Monday, December 16, 2024

யோகி 81

 

ஸ்ரேயாவுக்கு ஒரு சின்ன நைப்பாசை இருந்தது. அவள் வழக்கத்திற்கு மாறாக எதிர்த் திசையில் போனாலும் ஷ்ரவன் வேகமாக நடந்து வந்து அவளுடன் சேர்ந்து கொள்வான், பேசுவான் என்ற ஆசை அவள் மன ஓரத்தில் இருந்தது.  ஆனால் அவன் அவளைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தனியாகவானாலும், வழக்கமான பாதையிலேயே போக ஆரம்பித்தது அவளுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. அவள் தன்னையே திட்டிக் கொண்டாள். ‘இந்த முட்டாள் மனதிற்கு எத்தனை பட்டாலும் புத்தியே வராது 

 

வட்டப் பாதையில் எதிர் எதிர் திசையில் போனாலும் ஏதாவது ஒரு புள்ளியில் சந்தித்தேயாக வேண்டுமல்லவா? அப்படி அவன் அவளெதிரே வந்த போதும் சின்னப் புன்முறுவல் செய்து தான் கடந்து போனான். அப்படிப் புன்முறுவல் கூடச் செய்யாமல் அவன் கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு கடந்து போயிருந்தால் கூட அவளுக்கு ஓரளவு திருப்தியாக இருந்திருக்கும். அவள் வேண்டுமென்றே எதிர்த் திசையில் சென்றதற்கு அவன் கோபித்துக் கொண்டது போல் இருந்திருக்கும். அது கூட ஏதோ ஒரு வகையில் அவளை அவன் பொருட்படுத்தியிருக்கிறான் என்பதாக இருந்திருக்கும். அவன் அந்தச் சில்லறை சந்தோஷத்தைக் கூட அவளுக்குத் தரவில்லை.

 

அவனை அப்படியே நிறுத்தி, அவன் தோள்களைப் பிடித்து உலுக்கி, “நீ உன் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்குமளவு அவளுக்கு ஆத்திரம் வந்தது. ஆனால் அதற்கும் பெரிய எதிர்வினை இருக்காது என்ற சலிப்பும் அவள் மனதில் எழுந்தது. அவளையும் அறியாமல் அவள் கண்கள் கலங்கின. நல்ல வேளையாக இப்போதும் அரையிருட்டாக இருப்பதால் யாரும் அவள் கண்ணீரைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்பது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

 

நடைப் பயிற்சி முடிந்து அறைக்குள் நுழைந்த போது மனதில் இனம் புரியாத ஒரு வெறுமையை ஷ்ரவன் உணர்ந்தான். அதையும், அவன் தனியாக அறைக்குள் இருக்கும் இந்தக் கணத்தில் கூட அவனுக்கு வெளிக்காட்ட முடியவில்லை.  அதையும் அந்தக் காமிரா பதிவு செய்து கொள்ள வாய்ப்பு உண்டு. காரணம் என்னவென்று கண்காணிப்பாளர்கள் ஆராய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

 

திடீரென்று அவனுக்கு அந்த உபாசனை மந்திரத்தை ஜபிக்கத் தோன்றியது. அவன் கட்டிலில் சம்மணமிட்டு நேராக அமர்ந்து, கண்களை மூடி, அந்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான்.  சுமார் 720 முறை ஜபித்து முடித்தவன்,  அவனுடைய  அறைக் கதவை ஊடுருவி ஒரு ஓநாய் உள்ளே வருவதைப் பார்த்தான்.

 

அவன் திடுக்கிட்டுக் கண்விழித்தான். ஆனால் தரையில், அவன் எதிரில், நெருப்பு உமிழும் கண்களுடன் அந்த ஓநாய் இப்போதும் இருந்தது.

 

டாக்டர் சுகுமாரனின் மனைவி கணவனின் நடவடிக்கைகளில் மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டாள். அதுவும் தலைகீழ் மாற்றங்களாக இருந்தன. சாதாரணமாகவே மற்றவர்கள் மரியாதை காட்டும்படியாக கம்பீரமாக நடந்து கொள்ளக்கூடிய சுகுமாரன் இப்போது சில சமயங்களில் கோமாளியைப் போல் தெரிந்தார். முன்பெல்லாம் அவள் பல முறை கெஞ்சிக் கூத்தாடினால் தான் அவரை ஒரு கோயிலுக்கே கூட்டிக் கொண்டு போக முடியும். தீவிர நாத்திகரான அவர், ஆன்மீக ஈடுபாடுள்ள அவளைப் பல தர்மசங்கடமான கேள்விகள் கேட்டு கிண்டல் செய்வதுண்டு. அப்படிப்பட்டவர் அவள் சில நாட்கள் வெளியூருக்குப் போய் வருவதற்குள் மயான காளி படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு மாறியிருந்தார். நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடும் ஏதோ ஒரு பைத்தியக்கார நண்பனின் வீட்டுக்குப் போய் இரவெல்லாம் தங்கியிருந்து விட்டுத் திரும்பி வந்தவர் தான் ஒரு தாயத்து கட்டிக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், நாய்க்கும் சேர்த்து ஒரு தாயத்து கட்டிக் கொண்டு வந்தார். அவளுக்குத் தெரிந்து எந்த வீட்டு நாய்க்கும், யாரும் தாயத்து கட்டியதில்லை.

 

என்ன கண்றாவி இது?” என்று ஏளனமாகக் கேட்ட அவளிடம் அசடு வழிய காரணம் சொன்னார். “சும்மா அங்கே எல்லா நாய்களுக்கும் கட்டினாங்க.  இதுக்கும் இருக்கட்டும்னு விட்டுட்டேன்

 

சரி அந்தக் கருமத்தை நீங்க ஏன் கட்டியிருக்கீங்க?”

 

இல்லை அங்கே ஆளுகளும் எல்லாரும் கட்டிகிட்டாங்க

 

யாருங்க உங்களோட அந்த லூஸு ஃப்ரண்டு. குடும்பம் நடத்தற வீட்டுல மயான காளி படத்தைக் கொடுக்கறான். நாய்க்கு பிறந்த நாளைக் கொண்டாடறான். நாய்களுக்கும் ஆள்களுக்கும் தாயத்து கட்ட வைக்கிறான். எல்லாமே ஏடாகூடமாய் இருக்கே. முதல்ல அந்த ஆளோட சகவாசத்தை விட்டொழிங்க.”

 

டாக்டர் சுகுமாரனுக்கு மனைவியின் ஓயாத விமர்சனம் எரிச்சலை மூட்டியது என்றாலும் அவரால் எதற்கும் பதில் சொல்ல முடியவில்லை. ”சரி இனி அந்த ஆள் வீட்டுக்குப் போகலை.” என்று உடனடியாக சரணாகதி அடைந்தார். ’நாயை வெளியே கொண்டு போக ஒரு காரணத்தைக் கண்டுபிடிச்சு சும்மா ஒரு பேச்சுக்கு நாய்க்கு பிறந்த நாள் விழா கொண்டாடற ஆளைச் சொன்னால் அதையும் ஒரு பிரச்சினை ஆக்கறாளே. இவளுக்கு அந்த ஆவியே தேவலை மாதிரி இருக்குஎன்று மனதிற்குள் நொந்து கொண்டார்.

 

நல்லது. முதல்ல நாய் கழுத்துல இருக்கற தாயத்தை எடுத்து வீசுங்க. அக்கம் பக்கத்துல எல்லாம் சிரிக்கிறாங்கஎன்று சொல்லி அந்தத் தாயத்தைக் கழற்றி விட அவள் நாலடி எடுத்து வைத்திருப்பாள். அவர் அசாதாரண வேகத்தில் தாவிக் குதித்து வந்து அவளை இடைமறித்தார்.

 

அந்தத் தாயத்தை மட்டும் கழட்டினா, இங்கே ஒரு கொலை விழும் சொல்லிட்டேன்என்று ஆத்திரத்துடன் கத்திய சுகுமாரனைத் திகிலுடன் அவர் மனைவி பார்த்தாள்.

 

தீ உமிழும் கண்களுடன் எதிரில் நின்றிருந்த ஓநாயைப் பார்த்தவுடன் ஷ்ரவனின் இதயம் சில வினாடிகள் துடிக்க மறந்தது.

 

பாண்டியனை பயமுறுத்தி வந்த ஓநாய் இப்போது அவனிடம் வந்திருப்பது எப்படி? காசர்கோட்டிலிருந்து வந்த மந்திரவாதி தன் மந்திர வித்தையால் ஓநாயை அவன் மேல் திருப்பி ஏவியிருக்கிறாரா? ’இனி என்ன செய்வது?’ என்ற திகில் அவனை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.

 

சில வினாடிகளில் தன் நிதானத்தை ஷ்ரவன் திரும்பப் பெற்றான். மந்திர உபதேசம் செய்த பரசுராமன் அது அவனை ஆபத்திலிருந்து காக்கும் கவசமாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். அவன் அந்த மந்திரத்தை ஜபிக்கும் போது தான் இந்த ஓநாய் வந்திருக்கிறது. மேலும் அவன் இந்த மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்கும் வரை இந்த ஓநாய் அவனை ஒன்றும் செய்ய முடியாது என்று தைரியம் பெற்ற அவன் தொடர்ந்து அந்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான். அந்த ஓநாய் அவனையே பார்த்தபடி நின்றது. அதன் கண்கள் தொடர்ந்து தீயை உமிழ்ந்த போதிலும், அவன் ஆரம்பத்தில் உணர்ந்த திகில் குறைய ஆரம்பித்தது.

 

நிதானமாக அவன் அந்த மந்திரத்தை 1008 முறை சொல்லி முடிக்கும் வரை அது அங்கேயே நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.

 

இன்றைய தினமும் 1008 முறை அந்த மந்திரத்தைச் சொல்லி முடித்து விட்டதால், அந்த மந்திரம் அவனைக் காக்கும் என்ற நம்பிக்கையுடன் அவன் அந்த ஓநாயைப் பார்த்துஹாய்என்றான்.

 

அந்த ஓநாய் ஓரடி அவனை நெருங்கியது. அவனுக்கு ஏனோ இப்போது பயம் சுத்தமாக விலகியிருந்தது. அதற்குப் பதிலாக, ஒரு வளர்ப்புப் பிராணியிடம் தோன்றக்கூடிய அன்பு அவனுள் எழுந்தது. இது பரசுராமன் உருவாக்கி அனுப்பிய சக்தியின் அம்சம் என்றால், இதுவும் அவனுடைய கட்சி என்று உள்ளுணர்வு சொன்னது. இது எதிரி திரும்ப அவன் மீது ஏவிய துஷ்டசக்தி என்றால் அவன் அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது வந்து, அதைச் சொல்லி முடித்த பின்பும் இருந்து, பின் அவனை மேலும் நெருங்கி இருக்காது.

 

எதற்கும் அசராத பாண்டியனை கதிகலங்க வைத்த இந்த ஓநாய் உண்மையிலேயே நம் நண்பன் தான் என்று நினைக்கையில் அவனுக்கு அதன் மீது சினேகம் மேலும் அதிகரித்தது.   அதனுடன் நட்பாய் மேலும் பேச நினைத்து அவன் வாயைத் திறந்த போது தான் ரகசிய காமிரா மூலம் அவன் கண்காணிக்கப்படுவது அவனுக்கு நினைவுக்கு வந்தது. 


(தொடரும்)

என்.கணேசன்

 



 

1 comment:

  1. நாத்திகராக இருந்து அதை பற்றிய கிண்டல் கேலி எல்லாம் செய்துவிட்டு...ஒரு அடி விழுந்த பின்...எதை தின்றால் பித்தம் தெளியும்?...என்ற நிலையில் திருந்திய சுகுமாரனின் நிலையை என்னால் நன்றாக உணர முடிகிறது🤣🤣🤣🤣🤣🤣

    ReplyDelete