தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Wednesday, January 19, 2011
பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு
சில பேர் கவிதைகள் எழுதினால் அதில் ஒரு பொருளை அர்த்தம் செய்து கொள்வதே மிகவும் கஷ்டம். வார்த்தை ஜாலங்கள் இருக்குமே ஒழிய என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள பட்டிமன்றமே நடத்த வேண்டி வரும். ஆனால் பண்டைய தமிழகத்தில் வாழ்ந்த கவி காளமேகம் என்ற புலவர் ஒரே பாடலில் நேர் எதிரான இரு கருத்துகளைக் கூற வல்லவர்.
சோழ நாட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கவி காளமேகம் ஒரு நாள் பல இடங்கள் சுற்றி களைத்துப் போய் இரவு நேரத்தில் நாகப்பட்டினம் வந்து சேர்ந்தார். மிகுந்த பசி வேறு அவரை வாட்டியது. “எங்கு உணவு கிடைக்கும்?” என்று ஊராரிடம் விசாரித்த போது “காத்தான் சத்திரம் என்ற சத்திரத்திற்குச் சென்றால் உணவு கிடைக்கும் என்று சொன்னார்கள்.
காளமேகம் காத்தான் சத்திரம் சென்று சேர்ந்த சமயம் அகாலமானதால் அங்கு சமைத்திருந்த உணவு தீர்ந்து போயிருந்தது. ஆனாலும் இவருக்காக அவர்கள் சமைக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் உணவு தயாரிக்க நேரம் அதிகமானது. பசி தாங்காத காளமேகம் கோபத்தில் “நாகப்பட்டினத்தில் இருக்கும் காத்தான் சத்திரத்தில் மாலையில் தான் அரிசியே வரும். அதை சுத்தம் செய்து உலையில் போடும் போது நள்ளிரவாகி விடும்.அதை வடித்து ஓர் அகப்பை சோறை இலையில் பரிமாறுவதற்குள் பொழுது விடிந்து விடும்” என்று பொருள்பட பழித்துப் பின் வரும் பாட்டைப் பாடினார்.
கத்துகடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசி வரும்-குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.
பின் அவருக்கு உணவு பரிமாறினார்கள். ருசியான உணவைத் திருப்தியாக அவர் உண்டு முடித்த பின் சத்திரத்து அதிகாரி அவரிடம் வந்து “உணவு சமைக்க குறைந்த பட்ச நேரமாவது ஆகும் அல்லவா? அதற்குப் போய் எங்கள் சத்திரத்தை இப்படிப் பழித்துப் பாடி விட்டீர்களே” என்று கூறி வருந்தினார். கவி காளமேகத்திற்கு மனம் நெகிழ்ந்தது.
ஆனால் சமயோசிதமாக தன் பாடலுக்கு வேறு விதமாக அவர் விளக்கம் அளித்தார். “ஐயா! என் பாடலை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். நான் பாடிய பாடலின் பொருள் இது தான். “உலகமெங்கும் பஞ்சம் வந்தாலும் நாகப்பட்டினத்தில் இருக்கும் காத்தான் சத்திரத்தில் அரிசி வரும். உலை ஏற்றிய உடனேயே ஊராரின் பசி அடங்கும். இலையில் பரிமாறிய அன்னத்தின் வெண்ணிறத்தைப் பார்க்கையில் வெள்ளி உதயமாவது போல் இருக்கும்” இப்போது சொல்லுங்கள். உங்கள் சத்திரத்தை நான் பழித்துப் பாடாமல் பாராட்டி அல்லவா பாடி இருக்கிறேன்”
சத்திரத்து அதிகாரி மகிழ்ந்து போனார் என்பதைச் சொல்லவா வேண்டும்.
இந்தப் பாடலைக் கோபத்தில் திட்டிப் பாடினாலும் தன் சாதுரியத்தால் அதன் பொருளை அப்படியே திருப்பிப் போட்டு விட்டார் காளமேகப் புலவர். ஆனால் பாடுகையிலேயே இரண்டு விதமாகப் பொருள் வரும்படியாகப் பாட்டுவதிலும் அவர் வல்லவராக இருந்தார். அதற்கு இன்னொரு உதாரணம்-
அக்காலத்தில் புலவர்கள் திருமண வீட்டுக்குச் சென்றால் மணமக்களை வாழ்த்தி செய்யுள் பாடுவது வழக்கம். ஏதோ ஒரு தெய்வத்தின் பெயரைக் குறிப்பிட்டு அத்தெய்வம் மணமக்களைக் காக்கட்டும் என்று பாடுவார்கள். காளமேகமும் அப்படி ஒரு திருமணத்திற்குச் சென்ற போது மணமக்களை வாழ்த்தி செய்யுள் பாட வேண்டி வந்தது. அதில் தர்மசங்கடம் என்னவென்றால் அங்கு வைணவர்களும் இருந்தனர், சைவர்களும் இருந்தனர். அக்காலத்தில் அவர்களுக்கிடையே கடுமையான சண்டை இருந்தது. திருமாலை வைத்துப் பாடினால் சைவர்களுக்கு வருத்தம். சிவனைப் பாடினாலோ வைணவர்களுக்கு வருத்தம்.
காளமேகம் சற்று யோசித்து விட்டு சைவ மற்றும் வைணவ அடியார்கள் இருபாலாரையும் மகிழ்விக்கும் விதத்தில் ஒரு பாடல் பாடினார்.
சாரங்க பாணிய ரஞ்சக்கரத்தர் கஞ்சனைமுன்
ஓரங்கங் கொய்த உயர்வாளர்-பாரெங்கும்
ஏத்திடுமை யாக ரினிதா யிருவரும்மைக்
காத்திடுவ ரெப்போதும் காண்.
சிவனைப் பாடுவதாகப் பார்த்தால் கீழ்கண்ட பொருள் வரும்.
சாரங்கபாணியர் - மானேந்திய கையினர்
அஞ்சு அக்கரத்தர் – பஞ்சாட்சர சொரூபமானவர்
முன் கஞ்சனை ஓரங்கம் கொய்த உகிர்வாளர் – முன் காலத்தில் தாமரை வாசனாகிய பிரம்மனை ஒரு தலையினைக் கிள்ளிய நகத்தினை உடையவர்.
பாரெங்கும் ஏத்திடும் உமை ஆகர் – உலகமெல்லாம் போற்றுகின்ற உமை அம்மையைத் திருமேனியில் பாதியாகக் கொண்டவர்
அந்த ஈசன் உம்மை எப்போதும் காத்திடுவாராக!
திருமாலைப் பாடுவதாகப் பார்த்தால் கீழ்கண்ட பொருள் வரும்.
சாரங்கபாணியர் – சாரங்கமாகிய வில்லைக் கைக் கொண்டவர்
அஞ் சக்கரத்தார் – அழகிய சக்கரத்தை உடையவர்
முன் கஞ்சனை ஓர் அங்கம் கொய்த உகிர்வாளர் – முன்னாளில் மாமன் கம்சன் உடலைக் கிழித்த நகத்தினைக் கிழித்த நகத்தினை உடையவர்.
பாரெங்கும் ஏத்திடும் மையாகர் – உலகமெங்கும் போற்றிடும் கரிய மேனி உடையவர்
அந்த திருமால் உம்மை எப்போதும் காத்திடுவாராக!
அவர் பாடலில் இப்படி தங்களுக்கு ஏற்றது போல் பொருள் கொண்டு வைணவ அடியார்களும், சைவ அடியார்களும் மகிழ்ந்தனர்.
இப்படி தமிழைத் தனக்கு வேண்டியது போல் வளைத்து அழகான பாடல்களைப் பாடிய காளமேகம் அக்காலத்து மக்களால் ‘கவிராஜ காளமேகம்’ என்று அழைக்கப் பட்டார். இரட்டுற மொழிதல் என்றழைக்கப்பட்ட இது போன்ற இருவேறு கருத்துகளைப் பிரதிபலிக்கும் பாடல்கள் பாடுவது சுலபமல்ல. அதிலும் இரு வேறு கருத்துகளும் ஒன்றிற்கொன்று எதிர்மறையாக வேறு இருக்க முடிவது கவியின் திறமைக்கு சிகரமே அல்லவா? ஆனால் பின் தொடர்ந்த காலத்தில் இது போன்ற பாடல்கள் குறைந்து தற்போது இல்லாமலே போய் விட்டன என்பது வருத்தத்திற்கு உரிய அம்சம். இன்றைய தமிழறிஞர்கள் இது போன்ற பாடல்களை வளர்க்க ஆவன செய்வார்களா?
என்.கணேசன்
நன்றி: ஈழ நேசன்
Subscribe to:
Post Comments (Atom)
அட போட வைத்த பதிவு. அருமை.
ReplyDeleteகவி காளமேகப்புலவரின் புலமையும் கவித்திறனும் அறிவுத்திறனும் எத்துணை வியந்து பாராட்டினாலும் தகுமானதே.
ReplyDeleteஅவரது "பாம்பாகும் வாழைப்பழம்" மற்றும் "உப்புமேலாடும்" படித்தபின் தான் தமிழ் மீதான என் காதல் பெறுகியது என்று சொல்ல வேண்டும்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
மிக அருமையான பதிவு..
ReplyDeleteகவி காளமேகப்புலவரை நினைவு படுத்தியதற்கு நன்றி ..
அற்புதமான பதிவு. தமிழின் இனிமை சொல்ல இப்பதிவொன்று போதாதென்பது அடியேனின் சிறிய கருத்து. தொடரட்டும் உமது தமிழ்ப்பணி. காத்திருக்கிறோம். நெஞ்சார்ந்த நன்றிகளுடன் க.மோகன்ராஜ்
ReplyDeleteசூப்பர் சார்.
ReplyDeleteஇதுமாதிரி இன்னும் நிரைய பாடல்களை பதியுங்கள்
Ganeshan, I wish you could start a Kaalamegam series like Aazhmanadhin arpudha sakthigal. The great poet Kannadhasan has said a lot about Kaalamegam in his book "Naan rasiththa varnanaigal". Thank you
ReplyDeleteஅருமை....அருமை அற்புதமான பதிவு.....இன்னும் இப்படி நிறைய அறியத்தாருங்கள் நண்பரே! நன்றி.
ReplyDeleteபாடலின் இன்னொரு விளக்கம் அருமை.
ReplyDelete