சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, October 5, 2007

எது நாத்திகம்?




"ஆனந்த் நீ ஒரே ஒரு தடவை வந்து அவரைப் பார். அப்புறம் நீ அவர் பக்தனாயிடுவாய்"

கதிர் இதைச் சுமார் நூறு தடவையாவது சொல்லியிருப்பான். கடைசியில் அவன் தொந்தரவு பொறுக்க முடியாமல் ஆனந்த் புவனகிரி சுவாமிகளைப் பார்க்கச் சம்மதித்தான்.

புவனகிரி சுவாமிகள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர். கீதையாகட்டும், திருவாசகமாகட்டும் சுவாமிகள் பேசும் போது எப்படிப்பட்ட மனதும் கரைந்து விடுமாம். பௌர்ணமி அன்று பூஜை முடிந்து அவர் கொடுக்கும் குங்குமத்திலும் விபூதியிலும் பலருக்கு குட்டிக் கிருஷ்ண விக்கிரகமும், லிங்கமும் கிடைத்திருக்கின்றனவாம். அவர் அன்று பூஜை செய்யும் போது அவர் தலைக்கு மேலே சில சமயம் ஏதோ ஜோதி தெரிவதுண்டாம். இப்படிப் பலரும் பல கதைகள் அவரைப் பற்றிச் சொன்னார்கள். கதிர் ஒரு முறை அவரை தரிசித்து விட்டு அவரது பரம பக்தனாகி விட்டான். அவரது பக்தராக அங்கீகரிக்கப் படுபவர்களுக்கு அவரது படம் டாலராகத் தொங்கும் செயின் ஒன்றைத் தருவாராம். முதல் சந்திப்பிலேயே அந்தச் செயினைக் கதிர் பெற்றுக் கொண்டு வந்து விட்டான். அன்றிலிருந்து தன் நண்பனையும் அவரிடத்திற்கு அழைத்துப் போக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறான்.

ஆனந்திற்கு இது போன்ற பௌர்ணமி பூஜை அற்புதங்கள் எல்லாம் ஆன்மீகத்திற்கு அவசியம் என்று தோன்றவில்லை. ஆகவே முடிந்த வரை அங்கு போவதைத் தள்ளிப் போட்டான். இன்று போய்த் தான் பார்ப்போமே என்று அவரது ஆசிரமத்திற்குக் கிளம்பியுள்ளான்.

நண்பர்கள் ஆசிரமத்தை அடைந்த போது அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. சுவாமிகள் ஒரு சிம்மாசனம் போன்ற நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். ஒரு பக்தர் அவருக்குப் பாத பூஜை செய்து கொண்டிருந்தார். அங்கு வரிசையாக சிலர் நிற்பதைப் பார்த்து ஆனந்த் கதிரிடம் விசாரித்தான்.

"அதுவா. அவர்களும் சுவாமிகளுக்குப் பாத பூஜை செய்ய நிற்கிறார்கள். ஆயிர ரூபாய் கட்டணும்" என்று சொன்ன கதிர் ஆனந்தின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு "அது... ஆசிரமத்தைப் புதுப்பிக்கிறாங்க. அதுக்காகத் தான் வாங்கறாங்க" என்றான்.

சுவாமிகளின் பாத பூஜை முடிந்தது. அவர் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். அன்று பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயம் பற்றிப் பேசினார். பிழையில்லாமல் சமஸ்கிருத சுலோகங்களும் பெரும் தத்துவ சிந்தனைகளும் அவர் வாயிலிருந்து சரளமாக வந்தன. 'ஸ்திதப் ப்ரக்ஞன்' யாரென அழகாக விவரித்தார். எவனொருவன் தன் ஆசைகளை எல்லாம் களைகிறானோ, இன்ப துன்பங்களை ஒரு போல பாவிக்கிறானோ, பற்றுதலோ, கோபமோ, பயமோ இல்லாதிருக்கிறானோ அவனே ஸ்திதப் ப்ரக்ஞன் என்று சொல்லச் சொல்ல அவர் பின்னால் ஓடிக் கொண்டிருந்த டேபிள் ·பேன் திடீரென்று தன் ஓட்டத்தை நிறுத்தியது. அவர் பேச்சும் நின்றது. ஒரு சிஷ்யன் அதைச் சரி செய்ய முயன்று முடியாமல் சிறிது நேரம் திணறினான். வியர்த்து தவித்துப் போன சுவாமிகள் அவனை எரிச்சலுடன் பார்த்தார். வேறொருவன் எங்கிருந்தோ ஓடோடி வந்து சரி செய்யும் வரை ஏதோ நடக்கக் கூடாத விபரீதம் நடந்து விட்டது போன்ற ஒரு உணர்வுடன் கூட்டத்தினர் அந்தக் காட்சியைப் பார்த்தனர்.

ஒரு வழியாக ·பேனும் ஓட அவர் பேச்சும் தொடர்ந்தது. அந்த சமயத்தில் ஒரு பிரபல பத்திரிக்கை நிருபர் வந்து சுவாமிகளைப் படம் எடுக்கத் துவங்கினார். அந்த நிருபர் தன் பணியை முடிக்கும் வரை சுவாமிகளின் பேச்சு கீதையிலும் கண்கள் நிருபர் மீதும் இருந்தன. பின்பு அறுபத்தி ஏழாவது சுலோகத்தை அழகாகச் சொன்னார். 'கடலில் உள்ள ஓடத்தை பெருங்காற்று அடித்துச் செல்வது போல தன்வசப்படுத்தாத ஒரு புலனும் மனிதனின் புத்தியை கவர்ந்து செல்கிறது.'

ஆனந்த் கதிரைப் பார்த்தான். கதிர் பக்தியுடன் சுவாமிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சுவாமிகளின் பேச்சு முடிந்தவுடன் கூட்டத்திலிருந்து பலரும் ஒவ்வொருவராகச் சென்று சுவாமிகளின் பெருமைகளைப் பேசினார்கள். அவரை ஆன்மீக சிகரம் என்றார்கள். மஹா யோகி, மகரிஷி என்றெல்லாம் அழைத்தார்கள். சுவாமிகள் மலர்ந்த முகத்துடன் அதை ரசித்ததாகத் தோன்றியது. அப்படிப் பேசிய சில பக்தர்களை அழைத்து தனது பட டாலர் உள்ள செயினையும் தந்து ஆசிர்வதித்தார். ஆனந்த் எதிர்பாராத விதமாக கதிரும் எழுந்து போய் பேசினான். ஒரே சந்திப்பில் தான் சுவாமிகளின் பக்தனாகியது எப்படி என்று விவரித்தான். அதோடு அவன் நிறுத்தியிருக்கலாம். தொடர்ந்து வேண்டிக் கொண்டான். "என் நண்பன் ஆனந்தும் இங்கு வந்திருக்கிறான். அவனையும் தங்கள் பக்தனாக ஏற்றுக் கொண்டு ஆசி வழங்கும்படி சுவாமிகளை நமஸ்கரித்து கேட்டுக் கொள்கிறேன்"

ஆனந்த் பெரிய தர்மசங்கடத்தில் சிக்கித் தவித்தான். கதிர் அவனருகே வந்து அவனைப் போகச் சொல்ல, எல்லோரும் அவனையே பார்த்தார்கள். அவனது தயக்கத்தைக் கூச்சம் என்று எடுத்துக் கொண்ட சுவாமிகள் பெருந்தன்மையோடு அவனை பேச அழைத்தார். வேறு வழியில்லாமல் ஆனந்த் போனான்.

"மன்னிக்கணும். எனக்கு உங்கள் பக்தனாகும் எண்ணமே இல்லை. நான் பேசினால் இதற்கு முன்னால் பேசியவர்கள் பேசிய மாதிரி இருக்காது. என் மனதில் பட்டதை அப்படியே சொல்வேன். அது நல்லாயிருக்காது" என்று வெளிப்படையாக அவன் சொன்னவுடன் சுவாமிகள் அந்தப் பத்திரிக்கை நிருபரைப் பார்த்து புன்னகை செய்த படி "பரவாயில்லை. சொல்" என்றார். அவனது எந்த விமரிசனத்திற்கும் வேதங்களில் இருந்தும் ஆன்மீக இலக்கியங்களில் இருந்தும் பல எடுத்துக் காட்டுகள் சொல்லி அந்த நிருபரைப் பிரமிக்க வைக்க ஒரு சந்தர்ப்பமாக இதை அவர் நினைத்த மாதிரி இருந்தது.


அதற்கு மேல் ஆனந்த் தயங்கவில்லை. "சுவாமி. ஒரு சராசரி மனிதனுக்குத் தேவையான பணம், சௌகரியங்கள், மற்றவர்களுடைய அங்கீகாரம் எல்லாம் உங்களுக்கும் தேவைப்படுகிறது என்பதை இங்கே நானே கண்கூடாகப் பார்த்தேன். ஒரு மகரிஷி ஸ்தானத்தில் உங்களை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. "

அவன் இப்படிச் சொல்வான் என்று யாருமே அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. சுவாமிகளின் முகம் கறுத்தது. அவரது சீடர்களில் ஒருவர் அவனுக்குப் பதில் சொல்ல விரைந்து வந்தார்.

"வேதங்களையும் உபநிஷத்துகளையும், தேவாரம் திருவாசகங்களையும் கரைத்துக் குடித்த சுவாமிகளை சாதாரண மனிதன் என்று சொல்வது குருடன் ஓவியனைக் குறை சொல்வது போலத்தான். அவர் அளவுக்கு வேண்டாம், அவருக்குத் தெரிந்த இந்த ஆன்மீக நூல்களில் இருந்து கொஞ்சமாவது உன்னால் சொல்ல முடியுமா தம்பி"

சுவாமிகள் முகம் மலர்ந்தது. ஒருசிலர் கை தட்டினார்கள்.

ஆனந்த் புன்னகை மாறாமல் பதில் சொன்னான். "என்னால் முடியாது என்று நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இத்தனையும் என் கம்ப்யூட்டர் டிஸ்கின் உள்ளே இருக்கின்றன. அதற்காக நான் என் கம்ப்யூட்டரைக் கும்பிட முடியுமா? இதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் மகரிஷி ஆகி விடுவதில்லை. இந்த போதனைகளை ஒவ்வொரு கணமும் தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுபவர் தான் மகரிஷி. அந்தப் பெயருக்குப் பொருத்தமாய் ஒருவர் திருவண்ணாமலையில் ஒரு காலத்தில் இருந்தார்...."

மேலே அவனைப் பேச விடாமல் சுவாமிகளின் சில பக்தர்கள் கத்த ஆரம்பித்தனர். அந்த ஆசிரமம் கிட்டத் தட்ட ஒரு மினி சட்டசபையாக மாறியது. ஆனந்த் அமைதியாக அங்கிருந்து வெளியேறினான். கதிர் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, ஓரிருவர் ஆனந்தைத் தொடர்ந்து வெளியேறினார்கள்.

கோபத்தில் முகம் சிவக்க புவனகிரி சுவாமிகள் சொன்னார். "இது போன்ற நாத்திகம் பேசும் மூடர்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. இனி இது போன்ற ஆட்களை அழைத்து வந்து யாரும் ஆன்மிகத்தைக் களங்கப் படுத்த வேண்டாம்".

______________________________________________________________________________
என்.கணேசன்

10 comments:

  1. கனேசன்,

    அருமையான சிறுகதை !

    தமிழ்மணத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன்.

    அன்புடன்

    கோவி.கண்ணன்

    ReplyDelete
  2. அருமையான கதை. இது உண்மை சம்பவமா? புவனகிரி சாமிகள் என்ற பெயர் கேட்டதாய் நினைவு.

    ReplyDelete
  3. இது குறிப்பாக யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. சில அபூர்வ விதிவிலக்குகள் தவிர இப்போதைய ஆன்மீகம் இந்த அளவில் தான் இருக்கிறது சுட்டிக் காட்ட எழுதினேன். நன்றி.

    என்.கணேசன்

    ReplyDelete
  4. நம்ம கமலஹாசன் சொன்னா மாதிரி

    கடவுள் இருக்குங்கிறவனையும் நம்பலாம்.

    கடவுள் இல்லைங்கறவனையும் நம்பலாம்.

    ஆனா நாந்தான் கடவுள்னு சொல்றானே அவன்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  5. Simply superb. It looks like a real story. Most of the samiyaars are like that. If people are keenly observing like your hero, we can easily get rid of the spiritual frauds.

    ReplyDelete
  6. nalla kathai.nalla karuththu.
    nalla paadam.
    Nanri Brother.
    Abishek.Akilan...

    ReplyDelete
  7. Anand'udan veliyeria antha 2 na(n)bargalil nanum oruvanai irunthirupen. . . Ithuponra asiramathirku senrirunthal. . .

    ReplyDelete
  8. //ஓரிருவர் ஆனந்தை தொடர்ந்து வெளியேறினார்கள்//

    ReplyDelete
  9. ஆனந்த் கதிரை பார்த்து கேட்க வேண்டிய கேள்விகளை சாமியாரிடம் கேட்டது, ஆனந்தின் மனநிலயை காட்டுகிறது. தங்களின் பார்வை கூட இதில் உள்ளது.

    ReplyDelete