சிவாஜியைச் சிறைபிடித்து வருவேன் அல்லது கொன்று கொண்டு வருவேன்
என்று பாஜி ஷாம்ராஜ் பீஜாப்பூரில் இருந்து ஆயிரம் குதிரை வீரர்களுடன் கிளம்பி ஜாவ்லி
பிரதேசத்தின் உள்ளே நுழைந்தது உடனடியாக சிவாஜிக்குத் தெரிய வந்தது. சிவாஜி மிகத் திறமையான
ஒற்றர் படையை வைத்திருந்தான். அது மட்டுமல்ல அக்கம்பக்கத்து சாதாரண குடிமகன்கள், வணிகர்கள்
கூட அவன் மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். ஆயிரம் குதிரை வீரர்கள் ஒரு
பிரதேசத்தில் நுழைவது ரகசியமாய் வைத்துக் கொள்ள முடிந்த செய்தியும் அல்ல… அதனால் ஒற்றர்
மூலமாகவும், வணிகர் ஒருவர் மூலமாகவும் உடனடியாக சிவாஜி தகவல் அறிந்தான்.
தகவல்
தெரிந்தவுடன் சிவாஜிக்கு, அனுப்பிய பீஜாப்பூர் சுல்தான் மீதோ, அவனைக் கொல்லக் கிளம்பிய
பாஜி ஷாம்ராஜ் மேலோ கோபம் வரவில்லை. அவர்களை உள்ளே அனுமதித்த ஜாவ்லி அரசன் சந்திராராவ்
மோர் மீது தான் கோபம் வந்தது. அதற்குக் காரணம் இருந்தது.
ஜாவ்லி
பிரதேசத்து அரசர்கள் சந்திராராவ் என்றே அழைக்கப்பட்டார்கள். மோர் இனத்து மராட்டி வீரர்களான
அவர்களுடைய மூதாதையர்களில் ஒருவர் பீஜாப்பூர் ஆதில்ஷாஹி சுல்தான்களில் முன்னோடி ஒருவருக்குப்
படைத்தலைவராக இருந்தவர். அகமதுநகர் சுல்தானுடன் அப்போதைய பீஜாப்பூர் சுல்தான் நடத்திய
ஒரு போரில் அந்த மோர் இனத்து மூதாதையர் காட்டிய வீரத்தால் அந்தப் போரில் அப்போதைய அந்த
பீஜாப்பூர் சுல்தான் வெற்றி பெற்றிருந்தார். அதில் மனம் மகிழ்ந்த அந்த சுல்தான் அவருக்கே
ஜாவ்லி பிரதேசத்தைக் கொடுத்து விட்டார். அன்றிலிருந்து அந்தப் பிரதேசத்தின் அரசர்களாக
மோர் இன வழித்தோன்றல்கள் சந்திராராவ் மோர் என்ற பெயரில் அரசாள ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில்
பீஜாப்பூர் சுல்தானுக்கு வருடம் ஒரு தொகை அந்த நன்றியின் காரணமாகத் தர ஆரம்பித்தது
இப்போதும் தொடர்ந்து வருகிறது. அவர்கள் பீஜாப்பூர் சுல்தானுக்கு விசுவாசமாகவும் இருந்து
வந்தார்கள்.
ஜாவ்லி
பிரதேசம் மிக முக்கியமான இடமாக இருந்தது. சகாயாத்ரி மலைத்தொடரின் மராட்டியப் பகுதியில்
ஜாவ்லி பிரதேசத்தைத் தவிர மற்ற பகுதிகள் எல்லாம் சிவாஜிக்குச் சொந்தமாக இருந்தன. அந்தப்
பிரதேசத்தையும் அவன் கைப்பற்றினால் சிவாஜிக்கு மராட்டியப் பகுதியின் சகாயாத்ரி மலையை
ஒட்டிய பகுதிகள் அனைத்தும் வசப்பட்டது போல ஆகும். அதனால் சிவாஜியின் நண்பர்களும் ஆலோசகர்களும்
சிவாஜியிடம் ஜாவ்லி பிரதேசத்தையும் கைப்பற்ற அறிவுரை கூறினார்கள்.
ஆனால்
சிவாஜி அதுநாள் வரை மறுத்து வந்தான். “இது வரை நாம் கைப்பற்றிய பகுதிகள் வேறு வகை.
அவையெல்லாம் இந்த மண்ணின் மக்கள் ஆண்டவை அல்ல. ஆனால் ஜாவ்லியை ஆள்வது நம்மவர்கள். நம்
இனத்து மக்கள் ஆளும் பகுதியை நாம் தந்திரமாகக் கைப்பற்றுவது சரியல்ல. போரிட்டு வெல்வதற்கு
அவர்கள் நம் எதிரிகள் அல்ல. அதனால் முடிந்த வரை அவர்களை நம் பக்கம் சேர்க்கப் பாடுபடுவோம்….”
இப்படி
நம்மவர்கள் என்று எண்ணி ஒதுங்கி நின்றவனை வீழ்த்த ஒரு படை வருகிறது. வீழ்த்தப்பட இருப்பவன்
நம்மவன் என்ற சகோதரத்துவம் சிறிதும் இல்லாமல் அவர்களை சந்திராராவ் மோர் உ:ள்ளே விட்டது
தான் சிவாஜியைக் கோபமூட்டியது.
பாஜி
ஷாம்ராஜ் சிவாஜியின் எல்லைப்பகுதி தாண்டி ஜாவ்லி பிரதேசத்தில் சில மைல்கள் தொலைவில்
இருக்கும் பார்காட் மலைப்பகுதியில் ரகசிய முகாமிட்டுத் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைக்க
சிவாஜி அவர்கள் வரக் காத்திராமல் அதிரடியாக அவர்கள் சிறிதும் எதிர்பார்க்காத சமயத்தில்
அங்கு சென்று தாக்குதல் நடத்தினான். பாஜி ஷாம்ராஜ் சில மணி நேரங்கள் கூடச் சமாளிக்க
முடியாமல் தன் உயிருக்குப் பயந்து தப்பியோடினான்.
அவர்களைத்
துரத்தியடித்து விட்டுத் திரும்பிய சிவாஜியிடம் அவன் நண்பர்கள் ஜாவ்லியை இந்தச் சம்பவத்திற்குப்
பிறகாவது கைப்பற்றுவது முக்கியம் என்பதைச் சொன்னார்கள். அப்போதும் சிவாஜிக்கு மனம்
வரவில்லை. அன்னியர்களிடம் நடந்து கொள்வதைப் போல சகோதரர்களிடமும் நடந்து கொள்வது சரியல்ல
என்று சொன்னான்.
“சகோதரன்
எதிரிக்கு இடம் கொடுத்தால்?’ என்று ஒரு நண்பன் கேட்டான்.
“முதலில்
கூப்பிட்டு அறிவுரை சொல்ல வேண்டும். புத்திமதி சொல்ல வேண்டும். அப்படியும் அவன் திருந்தா
விட்டால் பார்க்கலாம்” என்றான் சிவாஜி.
ஆலோசகர்களும்
நண்பர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சிவாஜியின் பேரறிவையும் மீறி அவனுக்கு
அந்த மண் மீதும், மண்ணின் மைந்தர்கள் மீதும் அபிமானம் இருப்பதை உணர்ந்த அவர்களுக்கு
அதற்கு மேல் சிவாஜியிடம் பேசுவது வீண் என்று தோன்றியது. சந்திராராவ் மோர் அறிவுரைக்குத்
திருந்துவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கில்லை. ஆனால் சிவாஜி தானாக உணர்ந்தால் ஒழிய
மனம் மாற மாட்டான்.
ஒரு
ஆலோசகர் சொன்னார். “உங்கள் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பவில்லை. முயன்று பாருங்கள்….”
சிவாஜி
மறுநாளே சந்திராராவ் மோரைச் சந்திக்கக் கிளம்பினான்.
சந்திராராவ் மோர் பரம்பரையே வீரப்பரம்பரையாக இருந்தது. இப்போதுள்ள
அரசனின் தம்பிகளும், மகன்களும் தேர்ச்சி பெற்ற வீரர்கள். இப்போதைய சந்திராராவ் மோரும்
வீரனே என்றாலும் கடந்த சில ஆண்டுகளாகக் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இருந்தான். வீரத்திற்கு
இணையான அறிவு அவனிடம் இருக்கவில்லை. அது அவன் குடும்பத்தில் மற்றவர்களிடமும் இருக்கவில்லை.
தங்களை மிக உயர்வாகவும், சிவாஜியைத் தாழ்வாகவும் அவர்கள் எண்ணியிருந்தார்கள்.
பீஜாப்பூர்
சுல்தானையே எதிர்க்கத் துணிந்த சிவாஜி, அக்கம்பக்கத்துக் கோட்டைகளையெல்லாம் தன்வசப்படுத்திக்
கொண்ட சிவாஜி, ஜாவ்லி பிரதேசத்தைக் கைப்பற்ற முயற்சி செய்யாதது அவர்கள் மேல் இருக்கும்
பயத்தால் என்ற அபிப்பிராயம் அவர்களுக்கு இருந்தது. அதனால் தன்னிடம் பேச வந்த சிவாஜியிடம்
சந்திராராவ் மோர் சமமில்லாதவர்களிடம் காட்டும் அலட்சியத்தையே காட்டினான்.
சிவாஜி
அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்களிடம் வரலாற்றைச் சொன்னான். அன்னியர்களிடம் இந்த
தேசம் சிக்கியது எப்படி, அவர்கள் இந்தத் தேசத்தினரை எப்படி நடத்துகிறார்கள் என்பதை
எல்லாம் விளக்கமாகச் சொன்னான். சுயராஜ்ஜியம் குறித்த தன் கனவைச் சொன்னான். நாம் ஒன்று
சேர்ந்து அன்னியர்களை எதிர்க்க வேண்டுமே ஒழிய ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதும்,
அழிக்க நினைப்பதும் சரியல்ல என்று சொன்னான்.
சந்திராராவ்
மோருக்கு அவன் பேசியது பாதி புரியவில்லை. மீதி சரியென்று தோன்றவில்லை. அவன் அலட்சியமாகச்
சொன்னான். “சிவாஜி! நாங்கள் வீரப் பரம்பரை மன்னர்கள். எங்களிடமே வந்து நீ அறிவுரை சொல்வது
எனக்கு வியப்பூட்டுகிறது. யார் நீ? உன் தாய்வழி பாட்டனார் சிந்துகேத் அரசராக இருந்தவராக
இருக்கலாம். ஆனால் உன் தந்தை வழிப் பாட்டனார் பிழைப்புக்காக அகமதுநகர் வந்தவர். அகமதுநகர்
சுல்தானின் தயவால் படைத்தலைவர் பதவியைப் பெற்றவர். உன் தந்தையும் மன்னரல்ல. அவர் பல
முயற்சிகள் செய்து தோற்று இப்போது பீஜாப்பூர் சுல்தானின் தயவால் ஒரு நிலையில் இருக்கிறார்.
அதுவும் அரச பதவியில் அல்ல. நீ அக்கம் பக்கத்துக் கோட்டைகளை ஏமாற்றிக் கைப்பற்றியவுடனேயே
உன்னை அரசனைப் போல நினைத்துக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது……”
தன்னுள்
எழ ஆரம்பித்த கடுங்கோபத்தை சிவாஜி கட்டுப்படுத்திக் கொண்டு தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்
கொள்ளாமல் சந்திராராவ் மோர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தான். சந்திராராவ் மோரின்
தம்பி ஒருவனும் மகன் ஒருவனும் அங்கிருந்தார்கள். அவர்கள் சந்திராராவ் மோரின் பேச்சைத்
தடுக்கவில்லை. மாறாக சிவாஜியிடம் சந்திராராவ் மோர் மிகச்சரியாகவும், அவன் நிலையை உணர்த்துகிறமாதிரி
சிறப்பாகவும் பேசுகிறது போல் நினைத்து மந்தகாசப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சிவாஜி
சந்திராராவ் மோரிடம் அமைதியாகக் கேட்டான். “என்னை அழிக்க வந்த பீஜாப்பூர் சிறுபடைக்கு
அனுமதி கொடுத்து உள்ளே விட்டாயே. அது சரியா? நானும் நீயும் இந்த மண்ணின் மைந்தர்கள்.
ஒரு சகோதரனைக் கொல்ல கூட்டு நின்றது சரிதானா?”
சந்திராராவ்
மோர் அலட்சியமாகச் சொன்னான். “உண்மையில் நீ என் நிலப்பகுதிக்கு வந்து அவர்களைத் தாக்கியது
தான் தவறு. அதற்கு மன்னிப்புக் கேட்பதை விட்டு என்னைத் தவறு செய்தவன் போல் கேள்வி கேட்பது
அதை விடப் பெரிய தவறு. ஒரு மன்னனுக்கு இன்னொரு மன்னன் உதவுவது சரி தான். நீ பீஜாப்பூரின்
ஆயிரம் குதிரை வீரர்களைத் துரத்தியடித்து விட்டதில் உன் வீரத்தைக் காட்டி விட்டதாய்
நினைக்கிறாய். இதுவே என் படையாக இருந்திருந்தாலும், பீஜாப்பூரின் பெரும்படையாக இருந்திருந்தாலும்
நீ தான் சகாயாத்ரி மலையில் பதுங்கியிருந்திருக்க வேண்டி வந்திருக்கும்…”
சிவாஜி
புன்னகைத்தான். அவனைப் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் அவன் புன்னகைத்த விதத்தில் அபாயத்தை
உணர்ந்திருப்பார்கள். ஆனால் சந்திராராவ் மோர் தான் இத்தனை பேசியும் சிவாஜி எதிர்க்க
வழியில்லாமல் அதைப் பொறுத்துக் கொண்டிருப்பதாக எண்ணினான்.
திடீரென்று
அவனுக்கு சிவாஜியை அங்கேயே பிடித்து வைத்து பீஜாப்பூர் சுல்தானிடம் ஒப்படைத்தால் என்ன
என்று தோன்றியது. அப்படித்தானே இவனது தந்தையை பாஜி கோர்படே ஒப்படைத்தான்…. இந்த எண்ணம்
வந்தவுடன் சந்திராராவ் மோர் அதை எப்படி நிறைவேற்றுவது என்று அவசரமாக யோசித்தான்.
(தொடரும்)
Going great.
ReplyDeleteசுவாரசியமாகப் போகிறது.
ReplyDeleteமுழு தொடரும் சாதரணமாக நகர்ந்தது.... இறுதியில் சூடேறும் போது....(தொடரும்)..போட்டுடிங்களே...!!!!
ReplyDeleteWhether this book is not available to buy in amazon? I tried but couldn't find.
ReplyDeleteஇப்போது கிடைக்கிறது. லிங்க்
Deletehttps://www.amazon.in/Chhatrapati-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-N-Ganeshan/dp/9381098425/ref=sr_1_6?qid=1556807410&refinements=p_27%3AN.Ganeshan&s=books&sr=1-6