சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 19, 2009

கம்பனின் பிரபலமாகாத சிகரங்கள்


இராமாயணத்தில் சில கதாபாத்திரங்கள் பெயரளவில் மட்டுமே அறியப்படுபவர்கள். உதாரணத்திற்கு சுமத்திரையும், சத்ருக்கனனும். இவர்களால் இராமாயணத்தில் எந்தத் திருப்புமுனையும் கிடையாது. இவர்கள் அதிகம் பேசியதும் இல்லை. அதிகம் பேசப்பட்டதும் இல்லை. ஆனால் கம்பன் இது போன்ற கதாபாத்திரங்களையும் ஓரிரு இடங்களில் குறிப்பிட்டால் கூட அவர்களைத் தன் கவிநயத்தால் சிகரங்களாக உயர்த்தி விடுகிறான்.

சுமத்திரை தசரதனின் மூன்றாம் மனைவி, இலக்குவன் சத்ருக்கனனின் தாய் என்று மட்டுமே பலரும் அறிவார்கள். அவள் பட்டத்தரசியுமல்ல, கடைசி மனைவியானாலும் கணவனின் தனியன்பிற்குப் பாத்திரமானவளும் அல்ல. பட்டத்தரசி கோசலை. தசரதனின் தனியன்பிற்குப் பாத்திரமாக இருந்தவள் கைகேயி. இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலான பெண்மணிகள் பொறாமையாலும், மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால் சுமத்திரை வித்தியாசமானவள்.

கைகேயி வரத்தால் இராமன் காட்டுக்குச் செல்லத் தயாரானான். சீதை 'நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு' என்று உடன் செல்லத் துணிகிறாள். சுமத்திரை பெற்ற மகன் இலக்குவனும் அண்ணனைப் பின் தொடரத் தீர்மானிக்கிறான். இலக்குவன் தாயிடம் விடை பெற வரும் போது சுமத்திரை சொல்லும் வார்த்தைகள் நெஞ்சை உருக்குபவை.

"ஆகாதது அன்றால் உனக்கு அவ்வனம் இவ்வயோத்தி
மாகாதல் இராமன் அம்மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த்தாயர் நம் பூங்குழல் சீதை: என்றே
ஏகாய்! இனி இவ்வயின் நின்றலும் ஏதம்" என்றாள்.


(அந்த வனம் உனக்கு இந்த அயோத்தியாக இருக்கட்டும். இராமனை மன்னன் தசரதனாக எண்ணிக் கொள். உன் தாய்களின் நிலையில் சீதைக் காண். இந்த மனநிலையில் இங்கிருந்து புறப்படு. இனி இங்கு நீ நிற்பது கூடத் தவறு).

'அவனாவது தந்தையின் வாக்கைக் காப்பாற்ற காட்டிற்குப் போகிறான்? நீ ஏன் அங்கு போக வேண்டும்?' என்ற விதத்தில் பேசினாலும் அந்தத் தாய் சொல்வதைக் குறை சொல்ல முடியாது. ஆனாலும் அப்படிச் சொல்லாமல் நீ போகாமல் இருந்தால் தான் தவறு என்று சொன்ன மனதைப் பாருங்கள். மேலும் தாய் என்று தன் ஒருத்தியை மட்டும் சொல்லாமல் பன்மையில் சொல்லி கோசலையையும், கைகேயியையும் கூடசேர்த்துக் கொண்ட பண்பைப் பாருங்கள். அடுத்த பாடலில் சுமத்திரை இன்னும் ஒரு படி மேலே போகிறாள்.

பின்னும் பகர்வாள் "மகனே இவன் பின் செல், தம்பி
என்னும் படியன்று. அடியாரினும் ஏவல் செய்தி!
மன்னும் நகர்க்கே அவன் வந்திடில் வா! அன்றேல்
முன்னம் முடி" என்றவள் வார்விழி சோர நின்றாள்.


("மகனே இராமன் பின் தம்பியாகப் போகாதே. சேவகனை விட அதிகமாய் அவனுக்கு சேவை செய். மீண்டும் இந்த நகருக்கு அவன் வந்தால் வா! அவன் வர முடியாதபடி அவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் அவனுக்கும் முன்னால் உன் உயிரை விட்டு விடு" என்றவள் மகனிடம் இப்படிச் சொல்ல வேண்டிய நிலை வந்து விட்டதே என்ற துக்கத்தில் விழிகளில் அருவியாக கண்ணீர் வழிய நின்றாள்).

இராமனுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ற வார்த்தையைக் கூட அவள் சொல்லத் துணியவில்லை. அன்றேல் என்ற சொல்லில் சூட்சுமமாகவே தெரிவிக்கிறாள். 'முன்னம் முடி' என்று சொல்லியவுடன் இப்படி சொல்லி விட்டோமே என்ற துக்கத்தில் துயருடன் நிற்பதை கம்பன் நம் கண் முன்னல்லவா கொணர்கிறான்.

இரண்டே பாடல்களில் நம் மனதில் சிகரமாக உயரும் சுமத்திரையின் பேச்சை பின்பு இராமாயணத்தில் வேறெங்கும் நாம் கேட்பதில்லை.

அடுத்ததாக சத்ருக்கனன். சொன்ன நாளில் இராமன் அயோத்திக்குத் திரும்பாததைக் கண்ட பரதன் தீயில் தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் தயாராகிறான். தனக்குப் பின் அயோத்தியின் அரசனாக முடி சூட்டிக் கொள்ளும்படி சத்ருக்கனனை வேண்டுகிறான்.

அதைக் கேட்ட சத்ருக்கனனின் நிலையை கம்பர் அழகாகச் சொல்கிறான். சத்ருக்கனன் காதுகளைப் பொத்திக் கொள்கிறான். நஞ்சை உண்டது போல் மயங்கி நிற்கிறான். மாபெரும் துயரத்துடன் பரதனைக் கேட்கிறான். "நான் உனக்கு என்ன பிழைத்துளேன்?" நான் உனக்கு என்ன தவறு செய்தேன் என்று இப்படி எல்லாம் சொல்கிறாய் என்று மருகி நின்றவன் அடுத்து சொல்வது மிக அழகான பாடல்.

கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போவானைக் காத்துப் பின்பு
போவானும் ஒரு தம்பி; போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி; அயலே நாணாது
யானாம் இவ்வரசு ஆள்வேன்? என்னே இவ்வரசாட்சி? இனிதே அம்மா!


(காட்டை ஆள நாட்டை விட்டுப் போகிறவனைக் காவல் காக்க பின் தொடர்ந்து போனவன் ஒரு தம்பி. சென்ற அண்ணன் வரவேண்டிய நாளில் வரவில்லை என்று உயிர் விட ஏற்பாடு செய்தவன் ஒரு தம்பி. இப்படிப்பட்டத் தம்பிகள் இருக்கும் போது நான் மட்டும் வெட்கமில்லாமல் இந்த அரசை ஆள்வதா? நன்றாகத் தான் இருக்கிறது என்று இகழ்வாகச் சொல்கிறான் சத்ருக்கனன்.)

இன்றைய அரசியலில் பதவிக்காகத் தம்பிகள் செய்கின்ற பகீரதப் பிரயத்தனங்களைப் பார்க்கையில் அந்தத் தம்பிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறார்கள் அல்லவா? பரதனுக்காவது தாயின் வரம் நெஞ்சில் முள்ளாய் உறுத்துகிறது என்று கூடச் சொல்லலாம். ஆனால் சத்ருக்கனனுக்கு அந்தக் காரணமும் சொல்ல முடியாது. அவன் இராமனின் தம்பிகளில் தானும் குறைந்தவன் அல்ல என்று காட்டுகிறான் அல்லவா?

சிறிய கதாபாத்திரங்களையும் மிக அழகாகக் காட்டி மனதில் என்றென்றும் நிறுத்தும் கம்பனின் கவித் திறமைக்கு இந்த இரண்டு கதாபாத்திரங்களே சான்று.

- என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

9 comments:

  1. சுமத்திரை சத்ருக்கனன் பற்றொய செய்திகள் நான் இது வரை அறியாதது. நல்ல பதிவு

    ReplyDelete
  2. beautifull post
    pl send e your email id
    mailformahe@gmail.com

    i am in coimbatore wish to meet you sir

    ReplyDelete
  3. அற்புதம் கணேசன்.
    கம்பனை நீண்ட நாள் கழித்து மீண்டும் சந்திக்கக் காரணமானீர்கள்.
    அருமை என்று சொல்வதைத் தவிர வேறெதுவும் வார்த்தை கிடைத்தால் மறுபடியும் வருகிறேன்..

    ReplyDelete
  4. அருமை அண்ணன்.. நல்லதொரு படைப்பு.. புதிய விஷயங்கள் :)

    ReplyDelete
  5. மிகவும் ரசிக்க வைத்த அருமையான பதிவு.தொடருங்கள்.
    ரேகா ராகவன்
    .

    ReplyDelete
  6. Ganasean, happen to read few of your blogs today .. fantastic ! is the only word tht i can think off..Great Job. Sathish (can you pls list a few real good Kamba Ramayamnam books with breifings - and publisher details)- i m luving it !

    ReplyDelete
  7. Good. Keep writing.

    ReplyDelete