சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 14, 2011

தர்மம் நிலைநாட்டப்படும் விதம்


கீதை காட்டும் பாதை 14
தர்மம் நிலைநாட்டப்படும் விதம்

இது வரை சொன்ன யோக ரகசியங்கள் ஆதிகாலத்திலேயே தன்னால் உபதேசிக்கப்பட்டது என்றும், பின் வழிவழியாக சொல்லித்தரப்பட்டு பாதுகாக்கப்பட்டாலும் பிற்காலத்தில் மறக்கப்பட்டு விட்டது என்றும் ஸ்ரீகிருஷ்ணர் ஞான யோகத்தின் துவக்கத்திலேயே சொல்ல அர்ஜுனனிற்கு சந்தேகம் வருகிறது. “நீயோ இந்தக் காலத்தவன், நீ எப்படி ஆதிகாலத்திலேயே உபதேசித்திருக்க முடியும்என்று கேட்கிறான்.

கீதையின் மிகப் பெரிய சிறப்பு நான் உபதேசித்துக் கொண்டே போகிறேன், நீ கேட்டுக் கொண்டே வாஎன்ற விதத்தில் இல்லாதது தான். கண்மூடித்தனமாக பின்பற்றுதல் இங்கு ஊக்குவிக்கப்படவில்லை. நிறைய இடங்களில் அர்ஜுனன் கேள்விகள் அறிவுபூர்வமான சந்தேகங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றன. அறிவுக்கு ஒத்து வராததை அர்ஜுனன் உடனடியாக ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல அதை வெளிப்படையாகவே சொல்லவும் செய்கிறான். எதிர் கேள்விகள் கேட்பது மரியாதைக் குறைவாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. என்னை எப்படி நீ சந்தேகப்படலாம் என்பது போன்ற கோபத்தையும் ஸ்ரீகிருஷ்ணரிடம் எழுப்பவில்லை.

ஸ்ரீகிருஷ்ணரைத் தன் நெருங்கிய உறவினராகவும், நண்பனாகவும் மட்டுமே கண்டு வந்த அர்ஜுனனின் இந்த நியாயமான கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் பதிலளிக்கிறார்.

அர்ஜுனா! எனக்கு எத்தனையோ ஜன்மங்கள் கழிந்து விட்டன. உனக்கும் அப்படியே. அந்த ஜன்மங்கள் அனைத்தையும் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்.

நான் பிறப்பற்றவனாகவும், அழிவற்றவனாகவும், சகல பூதங்களுக்கும் ஈசனாகவும் இருந்த போதிலும் என்னுடைய மாயையினால் இயற்கையை வசமாக்கிக் கொண்டு அவதாரம் செய்கின்றேன்.

பரதகுமாரனே! எப்போதெல்லாம் தர்மத்திற்குத் தாழ்வு ஏற்பட்டு அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் என்னை நான் சிருஷ்டித்துக் கொள்கிறேன்.

நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலை நிறுத்துவதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்கிறேன்.

அர்ஜுனனும், ஸ்ரீகிருஷ்ணரும் அந்தந்த உருவத்தில் மட்டும் மஹாபாரத காலத்தினவரே தவிர, இருவருக்கும் அது ஒரே ஒரு பிறவி அல்ல. எத்தனையோ பிறவிகள் முன்பே எடுத்திருக்கின்றனர். ஆனால் இறை நிலையில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கு அனைத்துப் பிறவிகளும் நினைவு இருப்பதும் மனித நிலையில் இருக்கும் அர்ஜுனனிற்கு அவை குறித்த எந்த நினைவும் இல்லாமல் இருப்பதே வித்தியாசம்.

கீழ்நிலையில் இருந்து இறைநிலையை அடையும் வரை மனிதன் எத்தனையோ பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கிறது. அவனது ஆத்ம ஞானத்தை மறைக்கும் எத்தனையோ திரைகளை விலக்க அந்தப் பிறவிகள் அவனுக்குத் தேவையாக இருக்கின்றன. உண்மையான நான் என்பதை அவன் உணரும் முன் எத்தனையோ பொய்யான நான்களை அந்தப் பிறவிகளில் பாவித்து பின் அதெல்லாம் ‘நான்அல்ல என்று தெளிவடைய வேண்டி இருக்கிறது. அதே போல ஒரு பிறவியில் செய்த கர்மங்களின் பலன்கள் அனுபவிக்க மீதி இருந்தால், அப்போதும் அவனுக்கு இன்னொரு பிறவி தேவைப்படுகிறது.

இந்த நிலைமை மனிதனுக்குத் தானே இறைவனுக்கில்லையே, பின் ஏன் இறைவன் பிறவி எடுக்கிறார் என்ற கேள்வி எழுவது இயற்கை. அனைத்தும் அறிந்தவருக்கு இனி அறியவோ, தெளியவோ ஏதுமில்லை என்பதால் இறைவன் கர்மங்களால் கட்டுண்டவர் அல்ல என்பதால் இந்தக் கேள்வி எழுகிறது. அதற்குப் பதிலாகத் தான் ஸ்ரீகிருஷ்ணர் தர்மத்திற்குத் தாழ்வு ஏற்பட்டு அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் தன்னை சிருஷ்டித்துக் கொள்வதாகவும், நல்லவர்களைக் காத்து தீயவர்களை அழிக்க ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் எடுப்பதாகக் கூறுகிறார்.

தனிமனிதன் பிறவி எடுப்பது தன்னைக் கண்டு கொண்டு உய்வடைய என்றால் இறைவன் அவதாரம் எடுப்பது தர்மத்தை நிலைநாட்ட-தர்மத்தைக் கடைபிடிப்பவர்களைக் காப்பாற்ற. அதர்மம் மேலோங்கும் போது துன்புறும் நல்லவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளிக்கும் விதமாகவே இறைவன் தோன்றுகிறார். பிறப்பும் இறப்பும் இல்லா இறைவன் அவ்விரண்டிற்கும் தன்னை உட்படுத்திக் கொள்வதும், பிறவியினால் வரும் அனைத்து அசௌகரியங்களுக்கும் தன்னை உட்படுத்திக் கொள்வதும், நல்லவர்கள் மேல் உள்ள எல்லையில்லாத கருணையினால் தான்.

அதர்மம் வெளிப்பார்வைக்கு எப்போதுமே பலமுள்ளதாகத் தான் தோன்றும். அதற்குக் கிடைக்கும் ஆரம்ப வெற்றிகள் அதை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும். அதனாலேயே அது அதிக கர்வத்தையும் ஏற்படுத்தும். அத்துடன் அதர்மத்தின் தன்மையே ஒரு அளவோடு நிற்காமலிருப்பது தான். அப்படி கர்வத்துடன் அதர்மம் அத்துமீற ஆரம்பிக்கும் போது நல்லதிற்குக் காலமில்லைஎன்ற விரக்தியையும் பார்ப்பவர்கள் மனதில் ஏற்படுத்துவதுண்டு.

அப்படி அதர்மம் மேலோங்கும் எல்லா சமயங்களிலும் இறைவன் தோன்றுவதாக கீதை சொல்கிறது. அந்த எல்லா சமயங்களிலும் இறைவன் தனி உருவம் எடுத்தே தோன்ற வேண்டும் என்பதில்லை. இறைவன் பலர் மனதிலும் எண்ணமாகவும், சக்தியாகவும், தைரியமாகவும் உருவெடுக்கலாம்.
அடக்குமுறை, அராஜகம் ஆகியவற்றிற்கு அசைந்து கொடுக்காமல், ஆசை காட்டும் போது விலை போகாமல், அதர்மத்தை உறுதியாக எதிர்த்து நிற்கும் அபூர்வ மனிதர்களைக் காணும் போது மனிதசக்திக்கும் மீறிய சக்தி அவர்களை உந்துவதை நம்மால் உணர முடியும். அந்த சக்தி இறைவனுடையதாகவே இருக்கிறது. அந்த சக்தியின் முன் அதர்மம் தோற்று விடுகிறது.

பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரையான வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு விளங்காமல் போகாது. ஒவ்வொரு காலத்திலும் அநியாயங்களும், அக்கிரமங்களும் தலை விரித்தாடும் போது, அதைச் செய்கிறவர்களின் அதிகாரம் எல்லையில்லாததாக இருக்கும் போது அவர்களை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்றே எண்ணத் தோன்றும். புராண காலத்தில் கூறப்பட்ட அரக்கர்களை விட மோசமாக அவர்கள் நடந்து கொண்டு தங்கள் பலத்தை நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் அசைக்க முடியாதவர்கள் என்று எண்ணப்பட்ட அவர்கள், வானளாவிய அதிகாரம் இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்த அவர்கள் கடைசியில் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு இருக்கிறார்கள். அதை செய்யக்கூடிய மனிதனோ, மனிதர்களோ உருவாகியிருப்பது தெய்வ சங்கல்பத்தாலேயே. அதை செய்து முடிக்கிற வரையில் இறைசக்தி அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்.

அப்படியானால் தனி அவதாரம் இறைவன் எடுப்பது எப்போது? அது நீண்ட கால இடைவெளிகளிலேயே நிகழ்கிறது. தீமைகளும் அதர்மங்களும் சில தனி மனிதர்களிடத்தில் மட்டும் இல்லாமல் பெரும்பாலான மனிதர்களிடமும் காணப்படுகையில், சமூகத்தில் சீர்கேடுகள் புறையோடிப் போயிருக்கையில், ஒரு முழுமையான சீர்திருத்தமும், மாற்றமும் தேவைப்படுகையில், ஒரு அவதார புருஷர் பிறவி எடுக்கிறார். அந்த அவதார புருஷர் மகத்தான மாற்றங்கள் ஏற்படக் காரணமாகிறார். அவர் வருகையால் சமூகத்தின் மனப்போக்கும், வாழ்க்கை முறையும் அடியோடு மாறி ஒரு மறுமலர்ச்சி ஏற்படுகிறது.

மேலும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

அர்ஜுனா! திவ்யமான என்னுடைய அவதார ரகசியத்தையும் என்னுடைய செயல்களையும் எவனொருவன் அறிந்து கொள்கிறானோ அவன் உடலை விட்டுப் பிரிந்தபின் மறுபடியும் பிறக்க மாட்டான். அவன் என்னையே அடைந்து விடுவான்.

இறைவனுடைய அவதார ரகசியத்தையும், எல்லாவற்றிலும் இறை சக்தியின் செயல்பாடுகளையும் அறிய முடிந்தவனுக்கு மேலும் அறிந்து கொள்ள எதுவுமில்லை. அறியாமை நீங்கி விடுவதால் அதனால் விளையும் கர்மவினைகளும் அவனைப் பிணைப்பதில்லை. எனவே மரணத்திற்குப் பிறகு  மறுமுறை பிறக்க வேண்டிய அவசியமில்லாத அவன் இறைவனை அடைந்து விடுவான்.

பிறவாமை வேண்டும்என்று காரைக்கால் அம்மையாரும்,  இருப்பையூர் வாழ் சிவனே இன்னுமோர் அன்னை கருப்பையூர் வாராமற் காஎன்று பட்டினத்தாரும் இறைவனிடம் வேண்டியதைப் படித்திருக்கிறோம். பிறவிப் பெருங்கடலில் சிக்கி, சுக துக்க அலைகளால் ஓயாமல் அலைக்கழிக்கப்பட ஞானிகள் விரும்புவதில்லை. எனவே அதில் சிக்காமல் இருப்பதே அவர்களின் லட்சியமாக இருக்கிறது. அதற்கான வழியையே இங்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறியிருக்கிறார்.

பாதை நீளும்....

என்.கணேசன்
நன்றி: விகடன்

6 comments:

  1. ஞான தத்துவத்தை நன்றாக விளக்கியுள்ளீர்கள். மனிதப்பிறவி கஷ்டங்களும் சுகங்களும் நிறைந்துள்ள வாழ்க்கை. இதை விடவேண்டும் என்பதுதான் ஞானம்.

    ReplyDelete
  2. அர்ஜுனன் கேள்விகள் அறிவுபூர்வமான சந்தேகங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றன. அறிவுக்கு ஒத்து வராததை அர்ஜுனன் உடனடியாக ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல அதை வெளிப்படையாகவே சொல்லவும் செய்கிறான். எதிர் கேள்விகள் கேட்பது மரியாதைக் குறைவாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. என்னை எப்படி நீ சந்தேகப்படலாம் என்பது போன்ற கோபத்தையும் ஸ்ரீகிருஷ்ணரிடம் எழுப்பவில்லை./

    அருமையான நீளும் பாதைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. நன்றாக சொல்லியுள்ளீர்கள் அருமை

    ReplyDelete
  4. இறைவனுடைய அவதார ரகசியத்தையும், எல்லாவற்றிலும் இறை சக்தியின் செயல்பாடுகளையும் அறிய முடிந்தவனுக்கு மேலும் அறிந்து கொள்ள எதுவுமில்லை. அறியாமை நீங்கி விடுவதால் அதனால் விளையும் கர்மவினைகளும் அவனைப் பிணைப்பதில்லை. எனவே மரணத்திற்குப் பிறகு மறுமுறை பிறக்க வேண்டிய அவசியமில்லாத அவன் இறைவனை அடைந்து விடுவான்.

    ReplyDelete
  5. இறைவனுடைய அவதார ரகசியத்தையும், எல்லாவற்றிலும் இறை சக்தியின் செயல்பாடுகளையும் அறிய முடிந்தவனுக்கு மேலும் அறிந்து கொள்ள எதுவுமில்லை. அறியாமை நீங்கி விடுவதால் அதனால் விளையும் கர்மவினைகளும் அவனைப் பிணைப்பதில்லை. எனவே மரணத்திற்குப் பிறகு மறுமுறை பிறக்க வேண்டிய அவசியமில்லாத அவன் இறைவனை அடைந்து விடுவான்.//

    உண்மை.

    எல்லாம் அவன் செயல் என்று உணர்ந்தவர்கள் எப்போதும் எதற்கும் கவலைப்ப்டுவது இல்லை. அவன் பார்த்துக் கொள்வான் என்ற சரணாகதி தத்துவம். இறைவனை அடைய இதை விட சிறந்த வழி இல்லை. மீண்டும் பிறக்காமலும், பிறந்தாலும் அவனை மறக்காமலும் இருப்போம் காரைக்கால் அம்மை மாதிரி.

    மிகவும் அருமையான் பதிவு.

    ReplyDelete