சுசித்தார்த்தக் சென்றதும் பர்வதராஜன் கண்களைக் கூர்மையாக்கினான். இருட்டில் இருக்கும் இடத்தைப் பற்றிக் கூடுதலாக அறிய முயன்றான். சில அடிகள் தள்ளி ஒரு நாற்காலி இருப்பது மட்டும் புலனாகியது. அதற்கு மேல் எதுவும் தெரியவில்லை. அங்கு நிலவிய அமானுஷ்ய அமைதி பயமுறுத்துவதாக இருந்தது. அவனைத் தீர்த்துக் கட்ட ஆச்சாரியர் செய்திருக்கும் ஏற்பாடாக இது இருக்குமோ என்ற புது பயம் அவனுக்குள் மெல்ல எழுந்தது. அவன் தன் இடுப்பில் சொருகியிருந்த குறுவாளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். சிறிது நேரம் அங்கே எந்தச் சத்தமும் இல்லை. பின் மெல்ல யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது.
பர்வதராஜன் கண்களைச் சுருக்கிக் கொண்டு
பார்த்தான். நிழலாய் ஒரு உருவம் தெரிந்தது. “வணக்கம், ஹிமவாதகூட
அரசரே” என்று ஒரு குரல் கேட்டது.
பர்வதராஜன் கைகளைக் கூப்பியபடி சொன்னான். “வணக்கம். தங்களைக்
காண முடிந்தால் சரியான ஆளிடம் தான் நான் பேசுகிறேனா என்பதை என்னால் உறுதிப்படுத்திக்
கொள்ள முடியும்.”
எதிரே இருந்த உருவம் ஒரு மர முக்காலியை
இருவருக்கிடையே தள்ளி வைத்து, பர்வதராஜனின் அருகிலிருந்த அகல்விளக்கை எடுத்து அந்த முக்காலியில்
வைத்தது. இப்போது சற்று கூடுதல் வெளிச்சம் விழுந்ததால் எதிரே ராக்ஷசர் தெரிந்தார். அவரைப்
பார்த்ததும், இங்கே அவனை வரவழைத்தது சாணக்கியரின் சதி அல்ல என்று அவன்
சந்தேகம் தெளிந்து நிம்மதி அடைந்தான்.
“தாங்கள்
அடியேனின் அழைப்பிற்குச் செவிமடுத்து வந்ததற்கு மிக்க நன்றி ராக்ஷசரே. இது தங்கள்
பெருந்தன்மையை எனக்கு உணர்த்துகிறது. இதை நான் என்றும்
நினைவில் வைத்திருப்பேன்.”
அரசியலில் இலாபகரமானதை மட்டுமே, அதுவும்
அனுகூல சமயங்களில் மட்டுமே, அனைவரும் நினைவு வைத்துக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்திருந்த
ராக்ஷசர் இது போன்ற வெற்று வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம்
தரவில்லை. அவர் நேரடியாக
விஷயத்துக்கு வந்தார். “ஏன் அழைத்தீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?”
பர்வதராஜன் கைகூப்பியபடி எழுந்து நின்றான். “முதலில்
அமருங்கள் ராக்ஷசரே. பின் பேசுவோம்”
ராக்ஷசர் எதிரே
இருந்த நாற்காலியில் அமர்ந்தார். அவர் அமர்ந்த பின் கைகூப்பியபடியே தானும் அமர்ந்த பர்வதராஜன் சொல்ல ஆரம்பித்தான். “அற்ப சகவாசம்
பிராண சங்கடம் என்பார்கள். அந்தப் பிராண சங்கடத்தைச் சில நாட்களாக நான் உணர ஆரம்பித்திருக்கிறேன்
ராக்ஷசரே. அந்தச்
சங்கடத்தை உணர ஆரம்பித்த பிறகு தான் அந்தச் சகவாசமே அற்பத்தனமானது என்பதும் புரிய ஆரம்பிக்கிறது
என்பது தான் வேதனை. ஆனால் என் முட்டாள்தனத்தைப் பற்றிப் பேச நான் தங்களை அழைக்கவில்லை. தவறை உணர்ந்து
திருத்திக் கொள்ள ஆசைப்படும் நான் அதற்குப் பிராயச்சித்தம் செய்யவும் எண்ணுகிறேன்.”
ராக்ஷசர் சொன்னார். “பிராயச்சித்தம்
செய்ய முடிந்த சுதந்திரமான நிலையில் நீங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை ஹிமவாதகூட
அரசே. எதற்கும் நீங்கள் சந்திரகுப்தனிடமும், சாணக்கியரிடமும்
அனுமதி பெறவேண்டிய நிலையில் அல்லவா இருக்கிறீர்கள்”
பர்வதராஜன் அந்தப் பேச்சில் இருந்த
ஏளனத்தைப் பெரிதுபடுத்தவில்லை. அவன் சொன்னான். “நான் என் மனசாட்சியைத்
தவிர வேறு யாரிடமும், எதற்கும் அனுமதி கேட்பதில்லை ராக்ஷசரே. அது அனுமதித்த
பின் யார் கருத்தையும் நான் லட்சியமும் செய்வதில்லை.”
“நல்லது” என்ற ஒற்றைச்
சொல்லில் சொன்ன ராக்ஷசர் மேற்கொண்டு என்ன என்பது போல அவனைப் பார்த்தார்.
பர்வதராஜன் மிகுந்த வருத்தத்தை முகத்தில்
வரவழைத்துக் கொண்டபடி சொன்னான். “என் மனக்கணக்குகள் தவறாகி விட்டன ராக்ஷசரே. காரணம், ஆசிரியராகப்
பணிபுரிந்த ஒரு மனிதன் தர்மம் தவறி நடக்கவே வழியில்லை என்று நான் நம்பிய முட்டாள்தனம்
தான். பிறகு மெள்ள மெள்ள அந்த மனிதன் சூழ்ச்சியின் ஊற்றுக்கண் என்று
எனக்குப் புரிந்து விட்டது. வெற்றி பெறும் வரை அவர் எனக்குக் காட்டிய முகம் ஒன்று, வெற்றிக்குப்
பின் அவர் காட்டும் முகம் வேறு. வெற்றி பெறும் வரை நியாயஸ்தன் போலவே பேசி வந்த அவர் வெற்றிக்குப்
பின்னாலோ தன்னுடைய இலாபத்தைத் தவிர வேறு எதையும் யோசிக்க மறுப்பவராகவே இருக்கிறார். அதையும்
மனித சுபாவம் என்று எடுத்துக் கொண்டேன். ஆனால் அவர் மகத
இளவரசி துர்தராவை, சந்திரகுப்தனுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்க தனநந்தரை
வற்புறுத்த ஆரம்பித்த பிறகு என்னால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.”
“பொறுத்துக்
கொள்ள முடியாமல் என்ன செய்தீர்கள்?” என்று ராக்ஷசர் கேட்ட
போது பர்வதராஜன் திகைத்தான். இந்த மனிதனை வார்த்தை ஜாலத்தால் மயக்குவது சுலபமல்ல என்பது
புரிந்தது. பின் மெல்ல சுதாரித்துக் கொண்டவனாய் சொன்னான். “எதிர்ப்பு
தெரிவித்தேன். ஆனால் என் எதிர்ப்புக்கு அவரிடம் எந்த மரியாதையும் இருக்கவில்லை. வெற்றி
பெற்றவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அகங்காரத்தோடு நினைக்கிற மனிதனிடம் என்ன
பேச முடியும். சாணக்கியர் நியாயம் பேசும் என்னைத் தவிர்த்து தானே மகத அரசரிடம்
பேரம் பேச ஆரம்பித்தார். அதைப் பேரம் என்று சொல்வதும் தவறு. மிரட்டல்
என்று சொல்வது தான் சரியாக இருக்கும். மிரட்டி தனநந்தனைச்
சம்மதிக்க வைத்து விட்டார். ஆனால் சம்மதித்த
பின்னும், அந்தத் தந்தைக்கு மகளின் திருமணம் வரை இங்கிருக்க அனுமதி
தர மறுத்தது தான் கொடுமையிலும் கொடுமை....”
சிறிது நேரம் பேசக்கூட முடியாதபடி உணர்ச்சிவசப்பட்டவனாக
நடித்த பர்வதராஜன் பின் தன்னைக் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்பவன் போல் காட்டிக்
கொண்டு தொடர்ந்தான். “... இதையெல்லாம் பார்த்த பின் இனியும் இந்த மனிதனிடம்
கூட்டு வைத்துக் கொள்வது தர்மமாகாது என்று முடிவெடுத்தேன். ஆனால் என்னால்
தனியாக எதுவும் செய்ய முடியாது என்பதையும் புரிந்து வைத்திருந்தேன். வெளிப்படையாகத்
தொடர்ந்து எதிர்த்தால் நான் இங்கேயே என் மரணத்தையும் சந்திக்க வேண்டி வரலாம் என்பதே
இப்போதைய யதார்த்தம். அதனால் தான் சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்ல, அவருக்கிணையான
அறிவாளியான உங்கள் உதவியை நாட உத்தேசித்தேன்...”
ராக்ஷசர் சொன்னார். “நானே மறைந்து
வாழும் நிலைமையில் இருக்கிறேன். என்னால் என்ன செய்ய முடியும்?”
”நீங்கள்
தனி மனிதர் அல்ல ராக்ஷசரே. இப்போதும் தங்களுக்கு விசுவாசிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்கள்
மனம் வைத்தால் ரகசியமாய் எத்தனையோ செய்ய முடியும்.”
“நான் என்ன
செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?”
“ஆச்சாரியரின்
பலவீனத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”
“ஆச்சாரியரின்
பலவீனம் என்ன?”
“ஆச்சாரியரின்
பலமே தான் அவருடைய பலவீனமும் கூட. இரண்டுமே சந்திரகுப்தன் தான். ஒன்றுமில்லாத
அவனை எல்லாமாகவும் ஆக்கிய பிறகு அவருடைய பேராயுதம் அவன் தான். அவன் இல்லாமல்
அவரால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் அவனைக் களத்திலிருந்து நீக்கி விட்டால் அவரும் வேறுவழியில்லாமல்
தானாகக் களத்திலிருந்து நீங்கி விடுவார். ஏனென்றால் வேறு யார் மூலமாகவும் களத்தில்
நீடிக்க அவர் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளவில்லை. அது எனக்கு நன்றாகவே தெரியும்.”
ராக்ஷசர் முன்பே
யோசித்து வைத்திருந்த திட்டமும் அதுவாகவே இருந்தது. சந்திரகுப்தன், துர்தரா
இருவருக்குமிடையே நடக்கும் திருமணத்தைத் தடுத்து நிறுத்தும் ஒரே
வழியாக அவர் அதையே நினைத்திருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டார். “அந்த வேலையை
ஏன் நீங்கள் செய்யக் கூடாது. நீங்கள் சாணக்கியரின் கூட்டாளியாகவும், சுதந்திரமாகவும்
இருக்கிறீர்கள். நானோ அவரது எதிரியாகவும், உயிருக்குப்
பயந்து மறைந்து வாழ்பவனாகவும் இருக்கிறேன்.”
பர்வதராஜன் சொன்னான். “நான் எப்போதும்
அவரது முழுக் கண்காணிப்பில் இருக்கிறேன். நான் என்ன செய்தாலும்
அவர் உடனுக்குடன் அறிந்து விடுவார். இந்தச் சந்திப்புக்கே
நான் இந்த அதிகாலை வேளையில் எப்படி சிரமப்பட்டு வந்திருக்கிறேன் என்பது உங்களுக்கும்
தெரியும். ஆனால் நீங்கள் இன்னும் பிடிபடாமல் இருக்கிறீர்கள். இப்போதும்
உங்கள் விசுவாசிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்கள்
மனம் வைத்தால் அவர்களைக் கொண்டு சந்திரகுப்தனைக் கொல்வது முடியாத காரியம் அல்ல.”
(தொடரும்)
என்.கணேசன்
ராக்ஷசர் நாட்டுக்கு இறுதி முயற்சி செய்வதாக நினைத்து... சாணக்கியருக்கு இறுதி உதவி செய்து கொண்டிருக்கிறார்..
ReplyDeleteParvatha rajan is entering a dangerous territory for which he's going to be suitably rewarded by acharya chanakya.
ReplyDeleteThanks
Desikan