சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, June 5, 2009

இறைவனின் கணக்குப் புத்தகம்

எல்லாம் வல்ல இறைவனிடம் ஒரு கணக்குப் புத்தகம் இருக்கிறது. அதில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பக்கம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஓவ்வொருவருடைய ஒவ்வொரு செய்கையும் அவன் கவனத்திற்கு வராமல் போவதில்லை. செயல்களைச் செய்யும் போதே அவை தானாக அந்தப் பக்கத்தில் பதிவாகி விடும். சித்திரகுப்தன் கணக்கு, நீதித் தீர்ப்பு நாளில் படிக்கப்படும் கணக்கு என்பது போல வேறு வேறு பெயர்களில் அழைத்தாலும் அப்படியொரு கணக்குப் புத்தகம் இருப்பதை பெரும்பாலான மதங்கள் ஒப்புக் கொள்கின்றன.

மனிதன் போடும் கணக்கிற்கும் இறைவன் போடும் கணக்கிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மனிதன் பெரியது என்று நினைக்கும் விஷயங்கள், இறைவன் கணக்கில் மதிப்பில்லாதவையாக குறிக்கப்பட்டு இருப்பதும் உண்டு. மனிதன் ஒன்றுமில்லை என்று நினைக்கும் விஷயங்கள் இறைவனின் புத்தகத்தில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்படுவதும் உண்டு. எனவே ஒரு விஷயத்தில் தன் பங்கை மனிதன் நிர்ணயிப்பதற்கும், அதே விஷயத்தில் அவன் பங்கு இவ்வளவென்று இறைவன் தீர்மானிப்பதற்கும் இடையே பெருத்த வித்தியாசம் இருக்கிறது. மனிதன் தன் வாழ்நாளில் இத்தனை சாதித்தோம் என்று எண்ணி இறைவனிடம் எடுத்துப் போகும் கணக்கும், இறைவன் வைத்திருக்கும் மனிதனின் கணக்கும் பெரும்பாலும் ஒத்துப்போவதில்லை.

மனிதன் எதையும் பெரும்பாலும் பணத்தால் அளக்கிறான். இறைவன் மனத்தால் அளக்கிறான். மனிதன் ஒன்றிற்கு எவ்வளவு செலவானது என்று பார்த்து மதிப்பிடுகையில் இறைவன் அது எத்தனை ஆத்மார்த்தமாய் செய்யப் பட்டது என்பதை வைத்து மதிப்பிடுகிறான். மனிதன் எத்தனை மணி நேரம் பிரார்த்தனையிலும் தியானத்திலும் செலவாகி உள்ளது என்பதை வைத்து தன் இறைபணியை அளக்கையில் இறைவன் அதில் எத்தனை மணித்துளிகள் தன் மீது முழு ஈடுபாட்டுடன் இருந்தது என்பதை மட்டுமே எடுத்துக் கொள்கிறான். சதா இறைநாமத்தை ஜபித்துக் கொண்டு இருந்தும் மற்றவர்களிடம் கடுமையாகவும், நியாயமற்றும் நடந்து கொள்பவன் கணக்கை பாவக் கணக்காக எழுதும் இறைவன் தன்னை வணங்கா விட்டாலும் நேர்மையாகவும், தர்மசிந்தனையுடனும் வாழ்பவன் கணக்கை புண்ணியக் கணக்காகத் தன் புத்தகத்தில் குறித்துக் கொள்கிறான்.

பண்டரிபுரத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன் புண்டலீகன் என்ற இளைஞன் தன் வயது முதிர்ந்த தாய் தந்தையருடன் வாழ்ந்து வந்தான். அவனும், அவனுடைய தாய் தந்தையரும் விட்டலனின் (கிருஷ்ணனின்) பக்தர்கள். தன் வயது முதிர்ந்த தாய் தந்தையர்க்கு புண்டலீகன் மிகுந்த சிரத்தையுடன் சேவை செய்து வந்தான். அவன் பல காலமாக சிறிதும் தளர்ச்சி இல்லாமல் தன் பெற்றோருக்கு சேவை செய்ததைக் கண்டு மனம் உவந்த இறைவன் விட்டலன், தன் மனைவி ருக்மணியுடன் புண்டலீகன் முன் எழுந்தருளினான்.

அந்த சமயத்தில் புண்டலீகன் தன் பெற்றோரின் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தான். தன் முன் பெருமாள் தம்பதி சமேதராக எழுந்தருளினதைக் கண்டு அவன் மனம் மகிழ்ந்தாலும் பெற்றோருக்காகத் தான் செய்து கொண்டிருந்த பணியை நிறுத்தி விட அவன் மனம் ஒப்பவில்லை. அதே நேரத்தில் தான் துணி துவைப்பதால் வழிந்தோடும் அழுக்கு நீர் பெருமாளின் திருப்பாதங்களைத் தொடுவதிலும் அவனுக்கு சம்மதமில்லை. எனவே ஒரு பெரிய கல்லை அவசரமாக அவர்கள் பக்கம் தள்ளி "இறைவனே தாங்கள் இந்தக் கல்லில் சிறிது நேரம் நில்லுங்கள். நான் என் பெற்றோருடைய இந்தப் பணியை முடித்து விட்டுத் தங்களை கவனிக்கிறேன்" என்றான்.

எத்தனையோ கோடி பேர் அந்த இறைவனைத் தரிசிக்க எத்தனையோ ஜென்மங்கள் காத்திருக்கிறார்கள் என்ற போதிலும் புண்டலீகன் தன் கடமைக்குப் பின்பே கடவுள் என்று செயல்பட்டதைக் கண்டு மெச்சி மனம் மகிழ்ந்த விட்டலன் தன் மனைவியுடன் அந்தக் கல்லில் ஏறி நின்று சிலையாகி அங்கேயே தங்கி விட்டான். இன்றும் பண்டரிபுரம் கோயிலில் பாண்டுரங்க விட்டலனாக அவ்வாறே காட்சியளிக்கிறான்.

இறைவன் "ஈகோ" இல்லாதவன் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம். புண்டலீகன் செய்கையை அவன் அலட்சியமாகக் கருதவில்லை. இறைவனுக்கு அவன் மீது கோபம் வரவில்லை. அங்கு அவன் பெற்றோர் மீது வைத்திருந்த அன்பையே இறைவன் மெச்சினான்.

இராமபிரான் மீதிருந்த அன்பில் சபரி என்னும் மூதாட்டி ஒவ்வொரு கனியையும் கடித்துப் பார்த்து இனிப்பான கனிகளையே தேர்ந்தெடுத்து அவருக்குப் படைத்தாள். புளித்த கனிகளை வீசி எறிந்தாள். கடவுளுக்கு இனிப்பான கனிகளையே தர வேண்டும் என்ற மேலான நோக்கில் சபரி தந்த அந்த எச்சில் கனிகளை அமிர்தமாக எண்ணி சாப்பிட்டான் இராமன்.

மனிதனின் கணக்கில் புண்டலீகனின் அலட்சியமும், சபரியின் எச்சிலும் தெய்வகுற்றம். அபசாரம். ஆனால் இறைவனின் கணக்கும் அப்படியே இருக்குமானால் இருவரும் இறை சாபத்திற்கு ஆளாகி இருப்பார்கள். பண்டரிபுரத்தில் பாண்டுரங்க விட்டலனின் கோயில் தோன்றியிருக்காது. சபரி சரித்திரமாகி இருக்க மாட்டாள். இறைவன் எல்லாம் அறிந்தவன். செயலை அது செய்யப்படும் நோக்கத்தை வைத்தே அளப்பவன். அவன் கணக்கில் இருவரும் மிக உயர்ந்து போனார்கள்.

கட்டு கட்டாக பணத்தை கோயில் உண்டியலில் போட்டு தான் பெரிய இறை சேவை செய்து விட்டதாக ஒருவன் இறுமாந்திருக்க, அதே கோயிலின் ஒரு மூலையில் உட்கார்ந்து பெரும்பக்தியுடன் மனமுருக இறைநாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பவன் செயலை அதைவிட மேன்மையானதாக இறைவன் நினைக்க வாய்ப்புண்டு. தானே பசியில் இருக்கும் போது தனக்குக் கிடைத்த உணவை இன்னொரு பசித்தவனுக்குப் பங்கிட்டு சாப்பிடும் செயலை பெரிய இறை சேவையாக இறைவன் கணக்கில் குறித்துக் கொள்வான் என்பது உறுதி.

நாத்திகனாக இருந்தால் கூட நீங்கள் நல்லவனாக இருந்தால் இறைவனின் கணக்கில் உங்கள் இடம் உயர்விலேயே இருக்கும். ஆத்திகனாக இருந்தால் கூட உங்கள் செயல்கள் பலருக்குத் தீமை தருவதாக இருந்தால் உங்கள் இடம் இறைவனின் கணக்கில் தாழ்ந்தே இருக்கும்.

ஈகோ உள்ள மனிதர்களுக்கு புகழ்பாடுவது ஆனந்தத்தை அளிக்கலாம். ஆசைகள் உள்ள மனிதனுக்குப் பணமும், பொருளும் கொட்டிக் கொடுப்பது ஆனந்தத்தை அளிக்கலாம். ஆனால் ஈகோ இல்லாத இறைவனை, விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனை இவை திருப்திப்படுத்தாது. எனவே பணம் கொடுத்தும், புகழ்பாடியும் கடவுளருளைப் பெற்று விடலாம் என்று யாரும் தப்புக் கணக்குப் போட்டு விட வேண்டும். மனிதரின் ஆதரவு பெற இது போன்ற செயல்கள் பலன் தரலாம். ஆனால் இறைவனை இப்படிப்பட்ட தந்திரங்களால் ஏமாற்றி விட முடியாது.

இறையருள் வேண்டுபவர்களே! உங்கள் இதுநாள் வரையிலான செயல்களை மறு மதிப்பீடு செய்யுங்கள். உங்கள் கணக்கு இறைவன் கணக்கோடு ஒத்துப் போகுமா? ஒத்துப் போகாது என்றால் இனியாவது உங்கள் அளவுகோல்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் சொற்களும், செயல்களும், வாழ்க்கையும் அந்த அளவுகோல்களில் மேன்மையாக இருக்கட்டும். அப்படி வாழ்வீர்களேயானால் வாழ்க்கையின் முடிவில் உங்கள் கணக்கையும், இறைவன் கணக்கையும் ஒப்பிடும் போது உங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்காது.

-என்.கணேசன்

நன்றி: விகடன்

7 comments:

  1. இதை நோட்டீசாக அடித்து கோயில், சர்ச், மசூதிகளில் வினியோகிப்பது நல்லது. நல்ல பதிவு. நன்றி.

    VNN

    ReplyDelete
  2. Super Brother.

    Abishek.Akilan.

    ReplyDelete
  3. இறைவனின் மதிப்பில் முக்கியமானது அன்பு அன்றி வேறு இல்லை. அன்பே சிவம்
    -சுவாமி

    ReplyDelete
  4. Hats off to you GANESAN.

    Please keep up your work and my wishes.

    TK

    ReplyDelete
  5. "முடிவில் உங்கள் கணக்கையும், இறைவன் கணக்கையும் ஒப்பிடும் போது உங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்காது" அருமையான வார்த்தைகள் .நான் தோற்றுக்கொண்டே இருக்கிறேன் என்று சொல்லும் அப்பாவிகளுக்கு இந்த பதிவு மருந்து

    ReplyDelete