ஷாஹாஜியின் கடிதத்தைப் படித்து முடித்த சிவாஜி தன் இதயத்தில்
பெரிய பாறை அழுத்துவது போன்றதொரு கனத்தை உணர்ந்தான். அவன் தன் அண்ணனுடன் இருந்த நாட்கள்
மிகக் குறைவு தான். விரல் விட்டு எண்ணி விடக்கூடிய நாட்களே அவை. ஆனால் அந்த நாட்களில்
சாம்பாஜி அவனிடம் காட்டிய அன்பு அளவில்லாதது. இரண்டே முறை தான் அவன் பீஜாப்பூருக்குப்
போயிருக்கிறான். முதல் முறை தந்தை அழைத்து, இரண்டாம் முறை சொர்யாபாயுடன் சிவாஜிக்கு
நடந்த திருமணத்தின் போது. இரண்டு முறையும் தம்பியுடனேயே அதிக நேரத்தை சாம்பாஜி கழித்திருந்தான்.
இரண்டு முறையும் தம்பியை வழியனுப்ப பீஜாப்பூர் எல்லை வரை வந்திருக்கிறான். இப்போது வஞ்சகர்களின் சதி வலையால் யாரிடமும் சொல்லிக்
கொள்ளாமல் உலகத்திலிருந்து விடைபெற்றுச் சென்று விட்டான்….
தந்தையின்
வரிகளை சிவாஜி இரண்டாவது முறையாகப் படித்தான். “வஞ்சித்தவர்களுக்கு நீதிதேவனாய், மாவீரனாய்
தண்டனை வழங்கும் சக்தியற்ற நிலையில் நான் இருந்தாலும், சக்தி வாய்ந்தவனாய் நீ இருக்கிறாய்
என்ற நம்பிக்கையில் நான் மனசமாதானம் கொள்கிறேன். அதுவே என் மீதி உயிரை இன்னமும் தக்க
வைத்திருக்கிறது…..”
கண்கள்
ஈரமாக சிவாஜி மானசீகமாகத் தன் தந்தையிடம் சொன்னான். “தந்தையே இந்த இரண்டு வஞ்சனைகளுக்கும்
நீதிதேவனாய் நான் தண்டனை வழங்குவது நிச்சயம். உங்கள் வாழ்நாளில் அதைக் கண்டிப்பாக நீங்கள்
காண்பீர்கள்”
சாம்பாஜியின்
மரணச் செய்தியைத் தாயிடம் தெரிவிப்பது மேலும் வேதனையாய் இருந்தது. ஆனால் வேறு வழியில்லை.
தெரிவித்தே ஆக வேண்டும்….. சிவாஜி ஜீஜாபாயைத் தேடிச் சென்ற போது அவள் பிரார்த்தனையில்
இருந்தாள். சிவாஜி அவளருகே சென்று அமர்ந்தான். ஜீஜாபாய் மகனைப் பார்த்தாள். அவன் முகத்தில்
பெரும் வேதனை தெரிந்தது. “என்ன மகனே?” என்று ஜீஜாபாய் கேட்டாள்.
சிவாஜி
முதலில் அவள் தோளைப் பிடித்து இறுக்க அணைத்துக் கொண்டான். பின் எந்தத் தாயும் கேட்கத்
துணியாத அந்தப் பெருந்துக்கச் செய்தியை அவன் உடைந்த குரலில் சொன்னான். “அண்ணன் இறந்து
விட்டான் தாயே”
ஒரு
கணம் எதுவும் விளங்காமல் விழித்து, பின் சொன்னது மனதில் பதிவாகி, இதயம் வெடித்துச்
சிதறுவது போல் ஜீஜாபாய் உணர்ந்தாள். தாங்க முடியாத வேதனையுடன் “என்ன ஆயிற்று சிவாஜி?”
சிவாஜி
தந்தையின் கடிதத்தில் இருந்த செய்திகளை மெல்லச் சொன்னான். கண்கள் கடலாக அப்படியே மகன்
மடியில் சாய்ந்தாள் அந்தத் தாய். மனம் வெடிக்க அழுதாள். தன் கண்களிலும் கண்ணீரைக் கட்டுப்படுத்த
முடியாத சிவாஜி அவளை அழ விட்டான். அவன் கண்கள் காய்ந்து நீண்ட நேரம் கழித்துத் தான்
அந்தத் தாயின் கண்ணீர் ஓய்ந்தது.
கடைசியில்
தான் தந்தை மன்னிப்புக் கேட்டதைத் தாயிடம் சிவாஜி சொன்னான். ஷாஹாஜி தங்கள் மூத்த மகன் மீது வைத்திருந்த அளப்பரிய
பாசத்தை நினைவுகூர்ந்த ஜீஜாபாய் கரகரத்த குரலில் சொன்னாள். “விதி விளையாடும் போது அவர்
என்ன செய்வார் பாவம்….. என்னையும் விட அவர் தான் அதிக வேதனையில் இருப்பார்…”
அப்போதும்
அவனிடம் தாய் அவரைக் குற்றப்படுத்தாததை சிவாஜி கவனிக்கத் தவறவில்லை. அன்பால் பெரிதாகப்
பிணைக்கப்படாவிட்டாலும் தங்களுக்கிடையே இருந்த பந்தத்தை நல்லெண்ணங்களாலேயே இருவரும்
தக்க வைத்துக் கொண்டது போல் அவனுக்குத் தோன்றியது.
“சிவாஜி…”
ஜீஜாபாய் மெல்ல அழைத்தாள்.
“சொல்லுங்கள்
தாயே”
“என்
மனம் ஆறவில்லை மகனே. பெற்ற வயிறு எரிகிறது. உன் அண்ணன் சாக யார் உண்மையில் காரணமோ,
அவனை நீ தண்டித்த செய்தி கிடைத்த பின் தான் என் மனம் ஆறும். என் வயிற்றில் எரியும்
தணலை நீ அணைப்பாய் அல்லவா?”
“கண்டிப்பாக
தாயே…. நான் முன்பே நிச்சயித்து விட்டேன். சரியான காலம் வரட்டும் தாயே” சிவாஜி உறுதியாகச்
சொன்னான்,
மகன்
மடியில் இருந்து ஜீஜாபாய் தளர்ச்சியுடன் மெல்ல நிமிர்ந்தாள். மறுபடியும் அவள் பிரார்த்தனையைத்
தொடர்வதை சிவாஜி ஆச்சரியத்துடன் பார்த்தான். ஜீஜாபாய் ஈரக் கண்களால் மகன் ஆச்சரியத்தைக்
கவனித்து விட்டுச் சொன்னாள். “என் குழந்தையின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்
மகனே”
அப்சல்கான் ஷாஹாஜியே
இறந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பான். ஆனால் அவருக்குப் பதிலாக சாம்பாஜி இறந்ததிலும்
அவனுக்குப் பாதி திருப்தியே. மகன் மரணத்தில் ஷாஹாஜி மனம் உடைந்திருப்பார். வலிமை இனி
குறைந்து கொண்டே போகும். முஸ்தபா கானை அவர் கொல்லாமல் விட்டது அவனுக்கே ஆச்சரியமாகத்
தான் இருந்தது. முதுமை நெருங்கும் போது முந்தைய ஆக்ரோஷம் இருப்பதில்லை போலிருக்கிறது
என்று எண்ணியபடியே புன்னகை செய்தான்.
ஷாஹாஜியைப்
போலவே ஆதில்ஷாவும் முதுமை அடைந்து வருகிறார். அடிக்கடி உடல்நலம் குன்றி களைப்படைகிறார்.
இன்னும் நீண்ட காலம் அவர் வாழ்வார் என்று தோன்றவில்லை. அவர் இறந்து விட்டால் கண்டிப்பாக
அசைக்க முடியாத சக்தியாகி விடலாம் என்று அப்சல்கான் கணக்குப் போட்டான். ஆதில்ஷாவின்
மனைவி அவனுக்கு சகோதரி முறையாக வேண்டும். ஆதில்ஷாவின் மகன் அலி ஆதில்ஷா வலிமையிலும்
அறிவிலும் தந்தைக்கு இணையாகாதவன். அவனையும், அவன் தாயையும் தன் சொல்படி கேட்க வைத்து
விடலாம் என்கிற நம்பிக்கை அப்சல்கானுக்கு இருந்தது.
ஆதில்ஷா
இருக்கும் போதே சிவாஜியின் கதையையும் முடித்து விட்டால் நல்லது என்று அப்சல்கானுக்குத்
தோன்றியது. ஒருநாள் ஆதில்ஷாவிடம் அவன் மெல்ல சிவாஜி பற்றிய பேச்செடுத்தான். ”சிவாஜி
விஷயத்தில் என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள் அரசே. அவனை மன்னித்து மறந்து விட்டீர்களா?”
ஆதில்ஷா
அப்சல்கானின் குரலில் லேசாகத் தெரிந்த ஏளனத்தைக் கவனிக்கத் தவறவில்லை. சிவாஜி குறித்து
பல நாட்கள் சிந்தித்தவர் அவர். எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற வகையில் செயல்பட்டு தன்
சூழ்நிலையை மோசமாக்கிக் கொள்ள அவர் விரும்பவில்லை. அதை அப்சல்கானிடம் அமைதியாகச் சொன்னார்.
“இல்லை அப்சல்கான். ஷாஹாஜியை என்னால் மன்னிக்க முடிந்தது போல் சிவாஜியை மன்னிக்க முடியவில்லை.
ஆனால் அவனுக்கு எதிராக நாம் கோபத்தில் இயங்கினால், இப்போது சும்மா இருக்கும் அவன் நம்மை
எதிர்க்க முகலாயர்களுடன் உடனே சேர்ந்து கொள்ளக்கூடும். முகலாயர்கள் எப்போது வேண்டுமானாலும்
எதிரியாக மாறக்கூடியவர்கள். அவர்களுடன் சிவாஜியும் சேர்ந்து கொண்டால் அது நமக்குத்
தான் ஆபத்து. சும்மா இருப்பவனை முகலாயர்களுடன் சேர்த்து வைக்க விரும்பாமல் தான் அமைதியாக
இருக்கிறேன்”.
அப்சல்கானுக்கு
அவர் சொன்னதில் இருந்த உண்மையை மறுக்க முடியவில்லை. ஆனால் சிவாஜியை அப்படியே தண்டிக்காமல்
விடவும் அவனுக்கு மனமில்லை. அவன் சொன்னான். “அரசே. நீங்கள் சொல்வது உண்மையே. அவனிடம்
போருக்குப் போனால் அவன் முகலாயர்களுடன் சேர்ந்து விட வாய்ப்புண்டு. நான் அவனுடன் போருக்குச்
செல்லச் சொல்லவில்லை. ஷாஹாஜியிடம் நடந்தது போலத் தந்திரமாக அவனிடமும் நடந்து கொள்ள
வேண்டும் என்று தான் சொல்கிறேன்….”
ஆதில்ஷா
சொன்னார். “நீ அவனைக் குறைத்து மதிப்பிட்டு விட்டாய். ஷாஹாஜி ஒரு முறை சிக்கிக் கொண்ட
விதம் அறிந்திருக்கும் அவன் தானும் அப்படி ஏமாந்து விட மாட்டான்….”
”அரசே!
இப்போது சும்மா இருக்கும் அவன் எப்போதும் சும்மா இருந்து விடுவான் என்று கணக்குப் போடாதீர்கள்.
நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்பார்கள். சிவாஜியும் நீண்ட நாள் சும்மா இருக்க
மாட்டான். அதனால் இப்போதே தந்திரமாக எதையாவது செய்து அவன் கதையை முடித்து விடுவது உங்களுக்கு
நல்லது….”
ஆதில்ஷா
அவனைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டார். “நீ ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாயா?”
அப்சல்கான்
சொன்னான். “அரசே. சிவாஜிக்கு அருகில் இருக்கும் ஜாவ்லி பிரதேசத்தை ஆள்பவன் உங்களுக்கு
நண்பன். நீண்ட காலமாய் வருடா வருடம் உங்களுக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருப்பவன். அவன்
பிரதேசத்தில் ஒரு சிறுபடையைத் தங்க வைத்து சிவாஜியைத் தந்திரமாக திடீர் என்று தாக்க
முடியும்….. உங்கள் படை அங்கு செல்வதை ஜாவ்லி அரசன் மறுக்க மாட்டான். சிவாஜிக்கு ஒரு
பழக்கம் உண்டு. தனியாகச் சில இடங்களில் எங்காவது உலாவிக் கொண்டிருப்பான். நம் ஒற்றர்கள்
மூலம் அவனது நடவடிக்கைகளை நாம் அவ்வப்போது அறிந்து கொள்ள முடியும். அப்படி அவன் தனியாக
உலாவிக் கொண்டிருக்கையில் சிறு படையுடன் சென்று அவன் எதிர்பாராத போது திடீர் என்று
தாக்கி அவன் கதையை முடித்து விடுவது முடியாத காரியமல்ல….”
ஆதில்ஷா
யோசித்தார். அப்சல்கான் சொன்னது மிகப்பெரிய உண்மை. சிவாஜி நீண்ட காலம் சும்மா இருந்து
விட மாட்டான். அதனால் அப்சல்கான் சொன்னது போல சிவாஜியை ஒழிக்க முடிந்தால் மிக நல்லது
தான். தந்திரத்தைத் தந்திரத்தால் தான் வெல்ல வேண்டும். ஷாஹாஜியைப் பிடிக்க பாஜி கோர்ப்படே
நினைவு வந்தது போல் சிவாஜியை ஒழிக்க பாஜி ஷாம்ராஜ் அவருக்கு நினைவுக்கு வந்தான். அவன்
இளைஞன். துடிப்புள்ள வீரன். சாதித்து முன்னேறும் ஆர்வம் உள்ளவன்….
ஆதில்ஷா
சம்மதித்தார்.
(தொடரும்)
இன்று சீக்கிரமாகவே பதிவிட்டதற்கு நன்றி சார். இந்த ஆதில் ஷா அடங்க மாட்டார் போல் இருக்கிறதே. சிவாஜியைக் கொல்ல ஆள் அனுப்புகிறார். சிவாஜி என்ன செய்வான் எப்படி சமாளிப்பான் என்று அறிய காத்துருக்கிறேன்.
ReplyDeleteInteresting. I wonder how many hardships Sivaji had to face. He is really great.
ReplyDeleteநண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்று இருக்க வேண்டும்.
ReplyDeleteசிவாஜிக்கும் அதே திட்டமா...? எப்போது திட்டத்தை ஆரம்பிப்பார்கள்...? என்ன நடக்கும்??? என்பதை அறிய ஆவலாக உள்ளேன்...
ReplyDeleteAfzhalkhaan is digging hole for himself.
ReplyDelete