நம் ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொன்றும் எப்படி இருப்பது நல்லது, சிறந்தது என்று வரையறை வைத்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதரும் எப்படி இருந்தால் சிறப்பு, நல்லது என்று ஒரு கற்பனை வடிவம் வைத்திருக்கிறோம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு கணமும் அந்த வரையறையுடன் ஒப்பிடப்பட்டே தீர்மானிக்கப்படுகிறது. சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் அந்தக் கற்பனை வடிவத்துடன் ஒப்பிடப்பட்டே நம்மால் நிர்ணயிக்கப் படுகிறான். இந்தக் கற்பனை வடிவத்திற்கு முழுமையாகப் பொருந்துகிற கணமும், மனிதனும் கிடையாது என்பதால் இந்த ஒப்பீடு துன்பத்திற்கு ஆணி வேராக இருக்கிறது.
இதற்கு மேலும் கூடப் போகிறோம். முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியையும், தற்போது நடக்கும் ஒரு நிகழ்வையும் ஒப்பிட ஆரம்பிக்கிறோம். ஒரு மனிதனை இன்னொரு மனிதனுடன் ஒப்பிடுகிறோம். இந்த ஒப்பிடும் பழக்கம் நம் இரத்தத்தில் ஊறிப் போய் விடுகிறது. அதனால் என்ன தவறு என்று கூட சிலர் கேட்கலாம். இந்த ஒப்பிடும் பழக்கத்தால் நம்மால் நடப்பதை ரசிக்க முடியாமல் போகிறது, மனிதர்களைத் தனித்தன்மையை சிலாகித்து ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது என்பதே கசப்பான உண்மை.
இதோ ஒரு காட்சி: ஒரு பௌர்ணமி இரவில் ஒரு அழகான குளம் நிலவொளியில் மின்னிக் கொண்டு இருக்கிறது. சில்லென லேசான காற்று அடிக்க, தொலைவில் இருந்து ஒரு புல்லாங்குழல் இசை இனிமையாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த ரம்மியமான சூழ்நிலையை ஒருவன் குளத்தின் கரையில் இருந்து ரசித்துக் கொண்டு இருக்கிறான். அந்த நேரம் பார்த்து ஒரு அழகான வெண்ணிறப் பறவை ஆகாயத்தில் பறந்து செல்ல அதன் பிரதிபிம்பம் குளத்தின் நீரில் விழ அந்த கணம் பூரண அழகு நிறைந்த ஒரு கச்சிதமான கணமாக அமைந்து விட்டது. குளக்கரையில் இருந்தவன் மெய்மறந்து அந்தக் கணத்துடன் ஐக்கியமாகி விட்டான்.
அதற்குப் பிறகு தினமும் இரவு அவன் அந்தக் குளக்கரைக்குப் போக ஆரம்பித்தான். பல நாட்களில் புல்லாங்குழல் இசை கேட்கவில்லை. சில நாட்களில் நிலவொளி இல்லை. சில நாட்களில் சில்லென்ற காற்று இல்லை. அந்த அழகான வெண்ணிறப் பறவையோ பின் எந்த நாளும் குளத்தின் மீது பறக்கவே இல்லை. அவன் அந்தக் கச்சிதமான கணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அந்தக் குறைபாடுகள் பிரதானமாகத் தெரிய அவனால் பின் வந்த நாட்களின் இரவுகளை ரசிக்க முடியவில்லை.
ஒரு நாள் அந்தக் குளத்தில் சில சிறுவர்கள் நீந்தி விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இன்னொரு நாள் சில அழகான மலர்கள் நீர்பரப்பில் மிதந்து கொண்டு இருந்தன. இன்னொரு நாள் ஒரு சிறு சத்தம் கூட இல்லாமல் அபூர்வமான மௌனத்தில் அந்தப் பகுதியே இருந்தது. இப்படி எத்தனையோ வித்தியாசமான, கூடுதல் அம்சங்கள் ரசிக்க இருந்தாலும் அவனால் ரசிக்க முடியவில்லை. காரணம் அவனை மெய்மறக்க வைத்த அந்த ஒரு இரவுடன் அவன் ஒவ்வொரு இரவையும் ஒப்பிட ஆரம்பித்தது தான்.
எந்த ஒரு கணமும் அப்படியே திரும்ப நிகழப்போவதில்லை. அது இயற்கையின் நியதி. அப்படி நிகழும் என்று எதிர்பார்க்கும் போது, ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பிக்கும் போது மற்ற கணங்களின் தனியழகை, தனிப் பயன்பாட்டைக் காண முடியாமல் போகிறது. ஒவ்வொரு கணத்தையும் ரசியுங்கள். ஆனால் அதே போல திரும்ப வரமுடியாது என்பதை மறந்து விடாதீர்கள். அப்படி வந்து கொண்டிருக்குமானால் அதுவே நமக்கு சலித்து விடாதா?
அதே போலத் தான் மனிதர்களும். ஒவ்வொருவரும் தனித் தன்மை வாய்ந்தவர்கள். உலகம் இயங்க அனைத்து வித மனிதர்களும் அவசியமானவர்கள். அதனால் ஒருவரைப் போல இன்னொருவர் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள். ஒவ்வொருவரையும் அவர்கள் இயல்பின் படியே ஏற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரிடத்திலும் ஏதோ ஒன்று கற்றுக் கொள்ள இருக்கிறது. அதற்கு மதிப்பு கொடுத்து அவர்களைஅங்கீகரியுங்கள். ஒரே மாதிரி மனிதர்கள் மட்டுமே இருந்தால் உலகம் ஸ்தம்பித்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற நாவலில் கதாநாயகி கல்யாணி தன் கணவனிடம் மிக அழகாகச் சொல்வாள். "நம்ம வீட்டில பூக்கற ரோஜாப்பூ இருக்கு பாருங்க... இதை நான் ரொம்ப ரசிக்கிறேன்... நீங்களும் ரசிப்பீங்க. ஆனா யாரும் ஒரு ரோஜாப்பூவை விமரிசனம் பண்றது இல்லை. இல்லைங்களா. ஒரு ரோஜாப்பூவிலே இன்னும் ஒரு இதழ் கூட இருந்தா தேவலாம்னோ, இந்த வாசனையோட கொஞ்சம் மல்லிகை வாசமும் கலக்காம இருக்கிறது ஒரு குறைன்னோ நாம்ப நினைக்காம இருக்கறதுக்குக் காரணமே நாம்ப ரோஜாவை ரோஜாவா எடுத்துக்கறது தான். அதைப் பத்திக் கற்பனைகளோ எதிர்பார்க்கிற காரியமோ இல்லை. நாம்ப ரோஜா கிட்டே எதிர்பார்க்கிறது ஒரு ரோஜா தான். அந்த மாதிரி மனுஷாள் கிட்டயும் இருந்திட்டா... அவங்க இருக்கற மாதிரியே அவங்களை ஒப்புத்துக்கறதுன்னு இருந்தா இந்த மாதிரி பிரச்னையே இருக்காது"
நம் மனதில் உள்ள வரையறைகள் கற்பனையானவை. அதற்கு ஏற்ப நிஜத்தில் எதிர்பார்க்கும் போது நாம் ஏமாற்றத்தையே சந்திக்க நேர்கிறது. அதே போல ஒரு கணத்தைப் போல இன்னொரு கணமோ, ஒருவரைப் போல இன்னொருவரோ இருக்க முடியாது என்பதையும் நாம் நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். நமது மனம் வழக்கம் போல ஒப்பிட்டுப் பார்க்குமானால் அது முட்டாள்தனம் என்பதை அக்கணமே உணர்ந்து தெளிய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே நாம் வாழ்க்கையை ரசிக்க முடியும். சந்திக்கும் மனிதர்கள் மூலம் பலனடைய முடியும். மன அமைதி பெற முடியும்.
- என்.கணேசன்
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
ஒப்பிடுதல் என்பதை விட்டொழிப்பது நடைமுறையில் சாத்தியமா ? எடுத்துகாட்டுக்கு வேணா ரோசாப்பு சரியானது. ஆனா நம்ப யாரோட அதிக நெருக்கமா இருக்கோமோ, அவங்களோட குணநலன்கள அப்பப்ப ஒப்பிடுதல் மனித இயல்பே.
ReplyDeleteஒப்பிடுதல் மனித இயல்பே. ஒப்பிட்ட பின் ஒன்றைப் போல மற்றது இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க ஆரம்பிக்கும் போது அந்த இயல்பு எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பது தான் இந்தக் கட்டுரையே.
ReplyDeleteஎன்.கணேசன்
//ஒரு கணத்தைப் போல இன்னொரு கணமோ, ஒருவரைப் போல இன்னொருவரோ இருக்க முடியாது என்பதையும் நாம் நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.//
ReplyDeleteமிகவும் உண்மை. குளம் உதாரணம் வெகு பொருத்தம். நம் எண்ணங்களை நாமே வேடிக்கை பார்க்கக் கற்றுக் கொண்டால் இது போன்ற விஷயங்களில் நல்ல தெளிவு கிடைக்கும். சிந்திக்க வைத்தமைக்கு நன்றிகள்!
எதிர்பார்ப்பு தான் ஒப்பிட வைக்கிறது உள்ளதை உள்ளபடி ஏற்றுகொண்டால் பிரச்சினை எதுவும் இல்லை
ReplyDeleteyour articles are very super i like your articles
ReplyDeleteகருத்துகள் எப்போதுமே நடைமுறைக்கு 100% ஒத்துப்போக அவசியமில்லை.
ReplyDelete