நவீன்சந்திர ஷா அந்த பழங்காலச் சுவடி வாஷிங்டன் நகரில் உள்ள
ஒரு ரகசிய இல்லுமினாட்டி காப்பறையில் வைக்கப்பட்டிருக்கிறது என்றான். வாஷிங்டன் நகரமே
இல்லுமினாட்டியின் அதிகார மையம் என்றும் அந்த நகரத்தில் தான் இல்லுமினாட்டியின் பல
பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவன் சொன்னான். அந்தப் பழங்காலச்
சுவடியைத் திறந்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படித்து அறிந்து கொள்ளும் ஆர்வம்
அந்தப் பதிலில் விஸ்வத்திடமிருந்து நழுவியது.
ஒரு
நெருங்கிய நண்பனிடம் உரிமையுடன் கேட்பது போல விஸ்வம் கேட்டான். “அதில் என்ன தான் எழுதியிருக்கிறது
என்பது யாருக்காவது தெரியுமா?”
“தலைவர்
எர்னெஸ்டோ, உபதலைவர், மற்றும் முக்கிய மூத்த செயற்குழு உறுப்பினர் மூவர் மட்டும் தான்
எல்லா ரகசிய சாசனங்களையும் பார்வையிடும் அதிகாரம் படைத்தவர்கள். அவர்கள் ஐந்து பேர்
தான் அதைப் படித்துப் பார்த்திருப்பார்கள்….” என்று சொன்ன நவீன்சந்திர ஷா அவர்களது
பெயர்களையும் சொன்னான்.
“சும்மா
தான் ஒரு ஆர்வத்தில் கேட்டேன். அது தெரிந்து என்ன ஆகப் போகிறது….” என்று சொல்லி விஸ்வம்
அந்தப் பேச்சை அத்துடன் விட்டான்.
நவீன்சந்திர
ஷா போன பிறகு விஸ்வம் ஹரிணி விவகாரத்தை யோசிக்க ஆரம்பித்தான். நிலைமை இப்படி வந்து
முடியும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. திட்டத்தை வகுத்து மனோகர் தெரிவித்த போது
அதில் சிறு தவறையும் அவனால் கண்டுபிடித்திருக்க முடியவில்லை. குறைவான மனிதர்கள், கச்சிதமான
இடம், தொடர்ந்து கண்காணிக்க யாராவது ஒருவர், வெளியில் செய்தி கசியவே வாய்ப்பும் இல்லை
என்று எல்லாமே சரியாக இருந்தும் எங்கே தவறு நேர்ந்தது என்று அவனுக்குப் புரியவில்லை.
மாஸ்டர் கூட அவளை நெருங்க முடியாத சக்தி அரணை அவன் எழுப்பி இருந்தான். அதனால் மாஸ்டர்
கண்டுபிடித்துச் சொல்லி இருக்க வழியில்லை. க்ரிஷால் ஹரிணி இருக்கும் இடத்தை எப்படியோ
அறிய முடிந்திருந்தால் மட்டுமே போலீஸ் அங்கே சரியாக வந்திருக்க முடியும். க்ரிஷ் எப்படிக்
கண்டுபிடித்து போலீஸுக்குத் தெரிவித்தான்? எப்படி க்ரிஷுக்கு அந்தச் சக்தி அவ்வளவு
சீக்கிரம் கிடைத்தது. உணர்வு பூர்வமாக மிக நெருங்கியவர்களுக்குள் கருத்துப்பரிமாற்றம்
ஓரளவு சக்தி படைத்தவுடனேயே வந்துவிடும்….. அப்படிப் பெற்ற சக்தியோ?
எப்படியோ
ஹரிணி அவன் பிடியிலிருந்து தப்பித்து விட்டாள். திரும்ப அவளை சிறைப்படுத்தும் யோசனையும் நடக்கவில்லை.
உண்மையிலேயே மாணிக்கம் அந்தச் சூழலில் ஹரிணியைக்
கைது செய்திருக்க வழியில்லை. டிவி, பத்திரிக்கைகளில் இந்த விஷயம் அலசப்படுவதையும் அரசியல்
மாற்றம் வருவதையும் இந்தச் சூழலில் அவனும் விரும்பவில்லை. மனோகர் பிடிபட்டது அவனுக்கு
அவமான நிகழ்வே ஒழிய மனோகர் மூலமாக யாரும் அவனைப் பற்றி எந்த அபாயத் தகவலையும் கண்டுபிடிக்கப்
போவதில்லை…. ஆனாலும் க்ரிஷ் அவனால் பாதிக்கப்படாமல் இருப்பது அவனுக்குக் கசந்தது. க்ரிஷைத் தான் அவன் நெருங்கத் தயங்குகிறானேயொழிய
ஹரிணியும், க்ரிஷின் குடும்பத்தினரும் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால் அதற்கு அவன்
நேரடியாக முயற்சித்தால் சக்தியை நிறைய விரயம் செய்ய வேண்டி வரும். மஸ்டரின் குரு மற்றும்
ராஜதுரையைக் கொன்றதால் இழந்த சக்தியின் அளவும், மாஸ்டர் அறியாமல் இருக்க பலமுறை சக்தி
அரணை எழுப்பிய போதும் அவன் இழந்த சக்தி மற்ற செயல்களில் இழந்த சக்தியை விட அளவில் அதிகம்.
முழுமையாக சக்தி தேவைப்படும் காலக்கட்டம் இது.
இனியும் அவன் செய்ய வேண்டிய மிக அவசர வேலைகள் நிறைய இருக்கின்றன. அதனால் இல்லுமினாட்டி
தலைமைப்பதவி கைக்கு வரும் வரையாவது அவன் அதிகபட்ச சக்தியோடு இருப்பது அவசியம். வேறு
கைதேர்ந்த கொலையாளிகளை அனுப்பலாம் என்றாலோ கண்டிப்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தன்
அதிகார பலத்தைக் கொண்டு கமலக்கண்ணன் இன்னேரம் ஏற்படுத்தி இருப்பார்.. அதனால் அவன் இல்லுமினாட்டியின்
தலைமைப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வரை க்ரிஷ் குடும்பமும் ஹரிணியும் இளைப்பாறட்டும்.
பதினாறு நாட்கள் தானே. அதன் பின் அவன் சக்தியின் பிரம்மாண்டத்தை க்ரிஷ் கண்டிப்பாக
அறியத்தான் போகிறான்…..
அந்த
நேரத்தில் விஸ்வத்திற்கு ஒரு நல்ல செய்தி வந்து சேர்ந்தது. “சார் அந்த சட்டர்ஜியைக்
கண்டுபிடித்து விட்டோம். அந்த ஆள் பழைய மெயில் ஐடியில் தொடர்பு கொண்டவர்கள் சிலரின்
மெயில் மூலமாக அந்த ஆளின் இப்போதைய மெயில் ஐடியும், விலாசமும் கண்டுபிடித்து விட்டோம்.
அந்த ஆள் வெஸ்ட் பெங்காலில் சிலிகுரியில் இருக்கிறான்……”
சட்டர்ஜியின்
சிலிகுரி விலாசத்தைக் குறித்துக் கொண்ட விஸ்வம் முதலில் இல்லுமினாட்டியின் பழைய சுவடியில்
என்ன எழுதியிருக்கிறது என்பதை முதலில் கண்டுபிடிப்பதா இல்லை சட்டர்ஜி மூலமாக அந்த இமயமலைப்பகுதி
எது என்பதை முதலில் கண்டுபிடிப்பதா என்று யோசித்தான். இரண்டுமே அவனுக்கு மிக முக்கியம்
தான். முதலில் சுவடி படித்திருக்கும் ஐவரில் இருவர் ஜெர்மனியிலேயே இருப்பதால் இங்கிருந்து
போகும் முன் இதை முடித்து விட்டுப் போனால் நல்லது என்று தோன்றியது.
எர்னெஸ்டோ
ம்யூனிக்கிலேயே இருப்பவர் என்றாலும் அவரை நெருங்குவதே மிகவும் கஷ்டம் என்பது ரகசியமாய்
விசாரித்ததில் தெரிந்தது. அரண்மனை போன்ற வீட்டுக்குள் இல்லுமினாட்டிகளே அவ்வளவு சுலபமாய்
நுழைய அனுமதி இல்லை என்று கூறப்பட்டது. பிதோவன் இசையும், ஒயினும், புத்தகங்களும் சேர்ந்ததே
சொர்க்கம் என்று வாழும் அவர் மிக வலுவான காரணங்கள் இல்லாமல் சந்திக்க வரும் ஆட்களை
பெரும் இடைஞ்சலாகவே நினைப்பவர் என்றார்கள். அதனால் அவர் மூலம் அறிவது என்பது ஆகாத காரியம்.
இன்னொரு செயற்குழு உறுப்பினர் ஃப்ராங்பர்ட் நகரில் இருப்பவர். அவர் பழங்காலக் கலைப்பொருட்களில்
மிகுந்த ஆர்வம் உள்ளவர். பெரிய செல்வந்தர். அவர் சேர்த்திருக்கும் கலைப் பொருட்களின்
மதிப்பு ஆயிரம் கோடிக்கும் மேலிருக்கும் என்கிறார்கள். பழங்கால அபூர்வக் கலைப்பொருள்
பற்றிப் பேசுவதானால் என்னேரமும் அவர் தயார் என்றார்கள். அந்த ஆளை அணுகுவதே நல்லது என்று
தோன்றியது.
ஒரு
அடி உள்ள காளி வெண்கலச்சிலை எடுத்துக் கொண்டு சென்று ஃப்ராங்பர்ட் நகரில் இருக்கும்
அந்த இல்லுமினாட்டி செயற்குழு உறுப்பினரை விஸ்வம் சந்தித்தான். அந்தச் சிலையை அவருக்கு
அவன் பரிசளித்தான். அந்த மனிதர் அந்தச் சிலையழகில் சொக்கிப் போனார். இது என்ன சிலை,
இந்தக் கோலம் எதைக் குறிக்கிறது என்றெல்லாம் பல கேள்விகள் பரவசத்தோடு அவர் கேட்டார்.
பொறுமையாக அதற்கெல்லாம் பதில் சொன்ன விஸ்வம் இப்போதைய பேச்சை மிக இயல்பாக அந்த பழங்காலச்
சுவடிக்கு எப்படிக் கொண்டு வருவது என்று யோசித்து விட்டுச் சொன்னான்.
“இந்தக்
காளி சிலையில் ஒரு விசேஷம் இருக்கிறது. எனக்கு அடிக்கடி வரும் கனவுகள் இரண்டில் இதுவும்
ஒன்றாக இருந்தது. இதை கனவில் அடிக்கடி பார்ப்பேன். அதனால் ஒரு பெரும் பணக்காரர் வீட்டில்
இந்தக் காளியைப் பார்த்த போது நான் பிரமித்து விட்டு அதை அவரிடம் இரண்டு மடங்கு பணம்
கொடுத்து விலைக்கு வாங்கினேன். இது என் கையில் வந்த பிறகு அந்தக் கனவு வருவது நின்று
விட்டது. ஆனால் இரண்டாவது கனவு இப்போதும் வந்து கொண்டிருக்கிறது. அதை உங்கள் ஆட்கள்
சிலரிடமும் சொல்லி இருக்கிறேன். ஒரு மிகப்பெரிய கட்டிடத்தின் அஸ்திவாரத்தில் ஒரு பழங்காலச்
சுவடி ஒன்று இருப்பது போலவும் அதில் என்னைப் பற்றித் தான் எழுதியிருக்கிறது என்று யாரோ
சொல்வது போலவும் கனவு வருகிறது. அது போல் சுவடி உங்கள் சிகாகோ இல்லுமினாட்டி கோயிலை
இடித்த போது கிடைத்திருக்கிறது என்றும் அதிலும் யாரையோ பற்றிச் சொல்லியிருக்கிறது என்றும்
சொன்னார்கள்…..”
சொல்லி
விட்டு விஸ்வம் அர்த்தமுள்ள இடைவெளி விட்டான். அவன் எதிர்பார்த்தது போலவே அந்த மனிதர்
பேசினார்.
“ஆமாம்…..
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் இமயமலையின் தென்பகுதியிலிருந்து தேஜஸுடன் வருவான். சக்தியின்
சின்னத்துடன் வந்து சக்தியின் போக்கைப் பேசுவான்.
இல்லுமினாட்டியின் பாதையை நிர்ணயிப்பான்….. இப்படி வரும் வர்ணனைகள்….. எனக்கு ஞாபகம்
இருக்கிறது இவ்வளவு தான்…. “
விஸ்வம்
ஒரே சமயத்தில் திருப்தியும் அதிருப்தியும் சேர்ந்து உணர்ந்தான். திருப்தி வரக்காரணம்
இல்லுமினாட்டியின் பாதையை நிர்ணயிப்பவன் தேஜஸுடன் இருப்பான்,, சக்தியின் சின்னத்துடன்
வருவான், சக்தியின் போக்கைப் பேசுவான் என்ற தகவல்கள் கிடைத்தது. அதிருப்தி வரக்காரணம்
எனக்கு ஞாபகம் இருக்கிறது இவ்வளவு தான் என்ற வாக்கியம்….. இன்னும் என்ன வர்ணனைகள் அந்தச்
சுவடியில் இருக்கின்றனவோ?
(தொடரும்)
என்.கணேசன்
Very Very interesting. Great going.
ReplyDeleteஇந்த பகுதி முழுவதும்... விஸ்வத்தின் சிந்தனை மற்றும் செயல்களாகவே... வந்தது.. விருவிருப்பாக இருந்தது....
ReplyDeleteஉண்மையிலே விஸ்வம் impress செய்கிறான்....
அருமையான மற்றும் சுவாரஸ்யமான கதை!!! எழுத்துலகில் என். கணேசன் அவர்களின் லாவகம் மற்றும் ஆளுமை தூய்மையான ஆன்மீகத்தோடும் சேரும் போது ஓர் உலக இலக்கிய தரத்தை அவரது ஒவ்வொரு கதையும் அடைகின்றன.
ReplyDelete