என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, February 9, 2026

யோகி 142

 

றுநாள் காலை குமரேசன் யோகாலயத்துக்குப் போன போது வெளி கேட்டைத் தாண்டியவுடனே கண்ணனால் நிறுத்தப்பட்டான். “இன்னைல இருந்து நீ வேலைக்கு வர வேண்டாம் மருதகாசி

 

குமரேசன் அதிர்ச்சியடைந்தான். காரணம் அவனுக்குத் தெரியாதது போல் சோகமாகக் கேட்டான். “ஏன் ஜீ?”

 

அதற்கு காரணம் சொல்வது அவசியமில்லை என்பது போல் கண்ணன் வாய் திறக்கவில்லை.  குமரேசன் வேலை போனாலும் அவன் கண்டுபிடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தான். அவனைப் போல் ஒரு தோட்டக்காரன் திடீரென்று நிறுத்தப்பட்டால் எப்படி நடந்து கொள்வானோ, அப்படியே நடந்து கொள்ளத் தீர்மானித்தான். தலையைச் சொறிந்தான். “திடீர்னு நிறுத்தினா நான் எப்படி சமாளிக்கறதுஜீ. நான் புள்ளை குட்டிக்காரன். என் குடும்பம் என் வருமானத்தை நம்பி தான் இருக்கு…”

 

கண்ணன் சொன்னார். “15 நாள் சம்பளம் சேர்த்து தரச் சொல்றேன். வாங்கிட்டு போ.”

 

ஓரளவு மனசமாதானம் அடைந்தவன் போல் குமரேசன் காட்டிக் கொண்டான்.  

 

வழக்கம் போல் தோட்டக்காரர்களுக்கு வேலை ஒதுக்க ஆறு மணிக்குச் சென்ற கல்பனானந்தா மருதகாசி மட்டும் வந்திருக்காததைக் கவனித்தாள். யோசனையுடன் அவள் முன்பக்கம் பார்த்த போது முதல் கேட் அருகிலேயே மருதகாசியும் கண்ணனும் பேசிக் கொண்டிருப்பதை அவள் பார்க்க முடிந்தது. உடனே அவள் பிரச்சினையை உணர்ந்தாள். அவள் பயப்பட்டது போலவே மருதகாசி சைக்கிளுடன் வெளியேறுவது தெரிந்தது. கண்ணன் மட்டும் இரண்டாம் கேட்டைத் தாண்டி வந்தார். கல்பனானந்தாவிடம் அவர் சொன்னார். “மருதகாசியை வேலைல இருந்து நிறுத்திட்டோம். அவன் ஆள் சரியில்லை…”

 

கல்பனானந்தா அந்தத் தகவலால் பாதிக்கப்பட்டது போல் காட்டிக் கொள்ளவில்லை. சரி தான் என்பது போல் அவள் தலையசைத்தாள். ஆனால் ஷ்ரவனிடம் அத்தகவலைத் தெரிவிக்கும் வரை அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. மருதகாசி எதனால் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டான் என்பது அவளுக்குத் தெரியவில்லை. அவர்கள் ஷ்ரவனையும் சந்தேகப்பட்டு இருப்பார்களோ என்ற கவலை அவளுக்கு அதிகம் இருந்தது.  

 

ஷ்ரவன் வேலைக்கு வந்த போது தாழ்ந்த குரலில் அவனிடம் அத்தகவலைத் தெரிவித்தாள். அவனும் அதிர்ந்து போனான். அவனுக்கும் அவளுடைய சந்தேகமே ஏற்பட்டது. பிடிபட்டு விட்டோமோ?

 

ஷ்ரவன் அவளிடம் மெல்ல சொன்னான். “நான் உங்க கிட்ட பேசணும் சுவாமினி.”

 

வேறொரு துறவி அவர்களை நெருங்குவதைப் பார்த்த கல்பனானந்தாஅப்புறம்என்று முணுமுணுத்தாள்.

 

ஷ்ரவன் நகர்ந்தான். வேலை செய்து கொண்டிருக்கையில் கண்காணிப்பவர்களைக் கவனித்தான். அவர்கள் அவனை அதிகமாகக் கண்காணிப்பதைப் போல் தோன்றவில்லை. அவன் மீது சந்தேகம் வந்திருந்தால் கண்காணிப்பு அதிகரித்திருக்க வேண்டும். கூடுதல் சந்தேகம் வந்திருந்தால் இன்னேரம் அவன் இங்கே வேலை செய்து கொண்டிருக்கக் கூட முடியாது. எல்லாம் யோசிக்கையில் குமரேசன் வெளியே நடந்த எதிலோ தான் மாட்டியிருக்க வேண்டும் என்பதை ஷ்ரவன் புரிந்து கொண்டான். அவனை இவர்கள் பின் தொடர்ந்து போய் எதையாவது கண்டுபிடித்திருக்கலாம், அல்லது சந்தேகப்பட்டிருக்கலாம்ஷ்ரவனின் மனம் சிறிது அமைதியடைந்தது. ஆனால் எந்த நேரத்திலும் அவனும் மாட்டிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. இது வரை குமரேசன் அவனைப் பார்க்க முடியாவிட்டால் அவன் மூலமாக ராகவனுக்கு ஷ்ரவன் மாட்டிக் கொண்ட்து தெரிய வரும் வாய்ப்பு இருந்தது. குமரேசன் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டதால் அந்த வாய்ப்பும் இல்லை. ஷ்ரவன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.   

 

நாளை பெங்களூரில் ஒரு நிகழ்ச்சியில் பேச பிரம்மானந்தாவுக்கு அழைப்பு வந்திருப்பதால், அவர் பேசுவதற்கு குறிப்புகள் எடுத்துத் தரும் வேலை கல்பனானந்தாவுக்கு வந்து சேர்ந்தது. அதனால் அவளுக்கு மதியத்திற்கு முன் ஷ்ரவனிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மாலை தான் எல்லோருடைய வேலையையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டு அவனிடமும் அவள் வந்தாள்.     

 

ஷ்ரவன் வேலை பார்த்துக் கொண்டே சொன்னான். “சுவாமினி. இனி எந்த நேரத்திலும் என்னையும் அவர்கள் கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒரு வேளை அவர்கள் கண்டுபிடித்தால் நான் வேலைக்கு வராதது மூலம் உங்களுக்குத் தெரிய வரும். அப்படி நான் வேலைக்கு வராவிட்டால் ஒரேயொரு மெயிலை நீங்கள் அனுப்ப வேண்டும்.”

 

கல்பனானந்தா முகத்தில் தெரிந்த கலவரத்தை ஷ்ரவன் பக்கவாட்டில் கவனித்தான். ”பயப்படாதீர்கள் சுவாமினி. நீங்கள் புதிதாய் மெயில் அனுப்பப்போவதில்லை. ஏற்கெனவே வந்திருக்கும் மெயிலுக்கு பதில் அனுப்பப்போகிறீர்கள் அவ்வளவு தான். நீங்கள் அனுப்பும் மெயிலைப் படித்தாலும் அவர்களுக்குச் சந்தேகம் வராது. எப்படி அனுப்புவது என்று சொல்கிறேன். ’க்ஷேமமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்என்று ஆரம்பியுங்கள். அதற்குநான் ஆபத்தில் இருக்கிறேன்என்று அர்த்தம். அதைத் தொடர்ந்து நீங்கள் எழுதும் வாக்கியங்களில் முதல் இரண்டு வார்த்தைகள் அடித்து விட்டு மூன்றாவது வார்த்தையை மட்டும் தான் எங்கள் ஆட்கள் தேர்ந்தெடுத்துப் படிப்பார்கள். மீதி நாளை சொல்கிறேன்.”

 

கல்பனானந்தா அப்போது தான் ஒரு கண்காணிப்பாளன் நெருங்கி வருவதைப் பார்த்தாள். அந்தப் பக்கம் திரும்பாமலேயே அவன் நெருங்கி வருவதை ஷ்ரவன் எப்படிக் கண்டுபிடித்தான் என்பது அவளுக்கு விளங்கவில்லை. இவனிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது.

 

ஒவ்வொரு முறை கண்காணிப்பாளன் வரும் போதும் அவள் நகர்வது அவனுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தலாம் என்று தோன்ற கல்பனானந்தா அன்று நகராமல் அங்கேயே நின்றபடி ஷ்ரவனிடம் சொன்னான். “ஷ்ரவனானந்தா. இந்த வகைச் செடிகள் இன்னும் உயரமாகப் போகக்கூடியவை. இவற்றை உள்ளேயும், வெளிப்புறம் வேலிப்பகுதியில் சற்று குட்டையான செடிகளையும் நட்டால் வெளியேயிருந்து பார்க்கும் போது இரண்டையும் பார்த்து ரசிக்க முடியும், என்ன சொல்கிறீர்கள்?”

 

அதுவும் சரி தான் சுவாமினி. அப்படியே செய்கிறேன்.” ஷ்ரவன் சொன்னான்.

 

கல்பனானந்தா அவசரமில்லாமல் நகர்ந்தாள். கண்காணிப்பாளனுக்கு அவள் பக்கத்துத் தோட்டத்தில் வேறொரு துறவியுடன் பேசுவது கேட்க ஆரம்பித்தது.  எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று சிறிது நேரம் கேட்டு விட்டு அவன் நகர்ந்தான்.

 

ஷ்ரவன் வேலை முடிந்து அறைக்குத் திரும்பும் போது கண்ணன் வழியில் கிடைத்தார். அவர் அவனைப் பார்த்து நட்புடன் புன்னகைத்த போது அவன் கண்டுபிடிக்கப்படாதது மேலும் உறுதியாகியது. ஆனால் இந்தப் பாதுகாப்பான நிலை எத்தனை நாட்களோ?

 

மாலை சத்சங்கத்துக்கு முன் நூலகத்தில் இருந்து நூல் ஒன்றைப் படிக்க எடுத்து வருவதாக சித்தானந்தா சென்றபோது தான் ஷ்ரவனுக்கு நாளை நூலகத்தில் கல்பனானந்தாவைச் சந்திப்பது நல்லது என்று தோன்றியது. அவன் அவசர அவசரமாக ஒரு துண்டுச் சீட்டில், ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆன்மிக மையம், லீலாவதி என்ற பெயர்களில் உருவாக்கி வைத்திருந்த மின்னஞ்சல் முகவரிகளை எழுதினான்.

 

முக்தானந்தா அவன் புதிதாய் எதையோ செய்யவிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாலும் அவராக எதுவும் கேட்கவில்லை. ஷ்ரவன் அவரிடம் குமரேசன் மேல் சந்தேகம் கொண்டு அவர்கள் வேலையிலிருந்து நிறுத்தி விட்டதைத் தெரிவித்தான். புன்முறுவலுடன் அவனையும் அவர்கள் கண்டுபிடித்து விடும் வாய்ப்பும் இருக்கின்றது என்று அவன் சொன்ன போது அவர் வேதனையுடன் சொன்னார். “இந்த விஷப்பரிட்சை வேண்டாம் ஷ்ரவன். நீ திரும்பிப் போய்விடு. இறந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை.”

 

ஷ்ரவன் சொன்னான். “யாராவது இவர்களை நிறுத்தித் தான் ஆக வேண்டும் சுவாமிஜி. சைத்ராவையோ, டாக்டர் வாசுதேவனையோ, இங்கே புதைக்கப்பட்டவனையோ திரும்பிவர வைக்க முடியாது தான். ஆனால் இவர்களைப் போல இன்னும் எத்தனையோ பேர் பலியாவதை என்னால் தடுக்க முடியும். தடுக்க வேண்டும். பயந்து, அடங்கி, அனுசரித்துப் போகிறவர்களால் எந்த மாற்றமும் நடந்து விடாது சுவாமிஜி. தவறை எதிர்த்து தைரியமாக நிற்கிறவர்களால் தான் எந்த நல்ல மாற்றமும் நடக்க முடியும்.”

 

அவருக்கு அவன் சொல்வது முற்றிலும் உண்மை என்று புரிந்தது. ஆனால் வாழ வேண்டிய இந்த நல்ல இளைஞன், இவர்களிடம் பலியாவதில் அவருக்கு வருத்தம் இருக்கிறது. அவர் ஒரு தந்தையின் பாசத்தோடு, வேதனையோடு அவனைப் பார்த்த போது அவன் புன்னகையுடன் சொன்னான். “எல்லா ஆபத்துகளுக்கும் நான் தயாராகத் தான் வந்திருக்கிறேன் சுவாமிஜி.   ஒவ்வொன்றிலிருந்தும் தப்பிக்க முன்கூட்டியே ஒரு வழி ஏற்படுத்திக் கொண்டு தான் வந்திருக்கிறேன். அதனால் அவ்வளவு சுலபமாக இவர்கள் என்னைக் கொன்றுவிட முடியாது. அதையும் மீறி நான் பலியாக வாய்ப்பு இருக்கிறது என்பதை நான் தெரிந்தே வைத்திருக்கிறேன். அப்படி ஒருவேளை நான் இறந்தாலும் இவர்கள் அவ்வளவு சுலபமாக தப்பித்து விட முடியாது. அதுமட்டும் உறுதி.”

 

அவன் சொன்ன தைரிய வார்த்தைகளால் அவர் சிறிது தைரியம் அடைந்தார் என்றாலும் கடைசியாக அவன் சொன்னது அவரைக் கஷ்டப்படுத்தியது. அடுத்த பிறவியில் அவர் சம்சார வாழ்க்கையில் ஈடுபடுபட்டால் இவனைப் போன்ற ஒரு மகன் வேண்டும் என்று ஆசைப்பட்டபடி அவனை அன்புடன் பார்த்தார். பின் குரல் கரகரக்கச் சொன்னார். “என் பிரார்த்தனை எப்போதும் உன்னுடன் இருக்கும் ஷ்ரவன்.”


(தொடரும்)

என்.கணேசன்



2 comments:

  1. Many thanks. Didn't attend this years bookfair in chennai but arranged to buy Nee Naan Thamirabharani and Ratchagan. Your very first novel showed your typical style and was nice. But Ratchagan was awesome. Lot of useful things to follow in our life have been wonderfully woven along with the story.

    ReplyDelete
  2. கல்பனாநந்தா பாதுகாப்பான வட்டத்தில் இருந்தாள்... தற்போது அவளும் ஆபத்தான வேலைகளில் இறங்க போகிறாள்.

    ReplyDelete