Thursday, January 31, 2019

இருவேறு உலகம் – 121

ரிணி காப்பாற்றப்பட்ட பின் க்ரிஷுக்கு மனதை முழுமையாக இனி செய்ய வேண்டிய காரியங்களில் ஈடுபடுத்துவது சுலபமாக இருந்தது. ஹரிணியும் கிரிஜாவும் க்ரிஷ் வீட்டுக்கு வந்து தங்கியது அவனுக்கு நிம்மதியாக இருந்தது. இனி இவர்கள் பாதுகாப்பை உதய் பார்த்துக் கொள்வான்….

ஹரிணியிடம் க்ரிஷ் தனக்கு இப்போது தனிமை நிறையவே தேவைப்படுகிறது என்று ஆரம்பத்திலேயே சொல்லி விட்டான். அவனுக்கு நிறைய படிக்கவும், சிந்திக்கவும், தியானிக்கவும், வேறுசில பயிற்சிகளில் ஈடுபடவும் வேண்டியிருப்பதைச் சொன்னான். சராசரிப் பெண்ணாக முகம் கோணாமல், மனம் சிணுங்காமல் அவனிடம் சொன்னாள். “நானும் எதாவது உதவி செய்யணும்னா சொல்டா”

க்ரிஷ் அவளைப் பெருமிதத்துடன் பார்த்துப் புன்னகைத்தபடி சொன்னான். “எனக்காக பிரார்த்தனை செய் ஹரிணி. இப்போதைக்கு எனக்கு அது தான் தேவை…”

“அதெல்லாம் உங்க அம்மா டிபார்ட்மெண்ட். எனக்கேத்த மாதிரி எதாவது சொல்லுடா…”

தேவைப்படும் போது சொல்வதாகச் சொன்ன அவன் அவ்வப்போது சில பெயர்களையும், சில வித்தியாசமான வார்த்தைகளையும் சொல்லி இணையத்தில் தேடி அதுபற்றிய முக்கிய குறிப்புகளை எடுத்துத் தரச் சொன்னான். சில சமயங்களில் அவள் சேகரித்த தகவல்கள் போதுமானதாக இருந்தன. சில சமயங்களில் கூடுதலாகத் தெரிய வேண்டிய அம்சங்களைச் சொன்னான். அவள் அதையும் சேகரித்துக் கொடுத்த பின் அவளை மறந்து விடுவான். அவள் அவனைத் தொந்திரவு செய்யாமல் தூரத்தில் அமர்ந்தபடி அவன் ஆழமாகச் சிந்திப்பதையும், தியானத்தில் ஈடுபடுவதையும், ஏதாவது தீவிரமாகப் படிப்பதையும் அவள் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருப்பாள். அல்லது ஏதாவது புத்தகத்தை அவளும் படித்துக் கொண்டிருப்பாள். மற்ற நேரங்களில் சமையலறையில் பத்மாவதி கிரிஜாவுக்கு உதவி செய்து கொண்டும், அவர்கள் பேச்சில் கலந்து கொண்டும் இருப்பாள்.

உதய் ஒரு முறை அவளிடம் தனியாகக் கேட்டான். “அவன் உன்னைக் கண்டுக்காம என்னென்னவோ செய்யறானேன்னு உனக்கு வருத்தமா இல்லையா ஹரிணி”

ஹரிணி சிரித்துக் கொண்டே சொன்னாள். “காதல்ங்கிறது தொந்திரவு செய்யறதுன்னு ஆயிடக்கூடாது. அவசியமான சமயங்கள்ல விலகியும் இருக்கத் தெரியணும்….”

உதய்க்கு அவளை மிகவும் பிடித்திருந்தது. தம்பி அதிர்ஷ்டக்காரன் என்று நினைத்தான். ஹரிணிக்கும் அவனை மிகவும் பிடித்திருந்தது. அவனை அவள் மூத்த சகோதரனைப் போலவே நேசிக்க ஆரம்பித்தாள். அவனும், பத்மாவதியும் பேசிக் கொள்வதை அவள் மிகவும் ரசித்தாள். உதய் நேரம் கிடைக்கையில் எல்லாம் தாயை ஏதாவது சொல்லிச் சீண்டாமல் இருக்க மாட்டான். பத்மாவதியும் சளைக்காமல் பதில் சொல்லி மகனை சமாளிப்பாள்.

தனியாக ஒருமுறை பத்மாவதியிடம் ஹரிணி கேட்டாள். “க்ரிஷும் உங்க கிட்ட இப்படிப் பேசுவானா?”

“அது எப்பவுமே தானுண்டு தன்னோட வேலையுண்டுன்னு இருக்கும். இவன் தான் வம்பிழுத்துகிட்டே இருப்பான். இவன் பார்லிமெண்ட் கூட்டம் நடக்கறப்ப போயிட்டாலோ, இல்லை கட்சிக்கூட்டம்னு வெளியூர் போயிட்டாலோ எனக்கு நேரமே போகாது. என் வீட்டுக்காரர் கல்யாணமான புதுசுலயாவது ஏதாவது சண்டைக்குக் கிடைப்பார். இப்பல்லாம் என்ன சொன்னாலும் பெருசா அவர் கண்டுக்கறதில்லை. சில சமயம் ஆளு செவிடான்னு கூட எனக்குச் சந்தேகம் வந்துடும்…..   இப்ப கூட பாரேன். ஒரு மாசமா உதய்க்கு ஒரு நல்ல பெண்ணா பார்க்கணும்னு நான் சொல்லிட்டே இருக்கேன்…. ஊம்…. பார்ப்போம்ன்கிறாரே ஒழிய தீவிரமா பார்க்க மாட்டேங்கிறார்….”

கிரிஜா பத்மாவதியிடம் கேட்டாள். “எந்த மாதிரி பொண்ணை உதய்க்குப் பார்க்கறீங்க?”

“அவனுக்குப் புடிச்ச மாதிரி அழகான நல்ல பொண்ணா கிடைக்கணும். கொஞ்சம் நல்லா சமைக்கவும் தெரிஞ்சுதுன்னா பரவாயில்லைன்னு பார்க்கறேன். சின்னவன் பசிக்கு சாப்டறவன். சமைக்கறது முன்ன பின்ன இருந்தாலும் கண்டுக்க மாட்டான். பெரியவன் ருசிச்சு சாப்டறவன். நல்லாவும் சாப்பிடுவான்… எல்லாக் கடவுளையும் வேண்டியிருக்கேன். நல்ல பொண்ணு அவனுக்கும் அமையும்னு நம்பிக்கை இருக்கு. ஆனா நாம முயற்சி செய்யணுமே.”

ஏதோ வேலையாக ஹாலுக்கு வந்த க்ரிஷுக்கு அம்மாவின் பேச்சு காதில் விழுந்தது. மெலிதாய் புன்னகைத்தான். அம்மாவின் உலகம் மிகச் சிறியது. அவளுக்கு அவள் கணவன் மற்றும் குழந்தைகள் நன்றாக இருந்தால் போதும். வேறு எந்தப் பெரிய எதிர்பார்ப்பும் அவளுக்குக் கிடையாது. அதை ஆண்டவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை அவளுக்கு உண்டு. (”சோதிப்பார், ஆனா கைவிட மாட்டார். சோதிக்கவே செய்யாட்டி நாம கடவுள் இருக்கறதையே மறந்துடுவோமே. நம்மள புடிக்கவே முடியாதே”). மற்றபடி அவளுக்கு வேறெந்தக் கவலையோ, கஷ்டமானதை யோசித்து புரிந்து கொள்ளும் சிரமமோ கிடையாது. உலகத்தில் பெரும்பாலான மனிதர்களின் தனி உலகங்கள் இப்படிச் சிறியதாகவே இருக்கிறது…..  அவர்கள் பிரச்னைகளைச் சமாளிக்க ஆண்டவன் இருக்கவே இருக்கிறார். அவரை நம்பி, முடிந்த வரை முயற்சி செய்தால் மட்டும் போதும். மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்….. இந்த எளிமையும் நம்பிக்கையும் சாதாரணமானதல்ல என்று தோன்றியது. எல்லா பாரத்தையும் நீயே சுமக்க வேண்டியதில்லை. படைத்தவன் பார்த்துக் கொள்வான். நீ முழு மனதோடு முயற்சி செய். அது போதும்…… அந்தக் கணம் அம்மாவே குருவாகத் தோன்றினாள்…. இதே எளிமையுடனும், அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் எதிரியைச் சமாளிக்க க்ரிஷ் தீர்மானித்தான்.

அவன் தனதறைக்கு மீண்டும் நுழையப் போகும் போது உதய் வந்தான். பெரும் சக்தி வாய்ந்த அந்த  எதிரியை இவன் எப்படி சமாளிக்கப் போகிறான் என்று கவலையுடன் தம்பியைப் பார்த்தான். இந்த நேரமாகப் பார்த்து மாஸ்டரும் இங்கில்லாமல் ரிஷிகேசத்தில் இருக்கிறார். தம்பியிடம் கேட்டான். “நான் ஏதாவது செய்யணுமாடா?”

“நீ இவங்களை எல்லாம் பாதுகாப்பா  பார்த்துக்கோ. அது போதும்….” என்று சொல்லி விட்டு க்ரிஷ் அறைக்குள் போனான். எதிரியின் வலிமைக்கு முன் ராஜதுரையே சமாளிக்க முடியாத போது எதிரி நினைத்தால் இவர்களை எவ்வளவு பாதுகாப்பாக இருத்தினாலும் இவர்கள் ஆபத்திலிருந்து தப்ப முடியாது. ஆனால் எதிரி எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாது. அவன் ஆளனுப்பி இவர்களைத் தாக்காமல் இருக்கத் தான் இத்தனை பாதுகாப்பு முயற்சிகளும்….. எதிரிக்கு இங்கு வர முடியாத அளவு நிறைய வேலைகள் இருக்க வேண்டும் என்று க்ரிஷ் இறைவனைப் பிரார்த்தித்தான்.


மாஸ்டர் பூரண அமைதியை உணர்ந்து கொண்டிருந்தார். நடந்தவை நல்லவையோ கெட்டவையோ மாற்ற முடிந்ததல்ல. ஆனால் நடந்த கோணலை நிமிர்த்த என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியை மனம் பெற ஆரம்பித்து ஆக வேண்டியதில் படியவும் ஆரம்பித்திருந்தது….  இந்த மாற்றத்திற்கு மிக முக்கிய காரணம் குருவின் அருளே என்று நினைத்தார். குரு தன்னுடனேயே இருப்பது போல் தோன்றியது….. அதனால் பெற்ற பேரமைதியில் மனம் திளைத்துக் கொண்டிருந்த போது அவருடைய சக்திகள் எல்லாம் சூட்சும நிலையை எட்ட ஆரம்பித்தன. காலம் நின்று போனது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற பேதங்கள் இல்லாத அனாதியான ஒரு நிலையில் மனம் தங்கிப் போனது.

அந்த சமயத்தில் திடீரென்று காளி கோயிலில் வளர்பிறை சப்தமியில் கிடைத்த வரைபடம் அவர் மனக்கண் முன் மிதக்க ஆரம்பித்தது. சூட்சும உணர்வை எட்டியிருந்த மாஸ்டரின் அந்த்ராத்மா உடனே அதைக் கவனிக்கச் சொன்னது. மாஸ்டர் கூடுதல் முயற்சி இல்லாமலேயே மனதைக் குவித்தார். வரைபடம் நிஜ இடமாக அவர் மனக்கண் முன்னால் தெரிய ஆரம்பித்தது. அந்தக் கரிய பறவையை மட்டும் காணோம். அதே போல திரிசூலம் பனியின் அடியே மின்னியது. பொதுவாக அப்படிப் பனியின் அடியில் முழுவதுமாக மறைந்திருக்கையில் மின்னித் தெரியும் வாய்ப்பில்லை. ஆனாலும் மாஸ்டர் கண்ணுக்கு அந்தத் திரிசூலத்தின் மினுமினுப்பு தெரிந்தது. மாஸ்டர் கூர்ந்து பார்த்தார். அது ஒரு சிறிய கோயில். பனியில் மறைந்திருந்தாலும் கோயிலும் ஜொலித்தது. மாஸ்டர் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த முழுக்காட்சியும் தொலைவுக்குச் செல்ல ஆரம்பித்தது. இப்போது கோயிலும் திரிசூலமும் சிறிதாகத் தெரிந்தது. அந்த முழு மலை அவர் கண் முன் வந்து நின்றது. அந்த மலையில் யாரோ சிலர் கையில் உபகரணங்களுடன் ஏறிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் கடைசியாக ஒருவன் விரைவாக ஏறிக் கொண்டிருந்தான். தெரிந்தவன் போலத் தோன்றினான். மாஸ்டர் பார்வையைக் கூர்மையாக்கினார். அவர் பார்வையை உணர்ந்தது போல் அவனும் திரும்பினான். விஸ்வம்!. இருவர் பார்வையும் சந்தித்தன. அவன் திகைத்தது போலவே அவரும் திகைத்தார். இருவரில் முதலில் சுதாரித்தது விஸ்வம் தான். சகல சக்திகளையும் திரட்டி அவருக்கும் தனக்கும் இடையே ஒரு திரையை உருவாகி அவர் பார்வையிலிருந்து மறைந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்   

                                                 

Monday, January 28, 2019

சத்ரபதி 57


சிவாஜியைச் சிறைபிடித்து வருவேன் அல்லது கொன்று கொண்டு வருவேன் என்று பாஜி ஷாம்ராஜ் பீஜாப்பூரில் இருந்து ஆயிரம் குதிரை வீரர்களுடன் கிளம்பி ஜாவ்லி பிரதேசத்தின் உள்ளே நுழைந்தது உடனடியாக சிவாஜிக்குத் தெரிய வந்தது. சிவாஜி மிகத் திறமையான ஒற்றர் படையை வைத்திருந்தான். அது மட்டுமல்ல அக்கம்பக்கத்து சாதாரண குடிமகன்கள், வணிகர்கள் கூட அவன் மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். ஆயிரம் குதிரை வீரர்கள் ஒரு பிரதேசத்தில் நுழைவது ரகசியமாய் வைத்துக் கொள்ள முடிந்த செய்தியும் அல்ல… அதனால் ஒற்றர் மூலமாகவும், வணிகர் ஒருவர் மூலமாகவும் உடனடியாக சிவாஜி தகவல் அறிந்தான்.

தகவல் தெரிந்தவுடன் சிவாஜிக்கு, அனுப்பிய பீஜாப்பூர் சுல்தான் மீதோ, அவனைக் கொல்லக் கிளம்பிய பாஜி ஷாம்ராஜ் மேலோ கோபம் வரவில்லை. அவர்களை உள்ளே அனுமதித்த ஜாவ்லி அரசன் சந்திராராவ் மோர் மீது தான் கோபம் வந்தது. அதற்குக் காரணம் இருந்தது.

ஜாவ்லி பிரதேசத்து அரசர்கள் சந்திராராவ் என்றே அழைக்கப்பட்டார்கள். மோர் இனத்து மராட்டி வீரர்களான அவர்களுடைய மூதாதையர்களில் ஒருவர் பீஜாப்பூர் ஆதில்ஷாஹி சுல்தான்களில் முன்னோடி ஒருவருக்குப் படைத்தலைவராக இருந்தவர். அகமதுநகர் சுல்தானுடன் அப்போதைய பீஜாப்பூர் சுல்தான் நடத்திய ஒரு போரில் அந்த மோர் இனத்து மூதாதையர் காட்டிய வீரத்தால் அந்தப் போரில் அப்போதைய அந்த பீஜாப்பூர் சுல்தான் வெற்றி பெற்றிருந்தார். அதில் மனம் மகிழ்ந்த அந்த சுல்தான் அவருக்கே ஜாவ்லி பிரதேசத்தைக் கொடுத்து விட்டார். அன்றிலிருந்து அந்தப் பிரதேசத்தின் அரசர்களாக மோர் இன வழித்தோன்றல்கள் சந்திராராவ் மோர் என்ற பெயரில் அரசாள ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் பீஜாப்பூர் சுல்தானுக்கு வருடம் ஒரு தொகை அந்த நன்றியின் காரணமாகத் தர ஆரம்பித்தது இப்போதும் தொடர்ந்து வருகிறது. அவர்கள் பீஜாப்பூர் சுல்தானுக்கு விசுவாசமாகவும் இருந்து வந்தார்கள்.

ஜாவ்லி பிரதேசம் மிக முக்கியமான இடமாக இருந்தது. சகாயாத்ரி மலைத்தொடரின் மராட்டியப் பகுதியில் ஜாவ்லி பிரதேசத்தைத் தவிர மற்ற பகுதிகள் எல்லாம் சிவாஜிக்குச் சொந்தமாக இருந்தன. அந்தப் பிரதேசத்தையும் அவன் கைப்பற்றினால் சிவாஜிக்கு மராட்டியப் பகுதியின் சகாயாத்ரி மலையை ஒட்டிய பகுதிகள் அனைத்தும் வசப்பட்டது போல ஆகும். அதனால் சிவாஜியின் நண்பர்களும் ஆலோசகர்களும் சிவாஜியிடம் ஜாவ்லி பிரதேசத்தையும் கைப்பற்ற அறிவுரை கூறினார்கள்.

ஆனால் சிவாஜி அதுநாள் வரை மறுத்து வந்தான். “இது வரை நாம் கைப்பற்றிய பகுதிகள் வேறு வகை. அவையெல்லாம் இந்த மண்ணின் மக்கள் ஆண்டவை அல்ல. ஆனால் ஜாவ்லியை ஆள்வது நம்மவர்கள். நம் இனத்து மக்கள் ஆளும் பகுதியை நாம் தந்திரமாகக் கைப்பற்றுவது சரியல்ல. போரிட்டு வெல்வதற்கு அவர்கள் நம் எதிரிகள் அல்ல. அதனால் முடிந்த வரை அவர்களை நம் பக்கம் சேர்க்கப் பாடுபடுவோம்….”

இப்படி நம்மவர்கள் என்று எண்ணி ஒதுங்கி நின்றவனை வீழ்த்த ஒரு படை வருகிறது. வீழ்த்தப்பட இருப்பவன் நம்மவன் என்ற சகோதரத்துவம் சிறிதும் இல்லாமல் அவர்களை சந்திராராவ் மோர் உ:ள்ளே விட்டது தான் சிவாஜியைக் கோபமூட்டியது. 

பாஜி ஷாம்ராஜ் சிவாஜியின் எல்லைப்பகுதி தாண்டி ஜாவ்லி பிரதேசத்தில் சில மைல்கள் தொலைவில் இருக்கும் பார்காட் மலைப்பகுதியில் ரகசிய முகாமிட்டுத் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைக்க சிவாஜி அவர்கள் வரக் காத்திராமல் அதிரடியாக அவர்கள் சிறிதும் எதிர்பார்க்காத சமயத்தில் அங்கு சென்று தாக்குதல் நடத்தினான். பாஜி ஷாம்ராஜ் சில மணி நேரங்கள் கூடச் சமாளிக்க முடியாமல் தன் உயிருக்குப் பயந்து தப்பியோடினான்.

அவர்களைத் துரத்தியடித்து விட்டுத் திரும்பிய சிவாஜியிடம் அவன் நண்பர்கள் ஜாவ்லியை இந்தச் சம்பவத்திற்குப் பிறகாவது கைப்பற்றுவது முக்கியம் என்பதைச் சொன்னார்கள். அப்போதும் சிவாஜிக்கு மனம் வரவில்லை. அன்னியர்களிடம் நடந்து கொள்வதைப் போல சகோதரர்களிடமும் நடந்து கொள்வது சரியல்ல என்று சொன்னான்.

“சகோதரன் எதிரிக்கு இடம் கொடுத்தால்?’ என்று ஒரு நண்பன் கேட்டான்.

“முதலில் கூப்பிட்டு அறிவுரை சொல்ல வேண்டும். புத்திமதி சொல்ல வேண்டும். அப்படியும் அவன் திருந்தா விட்டால் பார்க்கலாம்” என்றான் சிவாஜி.

ஆலோசகர்களும் நண்பர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சிவாஜியின் பேரறிவையும் மீறி அவனுக்கு அந்த மண் மீதும், மண்ணின் மைந்தர்கள் மீதும் அபிமானம் இருப்பதை உணர்ந்த அவர்களுக்கு அதற்கு மேல் சிவாஜியிடம் பேசுவது வீண் என்று தோன்றியது. சந்திராராவ் மோர் அறிவுரைக்குத் திருந்துவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கில்லை. ஆனால் சிவாஜி தானாக உணர்ந்தால் ஒழிய மனம் மாற மாட்டான்.

ஒரு ஆலோசகர் சொன்னார். “உங்கள் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பவில்லை. முயன்று பாருங்கள்….”

சிவாஜி மறுநாளே சந்திராராவ் மோரைச் சந்திக்கக் கிளம்பினான்.


ந்திராராவ் மோர் பரம்பரையே வீரப்பரம்பரையாக இருந்தது. இப்போதுள்ள அரசனின் தம்பிகளும், மகன்களும் தேர்ச்சி பெற்ற வீரர்கள். இப்போதைய சந்திராராவ் மோரும் வீரனே என்றாலும் கடந்த சில ஆண்டுகளாகக் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இருந்தான். வீரத்திற்கு இணையான அறிவு அவனிடம் இருக்கவில்லை. அது அவன் குடும்பத்தில் மற்றவர்களிடமும் இருக்கவில்லை. தங்களை மிக உயர்வாகவும், சிவாஜியைத் தாழ்வாகவும் அவர்கள் எண்ணியிருந்தார்கள்.

பீஜாப்பூர் சுல்தானையே எதிர்க்கத் துணிந்த சிவாஜி, அக்கம்பக்கத்துக் கோட்டைகளையெல்லாம் தன்வசப்படுத்திக் கொண்ட சிவாஜி, ஜாவ்லி பிரதேசத்தைக் கைப்பற்ற முயற்சி செய்யாதது அவர்கள் மேல் இருக்கும் பயத்தால் என்ற அபிப்பிராயம் அவர்களுக்கு இருந்தது. அதனால் தன்னிடம் பேச வந்த சிவாஜியிடம் சந்திராராவ் மோர் சமமில்லாதவர்களிடம் காட்டும் அலட்சியத்தையே காட்டினான்.

சிவாஜி அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்களிடம் வரலாற்றைச் சொன்னான். அன்னியர்களிடம் இந்த தேசம் சிக்கியது எப்படி, அவர்கள் இந்தத் தேசத்தினரை எப்படி நடத்துகிறார்கள் என்பதை எல்லாம் விளக்கமாகச் சொன்னான். சுயராஜ்ஜியம் குறித்த தன் கனவைச் சொன்னான். நாம் ஒன்று சேர்ந்து அன்னியர்களை எதிர்க்க வேண்டுமே ஒழிய ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதும், அழிக்க நினைப்பதும் சரியல்ல என்று சொன்னான்.

சந்திராராவ் மோருக்கு அவன் பேசியது பாதி புரியவில்லை. மீதி சரியென்று தோன்றவில்லை. அவன் அலட்சியமாகச் சொன்னான். “சிவாஜி! நாங்கள் வீரப் பரம்பரை மன்னர்கள். எங்களிடமே வந்து நீ அறிவுரை சொல்வது எனக்கு வியப்பூட்டுகிறது. யார் நீ? உன் தாய்வழி பாட்டனார் சிந்துகேத் அரசராக இருந்தவராக இருக்கலாம். ஆனால் உன் தந்தை வழிப் பாட்டனார் பிழைப்புக்காக அகமதுநகர் வந்தவர். அகமதுநகர் சுல்தானின் தயவால் படைத்தலைவர் பதவியைப் பெற்றவர். உன் தந்தையும் மன்னரல்ல. அவர் பல முயற்சிகள் செய்து தோற்று இப்போது பீஜாப்பூர் சுல்தானின் தயவால் ஒரு நிலையில் இருக்கிறார். அதுவும் அரச பதவியில் அல்ல. நீ அக்கம் பக்கத்துக் கோட்டைகளை ஏமாற்றிக் கைப்பற்றியவுடனேயே உன்னை அரசனைப் போல நினைத்துக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது……”

தன்னுள் எழ ஆரம்பித்த கடுங்கோபத்தை சிவாஜி கட்டுப்படுத்திக் கொண்டு தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சந்திராராவ் மோர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தான். சந்திராராவ் மோரின் தம்பி ஒருவனும் மகன் ஒருவனும் அங்கிருந்தார்கள். அவர்கள் சந்திராராவ் மோரின் பேச்சைத் தடுக்கவில்லை. மாறாக சிவாஜியிடம் சந்திராராவ் மோர் மிகச்சரியாகவும், அவன் நிலையை உணர்த்துகிறமாதிரி சிறப்பாகவும் பேசுகிறது போல் நினைத்து மந்தகாசப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சிவாஜி சந்திராராவ் மோரிடம் அமைதியாகக் கேட்டான். “என்னை அழிக்க வந்த பீஜாப்பூர் சிறுபடைக்கு அனுமதி கொடுத்து உள்ளே விட்டாயே. அது சரியா? நானும் நீயும் இந்த மண்ணின் மைந்தர்கள். ஒரு சகோதரனைக் கொல்ல கூட்டு நின்றது சரிதானா?”

சந்திராராவ் மோர் அலட்சியமாகச் சொன்னான். “உண்மையில் நீ என் நிலப்பகுதிக்கு வந்து அவர்களைத் தாக்கியது தான் தவறு. அதற்கு மன்னிப்புக் கேட்பதை விட்டு என்னைத் தவறு செய்தவன் போல் கேள்வி கேட்பது அதை விடப் பெரிய தவறு. ஒரு மன்னனுக்கு இன்னொரு மன்னன் உதவுவது சரி தான். நீ பீஜாப்பூரின் ஆயிரம் குதிரை வீரர்களைத் துரத்தியடித்து விட்டதில் உன் வீரத்தைக் காட்டி விட்டதாய் நினைக்கிறாய். இதுவே என் படையாக இருந்திருந்தாலும், பீஜாப்பூரின் பெரும்படையாக இருந்திருந்தாலும் நீ தான் சகாயாத்ரி மலையில் பதுங்கியிருந்திருக்க வேண்டி வந்திருக்கும்…”

சிவாஜி புன்னகைத்தான். அவனைப் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் அவன் புன்னகைத்த விதத்தில் அபாயத்தை உணர்ந்திருப்பார்கள். ஆனால் சந்திராராவ் மோர் தான் இத்தனை பேசியும் சிவாஜி எதிர்க்க வழியில்லாமல் அதைப் பொறுத்துக் கொண்டிருப்பதாக எண்ணினான்.

திடீரென்று அவனுக்கு சிவாஜியை அங்கேயே பிடித்து வைத்து பீஜாப்பூர் சுல்தானிடம் ஒப்படைத்தால் என்ன என்று தோன்றியது. அப்படித்தானே இவனது தந்தையை பாஜி கோர்படே ஒப்படைத்தான்…. இந்த எண்ணம் வந்தவுடன் சந்திராராவ் மோர் அதை எப்படி நிறைவேற்றுவது என்று அவசரமாக யோசித்தான்.


(தொடரும்)
என்.கணேசன்

Saturday, January 26, 2019

சத்ரபதி நாவல் விமர்சனம்


சத்ரபதி நாவல் படித்து முடித்து எனக்கு வந்த முதல் விரிவான விமர்சனம் இது. நிறை, குறைகள், ரசித்தது, ரசிக்காதது இரண்டையுமே சேர்த்து ஒரு முழுமையான விமர்சனம் எழுதிய திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி.
                                         - என்.கணேசன்

சத்ரபதி நாவல் விமர்சனம்

ஐயா தங்களுடைய தீவிர ரசிகன் நான். அமானுஷ்யனில் ஆரம்பித்து இருவேறு உலகம் வரை ஒவ்வொரு நாவலையும் ரசித்துப் படித்தவன். ஆனால் தங்களுக்கு நான் கருத்து தெரிவித்ததில்லை. சத்ரபதியைப் படித்து முடித்த பின் உடனே நான் உணர்ந்ததைச் சொல்லும் ஆவல் ஏற்பட்டது. ஏனென்றால் சிவாஜியை அவன் பிறப்பிலிருந்து நேரில் பார்த்து அவன் வாழ்க்கையோடு பயணம் செய்த நிறைவு எனக்கு ஏற்பட்டது. நாவல் அருமையிலும் அருமை.

உங்கள் மற்ற நாவல்கள் போல் மளமளவென்று படித்து நகர முடியவில்லை. நிறைய வரலாற்றுத் தகவல்கள் இடையிடையே நிறைய கொடுத்திருப்பதால் நிதானமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. புரிந்து கொண்டபின் அந்தக் காலத்தில் பயணம் செய்வது போலவே உணர முடிந்தது.

உயிருக்குப் பயந்து சிவாஜியின் பெற்றோர் ஓடி வரும் கட்டத்தில் ஆரம்பிக்கும் நாவல் சிவாஜியின் முடிசூட்டு விழாவில் முடியும் வரை ஒவ்வொரு காட்சியும் கண் முன்னே நிற்கிறது. ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணியிலும் அதற்கான காரணங்களை சம்பந்தப்பட்டவர்கள் எண்ணங்கள் மூலமாக வெளிப்படுத்தி இருப்பதால் அந்தக் கதாபாத்திரங்களையும் சரித்திரத்தையும் இயல்பாய் புரிந்து கொள்ள முடிந்தது.

ஷாஹாஜி, ஜீஜாபாய், தாதாஜி கொண்டதேவ், சிவாஜியின் நண்பர்கள், ஆதில்ஷா சுல்தான்கள், அப்சல்கான், செயிஷ்டகான், ஔரங்கசீப், ஜஹானாரா, ஜெப் உன்னிசா கேரக்டர்கள் மனதில் தங்கி விட்டார்கள். சிவாஜிக்கு ரொட்டி கொடுத்த பாட்டி போன்ற சின்னச் சின்ன கேரக்டர்களும் சூப்பர்.

சின்ன எடிட்டிங் தவறுகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தன என்றாலும் ஒட்டு மொத்தத்தில் ஒரு மகாபுருஷனை பிரம்மாண்டமாய் செதுக்கி வைத்திருக்கிறீர்கள். அவனோடு வாழ்வது போலவே உணர வைத்ததற்கு நன்றி.

நாவலில் நான் மிகவும் ரசித்த இடங்கள்:

ஜீஜாபாய் அயூப்கான் என்ற ஏமாற்றுக் கோட்டைத் தலைவனைப் பழி வாங்கும் இடம்.

ஜாவ்லி அரசனை சிவாஜியின் ஆட்கள் நன்றாய் கலாய்த்து விட்டுக் கொல்லும் இடம்

செயிஷ்டகான் மீதான தாக்குதலில் நகைச்சுவையும் அதற்குப் பின் சிவாஜியின் குழு தப்பித்த விதமும்.

சிவாஜி ஆக்ரா சென்று சேர்ந்ததிலிருந்து அங்கிருந்து தப்பித்து வருவது வரை நிகழ்ச்சிகள் நல்ல விறுவிறுப்பு. திட்டமிட்ட விதமும், அதன் பின் ஔரங்கசீப் போலத்கானை விசாரித்து உண்மையாக நடந்ததைத் தெரிந்து கொள்ளும் நிகழ்ச்சியும் அருமை..

சாலேர் கோட்டையைத் தக்க வைக்க சிவாஜி செய்த யுத்த யுக்திகளால் மும்முனையில் வெற்றி பெற்ற சம்பவம்.

ஔரங்கசீப்பின் பழைய காதலை அறிந்து அவன் மகள் ஜெப் உன்னிசா தந்தையைச் சந்தித்துப் பேசும் இடம். முடிவில் ஔரங்கசீப் மீது அவளைப் போலவே நமக்கும் பச்சாதாபம் ஏற்படுகிறது. (உங்கள் நாவல்களில் என்னால் வில்லன்களைக் கூட வெறுக்க முடிந்ததில்லை. அப்படி அவர்களைச் சித்தரிப்பீர்கள். இந்த நாவலிலும் ஔரங்கசீப் கேரக்டரின் அந்த குறிப்பிட்ட இடம் சூப்பர்)

ஆக்ராவிலிருந்து தப்பித்து வரும் சிவாஜி ஒரு மூதாட்டி வீட்டில் தங்கும் நிகழ்வு. அந்த மூதாட்டியின் மனமும், சிவாஜியின் பதில் பரிசும் நெகிழ வைத்த இடங்கள்.

நாவலில் என்னால் ரசிக்க முடியாத விஷயங்கள்:

மராட்டியப் பெயர்கள் ஒரே போல் இருப்பது போலவே தெரிகின்றன. சில இடங்களில் குழப்பமாக இருக்கிறது.

-     சங்கர சுப்பிரமணியன்


Thursday, January 24, 2019

இருவேறு உலகம் – 120



வீன்சந்திர ஷா அந்த பழங்காலச் சுவடி வாஷிங்டன் நகரில் உள்ள ஒரு ரகசிய இல்லுமினாட்டி காப்பறையில் வைக்கப்பட்டிருக்கிறது என்றான். வாஷிங்டன் நகரமே இல்லுமினாட்டியின் அதிகார மையம் என்றும் அந்த நகரத்தில் தான் இல்லுமினாட்டியின் பல பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவன் சொன்னான். அந்தப் பழங்காலச் சுவடியைத் திறந்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் அந்தப் பதிலில் விஸ்வத்திடமிருந்து நழுவியது.

ஒரு நெருங்கிய நண்பனிடம் உரிமையுடன் கேட்பது போல விஸ்வம் கேட்டான். “அதில் என்ன தான் எழுதியிருக்கிறது என்பது யாருக்காவது தெரியுமா?”

“தலைவர் எர்னெஸ்டோ, உபதலைவர், மற்றும் முக்கிய மூத்த செயற்குழு உறுப்பினர் மூவர் மட்டும் தான் எல்லா ரகசிய சாசனங்களையும் பார்வையிடும் அதிகாரம் படைத்தவர்கள். அவர்கள் ஐந்து பேர் தான் அதைப் படித்துப் பார்த்திருப்பார்கள்….” என்று சொன்ன நவீன்சந்திர ஷா அவர்களது பெயர்களையும் சொன்னான்.

“சும்மா தான் ஒரு ஆர்வத்தில் கேட்டேன். அது தெரிந்து என்ன ஆகப் போகிறது….” என்று சொல்லி விஸ்வம் அந்தப் பேச்சை அத்துடன் விட்டான்.

நவீன்சந்திர ஷா போன பிறகு விஸ்வம் ஹரிணி விவகாரத்தை யோசிக்க ஆரம்பித்தான். நிலைமை இப்படி வந்து முடியும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. திட்டத்தை வகுத்து மனோகர் தெரிவித்த போது அதில் சிறு தவறையும் அவனால் கண்டுபிடித்திருக்க முடியவில்லை. குறைவான மனிதர்கள், கச்சிதமான இடம், தொடர்ந்து கண்காணிக்க யாராவது ஒருவர், வெளியில் செய்தி கசியவே வாய்ப்பும் இல்லை என்று எல்லாமே சரியாக இருந்தும் எங்கே தவறு நேர்ந்தது என்று அவனுக்குப் புரியவில்லை. மாஸ்டர் கூட அவளை நெருங்க முடியாத சக்தி அரணை அவன் எழுப்பி இருந்தான். அதனால் மாஸ்டர் கண்டுபிடித்துச் சொல்லி இருக்க வழியில்லை. க்ரிஷால் ஹரிணி இருக்கும் இடத்தை எப்படியோ அறிய முடிந்திருந்தால் மட்டுமே போலீஸ் அங்கே சரியாக வந்திருக்க முடியும். க்ரிஷ் எப்படிக் கண்டுபிடித்து போலீஸுக்குத் தெரிவித்தான்? எப்படி க்ரிஷுக்கு அந்தச் சக்தி அவ்வளவு சீக்கிரம் கிடைத்தது. உணர்வு பூர்வமாக மிக நெருங்கியவர்களுக்குள் கருத்துப்பரிமாற்றம் ஓரளவு சக்தி படைத்தவுடனேயே வந்துவிடும்….. அப்படிப் பெற்ற சக்தியோ?  

எப்படியோ ஹரிணி அவன் பிடியிலிருந்து தப்பித்து விட்டாள். திரும்ப அவளை சிறைப்படுத்தும் யோசனையும் நடக்கவில்லை. உண்மையிலேயே மாணிக்கம் அந்தச் சூழலில் ஹரிணியைக் கைது செய்திருக்க வழியில்லை. டிவி, பத்திரிக்கைகளில் இந்த விஷயம் அலசப்படுவதையும் அரசியல் மாற்றம் வருவதையும் இந்தச் சூழலில் அவனும் விரும்பவில்லை. மனோகர் பிடிபட்டது அவனுக்கு அவமான நிகழ்வே ஒழிய மனோகர் மூலமாக யாரும் அவனைப் பற்றி எந்த அபாயத் தகவலையும் கண்டுபிடிக்கப் போவதில்லை…. ஆனாலும் க்ரிஷ் அவனால் பாதிக்கப்படாமல் இருப்பது அவனுக்குக் கசந்தது.  க்ரிஷைத் தான் அவன் நெருங்கத் தயங்குகிறானேயொழிய ஹரிணியும், க்ரிஷின் குடும்பத்தினரும் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால் அதற்கு அவன் நேரடியாக முயற்சித்தால் சக்தியை நிறைய விரயம் செய்ய வேண்டி வரும். மஸ்டரின் குரு மற்றும் ராஜதுரையைக் கொன்றதால் இழந்த சக்தியின் அளவும், மாஸ்டர் அறியாமல் இருக்க பலமுறை சக்தி அரணை எழுப்பிய போதும் அவன் இழந்த சக்தி மற்ற செயல்களில் இழந்த சக்தியை விட அளவில் அதிகம்.  முழுமையாக சக்தி தேவைப்படும் காலக்கட்டம் இது. இனியும் அவன் செய்ய வேண்டிய மிக அவசர வேலைகள் நிறைய இருக்கின்றன. அதனால் இல்லுமினாட்டி தலைமைப்பதவி கைக்கு வரும் வரையாவது அவன் அதிகபட்ச சக்தியோடு இருப்பது அவசியம். வேறு கைதேர்ந்த கொலையாளிகளை அனுப்பலாம் என்றாலோ கண்டிப்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தன் அதிகார பலத்தைக் கொண்டு கமலக்கண்ணன் இன்னேரம் ஏற்படுத்தி இருப்பார்.. அதனால் அவன் இல்லுமினாட்டியின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வரை க்ரிஷ் குடும்பமும் ஹரிணியும் இளைப்பாறட்டும். பதினாறு நாட்கள் தானே. அதன் பின் அவன் சக்தியின் பிரம்மாண்டத்தை க்ரிஷ் கண்டிப்பாக அறியத்தான் போகிறான்…..

அந்த நேரத்தில் விஸ்வத்திற்கு ஒரு நல்ல செய்தி வந்து சேர்ந்தது. “சார் அந்த சட்டர்ஜியைக் கண்டுபிடித்து விட்டோம். அந்த ஆள் பழைய மெயில் ஐடியில் தொடர்பு கொண்டவர்கள் சிலரின் மெயில் மூலமாக அந்த ஆளின் இப்போதைய மெயில் ஐடியும், விலாசமும் கண்டுபிடித்து விட்டோம். அந்த ஆள் வெஸ்ட் பெங்காலில் சிலிகுரியில் இருக்கிறான்……”

சட்டர்ஜியின் சிலிகுரி விலாசத்தைக் குறித்துக் கொண்ட விஸ்வம் முதலில் இல்லுமினாட்டியின் பழைய சுவடியில் என்ன எழுதியிருக்கிறது என்பதை முதலில் கண்டுபிடிப்பதா இல்லை சட்டர்ஜி மூலமாக அந்த இமயமலைப்பகுதி எது என்பதை முதலில் கண்டுபிடிப்பதா என்று யோசித்தான். இரண்டுமே அவனுக்கு மிக முக்கியம் தான். முதலில் சுவடி படித்திருக்கும் ஐவரில் இருவர் ஜெர்மனியிலேயே இருப்பதால் இங்கிருந்து போகும் முன் இதை முடித்து விட்டுப் போனால் நல்லது என்று தோன்றியது.

எர்னெஸ்டோ ம்யூனிக்கிலேயே இருப்பவர் என்றாலும் அவரை நெருங்குவதே மிகவும் கஷ்டம் என்பது ரகசியமாய் விசாரித்ததில் தெரிந்தது. அரண்மனை போன்ற வீட்டுக்குள் இல்லுமினாட்டிகளே அவ்வளவு சுலபமாய் நுழைய அனுமதி இல்லை என்று கூறப்பட்டது. பிதோவன் இசையும், ஒயினும், புத்தகங்களும் சேர்ந்ததே சொர்க்கம் என்று வாழும் அவர் மிக வலுவான காரணங்கள் இல்லாமல் சந்திக்க வரும் ஆட்களை பெரும் இடைஞ்சலாகவே நினைப்பவர் என்றார்கள். அதனால் அவர் மூலம் அறிவது என்பது ஆகாத காரியம். இன்னொரு செயற்குழு உறுப்பினர் ஃப்ராங்பர்ட் நகரில் இருப்பவர். அவர் பழங்காலக் கலைப்பொருட்களில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். பெரிய செல்வந்தர். அவர் சேர்த்திருக்கும் கலைப் பொருட்களின் மதிப்பு ஆயிரம் கோடிக்கும் மேலிருக்கும் என்கிறார்கள். பழங்கால அபூர்வக் கலைப்பொருள் பற்றிப் பேசுவதானால் என்னேரமும் அவர் தயார் என்றார்கள். அந்த ஆளை அணுகுவதே நல்லது என்று தோன்றியது.

ஒரு அடி உள்ள காளி வெண்கலச்சிலை எடுத்துக் கொண்டு சென்று ஃப்ராங்பர்ட் நகரில் இருக்கும் அந்த இல்லுமினாட்டி செயற்குழு உறுப்பினரை விஸ்வம் சந்தித்தான். அந்தச் சிலையை அவருக்கு அவன் பரிசளித்தான். அந்த மனிதர் அந்தச் சிலையழகில் சொக்கிப் போனார். இது என்ன சிலை, இந்தக் கோலம் எதைக் குறிக்கிறது என்றெல்லாம் பல கேள்விகள் பரவசத்தோடு அவர் கேட்டார். பொறுமையாக அதற்கெல்லாம் பதில் சொன்ன விஸ்வம் இப்போதைய பேச்சை மிக இயல்பாக அந்த பழங்காலச் சுவடிக்கு எப்படிக் கொண்டு வருவது என்று யோசித்து விட்டுச் சொன்னான்.

“இந்தக் காளி சிலையில் ஒரு விசேஷம் இருக்கிறது. எனக்கு அடிக்கடி வரும் கனவுகள் இரண்டில் இதுவும் ஒன்றாக இருந்தது. இதை கனவில் அடிக்கடி பார்ப்பேன். அதனால் ஒரு பெரும் பணக்காரர் வீட்டில் இந்தக் காளியைப் பார்த்த போது நான் பிரமித்து விட்டு அதை அவரிடம் இரண்டு மடங்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கினேன். இது என் கையில் வந்த பிறகு அந்தக் கனவு வருவது நின்று விட்டது. ஆனால் இரண்டாவது கனவு இப்போதும் வந்து கொண்டிருக்கிறது. அதை உங்கள் ஆட்கள் சிலரிடமும் சொல்லி இருக்கிறேன். ஒரு மிகப்பெரிய கட்டிடத்தின் அஸ்திவாரத்தில் ஒரு பழங்காலச் சுவடி ஒன்று இருப்பது போலவும் அதில் என்னைப் பற்றித் தான் எழுதியிருக்கிறது என்று யாரோ சொல்வது போலவும் கனவு வருகிறது. அது போல் சுவடி உங்கள் சிகாகோ இல்லுமினாட்டி கோயிலை இடித்த போது கிடைத்திருக்கிறது என்றும் அதிலும் யாரையோ பற்றிச் சொல்லியிருக்கிறது என்றும் சொன்னார்கள்…..”

சொல்லி விட்டு விஸ்வம் அர்த்தமுள்ள இடைவெளி விட்டான். அவன் எதிர்பார்த்தது போலவே அந்த மனிதர் பேசினார்.

“ஆமாம்….. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் இமயமலையின் தென்பகுதியிலிருந்து தேஜஸுடன் வருவான். சக்தியின் சின்னத்துடன் வந்து  சக்தியின் போக்கைப் பேசுவான். இல்லுமினாட்டியின் பாதையை நிர்ணயிப்பான்….. இப்படி வரும் வர்ணனைகள்….. எனக்கு ஞாபகம் இருக்கிறது இவ்வளவு தான்…. “

விஸ்வம் ஒரே சமயத்தில் திருப்தியும் அதிருப்தியும் சேர்ந்து உணர்ந்தான். திருப்தி வரக்காரணம் இல்லுமினாட்டியின் பாதையை நிர்ணயிப்பவன் தேஜஸுடன் இருப்பான்,, சக்தியின் சின்னத்துடன் வருவான், சக்தியின் போக்கைப் பேசுவான் என்ற தகவல்கள் கிடைத்தது. அதிருப்தி வரக்காரணம் எனக்கு ஞாபகம் இருக்கிறது இவ்வளவு தான் என்ற வாக்கியம்….. இன்னும் என்ன வர்ணனைகள் அந்தச் சுவடியில் இருக்கின்றனவோ?

(தொடரும்)
என்.கணேசன் 

Tuesday, January 22, 2019

வெற்றி வேண்டுமா? இப்படித் திட்டமிடுங்கள்!

மகத்தான வெற்றிகள் தற்செயலாகக் கிடைத்து விடுவதில்லை. விதிவசமாக அப்படிக் கிடைத்தது போல் தோன்றினாலும் அந்த வெற்றி தொடர்ந்து நிலைப்பதில்லை. ஒவ்வொரு மகத்தான வெற்றிக்குப் பிறகும் முறையான, கச்சிதமான திட்ட முறைகளும், பின் பற்றுதல்களுமே அஸ்திவாரமாக இருக்கின்றன. அப்படி மகத்தான வெற்றி பெற விரும்புபவர்கள் அறியவும், பின்பற்றவும் வேண்டிய திட்டம் இப்படித்தானிருக்க வேண்டும்...





என்.கணேசன்

Monday, January 21, 2019

சத்ரபதி 56


ஷாஹாஜியின் கடிதத்தைப் படித்து முடித்த சிவாஜி தன் இதயத்தில் பெரிய பாறை அழுத்துவது போன்றதொரு கனத்தை உணர்ந்தான். அவன் தன் அண்ணனுடன் இருந்த நாட்கள் மிகக் குறைவு தான். விரல் விட்டு எண்ணி விடக்கூடிய நாட்களே அவை. ஆனால் அந்த நாட்களில் சாம்பாஜி அவனிடம் காட்டிய அன்பு அளவில்லாதது. இரண்டே முறை தான் அவன் பீஜாப்பூருக்குப் போயிருக்கிறான். முதல் முறை தந்தை அழைத்து, இரண்டாம் முறை சொர்யாபாயுடன் சிவாஜிக்கு நடந்த திருமணத்தின் போது. இரண்டு முறையும் தம்பியுடனேயே அதிக நேரத்தை சாம்பாஜி கழித்திருந்தான். இரண்டு முறையும் தம்பியை வழியனுப்ப பீஜாப்பூர் எல்லை வரை வந்திருக்கிறான்.  இப்போது வஞ்சகர்களின் சதி வலையால் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் உலகத்திலிருந்து விடைபெற்றுச் சென்று விட்டான்….

தந்தையின் வரிகளை சிவாஜி இரண்டாவது முறையாகப் படித்தான். “வஞ்சித்தவர்களுக்கு நீதிதேவனாய், மாவீரனாய் தண்டனை வழங்கும் சக்தியற்ற நிலையில் நான் இருந்தாலும், சக்தி வாய்ந்தவனாய் நீ இருக்கிறாய் என்ற நம்பிக்கையில் நான் மனசமாதானம் கொள்கிறேன். அதுவே என் மீதி உயிரை இன்னமும் தக்க வைத்திருக்கிறது…..”

கண்கள் ஈரமாக சிவாஜி மானசீகமாகத் தன் தந்தையிடம் சொன்னான். “தந்தையே இந்த இரண்டு வஞ்சனைகளுக்கும் நீதிதேவனாய் நான் தண்டனை வழங்குவது நிச்சயம். உங்கள் வாழ்நாளில் அதைக் கண்டிப்பாக நீங்கள் காண்பீர்கள்”

சாம்பாஜியின் மரணச் செய்தியைத் தாயிடம் தெரிவிப்பது மேலும் வேதனையாய் இருந்தது. ஆனால் வேறு வழியில்லை. தெரிவித்தே ஆக வேண்டும்….. சிவாஜி ஜீஜாபாயைத் தேடிச் சென்ற போது அவள் பிரார்த்தனையில் இருந்தாள். சிவாஜி அவளருகே சென்று அமர்ந்தான். ஜீஜாபாய் மகனைப் பார்த்தாள். அவன் முகத்தில் பெரும் வேதனை தெரிந்தது. “என்ன மகனே?” என்று ஜீஜாபாய் கேட்டாள்.

சிவாஜி முதலில் அவள் தோளைப் பிடித்து இறுக்க அணைத்துக் கொண்டான். பின் எந்தத் தாயும் கேட்கத் துணியாத அந்தப் பெருந்துக்கச் செய்தியை அவன் உடைந்த குரலில் சொன்னான். “அண்ணன் இறந்து விட்டான் தாயே”

ஒரு கணம் எதுவும் விளங்காமல் விழித்து, பின் சொன்னது மனதில் பதிவாகி, இதயம் வெடித்துச் சிதறுவது போல் ஜீஜாபாய் உணர்ந்தாள். தாங்க முடியாத வேதனையுடன் “என்ன ஆயிற்று சிவாஜி?”

சிவாஜி தந்தையின் கடிதத்தில் இருந்த செய்திகளை மெல்லச் சொன்னான். கண்கள் கடலாக அப்படியே மகன் மடியில் சாய்ந்தாள் அந்தத் தாய். மனம் வெடிக்க அழுதாள். தன் கண்களிலும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாத சிவாஜி அவளை அழ விட்டான். அவன் கண்கள் காய்ந்து நீண்ட நேரம் கழித்துத் தான் அந்தத் தாயின் கண்ணீர் ஓய்ந்தது.

கடைசியில் தான் தந்தை மன்னிப்புக் கேட்டதைத் தாயிடம் சிவாஜி சொன்னான்.   ஷாஹாஜி தங்கள் மூத்த மகன் மீது வைத்திருந்த அளப்பரிய பாசத்தை நினைவுகூர்ந்த ஜீஜாபாய் கரகரத்த குரலில் சொன்னாள். “விதி விளையாடும் போது அவர் என்ன செய்வார் பாவம்….. என்னையும் விட அவர் தான் அதிக வேதனையில் இருப்பார்…”

அப்போதும் அவனிடம் தாய் அவரைக் குற்றப்படுத்தாததை சிவாஜி கவனிக்கத் தவறவில்லை. அன்பால் பெரிதாகப் பிணைக்கப்படாவிட்டாலும் தங்களுக்கிடையே இருந்த பந்தத்தை நல்லெண்ணங்களாலேயே இருவரும் தக்க வைத்துக் கொண்டது போல் அவனுக்குத் தோன்றியது.

“சிவாஜி…” ஜீஜாபாய் மெல்ல அழைத்தாள்.

“சொல்லுங்கள் தாயே”

“என் மனம் ஆறவில்லை மகனே. பெற்ற வயிறு எரிகிறது. உன் அண்ணன் சாக யார் உண்மையில் காரணமோ, அவனை நீ தண்டித்த செய்தி கிடைத்த பின் தான் என் மனம் ஆறும். என் வயிற்றில் எரியும் தணலை நீ அணைப்பாய் அல்லவா?”

“கண்டிப்பாக தாயே…. நான் முன்பே நிச்சயித்து விட்டேன். சரியான காலம் வரட்டும் தாயே” சிவாஜி உறுதியாகச் சொன்னான்,

மகன் மடியில் இருந்து ஜீஜாபாய் தளர்ச்சியுடன் மெல்ல நிமிர்ந்தாள். மறுபடியும் அவள் பிரார்த்தனையைத் தொடர்வதை சிவாஜி ஆச்சரியத்துடன் பார்த்தான். ஜீஜாபாய் ஈரக் கண்களால் மகன் ஆச்சரியத்தைக் கவனித்து விட்டுச் சொன்னாள். “என் குழந்தையின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன் மகனே”

ப்சல்கான்  ஷாஹாஜியே இறந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பான். ஆனால் அவருக்குப் பதிலாக சாம்பாஜி இறந்ததிலும் அவனுக்குப் பாதி திருப்தியே. மகன் மரணத்தில் ஷாஹாஜி மனம் உடைந்திருப்பார். வலிமை இனி குறைந்து கொண்டே போகும். முஸ்தபா கானை அவர் கொல்லாமல் விட்டது அவனுக்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது. முதுமை நெருங்கும் போது முந்தைய ஆக்ரோஷம் இருப்பதில்லை போலிருக்கிறது என்று எண்ணியபடியே புன்னகை செய்தான்.

ஷாஹாஜியைப் போலவே ஆதில்ஷாவும் முதுமை அடைந்து வருகிறார். அடிக்கடி உடல்நலம் குன்றி களைப்படைகிறார். இன்னும் நீண்ட காலம் அவர் வாழ்வார் என்று தோன்றவில்லை. அவர் இறந்து விட்டால் கண்டிப்பாக அசைக்க முடியாத சக்தியாகி விடலாம் என்று அப்சல்கான் கணக்குப் போட்டான். ஆதில்ஷாவின் மனைவி அவனுக்கு சகோதரி முறையாக வேண்டும். ஆதில்ஷாவின் மகன் அலி ஆதில்ஷா வலிமையிலும் அறிவிலும் தந்தைக்கு இணையாகாதவன். அவனையும், அவன் தாயையும் தன் சொல்படி கேட்க வைத்து விடலாம் என்கிற நம்பிக்கை அப்சல்கானுக்கு இருந்தது.

ஆதில்ஷா இருக்கும் போதே சிவாஜியின் கதையையும் முடித்து விட்டால் நல்லது என்று அப்சல்கானுக்குத் தோன்றியது. ஒருநாள் ஆதில்ஷாவிடம் அவன் மெல்ல சிவாஜி பற்றிய பேச்செடுத்தான். ”சிவாஜி விஷயத்தில் என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள் அரசே. அவனை மன்னித்து மறந்து விட்டீர்களா?”

ஆதில்ஷா அப்சல்கானின் குரலில் லேசாகத் தெரிந்த ஏளனத்தைக் கவனிக்கத் தவறவில்லை. சிவாஜி குறித்து பல நாட்கள் சிந்தித்தவர் அவர். எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற வகையில் செயல்பட்டு தன் சூழ்நிலையை மோசமாக்கிக் கொள்ள அவர் விரும்பவில்லை. அதை அப்சல்கானிடம் அமைதியாகச் சொன்னார். “இல்லை அப்சல்கான். ஷாஹாஜியை என்னால் மன்னிக்க முடிந்தது போல் சிவாஜியை மன்னிக்க முடியவில்லை. ஆனால் அவனுக்கு எதிராக நாம் கோபத்தில் இயங்கினால், இப்போது சும்மா இருக்கும் அவன் நம்மை எதிர்க்க முகலாயர்களுடன் உடனே சேர்ந்து கொள்ளக்கூடும். முகலாயர்கள் எப்போது வேண்டுமானாலும் எதிரியாக மாறக்கூடியவர்கள். அவர்களுடன் சிவாஜியும் சேர்ந்து கொண்டால் அது நமக்குத் தான் ஆபத்து. சும்மா இருப்பவனை முகலாயர்களுடன் சேர்த்து வைக்க விரும்பாமல் தான் அமைதியாக இருக்கிறேன்”.

அப்சல்கானுக்கு அவர் சொன்னதில் இருந்த உண்மையை மறுக்க முடியவில்லை. ஆனால் சிவாஜியை அப்படியே தண்டிக்காமல் விடவும் அவனுக்கு மனமில்லை. அவன் சொன்னான். “அரசே. நீங்கள் சொல்வது உண்மையே. அவனிடம் போருக்குப் போனால் அவன் முகலாயர்களுடன் சேர்ந்து விட வாய்ப்புண்டு. நான் அவனுடன் போருக்குச் செல்லச் சொல்லவில்லை. ஷாஹாஜியிடம் நடந்தது போலத் தந்திரமாக அவனிடமும் நடந்து கொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறேன்….”

ஆதில்ஷா சொன்னார். “நீ அவனைக் குறைத்து மதிப்பிட்டு விட்டாய். ஷாஹாஜி ஒரு முறை சிக்கிக் கொண்ட விதம் அறிந்திருக்கும் அவன் தானும் அப்படி ஏமாந்து விட மாட்டான்….”

”அரசே! இப்போது சும்மா இருக்கும் அவன் எப்போதும் சும்மா இருந்து விடுவான் என்று கணக்குப் போடாதீர்கள். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்பார்கள். சிவாஜியும் நீண்ட நாள் சும்மா இருக்க மாட்டான். அதனால் இப்போதே தந்திரமாக எதையாவது செய்து அவன் கதையை முடித்து விடுவது உங்களுக்கு நல்லது….”

ஆதில்ஷா அவனைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டார். “நீ ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாயா?”

அப்சல்கான் சொன்னான். “அரசே. சிவாஜிக்கு அருகில் இருக்கும் ஜாவ்லி பிரதேசத்தை ஆள்பவன் உங்களுக்கு நண்பன். நீண்ட காலமாய் வருடா வருடம் உங்களுக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருப்பவன். அவன் பிரதேசத்தில் ஒரு சிறுபடையைத் தங்க வைத்து சிவாஜியைத் தந்திரமாக திடீர் என்று தாக்க முடியும்….. உங்கள் படை அங்கு செல்வதை ஜாவ்லி அரசன் மறுக்க மாட்டான். சிவாஜிக்கு ஒரு பழக்கம் உண்டு. தனியாகச் சில இடங்களில் எங்காவது உலாவிக் கொண்டிருப்பான். நம் ஒற்றர்கள் மூலம் அவனது நடவடிக்கைகளை நாம் அவ்வப்போது அறிந்து கொள்ள முடியும். அப்படி அவன் தனியாக உலாவிக் கொண்டிருக்கையில் சிறு படையுடன் சென்று அவன் எதிர்பாராத போது திடீர் என்று தாக்கி அவன் கதையை முடித்து விடுவது முடியாத காரியமல்ல….”

ஆதில்ஷா யோசித்தார். அப்சல்கான் சொன்னது மிகப்பெரிய உண்மை. சிவாஜி நீண்ட காலம் சும்மா இருந்து விட மாட்டான். அதனால் அப்சல்கான் சொன்னது போல சிவாஜியை ஒழிக்க முடிந்தால் மிக நல்லது தான். தந்திரத்தைத் தந்திரத்தால் தான் வெல்ல வேண்டும். ஷாஹாஜியைப் பிடிக்க பாஜி கோர்ப்படே நினைவு வந்தது போல் சிவாஜியை ஒழிக்க பாஜி ஷாம்ராஜ் அவருக்கு நினைவுக்கு வந்தான். அவன் இளைஞன். துடிப்புள்ள வீரன். சாதித்து முன்னேறும் ஆர்வம் உள்ளவன்….


ஆதில்ஷா சம்மதித்தார்.

(தொடரும்)
என்.கணேசன்