தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Monday, June 14, 2010
ஆழ்மனதின் அற்புத சக்திகள் 35
மந்திர தியானம் செய்முறை
மந்திர தியானத்திற்குப் பயன்படுத்தப்படும் சொற்களில் முதலிடம் வகிப்பது ”ஓம்”. பிரணவ மந்திரமாகக் கருதப்படும் இம்மந்திரம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடவுளர்களின் பெயரை ஜபிக்கும் போது கூட இந்துக்கள் இந்த ஓமை சேர்த்தே ஜபிக்கின்றனர். ஓம் நமச்சிவாயா, ஓம் நமோ நாராயணாய ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
கிறிஸ்துவ தியானத்தில் ஜான் மெய்ன் “மாராநாதா” என்கிற மந்திரத்தை உபயோகித்தார். இது ஏசுநாதர் வாழ்ந்த காலத்தில் அவர் பேசிய அராமிக் மொழிச் சொல் எனப்படுகிறது. இதற்கு ஏசுவே வாருங்கள், அல்லது ஏசு வருகிறார் என்பது பொருள் என்கிறார்கள். செயிண்ட் பாலும், செயிண்ட் ஜானும் இந்த பிரார்த்தனை சொல்லைப் பயன்படுத்தி இருப்பதாக சொல்லப் படுகிறது.
புத்த மதத்தில் ”ஓம் மணி பத்மே ஹம்” என்ற மந்திரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மதத்தினர் தங்கள் புனித நூல்களில் உள்ள சொற்களில் ஏதாவது ஒன்றை மந்திர தியானத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.
சிலர் தத்துவார்த்தமான ஒரு சொல்லை மந்திரமாக எடுத்துக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு சிலர் “சோ-ஹம்” என்ற மந்திரத்தை பயன்படுத்துகிறார்கள். இதற்கு நானே அது என்பது பொருள். ஆனால் சில தமிழர்கள் இந்த மந்திரத்தைப் பயன்படுத்தும் போது ”சோ ஹம்” என்பது சோகம் என்ற சொல் போல இருப்பதாக நினைக்கத் தோன்றுவதாகச் சொல்கிறார்கள். அப்படித் தோன்றுபவர்கள் இந்த மந்திரத்தை தவிர்க்கலாம்.
மதங்களை சாராதவர்கள், தத்துவ ஞானங்களில் பெரிய ஈர்ப்பு இல்லாதவர்கள் தங்களைக் கவர்ந்த ஒரு மேன்மையான சொல்லை மந்திரமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மந்திர தியானத்தில் எந்த சொல்லை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றாலும் ஒரு முறை தேர்ந்தெடுத்த பின் அதையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அப்போது தான் தியானம் நல்ல பலனைத் தரும்.
மந்திரச் சொல் தகுந்த குரு மூலம் உபதேசம் செய்யப்பட வேண்டும் என்று நம் முன்னோர் நினைத்ததற்கு முக்கிய காரணம் அக்காலத்தில் குருவிடமிருந்து பெற்ற எதையும் புனிதமாகக் கருதும் வழக்கம் இருந்தது தான். இக்காலத்தில் அப்படிப்பட்ட குருவைக் காண்பது கஷ்டம் என்பதால் முறையாக அந்த மந்திரச் சொல்லை தியானத்திற்கு ஏற்றுக் கொள்ள இன்னொரு வழியைக் கடைபிடிக்கலாம்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலுக்கோ, பூஜையறைக்கோ சென்று தங்கள் இஷ்ட தெய்வத்திடம் இருந்து அந்த மந்திரச் சொல்லைப் பெறுவதாக கண்களை மூடிக்கொண்டு மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். இல்லா விட்டால் நீங்கள் தொழும் மகானிடமிருந்து அதைப் பெறுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். மற்றவர்கள் சமுத்திரம், மலை, நதி போன்ற இயற்கை சூழ்நிலைக்குச் சென்றோ, இல்லை அமைதியான வேறிடத்திற்குச் சென்றோ பிரபஞ்சத்திடம் இருந்தே அந்தச் சொல்லை உபதேசம் பெறுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். மிகுந்த நன்றியுடன் அந்தச் சொல்லைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்தக் கணத்திலிருந்து உங்களுக்கு மிகப் புனிதமான சக்தி வாய்ந்த சொல்.
இனி மந்திர தியானம் செய்யும் முறையைப் பார்க்கலாம். சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பே கடிகாரத்தில் அலாரம் செட் செய்து விட்டு தியானத்தை ஆரம்பித்தால் அடிக்கடி கடிகாரத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.
1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.
2) மூச்சு சீராகவும், ஆழமாகவும் தானாக மாறும் வரை உங்கள் கவனம் அதன் மீது இருக்கட்டும்.
3) மூச்சு சீரான பிறகு அந்த மந்திரத்தை மௌனமாக மனதிற்குள் சொல்ல ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் அது சிரமமாகத் தோன்றுபவர்கள் சில நாட்களுக்கு மட்டும் வாய் விட்டே மெல்ல சொல்லலாம். ஆனால் சில நாட்கள் கழிந்த பின் மனதிற்குள் மௌனமாக உச்சரிக்க ஆரம்பித்து விட வேண்டும்.
4) அந்த மந்திரத்தை நிறுத்தி நிதானமாக உச்சரியுங்கள். உச்சரிக்கும் விதம் மிக வேகமாகவோ, மிக நிதானமாகவோ இல்லாமல் சாதாரண நிதானத்துடன் இருக்கட்டும்.
5) உங்கள் முழு கவனமும் நீங்கள் மனதில் உச்சரிக்கும் அந்த மந்திரத்தின் மீதே இருக்கட்டும். சில முறைக்குப் பின் மனம் கண்டிப்பாக அலைய ஆரம்பிக்கும். எத்தனை முறை அலைந்தாலும் பொறுமையாக அந்த அதை திரும்ப மந்திரத்திற்கே கொண்டு வாருங்கள். உட்காரும் நிலை சில உணர்வுகளை உடலில் ஏற்படுத்தக் கூடும். அதில் கவனம் செல்லும் போதும் மீண்டும் மனதை மந்திரத்திற்கே கொண்டு வாருங்கள்.
6) தியானத்தின் போது மந்திரம் உச்சரிப்பது நின்று போகலாம். நீங்கள் மந்திரத்தை உச்சரிக்கும் வேகம் அதிகரிக்கவோ, குறையவோ செய்யலாம். அப்போதெல்லாம். மனதில் மந்திரம் அல்லாமல் வேறெதோ எண்ணம் நுழைந்து விட்டது என்று பொருள். அப்படி எல்லாம் ஆகும் போது சலிப்படையக் கூடாது. இந்தக் கட்டத்தை எல்லாம் தாண்டாமல் யாரும் தியானங்களில் உயர்நிலைகள் அடைய முடிந்ததில்லை.
7) திரும்பத் திரும்ப ஆரம்பித்த அதே ஆர்வத்துடன் அதே நிதானமான முறையில் மந்திரத்தை மீண்டும் உச்சரிக்க ஆரம்பியுங்கள். ஒரு சில நாட்களில் அந்த மந்திரம் உங்களுக்குள் பெரும் மாற்றங்கள் கொண்டு வரும். அப்போதும் கூட அந்த மாற்றங்களைப் பற்றி அந்த தியான நேரத்தில் சிந்திக்க ஆரம்பித்து விடாதீர்கள். அந்த மந்திரச் சொல்லில் மீண்டும் மீண்டும் லயிக்க விடுங்கள்.
8) தியானம் நல்ல முறையில் கைகூடிய பின் ஒரு நாளில் ஒரு கட்டத்தில் நீங்கள் மந்திரத்தை மட்டுமே உணர்ந்தவராய் இருப்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே அந்த மந்திரத்தை உச்சரிப்பது போல உணர்வீர்கள். அந்த மந்திரமே உங்கள் பிரபஞ்சமாகி விடும். ஒரு பேரமைதியினை நீங்கள் ஆழமாக உணர்வீர்கள். காலம் அந்த சமயத்தில் ஸ்தம்பித்துப் போவதாய் உணர்வீர்கள்.
9) ஆனால் அந்த அனுபவங்கள் ஆரம்பங்களில் சில வினாடிகளே நீடிக்கும். பின் அது போன்ற அனுபவங்கள் சீக்கிரம் கிடைக்காமல் போகலாம். அதையே எதிர்பார்த்து தியானம் செய்வது தியானமாகாது. எதிர்பார்ப்பு மனதில் இருக்கிற நேரம் மனம் முழுமையாக தியானத்தில் லயிக்காது.
10) இது போன்ற அனுபவங்கள் வரும். போகும். ஆனால் இதிலெல்லாம் அலைக்கழியாமல் தியானத்தை மீண்டும் தொடருங்கள். மனம் அலைகின்ற நேரத்தில் அதைப் பொருட்படுத்தாமல் எப்படி அதை மீண்டும் மந்திரத்திற்குக் கொண்டு வருவீர்களோ அப்படியே இந்த எதிர்பார்ப்புகள் வரும் போதும் அதை ஒரு விலகலாக எண்ணி மீண்டும் மனதை மந்திரத்திற்குக் கொண்டு வாருங்க்ள்.
தியானத்தை முடித்த பின்னர் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் எழுங்கள்.
மேலும் பயணிப்போம்.
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
arumaiyana yosanaikal
ReplyDeleteDear Mr ganesh,
ReplyDeleteVery good and much useful for everyone. Once again my hearty salute for given us this kind of message.
Best Regards,
P.Dhanagopal
Hello sir,
ReplyDeleteThangaladhu indha Azhmana sakthi-payanathil naanum kalandhuviten...miga arunai...niraiya pudhumaiyana vishayangal...nandhi..thangal pani thodara vazhthukal...
Sa.Premkumar
Hello Sir,
ReplyDeleteMiga arumaiyana Thodar...Enakum en kuzhuvukum etra thodar...thangal pani thodara vazhthukal...
Sa.Premkumar
Nanbare,
ReplyDeleteNeemgal oru magaththana paniyai seithu varugireergal ! Ungalukku en vanakkamum vazhthukalum !
padmanaban
Hello..I am fan of your blog, all articles are excellent, keep it up!! Asok.
ReplyDeleteநான் நேற்று இருந்து இந்த தொடரை முழுவதுமாக படித்து வருகிறேன். அருமையாக இருக்கிறது. ஆனால்
ReplyDeleteதயவுசெய்து மற்ற மதத்தைப்பற்றி கூறி இந்துமதத்தை விற்காதீர்கள்.
நான் எத்தனயோ முறை தியானம் செய்ய முயன்று இருக்கிறேன்.உபதேசமும் பெற்று இருக்கிறேன்.ஆனால் மனம் ஒன்றியதே இல்லை.மிகவும் சலிப்பாக இருக்கும்.உங்கள் பதிவை படித்தபின் தான் இந்த கட்டத்தை தாண்டாமல் யாரும் த்யானத்தில் மேன்மை அடைய
ReplyDeleteமுடியாது என்று உணர்ந்தேன்.மீண்டும் த்யானத்தை பொறுமையாக தொடர்கிறேன்.நன்றி.வாழ்த்துக்கள்.
very useful infor THANK u somuch
ReplyDeleteமிக்க ன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteமிக அருமை.. நான் அமைதி நிலையில் மந்திரம் சொல்லும் சமயம் மனம் ஒரு நிலை அடைவதில்லை.
ReplyDeleteஇதை படித்த பின் தான் அந்த நிலை தாண்ட வேண்டும் என்று தோன்றியது. அருமை
.
அருமை நண்பரே
ReplyDelete