நள்ளிரவு நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு ராக்ஷசர் கண்விழித்தார். மிகமிக அவசியமான சமயங்களில் மட்டுமே இப்படி எழுப்பப் படுவது வழக்கம் என்பதால் ராக்ஷசர் பலவிதமாக யோசித்தபடியே விரைந்து எழுந்து வந்து அறைக் கதவைத் திறந்தார். கதவைத் தட்டிய காவலனை ‘என்ன விஷயம்?’ என்று அவர் பார்வை கேட்டது.
காவலன் பதற்றத்துடன் சொன்னான். “நம் ஆயுதக்கிடங்கு
பெருந்தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது பிரபு”
காவலன் சொன்னது அவரைக் குழப்பத்திலேயே
ஆழ்த்தியது. ஆயுதக்கிடங்கில் தீப்பிடிக்க எதுவுமில்லையே என்று யோசித்தவராக, ”எப்படி?” என்று அவர்
கேட்டார்.
அந்தக் கேள்விக்கு அவனிடமும் பதில்
இருக்கவில்லை. “தெரியவில்லை பிரபு. அங்குள்ள
காவலர்களும், அருகில் .உள்ளவர்களும் தீயணைக்கப்
போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியோடு ஒரு வீரன் விரைந்து இங்கு வந்திருக்கிறான்.”
ராக்ஷசர் விரைவாக
உடை மாற்றிக் கொண்டு, ஆயுதக்கிடங்கை நோக்கித் தன் குதிரையை முடுக்கி விட்டார். செய்தி
கொண்டு வந்த வீரனிடம் கூடுதல் தகவல்கள் பெற முயல்வதை விட நேரடியாக சம்பவ இடத்திற்கே
நேரில் சென்று இந்த அசாதாரண சம்பவம் குறித்த தகவல்கள் அனைத்தையும் அறிவது புத்திசாலித்தனம்
என்று அவருக்குத் தோன்றியது.
ஆயுதக்கிடங்கு பற்றியெரியும் ஜுவாலை
தூரத்திலிருந்தே அவருக்குத் தெரிந்தது. மக்களின் கூச்சல்களும்
கேட்டன. ஆயுதக்கிடங்கை நெருங்க நெருங்க நெருப்பின் வெப்பமும் கூடிக்
கொண்டே வந்தது.
அவருக்கு முன்பே காவலர் தலைவன் ஜீவசுத்தியும்
வந்து சேர்ந்திருந்தான். தீயணைப்பு வேலையில் மற்றவர்களுடன் மும்முரமாக ஈடுபட்டிருந்த
அவன் ராக்ஷசரைப் பார்த்தவுடன் வணக்கம் தெரிவித்தபடி அவரருகே வர யத்தனித்தான். ராக்ஷசர் அவனிடம்
தீயணைக்கும் பணியைத் தொடர்ந்து கவனி என்று சைகையால் கட்டளையிட அவன் அந்தப் பணியைத்
தொடர்ந்தான்.
ராக்ஷசரின்
பார்வை அங்குள்ள நிலைமையைக் கூர்ந்து கவனித்து அலசியது. தகவல் தெரிவித்த
வீரன் சொன்னது போல் அது பெருந்தீ தான். ஆனால் இரும்பினால்
செய்யப்பட்ட ஆயுதங்களே அதிக அளவில் இருக்கும் அந்த ஆயுதக்கிடங்கு இந்த அளவு ஆக்கிரோஷமாக
எரிவது இயல்பாக இல்லை. இதில் எதோ சதி நடந்திருக்கிறது....
தீயணைக்கும் பணி முழுவதுமாக முடிந்தபின்
அவர் ஜீவசித்தியிடம் கேட்டார். “எப்படி
இது ஆரம்பித்தது?”
ஜீவசித்தி சொன்னான். ”எனக்கும்
தெரியவில்லை பிரபு. கேட்கவும் நேரமிருக்கவில்லை. சற்று பொறுங்கள். காவலுக்கு
இருந்தவர்களை அழைத்து வருகிறேன்.”
அவன் சென்ற பின் அவர் மறுபடி ஆயுதக்கிடங்கைப்
பார்வையால் ஆராய்ந்தார். கதவு உட்பட மரத்தாலான அனைத்தும் கருகி சாம்பலாகி இருந்தன. உள்ளே என்ன
நிலவரம் என்பது பிறகு தான் தெரியவரும். தீப்பிடித்திருந்த
இடங்கள் இப்போதும் அனலாய் சுடுவதால் இப்போதே
சென்று பார்க்க வழியில்லை...
ஜீவசித்தி இரண்டு காவல் வீரர்களுடன்
வந்தான். “பிரபு, இவர்கள் இருவரும் தான் இன்று இங்கே காவலில் இருந்தவர்கள்.”
அந்த இரண்டு காவல் வீரர்கள் முகத்திலும்
மிரட்சி தெரிந்தது. தீவிபத்து தந்திருந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இன்னமும்
மீளவில்லை என்பதும் அவருக்குத் தெரிந்தது. அவர் அவர்களிடம்
கடுமையான குரலில் கேட்டார். “இந்த தீவிபத்து எப்படி நடந்தது?”
இருவரில் ஒருவன் எச்சிலை விழுங்கியபடி
சொன்னான். “சரியாகத் தெரியவில்லை பிரபு. திடீரென்று
உள்ளேயிருந்து புகைய ஆரம்பித்தது. கதவு வழியாகப் புகை வெளிப்படுவதைப் பார்த்து விட்டு நாங்கள்
பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனோம். அப்போது உள்ளே நன்றாக
தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதுடன் பல இடங்களுக்கும் வேகமாகப் பரவுவது தெரிந்தது.... முடிந்த
வரை உடனடியாக அணைக்க முயற்சி செய்தோம்....”
ராக்ஷசர் அவர்களைக்
கூர்ந்து பார்த்தபடி கேள்விகள் கேட்டார். அவர்களுக்கு உண்மையிலேயே
இந்தத் தீவிபத்தில் பங்கில்லை என்பது புலனாக அவருக்கு அதிக நேரமாகவில்லை. பூட்டியிருந்த
ஆயுதக்கிடங்கில் தீப்பற்றியது எப்படி என்ற கேள்வி அவர் மனதில் பிரம்மாண்டமாக எழுந்தது.
அவர் ஜீவசித்தியிடம் கேட்டார். “மன்னருக்கும்
தகவல் அனுப்பியாகி விட்டதா?”
“தங்களுக்குத்
தகவல் அனுப்பிய போதே அவருக்கும் அனுப்பியிருக்கிறேன். ஆனால் உறங்கிக்
கொண்டிருக்கும் மன்னரை எழுப்ப அவரது காவலர்கள் தயங்கியிருக்கிறார்கள். காலையில்
அவர் எழுந்தவுடன் இந்தத் தகவலைச் சொல்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.”
அதைக் கேட்டுவிட்டு ராக்ஷசர் ஒன்றும்
சொல்லவில்லை. அனல் தணியும் வரை மௌனமாகக் காத்திருந்த அவர் பின் மிகவும்
கவனமாக ஆயுதக்கிடங்கினுள்ளே சென்று ஆராய்ந்தார். நீண்ட நேரம்
கழிந்து வெளியே வந்த போது அவர் முகம் இறுகியிருந்தது.
அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து விட்டு ராக்ஷசர் தனநந்தனின்
வரவுக்காகக் காத்திருந்தார். பத்ரசால், வரருசி உட்பட மற்றவர்கள்
தகவல் கிடைத்தவுடனே கிளம்பி வந்து விட்டிருந்தனர். அனைவருக்கும்
ஆயுதக்கிடங்கு தீவிபத்தில் கருகியது அதிர்ச்சியாகத் தானிருந்தது என்பது அவர்கள் தாழ்ந்த
குரலில் பேசிக் கொண்டதிலேயே தெரிந்தது.
வரருசி மனத்தாங்கலுடன் சொன்னார். “நம் பாடலிபுத்திரத்தில்
இவ்வளவு ஒரு சம்பவம் இது வரை நடந்ததில்லை.”
பத்ரசால் கோபத்தோடு சொன்னான். “குற்றவாளிகள்
யாரானாலும் அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.”
ராக்ஷசர் எந்தக்
கருத்தையும் சொல்லவில்லை. கருத்துக்கள் தெரிவிப்பதால் மட்டும் எந்தக் காரியமும் நடந்து
விடுவதில்லை.
தனநந்தன் நீண்ட நேரம் கழித்து நிதானமாகத்
தான் வந்தான். அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தவுடன் அதை ஏற்றுக்
கொண்டு தன் ஆசனத்தில் அமர்ந்த அவன் அவர்களை அமருமாறு சைகை செய்தான். அவர்கள்
அமர்ந்தவுடன் ராக்ஷசரிடம் அவன் கேட்டான். “சாதாரணமாக
ஆயுதக்கிடங்கில் தீப்பிடிக்க வாய்ப்பில்லையே. என்ன ஆயிற்று?’
ராக்ஷசர் மெல்லச்
சொன்னார். “எதிரிகள் திட்டமிட்டுச் செய்த சதிச்செயலாகத் தான் எனக்குத்
தோன்றுகிறது.”
தனநந்தன் அவர் முகபாவனையிலும் அவர்
சொன்ன தகவலிலும் ஆபத்தை உணர்ந்தான். “எப்படிச் சொல்கிறீர்கள்?”
ராக்ஷசர் விளக்கமாகச்
சொன்னார். “பொதுவாக நாம் ஆயுதக்கிடங்கின் முன்பகுதியில் வீரர்களின் பயிற்சிக்காக
தினசரி பயன்படுத்தும் முக்கிய ஆயுதங்களை வைத்திருப்போம். பரந்த பின்பகுதியில்
மற்ற அனைத்து ஆயுதங்களையும் வைத்திருப்போம். பின்பகுதியில்
சீக்கிரமாகத் தீப்பிடிக்க உகந்த பொருள்கள் முன்பே அங்கே குவிக்கப்பட்டிருந்தன போலத்
தெரிகிறது. பின்பகுதியை நாம் அடிக்கடி திறந்து பார்க்கும் அவசியம் இல்லாததால்
அது நம் கவனத்திற்கு வரவில்லை. சாதாரணமான, இயல்பான தீவிபத்தாக
இருந்திருந்தால் பக்கவாட்டில் இருக்கும் சில ஆயுதங்கள் சேதமடைந்திருக்கலாமேயொழிய இப்படி
எல்லா ஆயுதங்களும் முழுமையாகச் சேதமாயிருக்க வாய்ப்பேயில்லை. இப்படி
ஆக வேண்டும் என்றே ஆயுதங்களுக்கு இடையிடையே எரிபொருள்களை திட்டமிட்டு வைத்திருந்தால்
மட்டுமே இப்படி நிகழ முடியும்....”
ஆத்திரத்தில் தனநந்தனுக்குப் பேச வார்த்தைகள்
கிடைக்கவில்லை.
பத்ரசால் கேட்டான். “முன்பகுதியில்
இருந்த ஆயுதங்கள்?”
“அவையும்
நிறைய சேதமாகியுள்ளன என்றாலும் கூட கஷ்டப்பட்டு முயன்றால் ஓரளவு சரிசெய்து விடலாம். ஆனால் எண்ணிக்கையில்
அவை பின்பகுதி ஆயுதங்களை வைத்து ஒப்பிடுகையில் மிகவும் குறைவே. யாரோ மிகவும்
சாமர்த்தியமாகத் திட்டமிட்டு இக்காரியத்தைச் செய்திருக்கிறார்கள்.”
தனநந்தன் கோபத்தில் கொதித்தபடி கேட்டான். “யாரந்த
எதிரிகள்?”
ராக்ஷசர் சொன்னார். “என் சந்தேகம்
விஷ்ணுகுப்தர் மற்றும் சந்திரகுப்தன் மீது தான்”
சமீப காலமாகவே எல்லாவற்றிற்கும்
அவர்கள் பெயர்களையே ராக்ஷசர் சொல்வது அவர்களுக்கு அவர் தரும் கூடுதல் முக்கியத்துவம்
போல் தோன்றினாலும் அவர் எதிலும் முட்டாள்தனமாய் யோசிப்பவர் அல்ல என்பதால் தனநந்தன்
அவர் கருத்தை அலட்சியப்படுத்த விரும்பாமல் கேட்டான். ”அங்கு காவலுக்கு
நம் ஆட்கள் இருக்கும் போதே இந்தச் சதியை எப்படி அவர்களால் அரங்கேற்ற முடிந்தது? இதில் நம்
காவலர்களுக்கும் பங்கிருக்கிறதா?”
ராக்ஷசர் எதுவும்
சொல்வதற்கு முன்பே வரருசி சொன்னார். “விஷ்ணுகுப்தர் மாந்திரீகத்திலும்
வல்லவர் என்று நான் கேள்விப்பட்டதை முன்பே சொல்லி இருக்கிறேன். மாந்திரீகத்தில்
தீயை ஓரிடத்தில் வரவழைப்பது முடிந்த காரியமே”
பத்ரசாலுக்கு மாந்திரீகத்தில் நம்பிக்கை
இருக்கவில்லை. அவன் ராக்ஷசர் கருத்தை அறிய
அவரைப் பார்த்தான்.
ராக்ஷசருக்கும்
அது மாந்திரீகச் செயலாகத் தெரியவில்லை. அவர்
ஆயுதக்கிடங்கில் ஆராய்ந்த போது கிடைத்த நிறைய எரிபொருள்களின் தடயம், நிஜம் வேறு என்று அவரை எச்சரித்தது. அவர் சொன்னார்.
“விஷ்ணுகுப்தரின்
அசாத்திய வளர்ச்சியைப் பார்க்கையில் நீங்கள் சொல்வது போல் மாந்திரீகம் மாதிரியான எதாவது
கூடுதல் சக்தி அவருக்கு உதவியிருக்கலாம் என்று தோன்றுகிறது தான். ஆனால் இந்த தீவிபத்தில் மாந்திரீகத்தை விட, சதியின் பங்கையே நான் அதிகம் பார்க்கிறேன். இது ஏதோ ஓரிரு நாளில் நடந்து முடிந்த
செயலாய் தோன்றாததால் இந்தச் சதியில் இங்குள்ளவர்களில் ஒருசிலருக்கும் பங்கிருக்கலாம்
என்பதையும் என்னால் மறுக்க முடியவில்லை”
அந்தக் கடைசி செய்தி அவர்கள் அனைவரையும்
அதிர வைத்தது.
(தொடரும்)
என்.கணேசன்
"சம்மந்தம் இல்லாமல் எதிரி ஆயுதக்கிடங்கில் தீ வைத்துள்ளான் எனில், அடுத்த ஆயுதம் தயார் செய்து முடிக்கும் காலத்திற்குள் ஏதாவது செய்யப் போகிறான்" என்பதை தனநந்தன் புரிந்து கொள்ள வேண்டும்.
ReplyDelete