அந்த ஓநாய் அவன் கண்களுக்கு மட்டும் தெரிகிறதா, இல்லை கண்காணிப்பு காமிராவிலும் அகப்படுமா என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் சற்று முன் அவன் ஹாய் என்று சொன்னது கண்டிப்பாய் காமிராவில் பதிந்திருக்கும். இனி அவன் எதாவது வாய்விட்டுப் பேசினால் அதுவும் கண்டிப்பாகப் பதியும்.
அவன் மிகவும் எச்சரிக்கையுடன், தன் மனதிற்குள்
அதனுடன் பேசினான். “ஹாய் நண்பா. ஏன் இங்கே வந்திருக்கிறாய்?”
அந்த ஓநாய் அவனுடைய கட்டிலுக்கு மேல்
தாவி அவனுடைய வலது மடிக்கு மிக அருகில் வந்து நின்றது. அவன் தியானம்
செய்யும் கோலத்தில் தான் அமர்ந்திருந்தான். அவன் முழங்கால்
அருகே முத்திரையாக வைத்திருந்த வலது கைவிரல்களை நீட்டினான். அந்த ஓநாய்
தன் கால் ஒன்றைத் தூக்கி அந்தக் காலால் அவன் விரலைத் தொட்டது. உடனே அவன் உடல் ஏதோ ஒருவித உஷ்ணத்தை உணர்ந்தது. அவனுக்கு
உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. அதன் பின்
ஷ்ரவன் தன் நினைவை முழுவதுமாக இழந்தான்.
அவன் சுயநினைவுக்கு வந்த போது உட்கார்ந்த
நிலையிலேயே கட்டிலில் குப்புறக் கவிழ்ந்திருந்தான். திகைப்புடன்
நிமிர்ந்து உட்கார்ந்து சுற்றிலும் பார்த்தான். அந்த ஓநாய்
இருக்கவில்லை. நடந்த சம்பவங்களை எல்லாம் ஷ்ரவன் நினைவுபடுத்திப் பார்த்தான். மின்சாரம்
பாய்ந்தது போல் உணர்ந்தது தான் கடைசியாக நினைவிருந்தது. அதன்பின்
நடந்தது எதுவும் அவனுக்கு நினைவில்லை. கட்டிலில் அமர்ந்திருந்தவன்
எப்படிக் குப்புறக் கவிழ்ந்தான் என்று தெரியவில்லை. பக்கத்தில்
வைத்திருந்த அலைபேசியை எடுத்து நேரம் என்ன என்று பார்த்தான். 7.27 என்று காட்டியது.
அவன் நடைப்பயிற்சி முடிந்து அறைக்குத் திரும்பிய போது மணி ஆறரை வாக்கில்
இருந்திருக்கக்கூடும். கணக்கிட்டு பார்த்த போது அரை மணி நேரத்துக்கு மேல் அவன் இப்படி
நினைவில்லாமல் இருந்திருக்கக்கூடும் என்பது தெரிந்தது.
முதல் முறையாக தனக்கு என்ன நடந்தது
என்று அவனுக்கே தெரியாதிருக்கையில், அதை விவரமாக காமிராப்
பதிவு மூலமாக யோகாலயத்தின் முக்கியஸ்தர்கள் அறிந்திருப்பார்கள் என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. என்ன நடந்திருக்கிறது? எதனால்
இப்படி நடந்திருக்கிறது? இதன் அர்த்தம் தான் என்ன? ஒன்றும்
அவனுக்கு விளங்கவில்லை.
திடீரென்று மந்திர உபதேசம் செய்த போது
பரசுராமன் சொன்னது ஷ்ரவனுக்கு நினைவுக்கு வந்தது. ”உனக்கு
வேறொரு புது உலகத்தை இது அறிமுகப்படுத்தும்....”
இது அவர் சொல்லும் புது உலக அறிமுகத்தின்
ஆரம்பமா?
இந்தக் குழப்பத்திற்கு விடை கிடைக்கவில்லை. ஆனால் அதிகம் யோசிக்க நேரம் இல்லை. குளித்து
விட்டு, சாப்பிட்டு, வகுப்புக்குப் போகுமளவு
நேரம் தான் இருக்கிறது. அவன் அவசரமாக எழுந்தான்.
அன்று காலை அவன் உணவுக்குப் போன போது
எதிரே தான் ஸ்ரேயா அமர்ந்திருந்தாள். ஆனால் அவள் அவனைப்
பார்த்து ஆரம்ப சம்பிரதாயப் புன்னகை கூடப் பூக்கவில்லை. அவளருகே
அமர்ந்திருந்த கமலம்மா அவனைப் பார்த்துக் கையசைத்து “குட் மார்னிங்” சொன்னாள். அப்போதும்
ஸ்ரேயா அவன் பக்கம் திரும்பவில்லை.
ஷ்ரவனும் கமலம்மாவிடம் “குட் மார்னிங்” சொன்னான்.
அன்று காலை வகுப்புகளில் ஷ்ரவனின் மனம்
தங்கவில்லை. துறவிகள் பாடம் கற்றுத் தந்தது அவனுக்கு வெறும் சத்தங்களாகவே
இருந்தன. அவனை அறியாமல் அவன் பார்வை ஸ்ரேயா பக்கம் அடிக்கடி போனது. மற்ற சமயங்களில்
அவன் மனம் இன்றைய காலைய அமானுஷ்ய அனுபவத்தைப் பற்றி யோசித்தது.
மதிய உணவின் போது அவன் பார்வை பட முடியாதபடி
அவனுக்கு பின்புற வரிசையில் அமர்ந்து ஸ்ரேயா சாப்பிட்டாள்.
மதியம் முதல் வகுப்பிற்கு கல்பனானந்தா
வந்தாள். வகுப்பினுள் நுழைந்தவுடன் மேசையருகே நின்று கொண்டு, வகுப்பில்
உள்ளவர்கள் ஒவ்வொருவரையும் வரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்தவள் பார்வை ஷ்ரவன் மீது
விழுந்தவுடன் ஒரு கணம் அவன் மீதே நிலைத்தது. அவனைக்
கூர்ந்து கவனித்தாள். அவள் எதையோ நினைவுபடுத்திக் கொள்வது போல் தெரிந்தது. பின் அவள்
பார்வை அவனை வேகமாகக் கடந்தது.
இதற்கு முன் வகுப்பெடுக்க வந்த துறவிகளில்
சிலரும், முதல் முறை வரும் போது, மேலோட்டமாக
அனைவரையும் பார்த்தார்கள். அவர்கள் தங்களுக்கு நினைவிலிருப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா
என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில்
பார்த்தது போல் இருந்தது. ஆனால் கல்பனானந்தாவின் பார்வையில் கூடுதலாக ஏதோ ஒன்று இருந்தது.
பின் அவள் தன்னை அறிமுகப்படுத்திக்
கொண்டு அவள் கற்றுக் கொடுக்க வந்ததைப் பாடம் நடத்த ஆரம்பித்தாள். ஆத்ம ஞானத்திற்கு
யோகா, தியானப் பயிற்சிகள் எப்படி உதவுகின்றன என்ற விளக்கம் அளிக்கும்
பாடம் அது. மற்ற துறவிகளை விடச் சிறப்பாகவே அவள் விளக்கங்களை அளித்தாள். சற்று ஆழமான
ஞானம் உடையவர்கள் மட்டுமே அவள் அளவுக்கு எளிமையாக விளக்கங்கள் தரமுடியும் என்று ஷ்ரவன்
நினைத்துக் கொண்டான். அவனையும் அறியாமல் அவன் அவள் சொல்வதைக் கூர்ந்து கவனிக்க
ஆரம்பித்தான். இன்று காலை வகுப்புகளில் இருந்த அலைபாயும்
மனம் தற்போது இருக்கவில்லை.
ஆனால் அந்த நிலை சுமார் அரை மணி நேரம் மட்டுமே நீடித்தது. வகுப்பறைக்குள் மெல்ல ஓநாய்
நுழைவதைக் கண்டவுடன் திகைப்பில் அவன் கண்கள் விரிந்தன.
அவன் மற்றவர்களைப் பார்த்தான். யாரும்
எந்தப் பாதிப்புமில்லாமல் அமர்ந்து கல்பனானந்தாவின் விளக்கங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். கல்பனானந்தாவும்
இயல்பாகப் பேசிக் கொண்டேயிருந்தாள்.
உள்ளே நுழைந்த ஓநாய் அவனையே பார்த்தபடி
கல்பனானந்தாவின் அருகில் நின்றது. ஆனாலும், ஷ்ரவனைத் தவிர அவர்கள்
யாருக்கும் அந்த ஓநாய் தெரியவில்லை...!
வகுப்பறையில் நுழைந்து அவனையே பார்த்துக்
கொண்டிருந்த ஓநாயிடம் மனதிற்குள் ஷ்ரவன் பேசினான். “ஹாய் நண்பா”
அந்த ஓநாய் இரண்டடி முன்னால் எடுத்து
வைத்தது. இது தான் அவன் பேசுவதற்கு அதன் எதிர்வினை போல இருந்தது.
“காலையில்
என்னை நீ என்ன செய்தாய். நீ என்னைத் தொட்டதற்குப் பின் என்ன ஆனது?” மறுபடியும்
அவன் மானசீகமாக அதனிடம் கேட்டான்.
பாடம் நடத்திக் கொண்டிருந்த கல்பனானந்தா
பார்வை ஷ்ரவனின் மீது விழுந்த போது அவன் வேறெங்கோ பார்ப்பது தெரிந்தது. அவன் பார்த்த
இடத்தின் பக்கம் தன் பார்வையை அவள் திருப்பினாள். அது காலியிடமாக
இருந்தது. ஆனால் அவன் பார்வை வெற்றுப் பார்வையாக இல்லை. யாரையோ
அல்லது எதையோ அந்த வெற்றிடத்தில் அவன் பார்த்துக் கொண்டிருந்தது போல் இருந்தது.
அவள் அவனைப் பார்ப்பதைக் கூட அவன் கவனிக்கவில்லை. அவனுடைய
கவனம் முழுமையாக அந்த ஓநாயின் மீதே இருந்தது. அவன் கேட்ட
கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனையே அது அமைதியாகப் பார்த்தது. இப்போது
அதன் தீ உமிழும் கண்கள் கூட அமானுஷ்யமாகத் தெரியவில்லை. அன்பை உமிழும் ஞான ஒளியாகத் தான் அவனுக்குத் தெரிகிறது. அவன் மறுபடியும்
அதனிடம் அதே கேள்வியை மானசீகமாகக் கேட்டான்.
அந்த ஓநாய் பேசாமல் அவனைப் பார்த்தபடியே
நின்றிருந்தது. ஆனால் அந்த நேரத்தில் பரசுராமன் மந்திர உபதேசம் செய்த நாளில்
சொன்ன வார்த்தைகள் மறுபடியும் அவனுடைய நினைவுக்கு வந்தது. அது தற்செயலாகவா
இல்லை, பரசுராமனின் சக்தியாலா என்பது அவனுக்குத் தெரியவில்லை.
”சில மகத்தான
விஷயங்களைப் பத்தி முன்கூட்டியே விளக்கறது, வரப் போகிற
அனுபவங்களோட மகத்துவத்தைக் குறைச்சுடும். எதையும் அனுபவிக்கறப்ப
சொந்தமாய் என்ன உணர்கிறோம்கிறது
ரொம்ப முக்கியம். முன்கூட்டியே கிடைக்கிற விளக்கங்கள், நம் சொந்த
அனுபவத்துக்கு சாயம் பூசிடறதுக்கு வாய்ப்பு உண்டு. தானாய்
உணர வேண்டியதை, அடுத்தவங்களோட விளக்கப்படி புரிஞ்சுக்கற அபத்தம் நிகழ்ந்துடும்...”
என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது, இதன் பொருள்
என்ன என்பது அவனாய் கண்டு உணர வேண்டியது தானோ? ஒரு மனிதன்
தன் ஆழ்மனதிடம் கேட்டு அங்கேயே உணர வேண்டியதோ?
ஓநாய் கல்பனானந்தாவின் பக்கம் திரும்பியது. அவளையே
சிறிது நேரம் பார்த்தது. பின் அது அங்கிருந்து வெளியேறியது.
அது கல்பனானந்தாவை ஏன் பார்த்து நின்றது
என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு
முக்கியத் தகவலை அவனுக்கு அது உணர்த்துகிறதா?
(தொடரும்)
என்.கணேசன்
I think Kalpana could be the good soul out there who sent that warning letter initially...Should wait and see how this unfolds ..
ReplyDelete