அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது ஒரு நாள் சட்டசபையில் ஒரு கேள்வி எழுந்தது. அன்றைய நாட்களில் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் அதிகம் எழுதப்பட்டு வந்த திருக்குறளைப் பற்றிய கேள்வி அது.
"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்று எழுதப்பட்டிருப்பது யாருக்காக, அதில் பணி புரியும் ஊழியர்களுக்கா அல்லது அதில் பயணிக்கும் பயணிகளுக்கா?" என்று ஒரு உறுப்பினர் நகைச்சுவையாகக் கேட்டார்.
யாருக்காக என்று சொல்வார் என்று எல்லோரும் ஆவலாகக் காத்திருக்க அண்ணா அமைதியாகச் சொன்னார். "யாருக்கெல்லாம் நாக்கு இருக்கிறதோ அவர்கள் எல்லோருக்காகவும் தான் எழுதப்பட்டிருக்கிறது"
கட்டுப்பாடில்லாத நாக்கு ஒருவனுக்கு ஏற்படுத்தும் துன்பங்களும், பிரச்னைகளும் கணக்கில் அடங்காதவை. எனவே வேறெதைக் கட்டுப்படுத்த முடியா விட்டாலும் நாக்கையாவது கட்டுப்படுத்தச் சொல்கிறார் வள்ளுவர். இதை அண்ணா சொல்வது போல நாக்கு உள்ள அனைவரும் நினைவில் வைத்திருப்பது நல்லது.
ஒருசில நிமிடங்கள் நாக்கை அடக்கி வைக்கத் தவறியதன் பலனை ஆயுள் முழுவதும் அனுபவிக்கும் மனிதர்கள் உண்டு. அப்படிப்பட்ட ஒரு மனிதரை நான் நன்றாக அறிவேன். அவர் ஒரு சௌகரியமான வேலையில் நல்ல சம்பளத்துடன் இருந்தார். படிப்பறிவு இல்லா விட்டாலும் நாணயமானவர் என்பதால் அவருடைய முதலாளி அவருக்கு நல்ல சம்பளத்துடன் வேண்டிய மற்ற வசதிகளும் செய்து தந்து கொண்டிருந்தார். ஒரு முறை முதலாளியிடம் ஏதோ அவர் பேசிக் கொண்டிருந்த போது பேச்சு சற்று காரசாரமாகியது. அப்போது அவர் நாக்கைக் கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால் அவருடைய துரதிர்ஷ்டம் அவருடைய வார்த்தைப் பிரயோகம் மற்றவர்கள் முன்னிலையில் சற்று எல்லை மீறிப் போய் விட முதலாளி அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டார். பின் எத்தனை மன்றாடியும் அந்த முதலாளி அவரை மன்னிக்கவில்லை. வேலைக்கு மீண்டும் சேர்க்க உறுதியாக மறுத்து விட்டார். தன் ஐம்பதாவது வயதில் வேலையை இழந்த அந்த மனிதர் மீண்டும் ஒரு நல்ல வேலை கிடைக்காமல் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஓரிரு சொற்களில் நல்லதொரு வாழ்க்கையை ஒருவர் தொலைத்து விடக்கூடும் என்பதற்கு அவர் ஒரு நல்ல உதாரணம்.
ஒரு தொழிலதிபரின் மகனின் நாக்கு தந்தைக்குப் பல லட்சங்களை தண்டமிட வைத்த ஒரு நிகழ்ச்சியும் எனக்குத் தெரியும். அந்தத் தொழிலதிபரின் மகன் கர்வம் மிகுந்தவர். ஒரு முறை விற்பனை வரி அதிகாரி ஒருவர் அவரது நிறுவனத்திற்கு விஜயம் செய்த போது தொழிலதிபர் இருக்கவில்லை. மகன் தான் இருந்தார். அந்த அதிகாரி ஏதோ கேட்க, மகன் அலட்சியமாக எதோ பதில் சொல்லியிருக்கிறார். கோபத்தில் அந்த அதிகாரி ஏதோ மிரட்ட மகன் "நீ உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள்" என்று மீண்டும் அலட்சியமாகப் பதில் சொல்ல அந்த அதிகாரி பழைய ரிக்கார்டுகளை எல்லாம் தோண்டிப் பார்த்து லட்சக்கணக்கில் வரி விதித்ததுடன் அதை மாற்ற முடியாத அளவுக்கு ஆதாரங்களை மேலதிகாரிகளுக்கு அனுப்பியும் வைத்து விட்டார். அந்தத் தொழிலதிபர் அந்தத் தொகையைக் குறைக்க எத்தனையோ முயன்றார். முடியாமல் போக அவர் வரியைக் கட்ட வேண்டியதாயிற்று. "நான் வருடக்கணக்கில் சேர்த்ததை என் மகன் ஐந்து நிமிடத்தில் அழித்து விட்டான்" என்று அந்தத் தொழிலதிபர் பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்ப அவர் மகன் கோபித்துக் கொண்டு போய் சில காலம் தலைமறைவாக இருந்தது தான் வேடிக்கை.
இப்படி ஒவ்வொருவரும் எத்தனையோ நிகழ்ச்சிகளை அறிந்திருக்கக் கூடும். முக்கியமாக குடும்பத்திற்குள் பல பிரச்னைகள் வெடிப்பதற்குக் காரணம் கட்டுப்பாடில்லாத நாக்கு தான் என்பதில் சந்தேகமே தேவையில்லை. வெளியேயாவது நாக்கு சிறிது கட்டுப்படுத்தப்படுகிறது. குடும்பத்தில் அது பூரண சுதந்திரம் பெற்று விடுவதால் பூசலுக்கும் உரசலுக்கும் முதல் காரணமாகி விடுகிறது. எத்தனையோ விவாகரத்துகள், நீதிமன்றம் வரை போகும் சொத்துத் தகராறுகள் ஆகியவற்றுக்கு அடிப்படைக் காரணமே கட்டுப்படுத்தப்படாத நாக்கு தான்.
ஒருவர் அனலாக இருக்கையில் மற்றவர்கள் வார்த்தைகள் பெட்ரோலாகி விடக்கூடாது. சிறு சிறு பூசல்களும், உரசல்களும் குடும்பத்தினுள் சகஜமே என்றாலும் என்றாலும் திரும்ப அமைதிக்கு வர முடியாத அளவு வார்த்தைப் பிரயோகங்கள் இருந்து விடக்கூடாது. சில வார்த்தைகள் மற்றவர்கள் மனதில் நீங்காத வடுவாகத் தங்கி விடுவதுண்டு. "அவன் அப்படிக் கேட்டது என் உயிர் உள்ள வரை மறக்காது" என்றும் "அவள் அப்படிச் சொன்னதை இப்போது நினைத்தாலும் என் மனம் கொதிக்கிறது என்றும்" என்றும் நிகழ்ச்சிகள் முடிந்து காலம் பல கழிந்த பின்னும் சிலர் சொல்வதை நாம் கேட்கிறோம்.
சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க முடியாத போதும், கோபம் அதிகமாக இருக்கும் போதும் மௌனம் உத்தமம். மற்றவர்கள் முன் தங்களை ஹீரோவாகக் காட்டவும், தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று தெரியப்படுத்தவும் காரசாரமாகப் பேசப்போய் சிக்கலில் மாட்டிக் கொள்பவர்கள் ஏராளம். பொது இடங்களில் நடக்கும் 99 சதவீத அடிதடிகளுக்கு காரணம் கட்டுப்படுத்தாத நாக்கே. இப்படி நாக்கின் திருவிளையாடல்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.
எனவே திருவள்ளுவர் சொன்னது போல வேறு எதைக் கட்டுப்படுத்தாவிட்டாலும் நாக்கையாவது கட்டுப்படுத்தி நாம் பல பிரச்னைகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வோமாக!
- என்.கணேசன்
சரியாகச் சொன்னீர்கள்.
ReplyDeleteபேச்சானாலும் சரி. சாப்பாட்டு விஷயமானாலும் சரி. நாக்கைக் கட்டுப் படுத்துவது சந்தோஷமான வாழ்க்கையைத் தரும்.
http://kgjawarlal.wordpress.com
உண்மை உண்மை
ReplyDeleteநாவினைக் கட்டுப்படுத்த வேண்டும்
நாவினால் சுட்ட வடு மாறவே மாறாது
நல்லதொரு விளக்கம்
இதே மாதிரி வருமானவரி பிரச்சனை ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் நடந்தது...
ReplyDeleteஒரு தொழிலதிபர் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..வேறு உதாரணம் கொடுத்திருக்கலாம் !
ReplyDeleteநேர்மையாக இருந்தால் எந்த அதிகாரிகளுக்கும் கூல கும்பிடு போட தேவையில்லை ! மகன் நேர்மையாளனாக இருந்திருக்கலாம்..(அப்பாவின் பழைய தவறுகள் தெரியாமல் இருந்திருக்கலாலம்) தன்னை மதிக்கவில்லை என்றவுடன் பழைய கணக்குகளை தோண்டி எடுத்த அந்த அதிகாரி அந்த மகனிடம் நல்ல முறையில் நடத்திருப்பாரா என்ன !
மகன் செஞ்சது நியாமா தான் இருக்கும் ! இதனால் சட்ட விரோதமா சேர்த்த சொத்து போனதும். அந்த அதிகாரிக்கு வரவேண்டிய கிம்பளம் போனதும் நியாமே !
தொழிலதிபர், அவர் மகன், அந்த அதிகாரி இவர்களின் பக்கம் இருந்த நியாயத்தைப் பற்றி நான் சொல்லவில்லை. அந்த மகனின் வாய்த்துடுக்கால் அந்தப் பழைய வரியையும் கட்ட வேண்டி வந்த நிலையைப் பற்றி சொன்னேன். அவ்வளவு தான். (நீங்கள் சொன்னது போல் அந்தத் தொழிலதிபர் கட்ட வேண்டிய தொகையாய் தான் அது இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் கோர்ட்டிற்குப் போயிருப்பார்.)
ReplyDeleteneedful one...
ReplyDeleteநல்லா கருத்துகள்..நிகழ்வு விளக்கத்துடன்...காக்க வேண்டிய நேரத்தில் கோட்டை விடுவதால் எப்பேர்ப்பட்ட விளைவுகள்..
ReplyDeleteஒருவர் அனலாக இருக்கையில் மற்றவர்கள் வார்த்தைகள் பெட்ரோலாகி விடக்கூடாது.
ReplyDeleteAayirathil oru vaarthai. sariyaana nerathil, sariyaaga potteer, anna!
Valarga um "blogging thondhu" :-)
"Um thayavaal - adiyenum 'konjam' valargiren' anna. :-) :-)
hello,
ReplyDeleteanna romba naalukku appuram unga pathivai
padikiren.yetho enakku sonna arivurai
mathiri irrunthathu.
romba nanri brother.
ABISHEK.AKILAN.