்திருந்ததை நம்மால் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும். ஆனால் காலப்போக்கில் அது போன்ற அருமையான பாடல்கள் குறைந்து, மறைந்தே போய் விடும் அவலத்திற்கு நிலைமை வந்திருக்கிறது. ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார், பா பா ப்ளேக் ஷீப் போன்ற ஆங்கிலப் பாடல்களை குழந்தைகள் வாயால் கேட்கின்ற அளவிற்கு நம் பண்பாட்டுப் பாடல்கள் கேட்க முடிவதில்லை. இது மிக மிக வருத்தப்பட வேண்டிய விஷயம்.

அது போன்ற பாடல்களில் ஒன்று கன்னட மொழியில் இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்பு வரை படித்து மனப்பாடமாக சொல்லிக் கொண்டிருந்த மிக அற்புதமான பாடல். சத்தியமே இறைவன் என்று வாழ்ந்து அதற்காகத் தன் உயிரையும் தரத் துணிந்த புண்யகோடி என்ற பசுவின் கதை அது. “தரணி மண்டல மத்யதொலகே...என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல். சத்தியமே இறைவன் என்ற புண்யகோடியின் கதையிது (சத்யவே பகவந்தனெம்ப புண்யகோடி கதையிது!) என்று ஒவ்வொரு பாராவின் இறுதியிலும் முடியும் அந்த பாடலின் கதை இது தான்.

கர்னாடகா மாநிலத்தில் ஒரு செழிப்பான கிராமத்தில் காளிங்கன் என்ற இடையன் பல பசுக்களை பராமரித்து வருகிறான். அவன் ஒரு அதிகாலையில் தன் பசுக்களை அழைத்துத் தனக்குத் தேவையான அளவு மட்டுமே பாலைக் கறந்து கொண்டு மீதியைத் தங்கள் கன்றுகளுக்குத் தர அவற்றை அனுப்பி விடுகிறான். அந்தப்பசுக்களும் தங்கள் கன்றுகளைச் சேர காட்டு வழியே செல்கின்றன.

அவர்கள் சென்ற வழியில் கடும்பசியோடு அற்புதா என்ற புலி இரை நோக்கிக் காத்திருந்தது. பசுக்களைக் கண்ட அற்புதா கடும் சீற்றத்துடனும், கர்ஜனையுடன் பசுக்கூட்டத்தின் நடுவே தாவியது. பசுக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள பெரும் ஓட்டம் எடுத்தன. ஆனால் புண்யகோடி என்ற பசு மட்டும் அந்த புலியிடம் மாட்டிக் கொண்டது. அந்தப் பசியுடம் புண்யகோடியைக் கொன்று தின்னப் புறப்பட்ட புலியிடம் புண்யகோடி மிகுந்த துக்கத்துடன் வேண்டிக் கொண்டது. புலியே என் கன்று மிகுந்த பசியுடன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும். நீ எனக்கு சிறிதே சிறிது அவகாசம் கொடுத்தால் நான் அதற்குப் பால் கொடுத்து விட்டு, அனாதையாகப் போகும் என் கன்றை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு வந்து விடுகிறேன். பிறகு நீ என்னை உண்டு பசியாறுவாயாக”.

புலி சொன்னது. “நான் சிறிது காலமாக இரை கிடைக்காமல் கடும்பசியோடு இருக்கிறேன். உன்னை விட்டு விட்டால் நீ தப்பித்து விடுவாய். கண்டிப்பாக திரும்பி வர மாட்டாய். உன்னை விடுவதற்கு நான் என்ன முட்டாளா?

புண்யகோடி உருக்கமாகச் சொன்னது.புலியே சத்தியமே என் தாய், தந்தை, நட்பு, உறவு எல்லாமே. அப்படி இருக்கையில் நான் சத்தியம் தவறினால் அந்த இறைவனே என்னை மெச்ச மாட்டான். நான் சத்தியம் செய்து சொல்கிறேன். கண்டிப்பாக என் கன்றுக்குக் கடைசியாகப் பால் கொடுத்து விட்டு வருவேன். என்னை நம்பு

புலிக்கு புண்யகோடியின் உருக்கம் மனதை அசைத்திருக்க வேண்டும். புண்யகோடியைச் செல்ல அனுமதித்தது. புண்யகோடி தன் இருப்பிடத்திற்கு வந்து தன் கன்றிடம் நடந்ததைச் சொல்லி விட்டு சொன்னது. “மகனே கடைசியாக பாலருந்திக் கொள். நான் சீக்கிரம் அந்தப் புலியிடம் செல்ல வேண்டும். வாக்குக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். இனி எக்காலத்திலும் நீ அந்த வழியில் சென்று அந்தப் புலியிடம் மாட்டிக் கொள்ளாதே. எச்சரிக்கையாக இரு

பால் குடித்த கன்று பசுவைப் போக அனுமதிக்கவில்லை. தாயே இனி எனக்கு பசித்தால் பால் தர யாரிருக்கிறார்கள்? என்னை யார் பார்த்துக் கொள்வார்கள்? நான் யாருடன் இருப்பேன்? என்னை அனாதையாக விட்டு விட்டுச் சென்று விடாதே. நீ இங்கேயே இருந்து விடு”.

அதை ஏற்றுக் கொள்ளாத புண்யகோடி தன் உறவுப் பசுக்களை எல்லாம் அழைத்து உருக்கத்துடன் வேண்டிக் கொண்டது. “என் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். கொடுமைப்படுத்தி விடாதீர்கள். அதனை அனாதையாக்கி விடாதீர்கள். அதனைக் கருணையோடு நடத்துங்கள்

அந்தப் பசுக்களும் புண்யகோடியைப் போக வேண்டாமென்றன. அங்கேயே இருந்து விடச் சொல்லி வற்புறுத்தின. புண்யகோடி மறுத்து விட்டது. இந்த அற்ப வாழ்க்கைக்காக நான் வாக்கு மாற மாட்டேன்.  இது என் கர்ம பலன். அதனை அனுபவித்தே நான் ஆக வேண்டும். என் குழந்தையை மட்டும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அது போதும்என்று கிளம்பியது. பசுக்களும், புண்யகோடியின் கன்றும் பெரும் துக்கத்துடன் புண்யகோடியை வழியனுப்பி வைத்தன.

புலியிடம் வந்து நின்ற புண்யகோடி சொன்னது. “புலியே நான் சொன்னபடி வந்து விட்டேன். கடும் பசியுடன் இருந்த உன்னைக் காக்க வைத்து நான் உனக்கு தவறிழைத்து விட்டேன். இனி என்னைத் தின்று நீ பசியாறுவாயாக

சொல்லி விட்டு அதன் முன் மண்டியிட்டு புண்யகோடி படுத்துக் கொண்டது. தொலைவில் மறைந்து நின்று நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த புலிக்கு புண்யகோடியின் சத்தியம் தவறாமையும், உயர்வான தன்மையும் என்னவோ செய்தன. அந்தக் கணத்தில் மனமாற்றம் அடைந்த புலி சொன்னது. “உன்னைப் போன்ற ஒரு சத்தியம் தவறாத பசுவைக் கொன்று தின்றால் அந்த இறைவனும் என்னை மன்னிக்க மாட்டான். நீ என் சகோதரியைப் போன்றவள். உன்னைத் தின்று உயிர் வாழ்ந்து நான் என்ன சாதிக்கப்போகிறேன். என்னை மன்னித்து விடு”.

புண்யகோடியைத் தின்று பசியாற விரும்பாமல், பசியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அற்புதா என்ற அந்தப்புலி மலையுச்சியில் இருந்து கீழே குதித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டது. புண்யகோடி மீண்டும் தன் இருப்பிடம் திரும்ப அதன் கன்றும், காளிங்கனும், மற்ற பசுக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தன.

கற்பனைக் கதை என்றாலும் பாடல் வரிகளும், அதில் உரையாடல்களில் இருக்கும் அழுத்தமும் கல்லையும் கரைய வைப்பவை. கன்னடம் தெரிந்தவர்கள் இணையத்தில் “punyakoti govinda hadu”  அல்லது “punyakoti lyrics” என்ற தேடல்களில் இந்தப் பாடலைக் கேட்டு மகிழலாம். ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட பாடலை முகமது ரஃபியும் பாடி உள்ளார்.

இது போன்ற பழம்பாடல்களில் நாம் நமது பண்டைய காலத்தின் அடையாளங்களையும், ஒரு காலத்தில் நாம் வைத்திருந்த மதிப்பீடுகளையும், நம் வேர்களையும் இன்றும் காணலாம். இது போன்ற பாடல்களை பாட புத்தகங்களில் இருந்து விலக்கியும் விட்டோம். அதற்கு இணையான மேன்மையான படைப்புகளை உருவாக்கி நம் சிறார்களுக்குப் படிக்கத் தரவும் தவறிக் கொண்டிருக்கிறோம். இந்த அலட்சியம் அறிவீனம் மட்டுமல்ல, ஒருவிதத்தில் தற்கொலையும் கூடத் தான். சிந்திப்போமா!

- என்.கணேசன்  

22 comments:

  1. இந்தக் காலத்து அரசியல்வாதிகளுக்கு அப்படிப்பட்ட நீதிகள் தேவையில்லை. அந்த நீதிக்கதைகளைப் படித்து விட்டு வருபவன் தேவையற்ற பிரச்சினைகளைக் கிளப்புவான். அரசியல்வாதியின் பிழைப்பில் மண் விழும்.

    ஆகவே புத்திசாலித்தனமாக அந்தப் பாடங்களை நீக்கி விட்டான்.

    ReplyDelete
  2. திரு பழனி.கந்தசாமி அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன் ....

    ReplyDelete
  3. நல்லொதொரு நீதிக்கதை!நமது பண்டைய கால அடையாளங்களான சத்தியத்தையும் நேர்மையையும் போதிக்கும் இதுபோன்ற படைப்புகளை நாம் மறந்து கொண்டிருக்கிறோம் !

    ReplyDelete
    Replies
    1. Hai Ganesh

      These type of old stories must reach small kids in primary classes

      shva Paramasivam

      Delete
  4. hi boss,
    Every day I used to tell a story to my daughter, Today I have this good story. Thanks thalaivaaaaaa
    Thalaiva-nin...........continous
    G.Ganesh.
    Saudi Arabia.

    ReplyDelete
  5. sir,

    I am a regular reader of your blog. Off late I am able to read only the article and not the comments and other contents of the page because of some font issue. Can you help me with this issue? Expecting your earlier reply.

    ReplyDelete
    Replies
    1. Sir,
      My technical knowledge in this area is limited. So I don't know how to correct. Sorry. Please ask guidance from anyone having knowledge in this matter.

      Delete
  6. அருமை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. i like your blog. I am a regular reader of your blog.

    ReplyDelete
  8. முதன்முதலில் இந்த பாடலை- கன்னட கிராமிய பாடல், ஜனபத கீதே என்பார்கள்- கன்னட பட டைட்டிலில் கேட்டேன். அந்த படம் தேசிய விருது பெற்ற படம். கொஞ்சமாய் நினைவிருக்கு பசுவை தெய்வமாய் வழிப்படும் கிராமம், மாட்டிரைச்சி சாப்பிடும் மேல் நாட்டு மருமகள் என்று போகும், படத்தில் மறக்க முடியாதது திரும்ப திரும்ப முணுமுணுக்க வைத்த புண்ணிய கோடியின் கதையிது பாடலும், அச்சு அசலாய் கிராம கோவில் குருக்களாய் பிராமண வேஷத்தில் அசத்திய நஸ்ருதீன் ஷா நடிப்பும்

    ReplyDelete
  9. Simple story but important moral... Thanks Sir!
    I recall one more Tamil cow & bell story that happened to Chola King

    ReplyDelete
  10. // இது போன்ற பாடல்களை பாட புத்தகங்களில் இருந்து விலக்கியும் விட்டோம். //

    அட நீங்கள் மட்டும் என்னவாம். நம் தேச பெரிய மனிதர்களின் கோடிக்கணக்கான பொன்மொழிகளை விட்டு விட்டு "அட ஆமாயில்ல" என்ற தலைப்பில் யாரோ ஊர் பெயர் தெரியாத மேனாட்டு மக்களின் வாக்கியங்களை கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இந்தக் குப்பையெல்லாம் பல நூற்றாண்டுகள் முன்பே நம் புராணங்களிலும் சாத்திரங்களிலும்,இலக்கியங்களிலும் சொன்னவைதான். புதிய மொந்தையில் பழம் கள்.

    ReplyDelete
  11. பள்ளியில் நீதி போதனை வகுப்பை எடுத்து விட்டார்கள்.

    நல்ல பண்புகளை வளர்க்கும் நீதி போதனை கதைகளை குழந்தைகளுக்கு கற்பித்தால் நல்ல பண்புகள் குழந்தைகளிடம் வளரும்.

    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. Thank you for this Nice Story already heard and read. But the morality and consciousness emphasized in this post is highly appreciable.
    I have posted this post in my blog http://jtmadhavan.wordpress.com
    having the confident of your permission.

    ReplyDelete
  13. This story is in a Temple which is called "Thiru Vangai Vassael" located in Pudukkottai, Tamil Nadu.

    ReplyDelete
  14. அருமையான கதை இதை படிக்கும் போதே கண்கலகிற்று

    ReplyDelete
  15. அருமையான பதிவு, மனதில் வேரூன்றி விட்டது.நானும் பாசமாக வளர்த்த ஆடுகளை விற்று விட்டேன் இப்போது வருந்துகிறேன் மீண்டும் எனது ஆடுகள் என்னிடம் வருமா,விற்றவரிடம் திரும்ப கேட்பது சரியா ஆலோசனை வழங்குங்கள்

    ReplyDelete
  16. இதன் கதை இவ்வாறு இல்லை இதட் முழுக்கதையும் என்னால் கூறமுடியும்

    ReplyDelete