ஹரிணி காப்பாற்றப்பட்ட பின் க்ரிஷுக்கு மனதை முழுமையாக இனி
செய்ய வேண்டிய காரியங்களில் ஈடுபடுத்துவது சுலபமாக இருந்தது. ஹரிணியும் கிரிஜாவும்
க்ரிஷ் வீட்டுக்கு வந்து தங்கியது அவனுக்கு நிம்மதியாக இருந்தது. இனி இவர்கள் பாதுகாப்பை
உதய் பார்த்துக் கொள்வான்….
ஹரிணியிடம்
க்ரிஷ் தனக்கு இப்போது தனிமை நிறையவே தேவைப்படுகிறது என்று ஆரம்பத்திலேயே சொல்லி விட்டான்.
அவனுக்கு நிறைய படிக்கவும், சிந்திக்கவும், தியானிக்கவும், வேறுசில பயிற்சிகளில் ஈடுபடவும்
வேண்டியிருப்பதைச் சொன்னான். சராசரிப் பெண்ணாக முகம் கோணாமல், மனம் சிணுங்காமல் அவனிடம்
சொன்னாள். “நானும் எதாவது உதவி செய்யணும்னா சொல்டா”
க்ரிஷ்
அவளைப் பெருமிதத்துடன் பார்த்துப் புன்னகைத்தபடி சொன்னான். “எனக்காக பிரார்த்தனை செய்
ஹரிணி. இப்போதைக்கு எனக்கு அது தான் தேவை…”
“அதெல்லாம்
உங்க அம்மா டிபார்ட்மெண்ட். எனக்கேத்த மாதிரி எதாவது சொல்லுடா…”
தேவைப்படும்
போது சொல்வதாகச் சொன்ன அவன் அவ்வப்போது சில பெயர்களையும், சில வித்தியாசமான வார்த்தைகளையும்
சொல்லி இணையத்தில் தேடி அதுபற்றிய முக்கிய குறிப்புகளை எடுத்துத் தரச் சொன்னான். சில
சமயங்களில் அவள் சேகரித்த தகவல்கள் போதுமானதாக இருந்தன. சில சமயங்களில் கூடுதலாகத்
தெரிய வேண்டிய அம்சங்களைச் சொன்னான். அவள் அதையும் சேகரித்துக் கொடுத்த பின் அவளை மறந்து
விடுவான். அவள் அவனைத் தொந்திரவு செய்யாமல் தூரத்தில் அமர்ந்தபடி அவன் ஆழமாகச் சிந்திப்பதையும்,
தியானத்தில் ஈடுபடுவதையும், ஏதாவது தீவிரமாகப் படிப்பதையும் அவள் பெருமையுடன் பார்த்துக்
கொண்டிருப்பாள். அல்லது ஏதாவது புத்தகத்தை அவளும் படித்துக் கொண்டிருப்பாள். மற்ற நேரங்களில்
சமையலறையில் பத்மாவதி கிரிஜாவுக்கு உதவி செய்து கொண்டும், அவர்கள் பேச்சில் கலந்து
கொண்டும் இருப்பாள்.
உதய்
ஒரு முறை அவளிடம் தனியாகக் கேட்டான். “அவன் உன்னைக் கண்டுக்காம என்னென்னவோ செய்யறானேன்னு
உனக்கு வருத்தமா இல்லையா ஹரிணி”
ஹரிணி
சிரித்துக் கொண்டே சொன்னாள். “காதல்ங்கிறது தொந்திரவு செய்யறதுன்னு ஆயிடக்கூடாது. அவசியமான
சமயங்கள்ல விலகியும் இருக்கத் தெரியணும்….”
உதய்க்கு
அவளை மிகவும் பிடித்திருந்தது. தம்பி அதிர்ஷ்டக்காரன் என்று நினைத்தான். ஹரிணிக்கும்
அவனை மிகவும் பிடித்திருந்தது. அவனை அவள் மூத்த சகோதரனைப் போலவே நேசிக்க ஆரம்பித்தாள்.
அவனும், பத்மாவதியும் பேசிக் கொள்வதை அவள் மிகவும் ரசித்தாள். உதய் நேரம் கிடைக்கையில்
எல்லாம் தாயை ஏதாவது சொல்லிச் சீண்டாமல் இருக்க மாட்டான். பத்மாவதியும் சளைக்காமல்
பதில் சொல்லி மகனை சமாளிப்பாள்.
தனியாக
ஒருமுறை பத்மாவதியிடம் ஹரிணி கேட்டாள். “க்ரிஷும் உங்க கிட்ட இப்படிப் பேசுவானா?”
“அது
எப்பவுமே தானுண்டு தன்னோட வேலையுண்டுன்னு இருக்கும். இவன் தான் வம்பிழுத்துகிட்டே இருப்பான்.
இவன் பார்லிமெண்ட் கூட்டம் நடக்கறப்ப போயிட்டாலோ, இல்லை கட்சிக்கூட்டம்னு வெளியூர்
போயிட்டாலோ எனக்கு நேரமே போகாது. என் வீட்டுக்காரர் கல்யாணமான புதுசுலயாவது ஏதாவது
சண்டைக்குக் கிடைப்பார். இப்பல்லாம் என்ன சொன்னாலும் பெருசா அவர் கண்டுக்கறதில்லை.
சில சமயம் ஆளு செவிடான்னு கூட எனக்குச் சந்தேகம் வந்துடும்….. இப்ப கூட
பாரேன். ஒரு மாசமா உதய்க்கு ஒரு நல்ல பெண்ணா பார்க்கணும்னு நான் சொல்லிட்டே இருக்கேன்….
ஊம்…. பார்ப்போம்ன்கிறாரே ஒழிய தீவிரமா பார்க்க மாட்டேங்கிறார்….”
கிரிஜா
பத்மாவதியிடம் கேட்டாள். “எந்த மாதிரி பொண்ணை உதய்க்குப் பார்க்கறீங்க?”
“அவனுக்குப்
புடிச்ச மாதிரி அழகான நல்ல பொண்ணா கிடைக்கணும். கொஞ்சம் நல்லா சமைக்கவும் தெரிஞ்சுதுன்னா
பரவாயில்லைன்னு பார்க்கறேன். சின்னவன் பசிக்கு சாப்டறவன். சமைக்கறது முன்ன பின்ன இருந்தாலும்
கண்டுக்க மாட்டான். பெரியவன் ருசிச்சு சாப்டறவன். நல்லாவும் சாப்பிடுவான்… எல்லாக்
கடவுளையும் வேண்டியிருக்கேன். நல்ல பொண்ணு அவனுக்கும் அமையும்னு நம்பிக்கை இருக்கு.
ஆனா நாம முயற்சி செய்யணுமே.”
ஏதோ
வேலையாக ஹாலுக்கு வந்த க்ரிஷுக்கு அம்மாவின் பேச்சு காதில் விழுந்தது. மெலிதாய் புன்னகைத்தான்.
அம்மாவின் உலகம் மிகச் சிறியது. அவளுக்கு அவள் கணவன் மற்றும் குழந்தைகள் நன்றாக இருந்தால்
போதும். வேறு எந்தப் பெரிய எதிர்பார்ப்பும் அவளுக்குக் கிடையாது. அதை ஆண்டவன் பார்த்துக்
கொள்வார் என்ற நம்பிக்கை அவளுக்கு உண்டு. (”சோதிப்பார், ஆனா கைவிட மாட்டார். சோதிக்கவே
செய்யாட்டி நாம கடவுள் இருக்கறதையே மறந்துடுவோமே. நம்மள புடிக்கவே முடியாதே”). மற்றபடி
அவளுக்கு வேறெந்தக் கவலையோ, கஷ்டமானதை யோசித்து புரிந்து கொள்ளும் சிரமமோ கிடையாது.
உலகத்தில் பெரும்பாலான மனிதர்களின் தனி உலகங்கள் இப்படிச் சிறியதாகவே இருக்கிறது…..
அவர்கள் பிரச்னைகளைச் சமாளிக்க ஆண்டவன் இருக்கவே
இருக்கிறார். அவரை நம்பி, முடிந்த வரை முயற்சி செய்தால் மட்டும் போதும். மற்றதை அவர்
பார்த்துக் கொள்வார்….. இந்த எளிமையும் நம்பிக்கையும் சாதாரணமானதல்ல என்று தோன்றியது.
எல்லா பாரத்தையும் நீயே சுமக்க வேண்டியதில்லை. படைத்தவன் பார்த்துக் கொள்வான். நீ முழு
மனதோடு முயற்சி செய். அது போதும்…… அந்தக் கணம் அம்மாவே குருவாகத் தோன்றினாள்…. இதே
எளிமையுடனும், அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் எதிரியைச் சமாளிக்க க்ரிஷ் தீர்மானித்தான்.
அவன்
தனதறைக்கு மீண்டும் நுழையப் போகும் போது உதய் வந்தான். பெரும் சக்தி வாய்ந்த அந்த எதிரியை இவன் எப்படி சமாளிக்கப் போகிறான் என்று கவலையுடன்
தம்பியைப் பார்த்தான். இந்த நேரமாகப் பார்த்து மாஸ்டரும் இங்கில்லாமல் ரிஷிகேசத்தில்
இருக்கிறார். தம்பியிடம் கேட்டான். “நான் ஏதாவது செய்யணுமாடா?”
“நீ
இவங்களை எல்லாம் பாதுகாப்பா பார்த்துக்கோ.
அது போதும்….” என்று சொல்லி விட்டு க்ரிஷ் அறைக்குள் போனான். எதிரியின் வலிமைக்கு முன்
ராஜதுரையே சமாளிக்க முடியாத போது எதிரி நினைத்தால் இவர்களை எவ்வளவு பாதுகாப்பாக இருத்தினாலும்
இவர்கள் ஆபத்திலிருந்து தப்ப முடியாது. ஆனால் எதிரி எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாது.
அவன் ஆளனுப்பி இவர்களைத் தாக்காமல் இருக்கத் தான் இத்தனை பாதுகாப்பு முயற்சிகளும்…..
எதிரிக்கு இங்கு வர முடியாத அளவு நிறைய வேலைகள் இருக்க வேண்டும் என்று க்ரிஷ் இறைவனைப்
பிரார்த்தித்தான்.
மாஸ்டர் பூரண அமைதியை உணர்ந்து கொண்டிருந்தார். நடந்தவை நல்லவையோ
கெட்டவையோ மாற்ற முடிந்ததல்ல. ஆனால் நடந்த கோணலை நிமிர்த்த என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ
அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியை மனம் பெற ஆரம்பித்து ஆக வேண்டியதில் படியவும்
ஆரம்பித்திருந்தது…. இந்த மாற்றத்திற்கு மிக
முக்கிய காரணம் குருவின் அருளே என்று நினைத்தார். குரு தன்னுடனேயே இருப்பது போல் தோன்றியது…..
அதனால் பெற்ற பேரமைதியில் மனம் திளைத்துக் கொண்டிருந்த போது அவருடைய சக்திகள் எல்லாம்
சூட்சும நிலையை எட்ட ஆரம்பித்தன. காலம் நின்று போனது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
என்ற பேதங்கள் இல்லாத அனாதியான ஒரு நிலையில் மனம் தங்கிப் போனது.
அந்த
சமயத்தில் திடீரென்று காளி கோயிலில் வளர்பிறை சப்தமியில் கிடைத்த வரைபடம் அவர் மனக்கண்
முன் மிதக்க ஆரம்பித்தது. சூட்சும உணர்வை எட்டியிருந்த மாஸ்டரின் அந்த்ராத்மா உடனே
அதைக் கவனிக்கச் சொன்னது. மாஸ்டர் கூடுதல் முயற்சி இல்லாமலேயே மனதைக் குவித்தார். வரைபடம்
நிஜ இடமாக அவர் மனக்கண் முன்னால் தெரிய ஆரம்பித்தது. அந்தக் கரிய பறவையை மட்டும் காணோம்.
அதே போல திரிசூலம் பனியின் அடியே மின்னியது. பொதுவாக அப்படிப் பனியின் அடியில் முழுவதுமாக
மறைந்திருக்கையில் மின்னித் தெரியும் வாய்ப்பில்லை. ஆனாலும் மாஸ்டர் கண்ணுக்கு அந்தத்
திரிசூலத்தின் மினுமினுப்பு தெரிந்தது. மாஸ்டர் கூர்ந்து பார்த்தார். அது ஒரு சிறிய
கோயில். பனியில் மறைந்திருந்தாலும் கோயிலும் ஜொலித்தது. மாஸ்டர் பிரமிப்புடன் பார்த்துக்
கொண்டிருக்கையில் அந்த முழுக்காட்சியும் தொலைவுக்குச் செல்ல ஆரம்பித்தது. இப்போது கோயிலும்
திரிசூலமும் சிறிதாகத் தெரிந்தது. அந்த முழு மலை அவர் கண் முன் வந்து நின்றது. அந்த
மலையில் யாரோ சிலர் கையில் உபகரணங்களுடன் ஏறிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால்
கடைசியாக ஒருவன் விரைவாக ஏறிக் கொண்டிருந்தான். தெரிந்தவன் போலத் தோன்றினான். மாஸ்டர்
பார்வையைக் கூர்மையாக்கினார். அவர் பார்வையை உணர்ந்தது போல் அவனும் திரும்பினான். விஸ்வம்!.
இருவர் பார்வையும் சந்தித்தன. அவன் திகைத்தது போலவே அவரும் திகைத்தார். இருவரில் முதலில்
சுதாரித்தது விஸ்வம் தான். சகல சக்திகளையும் திரட்டி அவருக்கும் தனக்கும் இடையே ஒரு
திரையை உருவாகி அவர் பார்வையிலிருந்து மறைந்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
பனிமலையும் சூடாகிறதே!!!!!!!!!!!!!
ReplyDeleteVery interesting. Superb
ReplyDeleteமாஸ்டர்...மற்றும் விஸ்வம்...மட்டுமல்ல....
ReplyDeleteநானும் திடீரென திகைத்துவிட்டேன்...
இந்த சீன் ரொம்ப..ரொம்ப... சூப்பர்... அருமையோ ..அருமை...
க்ரிஷ் என்ன செய்யப் போகிறான்?னு தெரியலையே...!
Interesting.....
ReplyDelete