சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, July 1, 2009

மனதோடு போராடாதீர்கள்!

உங்களுக்கு ஒரு சவால். இனி அரை மணி நேரத்திற்கு உங்களால் நீர்மூழ்கிக் கப்பலை நினைக்காமல் இருக்க முடியுமா?

முயற்சி செய்து பாருங்கள். ஆண்டுக் கணக்கில் நீங்கள் நீர்மூழ்கிக் கப்பலை நினைக்காதவராய் இருக்கலாம். ஆனால் இனி அரை மணி நேரத்திற்கு அதை நினைக்காமல் இருப்பது சுலபமான விஷயமல்ல.

மனம் விசித்திரமானது. எதையும் நினைக்க வேண்டாம் என்றோ, மறந்து விடு என்றோ கட்டளையிட்டு சாதித்துக் கொள்வது சுலபமான விஷயம் அல்ல. கட்டளைகளை மதித்து அப்படியே பின்பற்றும் பழக்கம் மனதிற்குக் கிடையாது.

நிறைவேறாத காதலுக்குப் பிறகு காதலியை அல்லது காதலரை மறக்க முனையும் காதலர்களுக்கு அது தெரியும். ஒரு பலவீனமான பழக்கத்தைப் பழகிக் கொண்ட பின் விட்டொழிக்க முடிவு செய்யும் மனிதர்களுக்கு அது தெரியும். குணம் என்னும் குன்றேறி நின்ற பெரியோர்கள் கூட சமயங்களில் மனத்தை அடக்கப் போராடியிருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன், ஸ்ரீராமனே கூட யோக வாசிஷ்டத்தில் வசிஷ்டரிடம் புலம்புகிறான். "அலைகடலை அடக்கிக் குடித்து விடலாம்; மேரு மலையை பெயர்த்து எறிந்து விடலாம்; சுட்டெரிக்கும் கனலை விழுங்கி விடலாம்; ஆனால் மனத்தை அடக்குதல் எளிதல்ல."

அப்படியானால் இந்த மனதை எப்படித் தான் வெல்வது? ஆன்மீக சித்தாந்தங்களுக்குப் போகாமல், நடைமுறைப்படுத்தக் கூடிய எளிய வழி ஏதாவது இருக்கிறதா?

இருக்கிறது. முதல் அறிவுரை மனதோடு போராடாதீர்கள். நீங்கள் நிச்சயமாகத் தோற்றுப் போவீர்கள். அதனுடன் போராடப் போராட பலம் பெறுவது மனமே; தளர்ச்சியடைவது நீங்களே.

போராடுவதற்குப் பதிலாக உங்கள் மனதிற்குப் பற்றிக் கொள்ள வேறொன்று கொடுங்கள். குழந்தை கையில் இருந்து ஒரு பொம்மையை வாங்கி அது அழ ஆரம்பிக்கும் முன் இன்னொரு பொம்மையைத் தருகிறோம் அல்லவா? அதைப் போல் தான். அந்த இன்னொரு பொம்மையும் ஏதோ ஒன்றாக இருக்காமல் குழந்தை ரசிக்கும்படியான பொம்மையாக இருக்க வேண்டும். குழந்தையின் கவனம் அதில் திரும்பும். குழந்தையின் தொந்திரவு இருக்காது.

மனதைக் காலியாக வைத்திருக்க ஞானிகளுக்கு முடியலாம். சாதாரண மனிதர்களுக்கு அது மிகக் கடினமே. ஒரு தேவையில்லாத எண்ணத்தை மனதிலிருந்து எடுத்து விட வேண்டுமானால் அதற்கு எதிர்மாறான ஒரு நல்ல எண்ணத்தை நீங்கள் மனதிற்குக் கொடுங்கள். தானாக அந்த வேண்டாத எண்ணம் உங்களுக்குள் வலு இழக்கும். இருட்டைத் துரத்த முயற்சிக்காதீர்கள். ஒரு தீபத்தை ஏற்றினால் இருட்டு தானாகப் போய் விடும்.

இன்னொரு அறிவுரை மனதோடு வாக்குவாதமும் செய்யாதீர்கள். மனம் ஜெயித்து விடும். என்ன செய்ய வேண்டுமோ அதை உடனடியாகச் செயல்படுத்துங்கள். உதாரணத்திற்கு குடிப்பழக்கம் போன்ற ஒரு தீய பழக்கத்தை வெற்றி கொள்ள எண்ணுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வழக்கமாய் ஒரு வீதியில் ஒரு கடையில் மதுவை வாங்குவீர்களேயானால் அந்த வீதியில் அந்தக் கடை வரும் போது உங்களை உந்த மனம் ஆயிரத்தெட்டு காரணங்களை வைத்திருக்கும். நீங்கள் செய்யக் கூடிய புத்திசாலித்தனமான செயல் என்ன தெரியுமா? மனம் என்ன சொல்லிக் கொண்டிருந்தாலும் பொருட்படுத்தாமல் வேகமாக நடந்து அந்தக் கடையைக் கடப்பது தான். மனதின் பேச்சுக்கு கொஞ்சம் காது கொடுத்தீர்களானால், லேசாகத் தயக்கம் காட்டினீர்களானால் நீங்கள் தர்க்கிக்க முடியாத பல வாதங்களை உங்கள் முன் வைத்து மதுவை வாங்க வைத்து தான் மறு வேலை பார்க்கும். மனம் நீங்கள் கடையைக் கடந்து விட்டால் கூட திரும்பி வரச் சொல்லும். நீங்கள் திரும்பி வர முடியாத தூரத்திற்குச் சென்று விடும் போது தான் மனம் தன் முயற்சியைக் கைவிடும்.

எனவே மனதோடு போராடாதீர்கள். தர்க்கம் செய்யாதீர்கள். எது நல்லது என்பதை மட்டும் உறுதியாக அறிந்திருங்கள். தீய எண்ணமானால் நல்ல எண்ணத்திற்கு உடனடியாக மாறுங்கள். தீய செயலுக்குத் தூண்டுதலானால் உடனடியாக அந்த சூழ்நிலையை விட்டு நகருங்கள். மனதைப் பொருட்படுத்தாமல், அதனுடன் வாதிட்டு நிற்காமல், நேரம் தாழ்த்தாமல், தயக்கமில்லாமல் அந்த நல்லதை செயல்படுத்துங்கள். மனதின் அபஸ்வரம் ஒலிக்க ஆரம்பிக்கும் அந்த முதல் வினாடியிலேயே நீங்கள் செயல்பட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். காலம் தாழ்த்தினால் தோல்வியும் நிச்சயம்.

-என்.கணேசன்

நன்றி: விகடன்

14 comments:

  1. //
    இருட்டைத் துரத்த முயற்சிக்காதீர்கள். ஒரு தீபத்தை ஏற்றினால் இருட்டு தானாகப் போய் விடும்.
    //

    அழகான வார்த்தைகள்.. மிகவும் யோசிக்க வேண்டியவை. தொடரட்டும் உங்கள் சேவை.

    ReplyDelete
  2. nice and useful post, Looks easy to follow in day to day life.

    ReplyDelete
  3. அருமையான சிந்தனைத்துளி

    ReplyDelete
  4. asaithitinga brother.
    nanri.
    Abishek.Akilan...

    ReplyDelete
  5. nice one for me.........

    ReplyDelete
  6. //ஒரு தேவையில்லாத எண்ணத்தை மனதிலிருந்து எடுத்து விட வேண்டுமானால் அதற்கு எதிர்மாறான ஒரு நல்ல எண்ணத்தை நீங்கள் மனதிற்குக் கொடுங்கள்.//

    உண்மை.

    மனம், அடக்க நினைத்தால் திமிறும். அறிய நினைத்தால் அடங்கும்.

    பயனுள்ள கட்டுரைக்கு நன்றி.

    ReplyDelete
  7. நல்ல பதிவு, தவறான தலைப்பு!

    மனதோடு யாரும் இங்கே போராடுவது இல்லை! பெரும்பாலும், மனம் தான் நம்மோடு போராடிக் கொண்டிருக்கிறது, எதனோடாவது போராடவும் வைத்துக் கொண்டிருக்கிறது!

    ReplyDelete
  8. nalla thalaipu nalla sindhanai,
    idhu madiriyana makkaluku thevayana karuthukal
    varuvadarkku vaalthukal
    jaffer

    ReplyDelete
  9. its very good idea really nice for me thanks lot

    ReplyDelete
  10. பயனுள்ள கட்டுரைக்கு நன்றி.

    ReplyDelete
  11. கட்டுரை அருமை !
    ஒரு சின்ன சந்தேகம் ..
    இங்கே யார் யாருடன் போராசுகிறார் ?
    போராடுபவரும் போராடப்படும் பொருளும் ஒன்றல்லவா ?
    இந்த உண்மை புரியுமாயின் போராட்டம் எங்கே !
    இன்னும் சரியாக சொல்லப்போனால் , போராடுபவரும் உண்மை இல்லை போராடும் பொருளும் உண்மை இல்லை ... அனைத்தும் ஆளுமையின் (ego) விளையாட்டே !

    ReplyDelete
  12. I'm lucky,I got it!!!!....
    Great information to me....Becoz till now i didn't know this life meaning. This one page enough my life understanding... Thanks boss...

    - Sureshkumar.M

    ReplyDelete
  13. This is a very helpful page for me. I fought with my mind for a long time. Now is the time to end. Thank You very much

    ReplyDelete
  14. \\மனதைக் காலியாக வைத்திருக்க ஞானிகளுக்கு முடியலாம்.\\ஞானி மனசு காலியாத்தான் இருக்குதுன்னு உள்ளே யார் போய் பார்க்க முடியும்? குறைந்த பட்சம், மனம் காலியாய் இருக்கிறது என்ற தகவலாவது மனதில் இருக்கத் தானே செய்யும்? ஆக, மனத்தைக் காலியாக்குவதென்பது நடக்காத காரியம். ஆனால் ஒன்று செய்யலாம், துரு துரு வென இருக்கும் குழந்தை சும்மா இருக்காமல் கலாட்ட செய்து கொண்டே இருக்கும், அதைக் கூப்பிட்டு கிறேயான்ஸ் கொடுத்து, படத்தை வரை பார்க்கலாம் என்று ஒரு வேலையைக் கொடுத்துவிட்டால் அதில் ஈடுபட்டு கலாட்டா செய்யாமல் இருக்கும். அதே மாதிரி, மனதை காளியாக்குவதர்க்குப் பதில், இறைவனின் திருநாமங்களை நினைத்த வண்ணம் இரு என்று சொல்லல்லாம். கலி யுகத்தில் இறைவனின் நாமத்தை சொல்வதே உய்வு பெற வழி என எல்லா வேதங்களும் சொல்கின்றன.

    ReplyDelete